உலகமெங்கும் பெண்ணியம் பேசும் நேரத்தில், மென்மையாக நீங்கள் பெண்ணியத்தை ஒத்துக் கொள்ளாததன் காரணமென்ன..
சுவாரசியமான கேள்வி .. முதலில் “மென்மையாக” எனும் உங்கள் குறிப்பீடு அழகாக இருப்பதுடன் என் மீதான உங்கள் புரிதலைப் புரிய வைக்கிறது. சரி… பெண்ணியத்தை நான் ஒத்துக் கொள்ளாததன் காரணம். அநேகம்..! முதலாவதாகப் பெண்ணியம் எனும் பெயரில் பெண்களை உயர்த்திப் பேசுவதும் ஆண்களைத் தூற்றுவதும் எனக்கு உடன்பாடற்ற விஷயம். மனிதக் குலத்தின் இரு பாலினங்களான ஆண் பெண் இருவகையினருக்குமே பொதுவானது துன்பம்! இடர்கள், இன்னல்கள், பிரச்னைகள் என அனைவருக்குமே ஒரு நியதியான வாழ்வியல் கூறுகளில் பெண் துன்பம் மட்டுமே பெரிதாய் பேசப்படுகிறது. பெண் என்பவள் பூமாதேவி, தியாகி, குடும்பத்தின் குத்துவிளக்கு என்றெல்லாம் பேசிப் பேசியே மகுடம் வைப்பது போல் ஒரு வட்டத்துக்குள் பெண்களை அடைத்து வைத்தபடியால் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டுமெனும் எழுதாச் சாசனத்தை அவள் மீது திணித்து, அம் மகுடம் ஒரு முள் கிரீடமாகி அவளைப் பலவீனப்படுத்தி விட்டது. இந்த உளவியலால் ஒரு தன்னிரக்கம் நேர்ந்து சந்தர்ப்பங்கள் நேரும் போது பிரஷர் குக்கர் தன்மையில் அவள் வெடித்துச் சீறி, அழுது புலம்பி ஆண்களைக் காரணமாக்கிச் சாடுகிறாள். மாறாய் பலவீனமான பாலின மென்று பலவீனமாக்கப்பட்ட பெண்ணின் முன்னேற்றம் ஆண்களுக்கு நிகராக அமையும் தீவிர முனைப்புடன் இந்த மகுடம், குடம், குத்துவிளக்கு என்கிற மாயைகளினின்று முதலில் வெளிப்பட வேண்டும். பின் தம் அத்தனை துன்பங்களுக்கும் ஆண்கள்தான் காரணம் எனும் பிடிவாதப் பிரமைகளினின்று விடுபட்டுச் சுய முனைப்புடன் தன்னை நிரூபிக்க முற்பட வேண்டும். துன்பம் நேரும் போது பெண் வாய் விட்டு அழுது அரற்றுகிறாள். அக்கம்பக்கத்தில் முறையிடுகிறாள். அதே சமயம் எப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தாலும் ஆண் மௌனமமாக உள்ளுக்குள் குமுறுவானே தவிர, ஒலிப் பெருக்கி வைக்காக் குறையாய் ஓவென வெளியிட்டுக் கொள்ள மாட்டான். தவறாக நினைக்க வேண்டாம் அன்புச் சகோதரிகளே… எத்தனை எத்தனை ஆண்களின் வாழ்க்கை பெண்களால் சிதைக்கப்பட்டிருக்கின்றன!! ஆக ஆணுக்கும் அவஸ்தைகள் உண்டு… வலிகள் உண்டு. ஆனால் ஆணியம் என ஒரு அடையாளப் போர்வை கிடையாதே?!! பெண்களுக்கிருப்பது போல் அவர்கள் மன நலத்துக்காக, பாதுகாப்பிற்காக எச் சட்டமும் அமுலாக்கப்பட வில்லையே.!! இப்படியெல்லாம் சொல்வதால் எனக்கு பெண்களென்றால் பிரியமில்லையென்றல்ல? அவர்கள் அனைவரும் என் சிநேகிதி களாயிற்றே!! ஆணும் பெண்ணுமான இப்புவியில் சில அடிப்படைக் கூறுகள் தவிர ஆண் பெண்ணெனும் பேதம் தேவையில்லை என்பது தான் என் அடிப்படை வாதம்!. என் கதைகளில் கூட ஆணோ பெண்ணோ அந்தந்தப் பாத்திரங்களின் தன்மைகளுக்கேற்ற வகையில் தான் நியாயம் அமையுமேயன்றி ஆண் பெண் பார்வையிலல்ல!. நீ……ளமான விளக்கத்துக்கு மன்னிக்கவும். இன்னும் இன்னும் பல பக்கங்கள் நீள வேண்டிய கிடுக்குப் பிடி கேள்வியல்லவா நீங்கள் கேட்டிருப்பது!!
2 Comments
தமிழ்மாமணி புலவர் வெ . அனந்தசயனம் · ஜூன் 1, 2019 at 12 h 22 min
மிகச் சிறப்பான நல் முயற்சி வாழ்த்துகள். பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சுவைத்தேன். மொத்தத்தில் இதழ் ‘தேன்’ பாராட்டுகள். வாழ்க!
ஆரூர் தமிழ்நாடன் · ஜூன் 1, 2019 at 14 h 17 min
‘தமிழ்நெஞ்சம்’ தமிழர்களின் நெஞ்சங்களை ஈர்க்கும் இலக்கிய இதழாகத்தொடர்ந்து மலர்வது பாராட்டுக்குரியது. இதழின் பக்கங்கள், அழகிய கட்டமைப்பால் கவித்துவ அழகோடு திகழ்கின்றன. மொழி பெயர்ப்பாளர் சாந்தா தத் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. எதார்த்தமான அவர் குறித்த செய்திகள், அவரது இலக்கிய உழைப்பை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. கவிக்கோ துரை வசந்தராசனின், மரபுக் கவிதை புதுக்கவிதை வீச்சைப் பெற்று, இளம் விரல்களால் நமக்குள் விளக்கேற்றுகின்றன. அதேபோல் காவனூர் சீனிவாசனின் மின்மினி குறித்த ஒற்றை ஹைகூ, புதிய சிந்தனையோடு நமக்குள் சிறகடிக்கிறது. இதழில் இடம்பெற்ற ஏனைய ஹைகூக்களும், கவிதைகளும் நம் இதயத்தில் இனிப்பை ஏற்றுகின்றன. கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுத்த ‘பனிவிழும் மலர்வனம்’ ஹைகூ நூல் வெளியீட்டுச் செய்தி அழகு. சிறுகதை, கட்டுரை, கவிதைகள் என வண்ணமயமாய்த் திகழும் தமிழ்நெஞ்சத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.