மின்னிதழ் / நேர்காணல் முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன்

பொதுவாகவே தமிழ் ஆசிரியர்களைவிட. மற்ற துறைகளில் உள்ளவர்களே தமிழில் கோலோச்சி வருகிறார்கள் என்பது உண்மை. பொறியாளர்களும் மருத்துவர்களும் தமிழ்த்தொண்டை ஆற்றிவந்துள்ளனர் தற்போதும் ஆற்றிவருகிறார்கள் என்பதற்கு பொறியாளர் வா.செ.குழந்தைசாமி மருத்துவர் ஜெய.இராஜ மூர்த்தி போன்றோரை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

பொறியியலில் சேர்ந்த முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில இடம்கிடைத்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு மருத்துவப் படிப்பைக் கற்று சிறந்த மருத்துவர்களாக வலம் வருவதை நாம் காணலாம். அப்படிப்பட்ட மருத்துவரே இன்று நமக்கு நேர்காணல் வழங்க உள்ளார். ஆம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள மேடவாக்கம் கல்பனா பல் நோக்கு மருத்துவமனையின் நிறுவனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வாழ்நாள் சாதனையாளர் உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். தமிழ்க் கவிதைகளை சிறுவயது முதற்கொண்டு எழுதி வருபவர்.

முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன் M.B.,B.S.., M S (General Surgery), D.A, C.R.S (Indira Gandhi open University), D P.H ( Admin ), .D.(Alternate medicine ), F A I.M.S. , F.C.G.P (Indian medical association ), M.Sc. General Psychology (Madras University), D.Lit.(Jerusalem Medical University Vellore ), D Lit. ( International Tamil University America )

அவர்களைத்தான் இம்மாத தமிழ்நெஞ்சம் இதழ் க்காக நேர்காணல் செய்துள்ளோம்

சனவரி 2023 / 136 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

பிரான்சு நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்நெஞ்சம் திங்களிதழின் ஆசிரியர் குழு சார்பாக இனிய வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கமும் மனமார்ந்த நல்வாழ்த்துகளும் ஐயா..

உங்களது சொந்த ஊரைப்பற்றியும் பெற்றோரைப்பற்றியும் கூறுங்களேன்

ஐயா.. நான் பிறந்தது முன்னாள் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளடங்கிய சோழ சிம்மபுரம்.. தற்காலத்தில் அது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளடங் கிய சோளிங்கர் என மருவி விட்டது. ஆனால் அதனுடைய இயற்பெயர் திருக்கடிகை இரண்டு பள்ளிகளில் நான் எனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தேன். சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். குட் லெட் மேல்நிலைப்பள்ளியில்.. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றேன். ஆரம்ப காலம் முதலே ஆசிரியர்களுடன் மிகுந்த நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டு என்னுடைய படிப்பைத் தொடர்ந்தேன்.. இன்றும் எனக்குப் பாடம் சொல்லித் தந்த பல ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இது நாள் வரை நான் பெற்ற அனைத்து வளர்ச்சிகளுக்கும் அவர்களின் ஊக்கமும் அறிவுரைகளுமே காரணம்.

அப்பா பலராமன். தீயணைப்புத் துறையில் ஓட்டுனராகப் பணியாற்றியவர். அம்மா அற்புதம்மாள் மகப்பேறு நலச் செவியராக சோளிங்கரில் இறக்கும் வரை பணியாற்றி.. அனைத்து மக்களிட மும் நற்பெயரைச் சம்பாதித்தவர். இப் போதும் இரண்டு தலைமுறைக்கு முன் புள்ள நபர்களைச் சோளிங்கரில் கேட்டா லும் என்னுடைய தாயின் பெயரைச் சொல்வார்கள் அவர்களுடைய பிள்ளை களை என்னுடைய அம்மா தான் பிரசவம் பார்த்தார்கள் என்று.. அவரே நான் மருத்துவத் துறைக்கு வர முன்னோடியாக இருந்தவர். இறைவனின் அருளால் எனது இளமைக்காலம்.. மிகுந்த மகிழ்ச்சியுடனும் நட்புகளும் உறவுகளும் சூழ்ந்து வளர் வதாக அமைந்திருந்தது.

சோளிங்கர் இலக்குமிநாராயணன் திருக்கோயில் சென்றுள்ளீர்களா? இப்போ தும் செல்வதுண்டா? அதன் சிறப்பு என்ன?

கண்டிப்பாக ஐயா சோளிங்கரில் உள்ள இலக்குமி நாராயணன் திருக் கோயில் ஒரு மலை வாசஸ்தலம். இங்கு விஷ்ணு யோக நரசிம்மராக இருந்து அருள் அளிக்கிறார்.

இது 108 திருத்தலங்களில் ஒன்று.அங்கு இருந்த வரை நான் கார்த்திகை மாதத்தில் தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மலை மீது ஏறி இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் கூடவே என்னுடைய நண்பர்களும் வருவதால் எங்களுக்கு மலை ஏறி இறங்குவதில் சிரமம் இல்லாமல் இருந்தது. யோக நரசிம்மர் திருக்கோயில் சுமார் 1300 படிகளுக்கு மேல் கொண்டது.

அதைத் தவிர பள்ளிக் காலத்தில் சாரணர் அமைப்பின் மூலமாக அங்கு சென்று சேவையாற்றி இருக்கிறேன். இதற்கு மூல காரணமாக இருந்தவர் என்னுடைய பள்ளியின் சாரண ஆசிரியர் திரு பட்டாபிராமன் அவர்கள்.

மேலும் அன்றைய காலகட்டத்தில் சோளிங்கரில் உள்ள அனைத்து பூசாரி களின் இல்லங்களில் நிகழ்ந்த பிரசவங் களுக்கு என்னுடைய தாய்தான் உதவி செய்திருப்பார். எனவே அங்கு சென்றால் அவருக்கென தனி மரியாதை உண்டு ‌கூடவே எங்களையும்.. அங்குள்ளவர்கள் சிறப்பாகக் கவனிப்பார்கள்.

இன்றும் நேரம் கிடைக்கும் பொழுது என்னுடைய சொந்த ஊருக்குச் சென்று அப்படியே இறைவனையும் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

பள்ளிகாலம்தொட்டே படிப்பில் முதல்மாணவராகவே வந்துள்ளீர்கள்? அதன் இரகசியம் என்ன?

இரகசியம் என்று தனியாக எதுவும் இல்லை ஐயா. ஏழாம் வகுப்பு வரை நானும் ஒர் சாதாரண மாணவனாகத்தான் படித்தேன். ஆனால் மதிப்பெண்ணிகள் எடுப்பதில் வகுப்பில் முதல் ஆறு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தைப் பிடித்து விடுவேன். இப்படி இருக்கும் பட்சத்தில் என்னை அறியாமல் ஒரு நேரம் நான் வகுப்பில் முதல் மாணவனாக வந்தேன். அன்றைக்கு கிடைத்த மரியாதை என்னுடைய மனதை முழுவதுமாக மாற்றி விட்டது. இனிமேல் நன்றாகப் படித்து ‘‘அந்த முதல் இடத்தை’’த் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே தொடர்ந்து நான் நன்றாகப் படித்து முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டேன்.

முதல் மதிப்பெண்ணைப் பெற்றால் ‘‘வரும் மரியாதை கூட ஒரு புகழ் போதை போலத்தான் போலும்.’’ விடாமல் நுகர்ந் திட எனக்கு அது ஒரு உந்துதலாக அமைந்தது.

இன்றும் எனது பெயர்… நான் படித்த குட் லெட் மேல்நிலைப் பள்ளியில் இறுதியாண்டின் முதல் மாணவனாக வந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றதற்கான பலகை அங்கே உள்ளது. மலரும் நினைவுகளாக என்னுடைய குடும்பத்துடன் அங்கு சென்று என்னுடைய பிள்ளைகளுக்கு நான் படித்த இடங்களை காண்பித்ததும் அந்த பலகையில் எனது பெயர் இடம் பெற்று இருப்பதையும் காண்பித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.

சென்னை மையத் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேர்ந்துவிட்டு இடைநின் றதற்கு பின்னாளில் வருந்தியதுண்டா?.

சென்னை மைய தொழில்நுட்ப பயிலகத்தில் நான் ‘‘இரசாயனப் பொறியா ளராக « படிக்க பத்தாம் வகுப்பு முடிந்ததும் வாய்ப்பு கிடைத்து.. சேர்ந்த இரண்டே நாளில் மனம் மாறி.. பின்பு குட் லெட் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

மேல்நிலைப்பள்ளி முடித்த பின்பும் கூட மருத்துவ இடத்திற்கான கலந்தாய்வு முடிந்து முடிவு வெளியாக கால தாமதமானதால் மதுரையிலும் , சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியிலும் பொறியாளருக்கான இடம் கிடைத்து.. என் படிப்பைத் தொடர்ந்தேன். முடிவாக நான் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த மருத்துவத்துறையில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் மருத்துவத்தில் என்னுடைய படிப்பைத் தொடர்ந்து. அதிலே உச்சப் படிப்பு வரை படித்து முடித்தேன். ஆனால் நான்.. பொறியாளர் படிப்பை நிறுத்தியத்திற்காக பின்னாளில் எப்போதுமே வருந்தியது கிடையாது.

ஒவ்வொரு நோயாளிகளையும் நான் பார்த்து அவர்களின் நோய்கள் சுகமான பின்பு வந்து என்னை வாழ்த்து வது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கின்றது. மனநிறைவைத் தருகிறது. மருத்துவத்தைச் சேவையாகவும் தொழிலா கவும் மகிழ்ச்சியுடன் இன்றளவும் மனமாரச் செய்து கொண்டு வருகிறேன்.

சென்னையில் நடந்த அனைத்திந்திய தமிழ்ச்சங்க விழாவில் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் மற்றும் தமிழறிஞர்களுடன் மருத்துவர்...

மருத்துவராகப் படிப்பதுதான் சிறந்தது எனக் கருதுகிறார்களா?

மருத்துவராகப் படிப்பதுதான் சிறந்தது என்று நான் சொல்ல முடியாது. அனைவருக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று எப்படி உறுதி யாகச் சொல்வது?? இடம் கிடைத்தால் கண்டிப்பாக சிறந்த முறையில் படித்து சேவையாற்றுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன். மறுபிறவி என்று ஒன்று இருந்தால் அதிலேயும் எனக்கு மருத்துவத்தில் இடம் கிடைத்து இன்று போலவே அன்றும் வாழ்ந்திடவே நான் இறைவனிடம் வேண்டிக் கொள்வேன்.

பொறியியற் படிப்பை விட்டுவிட்டு மருத்துவக்கல்லூரி நுழைந்த அந்த நாளைய அனுபவம் பற்றி…

அது ஒரு ‘‘கனாக்காலம்’’ என்று சொல்வார்களே அதைப் போலத்தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணா பொறி யியல் கல்லூரியில் என்னுடன் படித்தவர் அன்றைய கல்வித்துறை அமைச்சரின் மகன். அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கும் மருத்துவ துறையில் படிக்க இடம் கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கை யோடு இருந்ததால்.. மிகவும் மகிழ்ச்சியுடன் அன்றைய நாட்களைக் கழித்தோம். கடைசி நிமிடம் வரை பொறியியல் படிப்பை மிகுந்த ஈடுபாடுடன்தான் படித்து வந்தேன். ஒவ்வொரு துறையிலும் அதற்கான சிறப்புகள் உண்டு அல்லவா?? அதைப் போலத்தான் பொறியியல் படிப்பும்.

உங்கள் துணைவியாரும் மருத்துவ ராக உள்ளார்களே! உங்கள் திருமணம் காதல்திருமணமா?

ஆமாம் ஐயா.. என்னுடைய துணைவியார் திருமதி கல்பனா ஜெயக் குமார் என்னுடன் மருத்துவக் கல்லூரியில் படித்தவர். என்னுடைய நெருக்கமான நண்பர்.

பின்பு மனங்கள் இணைந்து ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டபின் காதலாக அது வளர்ந்து பின்பு திருமணத் தில் முடிந்தது. ஆரம்பத்தில் இரு வீட்டு எதிர்ப்பிலும் பின்பு சற்றே தணிந்து இரு வீட்டு ஆதரவிலும் திருமணம் முடிந்து இன்று நல்லதொரு வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

மூன்று பிள்ளைகள்.. மூத்த மகள் மருத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் முடித்து இப்போது நுண்ணுயிரியல் சிறப்பு மருத்துவராக பெங்களூரில் இருந்து வருகிறார். இரண்டாவது மகள் மருத்துவம் படித்து வருகிறாள். மூன்றாவது மகனும் இப்போது ஜிப்மர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்

உங்கள் மாமனார் ஊரான கும்பகோணம் வந்துள்ளீர்களா? அதன் சிறப்பென எதைக் கருதுகிறீர்கள்?

கண்டிப்பாக ஐயா.. கும்பகோணத் திற்கு நான் பலமுறை வந்ததுண்டு. திருமண மான புதிதில் அவர்களுடைய உறவினர் கள் இல்லத்திற்கு சென்று அவர்க ளுடன் நாட்களை கழித்தது மறக்க முடியாத நினைவாக இன்றளவும் நினைவில் உள்ளது. கும்பகோணம் என்றாலே கோயில்களின் நகரம் என்றுதான் சொல்வார்கள். தடுக்கி விழுந்தால் பிள்ளையார் கோயில் என்பார்கள் ஆனால் இங்கு தடுக்கி விழுந்தால் அனைத்தும் கோயில்களே. தெருவுக்குத் தெரு.. கோயில்கள் தான் இங்கு. சக்கரபாணி திருக்கோயில் முதல் சாரங்கபாணி திருக்கோயில் வரை..

கும்பகோணம் கோயில்களுக்குப் புகழ்பெற்ற நகரம். இன்று அந்த கும்ப கோணம் என்ற பெயரை நாம் போகும் நெடுந்தூர பயணங்களின் சாலைகளின் ஓரங்களில் காணலாம் ஆம் ‘‘கும்பகோணம் டிகிரி காபி’’ என்று.

அத்தனை சிறப்பு வாய்ந்தது கும்ப கோணம் காபி. மூன்று முறை மகா மதத்திற்கு என்னுடைய குடும்பத்தாருடன் கும்பகோணத்திற்கு வந்துள்ளேன் .

படிக்கும்போதே கவிதை எழுதிப் பணப்பரிசு பெற்றுள்ளீர்கள் அந்த அனுபவம் எப்படி இருந்தது?

தமிழன்னையின் அருள் எனக்கு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். நான் தமிழில் எழுத ஆரம்பித்தது என்னுடைய 12ஆம் வயதில். (ஏழாம் வகுப்பு படிக்கும் போது) முதலில் நான் எழுதியது ஒரு கதை ‘‘ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்.’’

மெல்ல மெல்ல கவிதைக்கு மாறியது என் மனம் . நிறைய கவிதைகளை நானாகவே புதுக்கவிதை வடிவிலே எழுத ஆரம்பித்தேன்.

தினத்தந்தி வார இதழில் என்னு டைய கவிதை இடம்பெற்றமைக் காக எனக்கு 25 ரூபாய் ‘‘பண ஆணை’’ வந்தது. என்னை அது மேலும் எழுத ஊக்கப்படுத்தியது இன்றளவும் என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

கவிஞராகப் பாடகராக மருத்துவ ராக எவ்வாறு பலதுறைகளில் பணிக்கு முடிகிறது?

மருத்துவத் துறையில் எந்நேரமும் நான் நோயாளியுடன் பயணிப்பதால் எனக்கென்று சில மணி நேரம் ஒதுக்கிக் கொள்ள சமீப காலமாக முடிவெடுத்தேன். அதன் நிமித்தமே காலையில் ஒரு மணி நேரம் எழுதுவதும்… ஒரு மணி நேரம் பாடுவதும்… மாலையில் 2 மணி நேரம் நடைப்பயிற்சி மேல் கொள்வதையும் விடாமல் பற்றிக் கொண்டுள்ளேன் இன்றளவும். எட்டு மணி நேர வேலை யில் நான் மருத்துவத் தொழிலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டுக் கொண்டுள் ளேன். கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நோயாளிகளைப் பார்த்து வருகிறேன்.

புதுக்கவிதைகளிலேயே கவனம் செலுத்தும் தாங்கள் ஏன் மரபுக்கவிதை பக்கம் செல்வதில்லை?

புதுக்கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும் ‌ அதற்காக மரபுக் கவிதை எழுத வேண்டாம் என்று இல்லை. ஒரு வட்டத்திற்குள் அமைந்து அதற்குள் எழுதி சிறப்புடன் இருப்பது மரபுக் கவிதை. உண்மையிலேயே அது மிகவும் சிறந்தது. இருந்தும் எனக்கிருக்கும் காலத்தை மனதில் கொண்டு இப்போது புது கவிதையிலேயே என்னுடைய மனம் நாட்டமுடன் இருக்கிறது கண்டிப்பாக மரபுக் கவிதைகளை எழுதுவேன் அது காலத்தின் கைகளில் தான் உள்ளது.

புதுவை சட்டமன்றச் சபாநாயகர் திரு ஏம்பலம் செல்வம் அவர்களுடன்...
நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அரவிந்தராஜ், கல்கண்டு லேனா தமிழ்வாணன், ஜவஹர் மற்றும் சிந்தைவாசன் அவர்களுடன் மருத்துவர்.
திரைப்பட இயக்குநர் யார் கண்ணன் அவர்களுடன்...

இதுவரை எழுதியுள்ள நூல்கள் பற்றி.

இதுவரை நான் ஏழு கவிதை தொகுப்பு நூல்களையும் ஒரு உரைநடை நூலையும் எழுதி உள்ளேன்.

கவிதை தொகுப்புகள் அனைத்தும் புதுக்கவிதைகளே.

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு நூல் ‘‘கற்பனை வித்துக்கள்..’’ சுமார் 300 பக்கங்கள் கொண்டது அந்த கவிதைத் தொகுப்பு நூல்.

அதற்காக நான் நக்கீரன் நூலாய்வு அமைப்பிலிருந்து சிறந்த கவிதை புத்தகத் திற்கான பதக்கத்தையும் தமிழ்ச் செம்மல் விருதையும் வாங்கியுள்ளேன்.

மேலும் உலகத் தமிழ் பல்கலைக் கழகத்திடமிருந்து ‘‘அறிவொளி’’ சான்றி தழையும் பதக்கத்தையும் வாங்கியுள்ளேன்.

மற்ற கவிதைத் தொகுப்புகள்..

‘‘பகலிலும் கனவுகள் என்னோடு பேசும்’’
‘‘பாக்களில் மின்னும் வைரங்கள்’’
‘‘தாழம்பு வாசம் தரை எங்கும் வீசும்’’
‘‘மனதோடு பேசும் மாயங்கள்’’
‘‘வ(எ)ண்ண விழுதுகள்’’
‘‘கார்கால மேகங்கள்’’
உளவியல் சார்ந்து உரைநடையில்
பொது மக்களுக்கான நூலாக
‘‘மனமே ஓ… மனமே நீ… மாறிவிடு…’’
இப்போது எழுதிக் கொண்டு வருவது நற்றமிழ் நாலடியில் நறுந்தேனாய்த் திருக்குறள் ‘‘என் பார்வையில்.. அறிவியலும் ஆன்மீகமும்..’’

தாங்கள் பெற்ற விருதுகளில் சிறந் தது என்று எதனைக் கருதுகிறீர்கள்?

மருத்துவத்துறையில் நான் மூன்று முறை சிறந்த மருத்துவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்று கௌரவிக்கப் பட்டேன். இருந்தும் நான்கு மாதங்களுக்கு முன்பு இந்து தமிழ் நாளிதழில் சார்பாக நடந்த கணக்கெடுப்பில் ‘‘சிறந்த மருத்துவ நட்சத்திரம்’’ என்ற விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

விழா நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பார்த்துக் கொண்டிருந்த நோயாளிடம் கூறினேன் நாளை மறுநாள் வர வேண்டாம் எனக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்றேன். நெடு நாட்களாக பழகிய நோயாளி என்பதால் நண்பராகக் கேட்டார்.

அப்படி என்ன சார் நிகழ்ச்சி ?

சிறந்த மருத்துவராக தேர்ந் தெடுக்கப் பட்டு ‘‘மருத்துவ நட்சத்திரம்’’ விருதை வாங்கச் செல்கிறேன் என்றேன். அட போங்க சார் நீங்க எப்போதுமே எங்களுக்கு சிறந்த மருத்துவர்… தான். உங்களுக்கு என்ன தனியா பட்டம் வேணும்?? நாங்க தருகிறோம் சார் நீங்க சிறந்த மருத்துவரென்று என்றார். அதையே இன்றளவும் நான் பெற்ற சிறந்த விருதாகக் கருதுகிறேன். மக்களுக்காக சேவை செய்யும் நான் மக்களிடமிருந்து அந்த வார்த்தையைக் கேட்டது தான் எனக்கு மிகப்பெரிய விருதாக மருத்துவத்துறை சார்ந்த வரையில் விளங்குகிறது ‌

தமிழ்த் துறையைப் பொறுத்தமட்டில் முகநூலில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேல் சான்றிதழை வாங்கியுள்ளேன் 70க்கும் மேல் நேரடி நிகழ்வுகளில் பங்கு பெற்று சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பதாகைகளையும் பெற்றுள்ளேன். அப்படி ஒரு நாளில் திருச்சியில் இருந்து இல்லம் நோக்கி வருவதற்காக இரயில் நிலையத்தில் காத்திருந்தோம். நானும் எனது நண்பரும் பேசிக் கொண்டிருக்கும் போது முகநூலில் பார்த்தேன் தஞ்சை தமிழ் மன்றத்தின் விருது அறிவிப்பு.

வருடத்திற்கு ‘‘ஆறு’’ நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விருது. அது பற்றி அன்றைக்கு என்னுடைய நண்பரிடம் பேசிய போது மிகவும் கடினம் இது போன்ற விருதுகளை நாம் பெறுவது என்றார் அவர். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் நீங்கள் என்னைத் தொடர்பு கொண்டு இந்த ஆண்டு அந்த விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவித்தது ‘‘ஆச்சரியத்தின் உச்சத்திற்கு’’ என்னை அழைத்துச் சென்றது. இந்த நிகழ்வும் எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக இன்றளவும் அமைகிறது.

மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றிய போது நடந்த மறக்கவியலாத சம்பவம் ஏதாவது…

கண்டிப்பாக பல நிகழ்வுகளை நான் மணிக்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். இருந்தாலும் ஒன்று இரண்டு நிகழ்வுகளை இங்கே கூறுகிறேன்.

அறுவை சிகிச்சை நிபுணராக படிப் பதற்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தீக்காயத்தால் பாதித்த ஒருவருக்கு காலில் உள்ள காயத்திற்காக மருந்து போட்டு விட்டு திரும்பினேன். அந்த நோயாளியுடன் வந்தவர் என்னுடைய சட்டை மேல் பாக்கெட்டில் நூறு ரூபாய் வைக்க முயன்றார். என்ன இது?? வென்று நான் அவரிடம் கேட்டபோது இல்ல சார் சும்மா வச்சுக்கோங்க அப்படி என்றார். தயவு செய்து எடுத்து விடுங்கள் நான் இங்கே படிக்க வந்திருக்கிறேன் என்னுடைய செயலை நான் சிறப்புற செய்து அதில் தேர்ச்சி பெறவே இங்கே வந்தேனே தவிர உங்களிடமிருந்து கையூட்டு பெறுவதற்காக இல்லை என்று கூறியதும் ஒரு நிமிடம் அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அப்புறம் சென்று விட்டார்.

இரண்டாவது மயக்கவியல் துறை யிலே நான் முதுகலைப் பட்டம் பெறுவதற் காக அரசு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று கொண்டு இருந்த நேரம் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தீராத வலி இருந்தது என்னுடைய பேராசிரியர்களின் அனுமதியோடு அதற்கான சிகிச்சை முறையை ‘‘ஆராய்ச்சி ரீதியில்’’ நான் என்னுடைய செலவில் மருந்தை வாங்கி அறுவை அரங்கில் அந்த நோயாளிக்கு செலுத்தினேன். செலுத்தி விட்டு நான் கைகளை கழுவிக் கொண்டு வெளியே வந்த போது… அவரும் அவருடைய குடும்பத்தாரும் என்னுடைய காலில் விழுந்து… ஐயா நீங்க தான் எங்களுக்கு தெய்வம் என்றார்கள். ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ‘‘வலியால்’’ அந்த நோயாளி பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். உறக்கம் என்பது அவருக்கு ஒரு கனவாகவே அமைந்திருந்த காலம். நான் ஊசி செலுத்திய உடனே அவருக்கு அந்த நரம்பு செயல் இழந்து வலி உடனே போய்விட்டது அந்த தாங்க முடியாத மகிழ்ச்சியில்தான் அவர்கள் அப்படி செய்தார்கள் அது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. இன்று நினைத்தாலும் மருத்துவம் பற்றிய பெருமை மேலோங்கத்தான் செய்கிறது.

இதைப்போல நிறைய நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் அதற்கான நேரமும் இடமும் இல்லாததால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அரவிந்தராஜ், கல்கண்டு லேனா தமிழ்வாணன், ஜவஹர் மற்றும் சிந்தைவாசன் அவர்களுடன் மருத்துவர்.

மருத்துவப்பணி இலக்கியப்பணி எவ்வாறு சமமாகப் பயணிக்க முடிகிறது?

மருத்துவப்பணி மன நிறைவான தொழிலாக எனக்குப்படுகிறது. நோய் களுடன் வரும் நோயாளிகளை குணப் படுத்தி அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை தருவதால் அதைவிட சிறந்த பணி எதுவும் இல்லை என்று நான் உறுதிப்படக் கூறுகிறேன்.

இலக்கியப் பணி தமிழன்னைக்கு நான் செய்யும் சேவையாகவும்.. தமிழனாகப் பிறந்தமைக்கு என்னுடைய கடமையை நான் செய்வதைப் போல வுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். முத்தமிழில் முடிந்தவரை பணியாற்று வதையே நான் விரும்புகிறேன்.

உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் நால்வரைக் குறிப்பிடுங்களேன்.

மகாகவி பாரதியார்
பாரதிதாசனார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
கவியரசு கண்ணதாசன்

இக்கால வளரும் கவிஞர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?

தமிழன்னையின் அருளோடு கற்ப னைச் சிறகுகளை விரித்து. கருத்துக் களை எதுகை மோனையுடன் இணைத்து… இயைபு நடையுடன் பாக்களை புனையும் அனைவருமே நல்ல கவிஞர்கள் தான். புதுக்கவிதைகளுடன் மரபுக் கவிதைகளையும் பயின்று ‘‘காலத்தால் அழியாத கவிதைகளைப் படைத்து நம் தமிழைக் காப்பதே கடமை’’ என்றிருந்தால் நல்லது. தற்காலத்தில் தமிழுக்கான எதிரிகள் நாற்புறமிருந்தும் நம்மைத் தாக்க முற்படுகிறார்கள். அவர் களிடமிருந்து நம் மொழியை.. தமிழ் மொழியை காப்பாற்றிட.. தமிழனென்ற உள் உணர்வோடு செயல்படுவது நல்லது என்று நினைக்கிறேன். அனைவரும் இணைந்து அதற்கான முன்னெடுப்பை மேற் கொண்டால்.. தமிழ் மண் இருக்கும் வரை.. மாசு படாது வாழும்

தமிழ்நெஞ்சம் இதழ் குறித்து தங்களின் கருத்து என்னவாக இருக்கும்?

தமிழ்நெஞ்சம் திங்களிதழ் பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்த் திங்களிதழ். பல்சுவை உணர்வுகளை பலரும் இரசிக்கத்தக்க வகையில்.. பல ஆளுமைளுடனான சந்திப்புகள் மற்றும் பல தமிழ் சார்ந்த கருத்துக்களையும் பதித்து தமிழ் மக்கள் மனதில் நாளும் இடம் பெறச் செய்கின்ற ஒன்று. தமிழால் இணைந்து தமிழைப் போற்றி தமிழை வளர்ப்பதற்காக வெளிவரும் ஒரு உன்னதத் திங்களிதழ் என்பது என் கருத்து.

மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா..

ஒரு நல்ல மனிதரை ஒரு நல்ல தமிழ்ப்பற்றாளரை ஒரு நல்ல பண்பாளரைச் சந்தித்த மகிழ்வில் அவருடன் காலைச் சிற்றுண்டியை முடித்து விட்டு அவருக்கு வாழ்த்துகளைக்கூறி விடைபெற்று வந்தோம்.


3 Comments

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · ஜனவரி 1, 2023 at 3 h 10 min

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், மிகச் சிறந்த பணி, சிறப்பான பதிவு,இனிய நல்வாழ்த்துகள் டாக்டர் ஐயா, கடவுளால் நேரடியாக வரமுடியாது என்பதால் தான் மருத்துவர்களாக உருவெடுத்து வருகிறார் கடவுள்…. ,தாயாக தந்தையாக, கடவுளாக வாழும் மருத்துவர் ஐயா அவர்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன்., நன்றி வணக்கம்.

விஜி சிவா · ஜனவரி 3, 2023 at 22 h 56 min

தமிழ்நெஞ்சம் ‘அமின்’ ஐயா அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஜனவரி 2023 இதழில் எங்கள் நால்வரின் (வனஜா முத்துக்கிருஷ்ணன், ருக்மணி வெங்கட்ராமன், விஜி சிவா, கி.இரகுநாதன்) கதையை (கண்ணில் தோன்றிய கண்மணியே) பிரசுரித்தது, எங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த புத்தாண்டுப் பரிசாக உணர்கிறோம்.

எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, உற்சாகமளிக்கும் தங்களின் இனிய உள்ளத்திற்கும், தமிழுக்கு தாங்கள் ஆற்றும் சேவைக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

என்றும் அன்புடன்…. விஜி சிவா, நோர்வே

கி. இரகுநாதன் · ஜனவரி 11, 2023 at 14 h 27 min

‘தமிழ் நெஞ்சம் ஆசிரியர், பெருமதிப்பிற்குரிய அமின் ஐயா அவர்களுக்கு புத்தாண்டின் இனிய நல்வாழ்த்துகள்.

நாங்கள் நால்வரும் இணைந்து எழுதிய எங்கள் முதல் கதையான ‘கண்ணாடி வளையல்களின் தாலாட்டு’ எனும் கதையை ‘தமிழ்நெஞ்சம்’ டிசம்பர் 2022 மாத இதழில் வெளியிட்டு எங்களை பெருமைபடுத்தி இருந்தீர்கள்.

தொடர்ந்து இந்தப் புத்தாண்டில், ‘கண்ணில் தோன்றிய கண்மணியே’ எனும் தலைப்பில் எங்களின் இரண்டாம் படைப்பை வெளியிட்டு ஊக்க டானிக் தந்திருக்கிறீர்கள்.

எங்களுக்கு இந்த ஆண்டின் மிகப் பெரிய புத்தாண்டுப் பரிசு இது தான்.

மனமார்ந்த நன்றி் ஐயா.

தங்களின் தமிழ் ஆர்வத்துக்கும், தொடர்ந்து தொய்வின்றி ஆற்றி வரும் தமிழ் தொண்டிற்கும் எங்கள் பாராட்டுகளும், வணக்கங்களும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »