தமிழ்த்தேன்
மலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே
மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில்
கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர்
கலைத்தேனே எனவேறு மொழிக லக்க
விலைத்தேனே ஆனாயே! விழித்தே னேநான்.
விரைந்தேனே உனையுநறுந் தேனே யாக்கக்
குலைத்தேனே உனையழிக்குந் திட்டம். : நல்ல
குலைத்தேனே! எழுந்தேனே உனைவ ளர்க்க!
அலைந்தேனே செந்தேனே! உனையு யர்த்த
அழுதேனே துடித்தேனே உன்நி லைக்கே
உலைந்தேனே உனைத்தின்று வாழுங் கூட்டம்
உவகைத்தே னேயுண்ணக் கண்டே நானும்
குலைந்தேனே! தமிழகத்தில் உலகோர் போற்றும்
கொள்கைத்தே னேயில்லார் ஏட்டில் பாட்டில்
கலைந்தேனே எனநீயும் வருந்தல் கண்டே
கனன்றேனே! எடுத்தேனே அறிவு வாளை!
இருந்தேனே! உனையுலகம் விரும்பச் செய்ய
இருந்தேனே! தமிழர்களின் மடநோய் நீக்க
வருந்தேனே! உனையிகழ்வார் தமைய ழிக்க
வருந்தேனே! இடர்நீக்கி உனைக்கா வாமல்
அருந்தேனே நல்லுணவே! கிடைத்தற் கிங்கே
அருந்தேனே! உண்ணவுண்ண நற்சு வையைத்
தருந்தேனே! நல்லுடலை உயிரைக் காக்கும்
தமிழ்த்தேனே! உன்னிடத்தென் உயிர்வைத் தேனே!
புலவர் புங்கனேரியார்
1 Comment
Sakthippuyal · செப்டம்பர் 2, 2017 at 12 h 46 min
சிறப்பு! (நன்றி) Merci!