வா வா கண்ணா…
வான்முகில் நிறத்தோய்; கேட்க
வரம்பல ஈவோய்; தொங்குந்
தார்குழல் காற்ற சைக்கத்
தாவணி இழுப்போய் ஊதுஞ்
சீர்குழல் ஓசை தன்னில்
சிந்தையில் கலப்போய் ராதை
கூர்விழி சிக்கும் நேரம்
குறும்புகள் செய்வோய் வாவா..
நஞ்சினால் மாறும் வண்ணம்
நால்திசை ஆழி யாகிக்
கஞ்சமுங் காத லிக்கும்
கனிவுடை எழிலோ சுற்றி
கொஞ்சிடுங் கோபி யர்கள்
கோர்த்துனை ஓடி ஆடித்
துஞ்சிடும் வியப்பைத் தாருந்
தூயதோர் அருளோ சொல்லாய்..
எண்ணமே உன்னை எண்ணி
இவனுமோர் ராதை ஆனேன்
கன்னமே கிள்ளிப் பார்க்கக்
கனிவுடன் வாவா கண்ணா
கண்துளை மூங்கில் ஆகிக்
காதலே உன்மேல் கொண்டேன்
என்துயர் தீர்க்கும் வண்ணம்
இதயமும் தாங்க வாவா..
பெண்துகில் உரிந்த நேரம்
பேதமை பாரா தங்கே
முன்னருள் செய்தே காத்த
மூச்செனும் பார்த்தா உன்னை
என்துகில் கொண்டே நாளும்
இறக்கமே வாழ்வென் றானேன்
கண்துயில் போதும் என்னை
காத்திட வாவா கண்ணா..
மண்ணுள வாயில் இந்த
மாபெரும் அண்டங் கொண்டும்
என்னுளம் அதற்குள் உண்டு
இதையுமே கொஞ்சம் பாராய்
உன்னுளம் இனிக்கும் வண்ணம்
ஓதுவேன் பாடல் நூறு
பொன்னுளத் தானே வாவா
பொழுதெலாம் காத்தேன் வாவா..
ஏடி வரதராசன்
பிப்வரி 2020 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
