பன்முகம் காணும் தாங்கள் எழுதத் துவங்கியது எப்போது?
பதினாறு வயதினிலே நான் கவிதைப் பருவம் எய்தி விட்டேன் என்று சொல்லலாம்.
புதுமுக வகுப்பின் முதல் பருவத்தின்போது நான் எழுதிய கவிதைக்குக் கிடைத்த முதல் பரிசு முத்திரைப் பரிசாகும். பாரதியின் ‘கண்ணன் என் சேவகன்’ கவிதையைப் படித்ததால் ஏற்பட்ட தாக்கம் என்று அதைச் சொல்லலாம்.
தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்புப் பயிலும்போது என் ஆசிரியாராக இருந்த பிச்சைமுத்து ஆசிரியர் என்னை இலக்கிய மன்றத்தின் செயலாராக்கிப் பேசவைத்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்த என்னை ஆறாம் வகுப்பில் படிக்கும்போது பேச்சுத்திறனுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் குவிக்கவும் ‘ஸ்கவுட்’ எனப்படும் சாரணர் இயக்கத்தில் பங்கேற்கவும் ஊற்சாகமூட்டிய திரு. அப்துல் சுபான் என்ற என் ஆசிரியரும் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் என் விழித்திரைகளில் காட்சியாய் விரிகிறார்கள். உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போது ஏற்பட்ட இடமற்றம் அதை மேலும் மெருகேறச் செய்தது எனலாம்.
என் மூத்த வகுப்பு மாணவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ’ஊட்டிவரை உறவு’ படத்தில் மிடுக்காக நடந்து வரும் ஒரு காட்சியை மனதிற்கொண்டு என்னை நடந்து காட்டச் சொல்லி கைத்தட்டிச் சிரித்து மகிழ்ந்து பாராட்டுவார்கள்.
அன்னை தெரசாஅவர்களை எழிலரசி என்று பாடுகிறீர்கள் எதன் தாக்கம்?
ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு பெண்மணியை உலக அழகியாக அறிவித்து விடுகிறார்கள். அடுத்த ஆண்டுக்கு வேறொரு பெண்மணியே உலக அழகி. இப்படி, உலக அழகிகளுக்கு இருக்கும் கால வரையரை ஓர் ஆண்டு மட்டுமே. புறத் தோற்றத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் இந்த உலக அழகிகள் எவ்வளவு காலம் அதே அழகைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்பதும் கேள்விக்கு உரியதுதான்.
என் பார்வையில் மனித குல வரலாற்றின் நீள்பரப்பில் என்னை ஈர்த்த பெண்மணி ஒரு வைரமணி ஒப்பனை இல்லாத உண்மைப் பேரழகு ‘அன்னை தெரசா’ ஒருவரே.. ஓராண்டுக்கு மட்டுமல்ல .. எப்போதைக்குமே அவர்தான்.
காதலித்தேன் கவிதை எழுதினேன் என்றோ என் காதலி என்னைக் கவிஞன் ஆக்கினாள் என்றோ பெரும்பாலான கவிஞர்கள் கூறுவது உண்டு. சமுதாயப் பணியாற்றிய ஓர் உன்னதப் பெண்மணியைப் பற்றி ஒரு நூலில் படித்து அறிந்து, அவர்களைப் பற்றி எழுத முயன்றபோதுதான் முழுமைக்கவிஞனாய் நான் மலர்ந்தேன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்.
இந்தக் கவிதைதான் என் முதல் கவிதை ஆகும், முழுமை பெற்றக் கவிதையும் அதுதான். அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் கவிதையும் அதுதான். தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் ஒரு முழுமையான கவிதை அதுவரை எழுதப்படவில்லை.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தமிழ்ப் பாடம் கற்பித்த பேராசிரியர். சாமிமுத்து அவர்கள் தன் வகுப்பு ஒன்றில், சமுதாயப் பணியாற்றும் அன்னை தெரசா அவர்களை பற்றி குறிப்பிட்டு எமக்கு அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகம் செய்தார்கள்.
நூலகத்தில் அன்னை தெரசா அவர்களைப் பற்றிய நூல் எதுவும் கிடைக்குமா என்று எம் கல்லூரி நூலகரை அணுகினேன். சிறு நூல் ஒன்று இருப்பதாய்ச் சொல்லி எனக்கு படிக்கக் கொடுத்தார் .
அன்று மாலையே படித்து முடித்தேன். அவர்களின் கருணை உள்ளமும் செயல்பாடுகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அன்று இரவு முழுதும் என்னால் தூங்க முடியாமல் தவித்தேன்.
என் இதயத்திலும் எண்ணத்திலும் அன்னை தெரசா அவர்களின் உருவமும் கருணையும் அவர்களின் சமுதாயப் பணிகளும் விதையாக விழுந்தன. என்னுள் விதையாக விழுந்த அன்னையைப் பற்றிய எண்ணங்கள் ஒரு மழை நாளின் இரவில் என்னை எழுதத் தூண்டின. எழிலரசி என்னும் ஒற்றை வார்த்தையே இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பெண்ணரசியைக் கவிதையாய் எழுத முயன்ற எனக்கு முதலில் முதலாகக் கிடைத்தது. அவர்களுக்கு எழிலரசி என்று கவிதை மகுடம் சூட்டி மகிழ்ந்தேன்.
அவ்வப்போது கவிதை முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததும், பாரதி பாரதி தாசனின் கவிதைகளைத் தொடர்ந்து படித்ததின் தாக்கமும் எண்சீர் விருத்தமாய் என் எழுத்தில் வந்து விழுந்தன. நான்கு எண்சீர் விருத்தங்களில் எழுதிய என் கவிதையை என் தமிழ்ப் பேராசிரியர் கண்ணுற்று வெகுவாகப் பாராட்டினார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இரம்போலா மாஸ்கரேனஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட என் கவிதை, கல்லூரி முதல்வர் அருள்திரு சி.கே.சாமி அவர்களே என்னை அழைத்து பராட்ட வைத்தது.
“இது கொண்டாடப் படவேண்டிய கவிதை, எங்கள் கல்லூரியின் அசல் கவிஞன் நீதான்” என்று என்னைப் பாராட்டி ஒரு பெரிய கவியரங்கத்திற்கே ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
கவிதாமணி அ.வெ.ரா.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் கவிஞர்.மரியதாஸ், கவிஞர் அமலன், நாவலர் அரசப்பனார் போன்ற பெருங்கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கத்தில் நான் இளங்கவிஞனாக அறிமுகம் செய்யப் பட்டேன். 1976ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப் பட்டது. திருச்சி தூய வளனார் கல்லூரி ஆண்டு மலரிலும் வெளியிடப்பட்டது.
அன்னை தெரசா பற்றி எழுதிய கவிதை ஒரு தனி மனிதரைப் பற்றிய கவிதைதானே.? அவரைப்பற்றி சொல்லுங்களேன்?
இது தனி மனிதர் ஒருவரைப் பற்றிய கவிதை இல்லை,அன்னை தெரசா அவர்களைப் பற்றி எழுதுவது என்பது மனித உரிமை மறுக்கப்பட்ட கோடிக் கணக்கான மனிதர்களைப் பற்றிய, அதுவும் இந்திய மக்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மிக மிக வறியவர்களைப் பற்றிய சமூக அக்கறையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. அந்த அவல நிலைமைக்கு தள்ளப்படுவோரில் மிகப் பெரும்பாலானவர்கள் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து சமுதாயத்தின் அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உழைக்கும் உதிரிப் பாட்டாளி மக்கள் திரளைச் சேர்ந்தவர்கள்தாம்.
மனித உரிமைகளின் அடிப்படையே மாண்புறு வாழ்வும், சமத்துவமும்தான், வாழும் உரிமையே மறுக்கப்பட்டு தொட்டிலிலும் வீதியிலும் வீசப்பட்ட குழந்தைகள், பிள்ளைகளாலும் உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்ட முதியவர்கள், எவராலும் ஏற்றுக்கொள்ள மறுத்து ஒதுக்கப்பட்ட தொழு நோயாளர்கள், நிர்க்கதியற்று கைவிடப்பட்ட பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர் என்று அன்னை தெரசா அவர்களின் சேவையைப் பெற்றவர்களின் பட்டியல் மிக நீண்டதாகும்.
அன்னை தெரசா அவர்களைப் பற்றி எழுதுவது என்பது மனித உரிமைகள், பெண்ணியம், குழந்தைகள் மேம்பாடு, முதியோர் நலம் காத்தல், சுற்றுச்சூழல், வறுமை போன்ற இந்திய மக்களின் சமூக பிரச்சனைப் பற்றி எழுதுவது அல்லாமல் வேறில்லை.
அன்னை தெரசா அவர்களை கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு துறவி என்று மட்டுமே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை என்பதுதான் அவரது நோக்கமாக இருந்ததே அன்றி, மதம் மாற்ற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் அமைந்ததே இல்லை. அவர், தன் வாழ் நாளில் எவரையும் மதம் மாற்றவில்லை, அது தன் நோக்கமும் அல்ல என்பதை பல முறை தெளிவுபடுத்தியும் இருக்கிறார். “மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றிட வேண்டியதுதான் முக்கியம்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவரது சேவையைப் பெற்றவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர் சேவையைத் தொடங்குவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் பணியாற்றிய கோயிலின் மிக அருகாமையில்தான் அமைந்திருந்தது.
சமுதாய சேவையில் அனை தெரசா அவர்களுக்கு முன்னரும் பின்னரும் பலரும் ஈடுபட்டுச் செயலாற்றி வருகிறார்கள் என்பதை மறுக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் அன்னை தெரசா அவர்களின் தனிச் சிறப்பும் தனித்தன்மையும் என்னவெனில் நாடு,மதம், இனம், ஜாதி, மொழி போன்ற அனைத்துவிதமான தடைகளையும் தாண்டி அவர்களின் சேவை மனிதநேயத்தின் உச்சமாய் அமைந்ததுதான்.
இந்திய பெண்களின் உடையான புடவையைச் சீருடையாகக் கொண்ட உலகின் முதல் கிறித்தவ துறவற கன்னியர் சபை அன்னை தெரசாவின் கன்னியர் சபை மட்டுமே. அதுவும் அந்நாளில் கொல்கத்தா மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளிகளின் சீருடையான வெள்ளை நிறத்தில் ஊதா வரைகோடுகளைக் கொண்ட எளிமையிலும் எளிமையான புடவைச் சீருடைதான் அது.
மனித உரிமைகள், பெண்ணியம், குழந்தைகள் மேம்பாடு, சுற்றுச்சூழல் போன்ற சமூக தன்னார்வச் செயல்பாட்டுத் தளங்களில் என்னை செயல்பட வைத்ததும் அவர்களின் சேவையே.
மரபுக்கவிதையில் தொடங்கிய நீங்கள் புதுக்கவிதை எழுதிவருகிறீர்கள். மரபுக் கவிதைகள் எழுதும் பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில், நீங்கள் மரபுக்கவிதை எழுதுவதுண்டா?
புதுக்கவிதையில்தான் எழுதவேண்டும் அல்லது மரபுக் கவிதைதான் புனையவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு எப்போதும் நான் எழுதியதில்லை. எண்ண மேகங்கள் கருக்கொண்டு மின்னல் கீற்றுக்கள் பளிச்சிடும்போது இயல்பான கவிதை மழையின் தூறல் எனக்குள் தொடங்கிவிடும். கருத்துக்கள் முழுமை பெறாமல் முரண்பட்டு இடியாய் இடித்துக் கொண்டிருந்தால் எளிதில் மழை பொழிவதில்லை.கருத்துக்களின் ஓட்டத்துக்கேற்ப இயல்பாய் கவிதை என்னை எழுத வைக்கும். உண்மைக்கும் அறிவியலுக்கும் மாறாய் எதையும் நான் எழுதியதில்லை. எனவே என் கவிதைகள் செயற்கை மழை அல்ல, இயற்கை மழையாய்த்தான் எப்போதும் இருக்கும். மரபுக் கவிதையிலும் பல்வேறு பாவினங்களிலும் எனக்கு முயற்சியும் பயிற்சியும் உண்டு.
புதுக் கவிதை மட்டுமின்றி, ஹைக்கூ, லெமெரிக் எனப்படும் குறும்பா, கஜல் என்று பல்வேறு கவிதை வடிவங்களிலும் எழுதிவருகிறேன். கவிதை மாதிரி எழுதுவதில்லை மாதிரிக் கவிதைகள் என்று குறிப்பிடும் வகையில் எழுதியிருக்கிறேன். எந்தக் கவிதையும் என் சொந்தக் கவிதையாய் என்னைக் குறித்துச் சொல்லும் கவிதையாய் அமைவது என் வெற்றி என்று கருதுகிறேன்.
புதுக்கவிதை பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்?
கவிதை என்பது எல்லாக் காலக்கட்டத்திலும் ஒரே மாதிரியான வடிவத்தில் வெளிப்படுவது இல்லை அவ்வப்போது நிலவும் சமூக,அரசியல், பொருளாதார சூழ்நிலைக் கேற்பவே கவிதையின் வடிவங்களும் தகவமைத்துக் கொண்டிருக்கின்றன.
புதுக்கவிதை என்பது தமிழில் மட்டுமே ஏற்பட்ட ஒரு மாற்றம் அல்ல. உலக அளவிலும், இந்திய அளவிலும், இலக்கிய உலகில் ஏற்பட்ட எல்லா மாற்றங்களும் தமிழிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. உலகப்போக்குகளிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு தமிழ் எந்த கவசமும் இட்டுக்கொள்ள முடியாது (Tamil literature, poetry and even the society can not encapsulate itself from the happenings of the world). உலகின் எல்லா மாற்றங்களும் நம்மைப் பாதித்தே தீரும்,தமிழ் அதிலிருந்து விலகி நிற்க முடியாது.
அப்படியானால் தமிழில் புதுக்கவிதை எப்போது வந்தது?
ஆங்கிலத்திலும், ஐரோப்பிய இலக்கியங் களிலும் ஏற்பட்ட பல்வேறு இலக்கிய இயக்கங்களும் அதன் போக்குகளும் ஒட்டு மொத்த இந்திய இலக்கியங்களையும் பாதித்தது எனலாம். இந்தி இலக்கியத்திலும், மராத்தி இலக்கியத்திலும், கன்னடம், தெலுங்கு போன்ற இலக்கியங்களிலும் புதுக்கவிதையின் வெளிப்பாடு முதலில் தெரிந்தது. தமிழில் புதுக்கவிதையின் தோற்றம் பாரதியின் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ கவிதையிலிருந்தே தொடங்கி விட்டதென்று நான் கருதுகிறேன். ஆனால் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவில்லை. அதற்கான சூழலும் அமையாதிருந்தது அதற்கு ஒரு காரணம்.
பிற மொழி இலக்கியங்களில் ஏற்பட்ட தாக்கம் புதிய சிந்தனை கொண்ட தமிழ்க் கவிஞர்களை வெகுவாக கவர்ந்தது எனலாம். தி.சு.செல்லப்பா அவர்களின் எழுத்து பத்திரிக்கையிலேயே புதுக்கவிதை முயற்சிகள் நடந்தன என்றாலும் அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எழுபதுகளின் பிற்பகுதியில் முகிழ்த்த வானம் பாடி இயக்கம் தான் தமிழ் கவிதை உலகில் புதுக் கவிதையின் வேகத்தையும், வீச்சையும் முன்னெடுத்து சென்றது என்று சொல்லலாம்.
அப்படிப்பட்டக் கவிஞர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் மீரா, பாலா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஈரோடு தமிழன்பன், புவியரசு, சிற்பி போன்றோரைக் குறிப்பிடலாம்.
தமிழ்க் கவிதை உலகில் மரபுக் கவிதையின் நீட்சியாய் வந்த புதுக்கவிதை ஒரு கட்டத்தில் நீர்த்துப்போய் நின்றது எனலாம். புதிய மாற்றங்களையும், புதிய கருத்துக்களையும் வெளிக் கொண்டு வர வேண்டிய புதுக்கவிதை ஒரே வட்டத்தில் சுழன்று கொண்டிருந்த போது புதுக்கவிதை நீர்த்துப் போனது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். (ஒருவர் எழுதிய கவிதையைப் போலவே இன்னொருவரும் எழுதுவது என்ற போலச்செய்தல்) ஒருவர் எழுதிய பாடுபொருளையே எந்த ஈடுபாடுமின்றி எழுத நேர்ந்ததால் நீர்த்துப் போதலும் நிகழவே செய்தது.
எண்பதுகளின் பிற்பகுதியில் புதுக்கவிதை ஒரு தேக்க நிலையில் இருப்பதாய் உணரப்பட்டதும், ஒரு சில கவிஞர்கள் அந்த கருத்தை வெளிப்படுத்தினார்கள். உதாரணமாக «போதுமையா போதும் புதுக்கவிதை எழுதாதீர்யு என்று கவிஞர் மு.மேத்தா ‘ஆனந்த விகடன் இதழில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதையையும், கருத்தையும் எதிர்த்து புதுக்கவிதை எழுதுகிறவர்கள் எழுதலாமென்று ஆனந்த விகடன் இதழில் ஒரு அறிவிப்பே வெளியிடப்பட்டது. புதுக்கவிதையை மேலேடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தோடு புதுக்கவிதை கவிஞர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை ஆனந்த விகடன் இதழுக்கு அனுப்பி கவிஞர் மு.மேத்தாவின் கருத்துக்கு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.
அப்படியா சுவாரசியமாக இருக்கிறதே? எப்படி முடிவுக்கு வந்தது?
பல கவிஞர்கள் தம் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்கள். மூத்த பெருங்கவிஞர்கள் எல்லாம் எழுதி முடித்து விட்டீர்கள் இனி வருகிறவர்கள் எழுத கூடாதா? என்ற கோபம் அதிலே கொப்பளித்தது. அப்படி பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள் வந்துசேர்ந்ததாக ‘ஆனந்த விகடன்’ வார இதழ் முடிவு அறிவித்தபோது குறிப்பிட்டிருந்தது. அவற்றில் ஒரே ஒரு சிறந்த கவிதையை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில், பத்துக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசு கொடுத்தார்கள். அந்த பத்துக் கவிதைகளில் எனது கவிதையும் ஒன்று.
போர்க்குரல் எழுப்பியும் பரிசுப் பெற்றிருக்கிறீர்கள். அந்த கவிதையை சொல்லுங்களேன்…
புதுக்கவிதை என்பது வரியில் வார்த்தைகளைப் வெட்டிப் போட்டு வெறும் உருவத்தில் மட்டும் மாற்றத்தை கொண்டு வரவில்லை. உள்ளடக்கத்திலும், பாடுபொருளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது என்பதை புதுக்கவிதை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்பதை என் கவிதையில் வலியுறுத்தி இருந்தேன்.
அந்தக் கவிதை இதுதான்.
அக்கினிக் குழம்பை
துப்பிவந்த எரிமலை
சிலநேரங்களில்
வெற்று
மணலை வெளியேற்றியதற்காக
எரிமலையை சந்தேகிக்கலாமா?
பாட்டாளி வர்க்கக்குகனைத்
தன் பங்காளியாக
பிரகடணம் செய்து கொண்ட
புதுக்கவிதை ராமனை
காட்டுக்கு அனுப்பிவிட்டு
எந்த பாதுகையை
அரியணையில் அமர்த்த உத்தேசம்?
மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்த
தமிழ்க் கவிதைச் சக்கரத்தைக்
காலம், மிகவும் காலம்
கடந்து
தமிழ்க்கவிதை சக்கரத்தை
சற்று வேகமாக சுழல வைத்திருக்கிறது.
இதைத் தடுக்க நினைத்து
முனைகிற கரங்கள்
காயப்படுவதை
யாராலும் காப்பாற்ற முடியாது.
இதற்கு கவிஞர் மு.மேத்தா என்ன சொல்லியிருந்தார்?
என் மீது வீசப்பட்ட கற்களால் ஒரு தாஜ்மகாலையே எழுப்பி விட்டீர்கள் என்று சொல்லியிருந்தார். அவரால் வேறு என்ன சொல்லமுடியும்?
‘ஆலமரம்‘ என்னும் உங்கள் கவிதை குடியரசு தின விழா பன்மொழிக் கவியங்கத்திற்கு தமிழின் மிகச் சிறந்தகவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதினெட்டு இந்திய தேசிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது அதைப்பற்றி சொல்லுங்கள்?
1990ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சோஷலிச சோவியத் யூனியனின் மிகப்பெரிய நாடான ரஷ்யா தனது நிலப் பரப்பின் மீது தன் இறையாண்மையை அறிவித்ததைத் தொடர்ந்து பல குடியரசுகள் விடுதலையால் உதிரத் தொடங்கியது. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியைப் பார்த்து “மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள் ஆகாவென்று எழுத்தது பார் யுகப் புரட்சி” என்று மகாகவி பாரதி பாடினான்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சமத்துவக் கட்டமைப்பு வீழ்ச்சியடைகிறதே என்ற வருத்தம் என் இதயத்தை வெகுவாகப் பாதித்தது.ரஷ்ய மண்ணில் அமைந்திருந்த அந்த அரசின் வீழ்ச்சி, சோஷலிசக் கொள்கைக்கும் பொதுவுடைமைக் கொள்கைக்கும் ஏற்பட்ட வீழ்ச்சியாக என்னால் ஏற்கமுடியவில்லை. அதற்குச் சரியானதொரு படிமமாக ஆலமரம் எனக்குத் தெரிந்தது.
பள்ளிப்பருவத்தில் நான் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் வழிநெடுக ஆலமரங்கள் சாலையின் இரு மருங்கிலும் படர்ந்து இருக்கும். அந்த ஊருக்கு திருவாலம்பொழில் என்றே பெயரிட்டிருக்கிறார்கள் என்றால் அதன் அருமை தெரிகிறது.
ஆலமரத்தின் பச்சைப் பசேல் என்ற அழகும் பல்வேறு பறவைகள் வந்து அமர்வதும் பழம் தின்று சிறகடிப்பதும் என் இதயத்தில் விதையாக விழுந்து கருக்கொண்டிருந்தது. அது ஆலமரம் என்ற கவிதையாக தளிர்த்து தழைத்து விழுதுவிட்டு விரிந்தது. ஓரிரு நாட்களில் எழுதி முடித்ததேன். என்றாலும் எத்தனையோ ஆண்டுகளாய் என் இதயம் எழுதிக் கொண்டிருந்த கவிதை அது.
இக்கவிதை 1994ஆம் ஆண்டின் மிகச்சிறந்த தமிழ்க் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா தேசிய பன்மொழிக் கவியரங்கத்திற்கு கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன்.
என்னைப் போலவே இந்தியாவின் பதினெட்டு தேசிய மொழிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தக் கவிதைகளை எழுதிய கவிஞர்கள் அனைவரும் அந்தக் கவியரங்கத்தில் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவரும் என்னைவிட வயதில் பெரிதும் மூத்தவர்கள். ஆண்டுதோறும் நடைபெறும் அந்தக் கவியரங்கத்தில் இதுவரை கலந்துகொண்ட கவிஞர்களிலேயே நான்தான் இளையவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. நான் என்னுடைய 36வது வயதில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பினைப் பெற்றேன்.
இதற்கு முந்தைய ஆண்டில் அவ்விதம் தேர்ந்தெடுக்கபட்ட கவிதை என் மூத்த கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதையாகும் .
‘ஆலமரம்’ கவிதை இந்தியாவின் பதினெட்டு தேசிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
புது தில்லியில் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் அந்தக் கவிதையை நான் தமிழில் வாசிக்கத் தொடங்கியபோது அமைதியாக இருந்த அந்த அவையினர், அதே கவிதையை ஞானபீடம் அமைப்பைச் சேர்ந்த பிரபல இந்திக் கவிஞர் பத்மதர் திரிபாதி இந்தியில் வாசிக்கத் தொடங்கியதும் கைத்தட்டி ஆராவரிக்க ஆரம்பித்துவிட்டது. இது பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கவிதையாகும்.
அணுவுக்குள் இருக்கும்
ஆற்றலைப் போல
மிகச்சிறு விதைக்குள்
அடங்கியிருந்த விசுவரூபம்.
. . . . .
ஆலமரம் நான்
அற்புத விருட்சம்.
வெளிச்ச விழுதுகள்தான் என்வேர்கள்
காற்றில் ஆடினாலும்
கம்பீரமாகக் கால்கள் பதிக்கும்.
ஆலமரம் நான்
அற்புத விருட்சம்.
அந்தக் கவியரங்கத்தில் வாசிக்கப் பட்ட அனைத்து மொழிக் கவிதைகளில் ‘ஆலமரம்’ கவிதையை மட்டும் தேர்வு செய்து மத்திய அரசுவெளியிடும் ‘பாஷா’ இந்தி இலக்கிய இதழில் வெளியிட்டது என்பதும் இக்கவிதையின் சிறப்பைப் புலப்படுத்தும்.
இந்தக் கவிதையின் வெற்றியாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியப் பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் கவிதைகளில் படிமம் என்ற உத்தியைப் பற்றி எளிதாக விளக்குவதற்காக என் ‘ஆலமரம்’ தமிழ்க் கவிதையைத் தன் மாணவர்களுக்கு வகுப்பில் வாசித்து பாடம் நடத்தியதை பின்னொறு நாளில் அந்தப் பேராசிரியர் என்னிடம் அறிமுகம் ஆனபோது குறிப்பிட்டபோது அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஓய்வு பெற்ற அந்தப் பேராசிரியர் இப்போது என் நெருங்கிய நண்பராகிவிட்டார். அதுவரை அந்தப் பேராசிரியரோடு எனக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.
இக்கவிதைக்குக் கிடைத்த வரவேற்பினைக் கண்டு அதே கவிதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். அதனை இந்திய மனிதவளத் துறையின் ஆதரவில் வெளிவரும் www.museindia.com < http://www.museindia.com/ > ஆங்கில இலக்கிய இணைய இதழ் வெளியிட்டுள்ளது.
இது அரசியல் நிகழ்வால் எழுந்த கவிதை என்பது முதன்மையானது. ஆலமரம் பற்றிய அறிவியல் பார்வை ஒன்று, என்னை வெளிப்படுத்தும் பார்வை மற்றொன்று, மேலும் இந்தியாவையும் இதில் தரிசிக்கலாம்.
இரண்டு நூல்கள் எழுதி இருக்கிறீர்கள், அதைப்பற்றி …?
ஏராளமான கவிதை நூல்களை எழுதி வெளியிட்டவர்தான் பெரிய கவிஞர் என்றும் பெரிய பெரிய நூல்களை எழுதியவர்தான் பெரிய எழுத்தாளர் என்றும் சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அளவு பெரிதல்ல உள்ளடக்கமும் அதன் தகுதிப்பாடும்தான் மிக முக்கியம். திருவள்ளுவர் திருக்குறள் என்ற ஒரே நூலால்தான் அறியப்படுகிறார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒற்றை வரிக் கவிதையால் உலகறியப் பட்டுள்ளார் கணியன் பூங்குன்றனார்.
‘பாதையோரத்துப் பாரிஜாதங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு 1989ஆம் ஆண்டு வெளியானது. கருத்தளவில் நான் மோதிக் கொண்டிருந்த கவிஞர் மு.மேத்தா அவர்களுடன் கரத்தால் இதய அன்பால் இணைந்து அவரையே என் முதல் கவிதை நூல் வெளியீட்டுக்கு தஞ்சைக்கு அழைத்திருந்தேன். கொட்டும் மழையையும் புயல் காற்றையும் பொருட்படுத்தாது அவர் வந்திருந்து நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார். ஆயிரக் கணக்கில் கவிதை ஆர்வலர்கள் திரண்டிருந்த விழா அரங்கில் அந்த நூலின் அத்தனைப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.
இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘வெளிச்ச விழுதுகள்’ 2002 ஆண்டு வெளியானது. விழாவுக்கு தலைமை தாங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள் எனக்கு நூல் வெளியாவதற்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆகாதவர். என் கவிதைகளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே விழாவுக்கு வந்திருந்து என் கவிதைகளின் தனித்தன்மை குறித்து உரையாற்றி என்னைப் பெருமைப் படுத்தினார்கள்.
பிரபல ஆங்கில நாளேடான ‘இந்து’ நாளிதழ் உலகத் தரத்தில் கவிதைகள் என்னும் பொருள்பட ‘Worldly Verses’ என்று விமர்சனம் செய்திருந்தது.
பல விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள் …?
புதுவை மாநில அரசு நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவில் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த மாண்புமிகு பல்ராம் ஜாக்கர் அவர்களால் வழங்கப்பட்ட ‘பாரதிப் பட்டயம்’ நான் பெற்ற முதல் விருது ஆகும். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருக்கும்போது சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது ‘புகாரில் ஒருநாள்’ என்ற கவிதைக்காக பொற் பதக்கம் பெற்ற கவிஞர் மீனவன் அவர்கள் என் கவிதைகளில் இருந்த மரபுக் கவிதையின் மாட்சியையும் புதுக்கவிதைப் போக்கையும் பாராட்டி ‘கவிஞர் திலகம்’ என்ற விருதளித்துச் சிறப்பித்தார்கள். பாவேந்தர் இலக்கியப் பேரவையில் பேராசிரியர் பாரதிப் பித்தன் அவர்களால் ‘எழுச்சிக் கவிஞர்’ என்ற விருதளிக்கப்பட்டது. சென்னையில் உலகத் திருக்குறள் வாழ்வியல் நெறிச் சங்கம் ‘திருக்குறள் மாமணி’ என்று விருதளித்துள்ளது. வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கம் ‘செம்மொழிச் செல்வர் வீரமாமுனிவர் விருது’ அளித்துப் பாராட்டியது. கைத்தட்டல்களில் கரைந்து போகாமல் நெஞ்சில் பட்டதை நேராய்ச் சொல்கிறேன்.
என் எழுத்திலும் பேச்சிலும் சாதி மத அரசியல் அடையாளம் ஏதுமின்றி பொதுமை என்னும் புதுமை நோக்குடன் மானுடம் பாடும் தமிழ்க் கவிஞன் என்ற ஒற்றை அடையாளத்துடன் உலாவருகிறேன்.
பெண்ணினம் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். பெண்களுக்கு பாதுகாப்பின்மையை அறிகிறோம். அதற்காக அரசு என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?
அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறைகளில் உலகமயமாதலின் தாக்கத்தில் நிகழ்ந்துவரும் போக்குகள் குறித்து டாக்டர் பட்டத்திற்கான எனது ஆராய்ச்சியைத் தொடங்கியபோது சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட அனைத்து பகுதிகளைப் பற்றிய தரவுகளைத் தேடிப் படித்து ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்போது குறிப்பிட்ட சாதி, மதம் மற்றும் பண்பாடு என்றில்லாது பல்வேறு காரணிகளால் உலகின் அனைத்துப் பகுதியிலும் பெண்கள் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்கள், பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதாக உணர்ந்தேன்.
அப்போது எனக்கு நெருடாலாகத் தெரிந்தது கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் “மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்மம்மா” என்ற வரிகள்தாம். சமுதாயத்தின் அடிப்படை அலகான குடும்பம் என்ற அளிவில் மட்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிலவும் உறவில் இருக்கும் பல நிர்ப்பந்தங்களை நினைத்துப் பார்த்தேன். நானும் தாய் வழிப்பாட்டிகள் மூவர்,தந்தைவழிப் பட்டிகள் மூவர் மற்றும் பல பெரியம்மாக்கள், சித்திகள், அத்தைகள் என்று பெண்கள் நிரம்பிய குடும்பச் சூழலில் வளர்ந்தவன். அவர்களின் பாடுகளையும் துயரங்களையும் கண்ணால் கண்டவன். இவர்கள் பெண்ணாய்ப் பிறந்திட என்ன தவம் செய்திட வேண்டியிருக்கிறது என்று என் நினைவு ஓடியது. அப்போது…
‘‘மங்கையராகப் பிறப்பதற்க்கு
மாதவம் செய்திட வேண்டும் என்றாயே
ஊர் உலகில் என் நிலைமை அறிவாயா
உன்னளவில் என் நிலைமை
உணர்வாயா தோழனே”
என்று தொடங்கும் கவிதையை எழுதினேன். அது ஒரு தேசிய பெண்கள் அமைப்பு நடத்திய மாநாட்டின் போது வாசிக்கப்பட்டு ஒரு பெண் பத்திரிகை நிருபரால் ‘ஆறாம் திணை’ மின்னிதழில் முதலில் வெளிடப்பட்டது. பின்னர் ‘தாமரை’ போன்ற பல இதழ்கள் அதைப் பிரசுரித்துள்ளன. அது தற்போது கன்னட சாகித்திய அகாதமியால் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ’அணிகேதனா’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாபி சாகித்திய அகாதமியும் தமிழ்ச் செம்மொழி நிறுவனமும் லூதியானாவில் இணைந்து நடத்திய விழாவில் பஞ்சாபியிலும் மொழி பெயர்க்கப்பட்டு நான் அங்கு அழைத்துக் கௌரவிக்கப் பட்டேன். அங்கு வந்திருந்த பெண்களில் வயது முதிர்ந்த பெண் பேராசிரியர்களும் கவிஞர்களும் அதற்கு காட்டிய வரவேற்பு என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.
நாகரிகம் எனும் பெயரில் செக்ஸியாக ஆடைகள் அணியும் பெண்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும்?
இந்தியாவில் பெண்களின் நடை உடை பாவனைகளில் உலகமயமாதல் எற்படுத்தியிருக்கும் தாக்கம் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. மார்ச்சீய லெனினிய அடிப்படையில் உலகமயமாதல் அடிப்படையில் உலகமயமாதல் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் நான் பெரிதும் மகிழ்வேன். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தேன்.
”அத்தனை விளம்பரங்களிலும்
பெண்மையின் ஒவ்வொரு அங்கமும்
அவமானப் படுத்தப்படும் சூழலில்
என் கவிதையிலாவது
உன்னைக் கண்ணியமாய்ப் பேசுகிறேன்.”
முதலாளித்துவம் எல்லாவற்றையும் வணிக மயப் படுத்தி வர்த்தகம் புரிவதில் கண்ணும் கருத்துமாய் உள்ளது. அதனால்தான் இந்தியாவை மையப் படுத்தி உலக அழகிகள் தெர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பெண்களை வெறும் நுகர்வுப் பொருளாகப் பார்கப் பழக்கி வரும் முதலாளித்துவத்தின் கட்டற்ற சுதந்திரம் அனைத்தையும் அவிழ்த்தெறியச் சொல்கிறது. பெண்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டு தம் கண்ணியம் காக்கவேண்டும்.
இலக்கியப் பயணம் தவிர வேறு நற்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டீர்களா?
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொது நிர்வாகவியல்துறையில் பி.எச்.டி டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் நான் சமூகவியலின் முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். மனித உரிமைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல் உரிமைகள் பாதுகாப்பு, மனித வள மேலாண்மை ஆகியவற்றில் அவ்வப்போது எனக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளின் தேவைக்கேற்ப ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அவை தேசிய மற்றும் பன்னாட்டு பல்கலைக் கழகங்களில் மற்றும் அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சட்டம் பயின்றிருப்பதால் சட்ட ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்.
பசி, பட்டினி இவைகளால் பாதிக்கப்பட்டு படிப்பு கெடுகிறதே … அவ்வகையானவர்களுக்கு தாங்கள் சொல்லிக் கொள்வதென்ன?
”வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றி பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் “
என்றான் பாரதி.
சில ஆண்டுகளுக்கு முன் வீதிச் சிறார்கள் பற்றி நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையின் மீது உரையாற்ற டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா மத்தியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற குழந்தைகள் குறித்த தேசியக் கருத்தரங்கத்திற்கு அழைக்கப்பட்டேன். அந்தக்கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்த்து அதையும் கவிதையாக்கி வெளியிட்டுள்ளேன். ‘சருகாகிக் கருகும் கருகும் அரும்புகள்’ என்ற அக்கவிதையில்
“நீதியின் குரல்வளை
நெறிக்கப் பட்டதால்
வீதியில் கிடக்கும்
பிரம்பாக்களின் பிள்ளைகள் இவர்கள்
பிஞ்சு இதழ்களால்
பிச்சை கேட்கும்
பாதையோரத்துப் பாரிஜாதங்கள்”
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தீவிரமாக அரசின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தீவிரமாக அமுல்படுத்தப் படவேண்டும். இல்லையென்றால் எதிர்கால இந்தியாவின் தகுதிமிக்க தலைவர் அவர்களில் ஒருவராக இருக்கக்கூடும், அவர்களில் எவரையும் இழந்தவர்கள் ஆகிவிடும் அவலம் நேரிடக்கூடாது.
எழுச்சிக் கவிஞர் டாக்டர் எழில்வேந்தன் அவர்களுடன், நேர்காணல் கவிஞர் தமிழ்நெஞ்சம் அமின்
1 Comment
Anwar Milton · ஆகஸ்ட் 24, 2016 at 16 h 05 min
மிக அருமை!
–அன்வர் மில்டன், திருவண்ணாமலை