மின்னிதழ் / நேர்காணல் முத்துப்பேட்டை மாறன்
முகநூல் ஓர் இருபுறக் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதனைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே பலனையும் கெடுதலையும் தரும். முகநூலைத் தமிழ்வளர்க்கும் கருவியாகச் செய்யமுடியும் என்பதை ஒருவர் சாதித்துக் காட்டியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் ஒருவர் சாதித்துள்ளார். இன்று பல்கிப் பெருகியுள்ள எண்ணற்ற முகநூல் குழுமங்களுக்கு முன்னோடியாக உள்ள நிலாமுற்றம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன்மூலம் எண்ணற்ற கவிஞர்களை உலகுக்கு அறிமுகப் படுத்தி வரும் முத்துப்பேட்டை மாறன் அவர்களே அந்தச் சாதனையாளர். அவரிடம் தமிழ்நெஞ்சம் சார்பாக, தமிழ்ச்செம்மல் இராம. வேல்முருகன் அவர்கள் செய்த நேர்காணல்
வணக்கம் ஐயா
தமிழ்நெஞ்சம் இதழ் வாயிலாகத் தங்களைச் சந்திக்கிறேன். நிலாமுற்றம் என்னும் ஒரு மாபெரும் முகநூல் குழுமத்தைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்கள் மனத்தில் உதித்தது?
அந்தக் காலகட்டத்தில் பலரும் தங்கள் முகநூல் பக்கங்களில் கவிதை எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வரலாமே என்ற எண்ணத்தில் உதித்தது தான் நிலாமுற்றம்.
ஆரம்பகாலத்தில் நிலாமுற்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் இப்போதும் இருக்கிறார்களா?
பலர் விலகிச் சென்றாலும் முக்கியமான சிலர் இப்போதும் இருக்கிறார்கள்.எல்லோருமே நிலாமுற்றத்தை உயர்த்த பாடுபட்டவர்கள்.ஆண்டுவிழாக்களின் போது பொருள் உதவி செய்தவர்கள்.வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாது என்ற நினைக்கக் கூடிய புரவலர்கள் அவர்கள்.விருதுக்கும் புகழுக்கும் அடிமைப்படாதவர்கள்.நிலாமுற்றத்தை கோயிலாக நினைப்பவர்கள்.விலகிச் சென்றவர்களில் பலர் நன்றியுள்ளவர்கள்.
நிலாமுற்றத்தில் கவிதை வளர்ச்சிக்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் செய்கிறீர்கள்?
புதுக்கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த தளத்தில் இப்போது ஹைக்கூ தன்முனை பயிற்சியளிக்கப்படுகிறது. மரபுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல ஆண்டுகளாக பயிற்சியளித்து வருகிறோம். நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள்.
கவிதை என்றால் எது?
சமூகத்திற்குச் சொல்ல வந்த கருத்தை மனதில் தைக்கும்படி எழுதுவதே கவிதை.அது இரு வரிகளாகவும் இருக்கலாம். இருபது வரிகளாகவும் இருக்கலாம்.
நீங்கள் எழுதிய கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரமாக எதைக் கருதுகிறீர்கள்?
சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு எனது கவிதை நூலை தேர்வு செய்து தங்கப்பதக்கம் கொடுத்ததே சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
நிலாமுற்றத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
நிலாமுற்றத்தில் ஹைக்கூ, மரபுக் கவிஞர்களை அதிகமாக உருவாக்குதல், புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு புதுக்கவிதை எழுத பயிற்சியளித்தல், நூல் வெளியிட இயலாதவர்க்கு உதவுதல் போன்ற திட்டங்கள் உள்ளது.
நிலா முற்றம் அறக்கட்டளையின் பணிகள் யாவை?
l பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல்.பள்ளி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்குதல்.
முதன்முதலில் ஆண்டுவிழா கொண்டாட வேண்டும் என ஏன் தோன்றியது? அந்த அனுபவம் பற்றி …
முகம் தெரியாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலே ஆண்டுவிழா நடத்த வேண்டும் என்று எண்ணினேன்.யாரும் எதிர்பார்த்திராத எண்ணிக்கையில் கவிஞர்கள் பங்கேற்றனர்.விருது விருந்து என்று அமர்க்களமாக விழா நடந்தது.முகநூல் குழு ஒன்று நடத்திய முதல் விழா அது என்பதுதான் சிறப்பு.யாரிடமும் நன்கொடை பெறாமல் பொறுப்பாளர்களின் உதவியோடு நடந்தேறிய விழா அது.
இவற்றின் சிறப்புகள் குறித்து
இரண்டாவது ஆண்டுவிழா சுவாமிமலை, மூன்றாவது ஆண்டுவிழா ஸ்ரீரங்கம், நான்காவது ஆண்டுவிழா செருவாவிடுதி.
இரண்டாவது ஆண்டுவிழா முருகனின் படைவீடான சுவாமிமலையில் நடந்தது சிறப்பு. அதில் நிறைய புதிய பொறுப்பாளர்களின் அணிவகுப்போடு நடந்த விழா. மூன்றாவது ஆண்டுவிழா திருவரங்கத்தில் நடந்த விழா.இதைப்போல் கூட்டம் எந்த விழாவிற்கும் வந்ததில்லை என்பார்கள்.சகோதரி ராணிலட்சுமி விழாவுக்கு பெரும் பங்காற்றினார்.செருவாவிடுதி ஆண்டுவிழா கிராமத்தில் நடந்த விழா.திருவிழா போல் நடந்த விழா.
ஐந்தாவது ஆண்டுவிழா வலங்கைமானில் தங்கள் வருகை இல்லாமலேயே நடந்தது . இது குறித்து உங்கள் கருத்து.
கொரோனா காலகட்டம் என்பதால் என்னால் வரமுடியவில்லை.இருந்தாலும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.சகோதரர் இராம வேல்முருகன் கவிஞர் கோவிந்தராசன் இருவரும் முன்னின்று நடத்திய விழா.எல்லோரும் பாராட்டிய விழா.
நிலாமுற்றம் முகநூல் குழுமங்களின் முன்னோடி என்று சொல்லப்படுவது உண்மையா?
2015, 2016 காலகட்டங்களில் முகநூலில் எழுதத் தொடங்கிய கவிஞர்களுக்குத் தெரியும் இந்த உண்மை. குழு எப்படி நடத்த வேண்டும்.போட்டிகள் எப்படி நடத்த வேண்டும் என்று பல குழுக்களுக்கும் கற்றுத் தந்தது நிலாமுற்றம்.ஆனால் தற்போது குழு தொடங்கிய புது முகங்கள் நாம் தான் முன்னோடி என்று செயல்படுகிறார்கள்.
விருதுகள் கொடுக்கல் வாங்கலா?
விருதுகள் கொடுக்கல் வாங்கலாகத் தான் தற்போது நடந்து வருகிறது. இது தமிழுக்கு மிகப்பெரிய ஆபத்து. திறமையற்றவர்களுக்கும் விருது வழங்குகிறார்கள்.சந்தைக்குச் சென்று காய்கறி வாங்குவது போல் மூட்டைக் கட்டி செல்லும் நிலையும் உள்ளது.பணம் கொடுத்து விருது பெறுவதை படைப்பாளிகள் தவிர்க்க வேண்டும்.
புற்றீசல் போல நிறைய புதிய குழுமங்கள் தோன்றியுள்ளனவே. அவை பற்றித் தங்கள் கருத்து.
l இப்போது கவிஞர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் பலர் நிறுவனர்களாகவும் இணை துணை நிறுவனர்களாகவும் தலைவர்களாகவும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.இனி 365 நாட்களும் ஆண்டுவிழாக்களாக தான் இருக்கும்.நல்லதே நடக்கட்டும்.
கவிதை தவிர்த்து நிலாமுற்றம் வேறு என்னவெல்லாம் செய்கிறது?
கவிதை தவிர்த்து சிறுகதைப் போட்டிகள் நடத்த ஆரம்பித்தோம்.உடன் பிற குழுக்களும் தொடங்கியிருக்கிறார்கள்.நிறைய பேச்சாளர்களை உருவாக்கியுள்ளோம்.கவியரங்கம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தவர்களையெல்லாம் கவியரங்கத் தலைவர் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறோம்.
குறுங்கவிதைகள் கொஞ்சம் சொல்லுங்கள்
காதல்
பார்த்ததும் வரவில்லை
பழகியும் வரவில்லை
தூரத்தில் இருந்து
போடா என்றேன் காதலோடு.
நட்பு
உண்மை விசுவாசம்
அன்பு இதுபோதும்
தோள் கொடுப்பான் தோழன்.
மனைவி
என் குழந்தைகளைச் சுமந்தவள்
என் குடும்பத்தைச் சுமந்தவள்
என்னைச் சுமப்பவள்
இன்னொரு தாயவள்
அம்மா
வீட்டிற்கு வந்ததும்
சாப்பிட்டியாப்பா என்று
வயிற்றைப் பார்ப்பவள்
அப்பா
இருக்கும் வரை தெரியாது
மறைந்த பின்தான் தெரியும்
இவர்தான் தெய்வமென்று.
தமிழ்நெஞ்சம் இதழ்குறித்து உங்கள் கருத்து …
தமிழ்நெஞ்சம் ஆசிரியரை நான் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.நல்ல தமிழ்ப்பற்று உள்ளவர். அவர் நடத்தும் இதழுக்குச் சொல்லவா வேண்டும். கதை கவிதை கட்டுரை என்று எல்லா பிரிவுக்கும் முன்னுரிமை அளிக்கிறது இதழ். வெண்பா போட்டி நடத்தி சிறந்த கவிஞர்களை உருவாக்குவதிலும் முனைப்போடு இருக்கிறது. தமிழ்நெஞ்சம் இதழ் தலைமுறை கடந்து பேசப்படும். ஐயா அமின் அவர்களுக்குப் பிறகும் இதழை அவரது குடும்பத்தினர் நடத்த வேண்டும். தமிழ்நெஞ்சம் பல நூற்றாண்டைக் கடந்தும் வாழும் வரம்பெற வேண்டும்.
1 Comment
எம். மணி · மே 15, 2023 at 12 h 42 min
நல்ல படைப்பு!
நல்ல நட்பு!
வரவேற்பும் வாழ்த்துக்களும்.