மின்னிதழ் / நேர்காணல் திருமதி புனிதா கணேசன்

இன்றைய சமூகச்சூழலில் ஒரு பெண் தனியாக வாழ்வது என்பது சற்றே சிரமமான காரியம் தான்; அதுவும் கணவனை இளவயதில் இழந்த பிறகு தனியாகப் பயணிப்பது அவ்வளவு எளிதானதன்று; மேலும் ஒரு பெரிய நிறுவனத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் இவற்றை எளிதாகக் கடந்து வந்து இன்று வெற்றிகரமான பெண்ணாக, ஒரு இரும்புப் பெண்ணாக, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, பெரியாரின் வழிநடக்கும் தலைவியாக, பெண்களுக்கோர் எடுத்துக் காட்டாக, தன்னம்பிக்கை விண்மீனாக பிரகாசிக்கும் ஒரு பெண்தான் இம்மாதத் தமிழ்நெஞ்சத்திற்கு நேர்காணல் தரக்கூடியவர். ஆம் அவர் தஞ்சாவூர் பாரத் கல்விக்குழுமங்களின் செயலாளர் திருமதி புனிதா கணேசன் அவர்களே ஆவார். அவருடன் தமிழ்நெஞ்சத்திற்காக நமது தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் அவர்கள் செய்த நேர்காணல் இதோ…

டிசம்பர் 2022 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
கல்லூரி விழாவில் மாற்றி யோசிக்கும் கல்லூரித் தலைவி

வணக்கம் அம்மா

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் வாயிலாக இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத் கல்லூரி என்ற ஒரு பெரிய நிறுவனத்தை உருவாக்கிய ஐயா கணேசன் அவர்களைப் பற்றி ஒருசில வார்த்தைகள் சொல்லலாமா ?

நா கணேசன் அவர்கள் மகிழங்கோட்டையில் பிறந்தவர். ஒர் தச்சுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த அவர் படிக்கும் போதே தச்சுத்தொழிலையும் செய்து தனது சுயமுன்னேற்றத்தால் முன்னேறியவர். தனது முனைவர் பட்ட ஆய்வை தமிழக உணவகங்களில் பயிற்சிபெறாத பணியாளர்கள் என்ற Untrained employees in hotels என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர். அதோடு மட்டுமல்லாது உணவகத் தொழிலாளர் பயன்பெறும் வகையில் தென் தமிழ்நாட்டில் முதல் தனியார் கல்லூரியாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்கிற அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியைத் தொடங்கினார். மேலும் திரு கணேசன் அவர்கள் அவருடைய பெற்றோரின் ஒரே மகனாவார்.

பாரத் கல்லூரி நிறுவனர் நா. கணேசன்

ஐயா கணேசன் அவர்களின் மறை வுக்குப் பிறகு அந்த இடத்தை எவ்வாறு தாங்கள் நிரப்பினீர்கள்?

ஒரு பெரிய இழப்பு.நடுக்கடலில் துடுப்பை இழந்த படகைப் போலத்தான் ஆனேன். கணவரின் திடீர் மறைவு நிறைய சந்தேகங்களை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி அது என்னைப் பாதித்தாலும் முப்பத்துநான்கு வயது இளம் பெண்ணாக, நான்கு வயது மகன் ஒரு பெரிய நிறுவனம் உறவினர் நண்பர்களின் கேலிப்பேச்சு இவற்றையெலாம் எதிர்கொண்டு மிகுந்த மனோபலத்துடன் மீண்டு வந்து தற் போதைய நிலையை எட்டியுள்ளேன். ஒரு கணவனை இழந்த பெண்ணுக்குச் சமுதாயம் தரும் அத்தனை இடர்பாடுகளையும் வென்று இந்நிலையை எட்டியுள்ளேன்.

ஒரு கல்வி நிறுவனத்தை நடத்துவ தென்பது அவ்வளவு எளிதான செயல் அன்று; எத்தகைய கல்வித்தகுதிகளைத் தாங்கள் வளர்த்துக் கொண்டீர்கள்?

பொதுவாக தலைமை தாங்கி ஒரு நிறுவனத்தை நடத்துவது சிரமம்தான். ஒரு முதுகலைப் பட்டம் பெற்றிருந்தது ஒரு தகுதியாக இருந்தது. மேலும் நிறைய இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு எனது கணவர் என்னை அழைத்துச் சென்று பங்கேற்க வைத்தது எனக்குப் பலவகையான தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவி யது. மேலும் சகிப்புத்தன்மை விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு பலதரப்பட்ட மனப்பாங்குடன் உள்ள மாணவர்களை எதிர்கொள்ளுதல், எளிதில் வந்து மறையும் நியாயமான கோபம் இவை யாவும் எனக்கு ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் தகுதியைக் கொடுத்துள்ளது எனக் கருதுகிறேன்.

ஒரு பெண்ணாக இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் போது தாங்கள் எதிர் கொண்ட சிக்கல்கள் யாவை? அவற்றை எவ்வாறு வென்று மேல்வந்தீர்கள்?

சமூகம் ஒரு பெண்ணைத் தலை தூக்கி விடும் என்பதும் உண்மை. இளமைப் பருவம் எனது உருவம் தோற்றம் போன்றவை எனக்குச் சில ஆண்களின் பாராட்டுகள் எனக்குச் சில எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவற்றை கடந்து வந்துள்ளேன். பல இடங் களுக்குப். பயணம் செய்து சில பணிகளைச் செய்யும்போது சமூகம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி என்னைச் சங்கடப்படுத்தியது உண்டு.பின்னாளில் பாரதி பாரதிதாசன் அம்பேத்கர் பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் என்னை உயர்த்த உதவியிருக்கிறார்கள்.ஒரு பெண் ஏன் அடிமை ஆனாள் என்ற நூல் என்னை பண்படுத்தியுள்ளது.. எதிர்கொண்ட பிரச்சினைகள் நிறைய இருந்தாலும் அவற்றை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் அது நல்ல பண்பாக இருக்காது எனக் கருதுகிறேன்.ஒரு சிறு புன்னகையாலேயே எனக்கு வந்த இடர்பாடுகளைக் கடந்து வந்துள்ளேன் என்பது மறுக்க இயலாத உண்மை.

ரங்கோலி கோலத்தைக் கண்டு மகிழும் பாரத்குழுமத் தலைவி

தாங்கள் படித்த பட்டுக்கோட்டை பள்ளிக்கூடத் தமிழாசிரியர் நினைவில் உள்ளாரா? அவரைப்பற்றிக் கூற முடியுமா?

என்நினைவிலே உள்ளார். கொரானா காலத்தில் அவரை மேடையில் அழைத்து அவரை கௌரவித்துள்ளேன்.அவர் பெயர் மணிமேகலை. மணிமேகலை போலவே குணம் கொண்டவர். சிலப்பதிகாரம் ஆத்திசூடி திருக்குறள் போன்றவற்றை அவர் நடத்தும் பாங்கே தனி. குற்றாலக்குறவஞ்சியை நடத்தும்போது மயங்கிப் போய்விடுவேன். மனப்பாடம் செய்வதை விட எவ்வாறு ஒரு பாடலைப் படிப்பது என்பதை அழகாகச் சொல்லிக் கொடுத்தவர்.எனக்குத் திருக்குறள் மனனமாக ஒரு நூறு தெரிகிறதென்றால் அதற்கு அவரே காரணம். இறைவனை நேரடியாகப் பார்த்திருக்கிறேன் என்றால் அதுவும் அவரே. இறைவனுக்கு நன்றி. அவர் எனக்கு தமிழாசிரியாகக் கிட்டியது நான் செய்த பாக்கியம்.

பட்டுக்கோட்டைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ஏதாவது செய்துள்ளீர்களா?

பட்டுக்கோட்டையில் பிறந்தது எனக்குப் பெருமை. பட்டுக்கோட்டையில் பிறந்த ஏழை எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இனப்பாகு பாடின்றி இலவசக் கல்வியைத் தருகிறேன். கஜா போன்ற புயல் காலங்களில் நிறைய உதவிகள் செய்துள் ளேன். பெண்களுக்கு இலவசத் தொழில் பயிற்சியை வழங்கி வருகிறேன். பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை அழகிரி போன்றவர்கள் பிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரான பட்டுக் கோட்டைதான் எனக்குப் பெருமை வழங்குகிறது. மகிழங் கோட்டைக்கு நான் வாக்கப் பட்டாலும் பிறந்த ஊர் எனக்குப் பட்டுக்கோட்டை என்பதில் எனக்குப் பெருமையே.

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரத் கல்லூரி அதிபர் திருமதி புனிதா கணேசன்
கவியரங்க நிகழ்வில் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் மற்றும் கவிஞர் எம். ஆர். ஜெயந்தி அவர்களுடன் பாரத் கல்விக் குழுமங்களின் செயலாளர் ...
கல்லூரி மாணவ மாணவிகளுடன் வெற்றிக்கோப்பையுடன் திருமதி புனிதா கணேசன்

பிரபலமான பேச்சாளர் சகோதரி பர்வீன் சுல்தானா அவர்களைப் பற்றி…

எனது அன்பிற்கினிய தோழி பர்வீன் சுல்தானா எனும் சிங்கம் தமிழுலகிற்குக் கிடைத்த பேறு. எல்லா நாடுகளிலும் கொண்டாடுகின்ற ஒரு ஆளுமை.. முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களைச் சந்திக்கப் பலர் காத்துக்கிடந்தாலும் அவர் என்னைச் சந்திக்கவருவதும் நான் அவரைச் சந்திக்கச் செல்வதும் எனக்கு மகிழ்வே. இது போன்ற ஒரு உறவு யாருக்கும் கிட்டாத ஒன்று. இருபத்தைந்து வருட கால நட்பு ஒரு சிறு கறையும் இல்லாத நட்பு. நாங்கள் நண்பர்கள் என்பதைவிட ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகத்தான் பழகிவருகிறோம். எந்த வித மத அடையாளம் இனஅடையாளமோ கட்சி அடையாளமோ இல்லாத ஒரு தமிழ்ப் பெருந்தகை ஒரு தமிழ் அடையாளம் அவர். அவரோடு இணைந்து பயணிப்பது எனக்குப் பெருமையே

தியானம் செய்வதால் என்ன நன்மைகள் கிட்டும் எனக்கருதுகிறீர்கள்?

தியானம் என்பது மனத்தை ஒருநிலைப் படுத்துவது. வழக்கமான பணிகளை விட ஒரு மாற்று வேலையைச் செய்வது ஒருவகை தியானம்தான்.ஒரே இடத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டிருப்பதை விட வேறு ஒரு வேலையைச் செய்வதே என்னைப் பொறுத்தவரை தியானம். என்னால் ஐந்து நிமிடத்திற்கு மேல் கண்களை மூடி ஒரு இடத்தில் அமர்ந்திருக்க இயலாது.

கவிதை ஆண்பாலா? பெண்பாலா?

கவிதையைப் பால்பாகுபாடுடன் சொல்ல வியலாது. பிரசவிக்கும் தகுதி பெண்களுக்கே இருப்பதால் சொற்களைப் பிரசவிப்பதால் கவிதையும் பெண்பால் என ஒரு இடத்தில் ஒரு குறியீடாகவே குறிப்பிட்டேன்.. ஒரு பெண்ணை மட்டுமல்லாது ஆணையும் பிரசவிப்பது பெண்தான் என்பதால் அவ்வாறு கருதுகிறேன் என்றாலும் ஆண் பெண் பாகுபாடின்றி உலகில் உள்ள அனைத்தையும் கவிதை வழி படைப்பதால் கவிதையை ஆண் பெண் என பால்பாகுபாடின்றி ஒரு பொதுப்பாலாகவே கருதுகிறேன்.

தமிழ்வளர்க்கும் பணியில் தங்கள் கல்லூரியின் பங்கு என்ன?

ஒருவரை ஒருவர் கல்லூரியில் சந்திக்கும் போது வணக்கம் என்ற தமிழ்ச் சொல்லால் விளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். திங்கள் தோறும் கவிநிலாமுற்றம் என்ற ஒரு நிகழ்வு நடத்தி வருகிறோம். கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டிகளை திங்கள் தோறும் நடத்தி வருகிறோம்.எங்கள் கல்லூரி தமிழ்மன்றத்திற்கு ஈரோடு தமிழன்பன் தமிழ் மன்றம் என்று பெயர் . வருடம் ஒரு முறை தூய தமிழில் உரையாடும் போட்டி ஒன்று நடத்தி வருகிறோம்.தமிழில் கடிதம் எழுதும் போட்டி நடத்தி தமிழில் எழுதும் வழக்கத்தை ஊக்கப்படுத்துகிறோம் கல்லூரியின் முகப்பில் பாரதியின் முழுவுருவச்சிலை ஒன்று வைத்து அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகிறோம்.

எந்நேரமும் புன்னகையுடன் இருப் பதன் இரகசியம் என்ன?

நல்ல கேள்வி ஐயா மனமது செம்மை யானால் மந்திரம் தேவையில்லை. என்ன கொண்டுவந்தோம் என்ன கொண்டு செல்கிறோம் என்பதை உணர்ந்து செயல் படுகிறேன். சிரிப்பதில் ஒரு அழகியல் உள்ளது. மற்றவர்களைக் குணப் படுத்தும் மருந்து உள்ளது. எவ்வளவு கோபம் வந்தாலும் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் யாருக்கும் எந்தவிதமான சங்கடத்தையும் தராமல் புன்னகையால் கடந்துவிட எண்ணியே அவ்வாறு இருக்கிறேன்.

நீங்கள் பொன்னியின் செல்வியா?

பொன்னியின் செல்வி வேலு நாச்சியார் குயிலி என்று பிறரால் நான் அழைக்கப்பட்டாலும் நான் தமிழ்ச் செல்வியின் மகள் என்பதே எனக்குப் பெருமை. எனது தாயாரின் பெயர் தமிழ்ச்செல்வி. பொன்னிநதிபாயும் தஞ்சை யில் இருப்பதால் பொன்னியின் செல்வி என நான் அழைக்கப்படலாம்.

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டில்...

தாங்கள் எழுதியுள்ள நூல்கள் குறித்து..

பொதுவாக நாட்குறிப்பு எழுது வது எனக்கு வழக்கம் உண்டு. எனது வாழ்வியல் அனுபவங்களை நாட் குறிப்பாக எழுதியிருந்தேன். அதில் எனது கணவரின் வாழ்க்கை அனுபவங்கள் எனது மனக்குமுறல்கள் ஆகியவை உள்ளடக்கியதாக இருக்கும். அதனை ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்கள் படித்துவிட்டு சிறப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். எனது தங்கை முனைவர் கவிதா அவர்களும் இதனை நூலாக வெளியிடலாம் என்று கூற எனது கணவரின் அனுமதியோடு சூரியவிதை என்ற நூலை வெளியிட்டேன். இதுவரை 4000 பிரதிகள் விற்பனையாகி உள்ளது.

சோவனமாம் சோவனம் என்ற நாட்டுப்புற இலக்கியம் எனது இரண்டா வது நூல்.

ஒரு குயிலின் பாப்பாப்பாட்டு எனது மகனுக்கு எழுதிய நூல்

எங்க ஊரு சமையல் என்பது நான் எழுதிய ஒரு சமையல் நூல்.

மாலைமலரில் வெளிவந்த கட்டுரை களின் தொகுப்பான சிறகுகொள் எனது கட்டுரை நூல்களுள் ஒன்று

தினத்தந்தியில் வெளியான 75 கட்டுரைகளின் தொகுப்பு வாழ்வியல் சிந்தனைகள் அடங்கிய தொடர்கட்டுரை நூலாக வெளிவந்துள்ளது.

என்மகனைப்பற்றிய ஒரு கையெ ழுத்துப் பிரதி கவிதைத்தொகுப்பை எழுதி அதனை அவனுக்குப் பரிசளித்துள்ளேன்.

இவற்றுள் எங்க ஊரு சமையல் என்ற நூல் ஆளுநரின் பரிசு பெற்ற நூலாகும்.

பாரதியைப் பற்றி..

பாரதி இல்லாமல் பயணம் செய்ய முடியாது. அனைவருக்குமான ஒரு கவிஞன் பாரதி. பாஞ்சாலி சபதம் எனக்குப் பிடித்த ஒன்று அவரது வசன கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று; நீ ஒளி நீ சூரியன் என அவர் எழுதிய வசன கவிதை மட்டுமல்லாது பெண்ணடிமை குறித்த கவிதை, பண்டமாற்று முறை குறித்த கவிதை போன்றவை எனக்குப் பிடித்தவை.

“கங்கைநதிப்புறத்துக்
கோதுமைப்பண்டத்தை
காவிரி வெற்றிலைக்கு
மாறு கொள்வோம்
வங்கத்தில் ஓடி வரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம்’’

என்ற வரிகள் எனக்குப் பிடித்தவை.

சாதியைச் சாடிய பாரதியின் “வெள்ளைநிறத்திலொரு பூனை” எனக்குப் பிடித்த கவிதை

தெய்வங்களையே வாழ்த்தும் கவிஞன் பாரதி

பாரதி சிந்தனை எனக்குப் பிடிக்கும்
பாரதியின் பித்தன் நான் என்பதில் எனக்குப் பெருமையே!

தந்தை பெரியாரைப் பற்றி…

பெரியார் அவர்தாம் பெரியார்; செயற்கரிய செய்வார் பெரியார்; செய்தவர் பெரியார். இன்று ஒரு ஒலிவாங்கியின் முன்னால் பேசுகிறேன் என்றால், ஒர் நேர்காணலுக்குப் பதிலுரைக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் பெரியார் தான். கணவனை இழந்தவர் பூ வைத்துக் கொள்ளலாம் பொட்டு வைத்துக் கொள் ளலாம் என்றுசொன்னவர் பெரியார். கடவுள் மறுப்பாளர் என்பதைவிட பகுத்தறிவாளர் என்பதைவிட பெரியார் ஒரு பகுத்தாய்ந்து சொன்ன பண்பாளர் என்பதே உண்மை. பெண்கள் அனைவரும் படிக்கவேண்டியவர் பெரியார். பெரியார் தான் எனக்கு எழுத்தறிவைத் தூண்டி எழுத வைத்தவர். மேடையிலே துணிந்து பேச வைத்தவர். தலைநிமிர்ந்து இந்தச் சமூகத்திலே நடக்கவைப்பவர். பெரியார் புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டால் எந்தச் சிறியாரும் என்னைத் தீண்ட முடியாது. பெரியார் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இந்த நூற்றாண்டில் பெண்கள் தமிழ் நாட்டில் தலைதூக்கியிருக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் பெரியாரைப் படிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.. பெரியார் எனக்குப் பிடித்தவர் மட்டுமல்ல என்னை இயக்கக்கூடியவரே பெரியார்தான். பெரி யாரே எனக்குப் பாதுகாப்பானவர்.

விழாவொன்றில் திருமதி புனிதா கணேசன்

வளரிளம் பெண்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?

வளரிளம் பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது நடப்பது உடற்பயிற்சி செய் வது போன்றவை வளரிளம் பெண் களிடம் காணப்படுவது இல்லை. இளம் வயதிலேயே பூப்பெய்தி விடுவதால் உடல் நலன் பேணுவது இல்லை. நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்; அழகாக உங்களை வைத்துக் கொள்ளுங்கள் ; எது அழகென்று கருதுகிறீர்களோ அதனை அழகாகப் பேணுங்கள்.

விரல்களாலும் விழிகளாலும் பேசும் வித்தையை எங்கே கற்றுக்கொண்டீர்கள்?

சுவாரசியமான கேள்வி. செவிவழி கேட்கும் கேள்விகள் செவிவழியாக மூளைக்குள் சென்று அதன்பிறகு பதில் பெறப் படுகிறது. ஆனால் உடல் மொழியாக சொல்லும் செய்தி கண்கள் வழி மூளைக்குள் சென்று சற்றே வேகமாகச் செயல்பட வைக்கிறது. விரல்கள் மற்றும் விழி களால் பேசுவதால் சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் செய்தி பரிமாறப் படுகிறது. மற்றவர்களுக்கு இடையூறின்றிச் செயல்பட முடிகிறது. இப் பண்பு எனக்கு இயல்பாகவே வந்தது குறித்து மகிழ்வே

இன்றைய மாணாக்கருக்குத் தங்கள் அறிவுரை யாது?

“ஏடு தூக்கிப் பள்ளியிலே இன்று கல்வி பயிலும் மாணவனே நாடு காக்கும் தலைவனாக நாளை வருவான்’’ என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டதையே நானும் சொல்கிறேன். இன்றைய இருபால் மாணவர்களும் கல்வியே தங்கள் பிரதான குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும். படிப்புதான் ஆயுதம். வலிமை வீரம் செல்வம் எது இருந்தாலும் சொல்லாயுதத்தையும் பயன்படுத்த வேண்டும். சுயகட்டுப்பாடு நோயில்லாத வாழ்வு தெளிவாக முடிவெடுக்கும் தன்மை, தொடர்ந்து உழைக்கும் தன்மை, சட்டத்திற்கு உட்பட்டு வாழவேண்டும். படிக்கும் போதும் ஒரே மாதிரியான படிப்பைத் தொடர்ந்து படித்து முன்னேற வேண்டும்.

முடிவெடுப்பதில் கவனமாக இருங் கள்; ஒரு கதையைச் சொல்கிறேன். ஒருவன் ஒரு அரசரிடத்தில் ஒரு படி வெங்காயத்தைத் திருடிவிட்டு மாட்டிக் கொண்டான். அவனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஒன்று பத்து வெங்கா யத்தையும் அவனே தின்று விடவேண்டும். இரண்டாவது பத்து கசையடிகளை வாங்கிக்கொள்ள வேண்டும். மூன்றாவது எல்லா வெங்காயத்திற்கான பணத்தையும் கொடுத்து விட வேண்டும் . இவற்றுள் ஒரு தண்டனையை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அரசன் சொல்ல அந்தத் திருடன் முதல் தண்டனையை ஏற்றுக்கொண்டு வெங்காயத்தைத் தின்ன ஆரம்பித்தான். நான்கு வெங்காயம் தின்பதற்குள் அவனுக்கு வாயெலாம் எரிய கண்களில் கண்ணீர் வழிய இரண்டாவது தண்டனை யான பத்துக் கசையடிகளைப் பெற்றுக் கொள்ள இசைவு தெரிவித்தான். ஆனால் இரண்டு கசையடிகளைக் கூடத் தாங்க இயலாமல் கடைசி தண்டனையான வெங்காயத்திற்கான தொகையைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினான். ஒழுங்காக முடிவெடித்து முதலிலேயே பணத்தைக் கொடுத்திருந்தால் மற்ற இரு தண்டனைகளை அனுபவித்திருக்க வேண்டியிருக்காது. ஆனால் சரியான முடி வெடுக்கத் தெரியாததால் இவ்வாறாயிற்று. மாணவர்களும் தங்கள் வாழ்க்கையில் சரியாகச் சிந்தித்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.


13 Comments

கி. இரகுநாதன் · டிசம்பர் 2, 2022 at 17 h 23 min

மதிப்பிற்குரிய ‘தமிழ் நெஞ்சம்’ ஆசிரியர் அமின் ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

நாங்கள் நால்வரும் இணைந்து எழுதிய படைப்பை தமிழ் நெஞ்சம் இதழின் ஆரம்பத்திலேயே பிரசுரித்து எங்களைப் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். ஊக்க டானிக் தந்து உற்சாகப்படுத்தி இருக்கிறீர்கள். நால்வரும் இணைந்து எழுதிய எங்கள் முதல் கதைக்கு நீங்கள் தந்துள்ள பலமான அடித்தளத்தில் நின்று எங்கள் வணக்கங்களைத் தெரிவிக்கிறோம்.

இதன் மீது எழுப்பப்படும் எங்கள் எழுத்துக் கட்டிடமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வையும் எங்களுக்கு உணர்த்தி இருக்கிறீர்கள்.

மனமார்ந்த நன்றி ஐயா.

‘தமிழ்நெஞ்சம்’ இதழின் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் எங்கள் இதய நன்றி.

எங்கள் கதையை செப்பனிட்டு, பிழைகளைத் திருத்தி, சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த, ‘விஜிம்மா’ என்று நாங்கள் அன்புடன் அழைக்கும், அன்புத் தங்கை விஜிசிவா அவர்களுக்கும் பேரன்பின் நன்றி.

– கி. இரகுநாதன்

வனஜா முத்துக்கிருஷ்ணன் · டிசம்பர் 2, 2022 at 17 h 25 min

வணக்கம்.வந்தனம்..
தமிழ் நெஞ்சம் ஆசிரியர் அவர்களுக்கு.
முதற்கண் மிகவும் நன்றிகள் 🙏.
ஒரு கதை நன்றாக அதேசமயம் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.அது தவறின்றி எழுத வேண்டும் 🙏.
எழுதுபவர்களின் மனநிலைகள் ஒன்றாக இருக்க வேண்டும்.
அப்போது தான் ஒரு கதை நல்ல கதையாக உருவாகும்.அந்த விதத்தில் நல்ல ஆசிரியர்கள் வாய்த்து கதைகளை செம்மைப்படுத்தி செதுக்க வேண்டும்.
எனக்கு கதை எழுத உறுதுணையாக இருந்த
ரகுநாதன்..விஜி சிவா இருவரும்… போற்றத்தக்கவர்கள்..
அதை பிரசுரித்த உங்களுக்கு மிக மிக நன்றிகள்..நம் எழுத்துக்களை இதழில் வடிவமைத்து அதை கண்களால் காணும் போது ஓர் இன்பம். பிரசுரித்த உங்கள் தமிழ் நெஞ்சத்திற்கு இன்னும் ஒரு முறை நன்றிகள் 🙏🙏

– வனஜா முத்துக்கிருஷ்ணன்

விஜி சிவா · டிசம்பர் 2, 2022 at 17 h 26 min

மதிப்பிற்குரிய ‘தமிழ் நெஞ்சம் ‘ இதழின் ஆசிரியர் அமின் ஐயா அவர்களுக்கு வணக்கமும் ,அன்பின் நன்றியும் பல … பல.

நாங்கள் நால்வரும் ( ருக்மணி வெங்கட்ராமன் , வனஜா முத்துக்கிருஷ்ணன் , கி. இரகுநாதன் , விஜி சிவா ) இணைந்து எழுதிய கதையை (கண்ணாடி வளையல்களின் தாலாட்டு) இதழில் பிரசுரம் செய்து , எங்கள் அனைவரின் எழுத்துகளுக்கும் மகிழ்சிப் பூக்களை சொரிந்தீர்கள்.

தங்களின் உற்சாகமான , ஊக்கமூட்டும் வார்த்தைகளே எங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் , இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்று உற்றுப் பார்த்து எழுத்துகளை செதுக்க வேண்டும் என்ற முயற்சியில் நம்பிக்கையும் கொடுத்தது.

தங்கள் பத்திரிக்கையின் வெற்றிக்கு காரணம், தங்களின் அயராத உழைப்பு மட்டுமல்ல …. வாசகர்களை உற்சாகப்படுத்தி , நம்பிக்கை ஏற்படுத்தும் உயர்ந்த உள்ளமும் காரணம் என்பதை அறிந்தோம் .

தங்களின் இதழில் என் கதைகள் இதற்கு முன் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் , இம்முறை மிக மிக மகிழ்ச்சியை என் உறவுகளான என் நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்தது ….வாழ்வில் மறக்க முடியா தருணமானது .

எங்களை ஊக்கப்படுத்திய தங்களின் அன்பிற்கு என்றும் மகிழ்வுடன் நன்றி பல .

– விஜி சிவா.

ருக்மணி வெங்கட்ராமன் · டிசம்பர் 2, 2022 at 17 h 27 min

தமிழ் நெஞ்சம் இதழ் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு,
பவர் பாயிண்ட் என்ற நால்வர் குழுமத்தினரின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தங்கள் படைப்பை இதழில் காண்பது ஒரு கனவு. அத்தகைய எங்கள் கனவை நனவாக்கிய தங்களுக்கு எங்கள் நன்றி.
எங்கள் கதையை பதிவிட அதிக பக்கங்கள் ஒதுக்கி பதிவிட்டு ஊக்குவித்தமை மிகச் சிறப்பு.
51 வருடங்களை கடந்து பயணிக்கும்
பாரம்பரிய இதழில் எங்கள் கதை பிரசுரமானது எங்களுக்கு பெருமை. மிக்க நன்றி .
2022 ஆம் வருடம் 50 வயதை கடந்து 51ல் அடி எடுத்து வைத்த ஜனவரி மாத பொன் மலர் இதழில் ‘மனதின் வலி’ என்ற என் கதை பிரசுரமானது. 2022 டிசம்பர் இதழில் எங்கள் நண்பர்கள் நால்வர் கதை பிரசுரமானது. அதில் அளவுகடந்த மகிழ்ச்சி . மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவன்
ருக்மணி வெங்கட்ராமன்.

Shamen Nizam · டிசம்பர் 2, 2022 at 17 h 30 min

நல்லதொரு நேர்காணல் (திருமதி புனிதா கணேசன்) பெண்களின் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.

இந்திராணி தங்கவேல் · டிசம்பர் 2, 2022 at 17 h 33 min

புனிதா கணேசனின் சாதனைகளை படித்தேன்.சாதனைச் செல்வி தான்.. அருமை வாழ்த்துகள்..

Balasubramanian Bernatzha · டிசம்பர் 2, 2022 at 17 h 35 min

எனக்கு சில ஆளுமைகளுடன் நேரடி தொடர்பும் நட்பும் உண்டு. மற்றும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் என்று என்னுடைய நட்பு உண்டு எடுத்து தந்தால் அதை பதிவு செய்ய இயலுமா? அதன் வழிமுறைகளையும் கொஞ்சம் தகவல்களையும் கொடுக்கும் பட்சத்தில் இதை நான் செய்வதற்கு ஆவலாக இருக்கிறேன்

அன்புவல்லி தங்கவேலன் · டிசம்பர் 2, 2022 at 17 h 38 min

மிக அருமையான நேர்காணல் புதுமைப்பெண், உச்சம்தொட்ட பெண்ணரசிக்கு வாழ்த்துகள்

பெண்ணியம் செல்வக்குமாரி · டிசம்பர் 2, 2022 at 17 h 40 min

பல புதிய முகங்கள்
பல புதிய கட்டுரைகள்
புதிய வடிவம்
பழுத்தோலை கவிதை நன்று
வெண்பா…அருமை..
இன்னும் படிக்கிறேன்
நூறு பக்கங்களும் சிறப்பு

சிமா. இளங்கோ · டிசம்பர் 2, 2022 at 17 h 41 min

தமிழ்நெஞ்சம் தேசமெல்லாம்
தேனாறும் பாலாறும் திக்கெட்டும் சூரியக் கதிராய் துலங்க வாழ்க!

Sainul Abdeen Abdul Gaffar · டிசம்பர் 2, 2022 at 17 h 43 min

இதழ் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துகள். பாராட்டுகள்

அன்புச்செல்வி சுப்புராஜூ · டிசம்பர் 2, 2022 at 17 h 45 min

*சிறுவர்கள் சங்கமம்* என்ற சிறுவர் பகுதி தொடங்கியமைக்கு மிக்க நன்றிங்க ஐயா . தொடர்ந்து சிறுவர்களுக்கான படைப்புகளை ஊக்குவிக்கும் தங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி

Vijayalakshmi Siva · டிசம்பர் 10, 2022 at 13 h 59 min

உற்சாகம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »