fazilaa
உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா? உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா?!
 
என்ன வியக்கிறீர்கள். சற்றே உங்கள் இளவயதிற்கு பின்னோக்கி போய் பாருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் நண்பர்கள் எல்லோரும் சுற்றுலா சென்ற போது உங்களால் மட்டும் போக முடியாத சூழல் ஏற்பட்டதா? அப்போது உங்கள் மனம் என்ன செய்தது என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயம் அவர்கள் சென்ற சுற்றுலாவையே சுற்றி கதை வடித்திருக்கும். அதாவது வெளியே போன அத்தனை நண்பர்களும் மிக சந்தோஷமாக குதூகலமாக இருப்பதாகவும், நனறாக அரட்டை அடித்து மகிழ்வதாகவும் ஒரு  உல்லாசமான கதை உங்கள் மனதில் பல காட்சிகளாக விரிந்திருக்கும். 
 
அதே நேரம் வெளியே போக முடியாத உங்கள் சூழலைப் பற்றி ஒரு சோகமான கதையை எழுதி இருக்கும். சுற்றுலா சென்ற நண்பர்கள் எல்லோரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்பதாகவும், உங்களுக்கு மட்டும் எப்போதுமே எதுவும் இலகுவாக இல்லை என்பதாகவும் அந்த கதை உங்கள் மனதை அழுத்தி இருக்கும். இது ஆழ்மனதின் இயல்பு. 
 
உச்சி வெயில் சுட்டெரிக்கும் மெக்ஸி கோவின் நண்பகல் நேரம். பட்டாம்பூச்சியாய் அந்த வீதியில் தினம் பறந்து திரியும் அந்த இளம் பெண் சாலையின் ஓரத்தில் சரிந்து மயங்கி கிடக்கிறாள். சர்ர்… சர்ர்… என அவளைத் தாண்டி செல்லும் வாகனங்களின் இரைச்சல்களை உணர முடியாதவளாய் எந்த சலனமும் இல்லாமல் பேச்சு மூச்சின்றி அப்படியே கிடக்கிறாள். அந்த சாலையைக் கடக்கும் பாதசாரிகள் கண்களில் சற்று நேரம் கழித்தே அவள் மயங்கிக் கிடக்கிறாள் என்பது பட அவளை சுற்றிலும் கூட்டம் கூடுகிறது. ஒருவர் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க மற்றொருவர் ஆம்புலன்ஸை அழைக்கிறார். அவள் யாரென அடையாளப்படுத்தப் பட்டு அவளது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப் படுகிறது.
 
இதோ.. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மருத்துவர்கள் அவள் உடல் நிலையைப் பரிசோதிக்கும் நேரத்துக்குள், இந்த பிரச்னைக்கு காரணமான அந்த பெண்ணின் மனநிலையை சற்று பார்த்து விடுவோம்.
 
அந்த சிறு பெண்ணுக்கு எப்போதுமே மனதிற்குள் ஒரு ஆதங்கம். தன்னுடைய நண்பர்கள் எல்லாம் நினைத்தது போல ஃப்ரியாக மகிழ்சியாக இருக்கும் போது தனது பெற்றோர் மட்டும் ஏன் தன்னிடம் மிக கட்டுப்பாடாக இருக்கிறார்கள். என்ன செய்தாலும் ஏதாவது குறை கூறிக் கொண்டே இருக்கிறார்களே, இவர்களுக்கு என் மேல் கொஞ்சம் கூட பிரியமே இல்லையா என்று நினைத்து வருந்துகிறாள். தன்னை அவர்கள் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்றே அவள் மனம் பதைபதைக்கிறது. இப்போது என்ன குறை கூறப் போகிறார்கள் என்று தெரியவில்லையே என்று மனதிற்குள் இனம் புரியாத பதற்றமாகவே இருக்கிறது. 
 
நான் இவர்களின் உண்மையான பெண் தானே அல்லது ஏதாவது ஒரு விபத்தாய் இவர்களிடம் வந்து சேர்க்கப் பட்டீருப்பேனோ என்பதாக அந்த சிறு பெண்ணின் மனம் தன்னைப் பற்றி என்னென்னவோ மர்மக் கதை எழுதுகிறது முடிச்சிகள் அவிழ்க்கப் படாமல் அந்த மர்மக் கதை இன்னும் இன்னும் ஆதாரங்களை தன்னை சுற்றி நடப்பவற்றிலிருந்து சேர்த்துக் கொண்டே வருகிறது. 
 
எப்போது பார்த்தாலும் பாடங்களை படித்தாயா, அதை செய்தாயா இதை செய்தாயா என்றே விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுப் ப்ராஜக்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய எண்ணம் என்றே அந்த பெண்ணிற்கு படுகிறது. இப்படியே நினைக்க ஆரம்பித்து, இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை எனத் தோன்ற தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்கிறாள். ஆனால் அதற்கும் தைரியம் இல்லாமல் உடலும் மனமும் பலகீனமாகி மயங்கி சாலையில் விழுந்த அந்த பெண்ணை தான் இங்கே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கிறார்கள். 
 
தீவிர சிகிச்சைக்குப் பின் மயக்கமும் விழிப்புமாக இருந்த அந்த பெண்ணின் காதுகளில் அவளது தந்தை அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்கிறது. வார்த்தைகளின் அர்த்தம் விளங்கும் முன் குரலின் அழுகை அவளைத் தாக்குகிறது. தழுதழுத்த குரலில், ‘இவள் என்றால் எனக்கு உயிர். என்னேரமும் துறுதுறுவென இருப்பாளே, இப்படி சக்கையாக கிடக்கிறாளே’ என்று தாங்க முடியாத சோகத்துடன் விம்மி அழும் தந்தையின் குரல் கேட்டு அதிர்ந்து போகிறாள். 
 
தான் காண்பது கனவா அல்லது தன் ஏக்கத்தின் வெளிப்பாடாக வந்த கற்பனையா என நம்ப முடியாமல் தவிக்கிறாள். அப்போது தொடர்ந்து மிருதுவாக தன் கைகளை வருடி கொடுத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் அழுகுரலும், நண்பர் ஒருவர் அவர்கள் இருவரையும் தேற்றுவதும் தெளிவாக கேட்க, மெல்ல கண்களைத் திறந்து அவர்களைப் பார்க்கிறாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணிர் வடிகிறது.
 
அது ஆனந்தக் கண்ணீர், என்பதை அறியாத அந்த தந்தை ஓடோடி அவளருகில் வந்து ஆறுதலாக தலையைக் கோதி விட்டு, அருகில் இருக்கும் மாதுளம் ஜூஸை எடுத்துக் கொடுத்து இது உனக்கு பிடிக்குமே.. கொஞ்சம் அருந்துகிறாயா என்று கேட்க அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் கதறி அழுகிறாள், 
 
எனக்கு மாதுளம் ஜூஸ் பிடிக்கும் என்று என் தந்தைக்கு தெரியுமா? எப்போது தெரிந்தது? எப்படி தெரிந்தது. இவர்கள் என் சிறு விருப்பு வெறுப்பு கூட அறியாதவர்கள் என்றல்லவா தவறாக நினைத்திருந்தேன். இவர்களுக்கு உண்மையில் என் மீது இத்தனை பாசமா?!
 
யோசித்த அந்த நிமிடம் அந்த பெண்ணுக்கு, தனது பெற்றோரைப் பற்றி தனது மனம் இது நாள்வரை உண்மையல்லாத ஒரு கதையை, ஏதோ ஒரு புள்ளியைப் பிடித்துக் கொண்டு தன் போக்கில் எழுதிக் கொண்டு இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. 
 
எதிர்மறையான சிந்தனைகளுக்கான புள்ளி அழிந்து மனம் இப்போது நேர்மறையாக சிந்திக்கத் தொடங்குகிறது. இப்போது அவர்களின் கண்டிப்பு எல்லாம் தன் மேல் அவர்களுக்கு உள்ள அக்கறையாகத் தெரிகிறது. அவர்கள் எத்தனை பிரியமானவர்கள், தனக்காக அவர்கள் எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள், தனது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்களை கடினப்படுத்திக் கொண்டு கண்டிப்புடன் நடந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரிகிறது. இது அந்த பெண்ணின் எண்ணத்தை மட்டும் மாற்றவில்லை, அவளது வாழ்க்கையையே அழகான முறையில் புரட்டிப் போடுகிறது. இன்று அந்த பெண் மெக்ஸிகோவின் தலை சிறந்த உலவியல் ஆலோசகர். என் நெருங்கிய சினேகிதி. 
 
அன்று அந்த இளம் பெண்ணுக்கு நிகழ்ந்தது போல் தன் சுற்றத்தை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் அமைவது சாத்தியமில்லை. 
 
ஆனால் உங்களிடம் ஒரு விழிப்புணர்ச்சி இருந்தால், யாரையும், இவர்கள் இப்படித் தான் என்று முடிவு பண்ணாமல், அவர்களுடைய பொஸிசனில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள். அந்த புரிதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் மேல் மட்டுமல்ல தன் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

டிச்ம்பர் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

தமிழ்நெஞ்சம் - டிசம்பர் 2019

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


4 Comments

அனுராஜ். · டிசம்பர் 2, 2019 at 2 h 17 min

அருமை..சிறப்பான வடிவமைப்பு..வாழ்த்துகள்.

Vijivenkat · டிசம்பர் 7, 2019 at 16 h 41 min

ஒவ்வொரு பதிவும் தனி சிறப்பு

முனைவர் ஜெயந்தி நாகராஜன் · டிசம்பர் 14, 2019 at 16 h 23 min

இதழ் என் நெஞ்சைத் தொட்டது. உமையவனின் நேர்காணல். ஹைகூ பற்றிய தெளிவான அறிமுகம்
இந்தி படித்த வெள்ளித்தட்டு எனப் பல கலவைகள் சிந்தைக்கு நல் விருந்து
தொடரட்டும் தங்கள் இலக்கியப்பணி

Suresh Babu · பிப்ரவரி 12, 2020 at 4 h 46 min

வணக்கம்
‘தமிழ்நெஞ்சம்’ சஞ்சிகை ஃபிரான்ஸ் நாட்டில் வெளி வருவதாக ஃபிரான்ஸ் வாழ் நண்பர் சொன்னார். ‘தமிழ் நெஞ்சம்’ இந்தியாவிலும் வெளியாகிறதா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »