கதை
சிறகு தேடி…
அன்வரும் அலியும் எழுந்து தன்மீது படிந்திருந்த மண்ணை தட்டிக்கொண்டார்கள். மாலை கதிரவனின் தூரத்து ஒளி கடற்கரையை அழகு படுத்தி இருந்தது. தென்றல் என்று சொல்ல முடியாத அளவிற்கு காற்று சற்று அழுத்தமாக வீசியது. இங்கும் அங்குமாக சிதறி களைந்துக்கொண்டிருந்த ஜனங்களோடு நண்பர்கள் இருவரும் நெறுக்கமாக நடக்கிறார்கள். “அலி, நபிலா நமக்கு உறவு பெண்ணல்ல இருந்தும் நாளை நாம் பஞ்சாயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம். சுமூக சீர் திருத்தத்திற்காக நம்மை நாமே ஓரளவு தயார் படுத்திக் கொண்ட பிறகு ஊரில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் பஞ்சாயத்தார் நம்மை அழைக்கிறார்கள். நம் கருத்தை வெளிபடுத்த அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. நபிலா செஞ்சது சரின்னுதான் பஞ்சாயத்துல சொல்லப் போறேன்.”