மின்னிதழ் / நேர்காணல்
தமிழ்நெஞ்சம் அமின் நேர்காணலில் –
பா. பாவேந்தன்
வணக்கம்!
சிறந்த தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் அரசியல் கூர்நோக்கும் உடையவராய்த் தங்களைத் தமிழ்நெஞ்சம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் நேர்காணலுக்குச் சில வினாக்களை முன்வைக்கிறேன்.
தங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.
வணக்கம். மகிழ்ச்சி. நன்றி.
முதலிலேயே உங்களுக்கும், தமிழ்நெஞ்சம் ஆசிரியர் குழுவுக்கும், வாசகர்களுக்கும் என்னுடைய முன்வைப்பு ஒன்று உண்டு. தமிழ் நெஞ்சத்தில் நேர்காணல் தந்திருக்கும் சான்றோர் பெருமக்கள் வரிசையில் என்னை வைத்துக் காணல் அடாது. எடுத்துக்காட்டாய்க் கொள்ளுமளவு எல்லாம் எந்த வகையிலும், துறையிலும் நான் வெற்றியாளன் அல்ல என்பதை வேறு யாரையும் விட நான் நன்கு அறிவேன். வாழ்வெனும் ஓட்டத்தை மற்ற எல்லாரையும் போலத்தான் நானும் தொடங்கினேன். கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகளில் என்ன நிலைமை இன்று எனத் தமிழ்நெஞ்சம் அளித்த வாய்ப்பின் வாயிலாக ஒரு மீள்பார்வை என்ற வகையில் மட்டுமே எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
நான் பட்டுக்கோட்டையில் பிறந்தேன். முதல் 14 ஆண்டுகள் வளர்ந்த நிலம் என்னும் நன்றி உண்டு. மற்றபடி சொந்த ஊர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள இயலாது. விழுந்த இடத்தில் முளைத்துக் கொள்ள விதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அது விளைநிலமோ, சுவர் விரிசலோ, கிடைத்த இடம் கிடைத்ததற்கு; முளைத்த அளவு முளைத்ததற்கு. நிலஉரிமை அற்ற சேவைக்குலங்களின் வாழ்க்கை முறை அவ்வளவுதானே?
அதனால்தானோ என்னவோ யாதும் ஊரே என்ற ஈராயிரம் ஆண்டுக்காலக் குரல் நாங்கள் உவந்து ஏற்பதாகவும், அன்றும் இன்றும் அது எங்களுடையதுதான் என்று உரிமை பாராட்டுவதாகவும் அமைந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். எனது தற்போதைய இருப்பு திருச்சி அருகே உள்ள மாத்தூரில்.
உங்கள் கல்வி பட்டயப்படிப்பு என்று அறிகிறோம்
பட்டங்கள் என்று எதனையும் தேர்ந்து கொள்ளாதது ஏன்?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1982 பட்டயப் படிப்பு மதிப்பு வாய்ந்ததாகவே இருந்தது. மாநிலம் முழுமைக்குமே 15 அரசுக் கல்லூரிகள் மட்டுமே அக்கல்வியைத் தந்தன. நல்ல மதிப்பெண் பெற்ற, நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் தருகிற படிப்பு என்ற எண்ணத்தில்தான் என்னை ஆற்றுப்படுத்தியோர் அதனைப் பரிந்துரைத்தனர். ஆனால் நான் சேர்ந்ததற்கு அடுத்த ஆண்டே (1983) அரசுக் கல்விக் கொள்கை மாறிவிட்டது. தனியார் கல்லூரிகளுக்கு பெரும் அளவு அனுமதிகள் வழங்கப்பட்டன. காசுக்கு இடங்களை விற்றுப் பணமீட்டக் கிடைத்த அரும் வாய்ப்பாக தனியார் துறை ஏராளமான கல்லூரிகளைத் தொடங்கியது. அதே வேளையில் அரசு படித்தவர்களுக்கு வேலை தருவது தன் கடமையில்லை என்று விலகிக் கொண்டது. நான் படித்துக் கொண்டு இருக்கும் போதே தொடங்கி விட்ட எல்லா வகைப் பட்டயப் படிப்புகளின் மதிப்புச்சரிவு மிகச்சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே அப்படிப்புகள் அனைத்தையுமே செல்லாக்காசாக்கி விட்டது.
நான் படித்து முடித்த உடனேயே தனியார் துறையில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். வேலையிலிருந்து கொண்டே பகுதி நேரமாய்ப் படித்துப் பொறியியல் பட்டம் பெறத் தேவையான உழைப்பு, நேரம், பொருள், அனைத்தும் செலவிடுவது இயலாதது ஆகிவிட்டது. நான் சேர்ந்திருந்த ஆலையில் பட்டப் படிப்புக்குப் பெரிய தேவையிருக்கவும் இல்லை. எனக்கும் பொறியியல் பட்டம் பெறுவதில் பெரிய நாட்டமில்லை,
அப்போது நான் சார்ந்து இருந்த அரசியல் இயக்கத்தின் பல தோழர்கள் முதுகலை, முனைவர் பட்டங்கள், படிப்புகளைத் துறந்துவிட்டு முழுநேர மக்கள் பணிக்கு வந்திருந்தனர். அவர்களோடு இணைந்து வேலை செய்த போது பட்டங்களைப் பெறுவதற்காகப் படிப்பது நாணமாயும் இருந்தது. இருந்தாலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தத்துவம் முதுகலைப்பட்டம் சேர்ந்து ஓராண்டு மட்டுமே முடித்தேன். முறையான பட்டங்கள் பெறுவதைத்தான் கைவிட்டேனேயன்றிப் பயிலுவதை இன்றளவும் கைவிடவில்லை.ஒருவகையில், இதுதான் என் துறை என்று வரம்பிட்டுக் கொள்ளாது, எல்லாவற்றையும் முனைந்து படிக்கிற வழக்கம் அதன் உடன் விளைவுதான்.
உங்கள் பெயருக்கே ஓர் அதிர்ச்சி மதிப்பீடு உண்டு. நீங்கள் உணர்ந்ததுண்டா அந்தப்பாவேந்தர் வழி நீங்கள் தேர்ந்தது உண்டா?
நீங்கள் ஒன்றை ஒத்துக்கொள்ளவே வேண்டும். பாவேந்தன் என்று நானே எனக்குப் பெயர் வைத்துக் கொண்டிருக்க முடியாதுதானே! அப்பெயரின் பொருள் அறிந்த உடன் இது என்னடா நமக்குப் போய் இந்தப் பெயரா என்று அதிர்ந்தது முதலில் நான்தான். பாரதிதாசனின் தமிழை, அழகியலை, உணர்வை, காதலை, மானிடப் பரப்பின் மீது இருந்த அக்கறையை, கவிக்களத்தின் விரிவை, தமிழ் மரபின் சாரமனைத்தும் உள்வாங்கிப் புது மரபு சமைத்த திறத்தை எல்லாம் பாவேந்தரின் கவிதைளில் தோய்ந்து, அறிந்து, உணர்ந்து என் அம்மா புலவர் தங்க அன்புவல்லி அவரது முதற்பிள்ளைக்குச் சூட்டி மகிழ்ந்த பெயர் அது.
இப்போது போல அன்றி அக்காலத்தில் அப்பெயர் பரவலாய்த் தெரியாத பெயர்தான் என்றெண்ணுகிறேன். பாவேந்திரன் பாலேந்திரன் பவேந்தன் பாவேடன் பாவந்தான் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறேன். பெயரின் பொருள் என்ன என்று என்னிடமே கேட்பார்கள். பெயர் கேட்ட உடனேயே’ யாரடா நீ’ என்று வினவி இனங்கண்டு கொண்டவர்களும் உண்டு. அவர்கள் அடுத்தது ‘எங்கே அவருடைய பாடல்களில் உனக்குப் பிடித்தவற்றைச் சொல்’ என்று தொடங்கிவிடுவார்கள். ஆகவே அதிர்ச்சி மதிப்பீடு நான் உணர்ந்தது உண்டு! உண்டு!
இன்று இணையத்தில் பல இளைஞர்களுக்குப் பாவேந்தன் என்ற பெயர் வைத்திருப்பது கண்டு மகிழுகிறேன். இரண்டு பாவேந்தன்கள் எனக்கு முகநூல் நண்பர்கள் ஆக இருக்கிறார்கள். . பாரதிதாசனைத் தமிழகம் எந்த அளவு தன் சமூக வாழ்வியலுக்குள் ஏற்றிருக்கிறது என்பதன் ஓர் அலகே அது.
இங்கே மற்றொன்றையும் பதிவு செய்யவே வேண்டும். பாரதியின் நூற்றாண்டு விழா 1982ல் வந்தது. அரசு விழாக்கள் ஒளி-ஒலிக்காட்சிகள், புகைப்படக் காட்சிகள், பள்ளிகளில் போட்டிகள், பரிசுகள் என ஓராண்டுக்காலம் தமிழகமெங்கும் கொண்டாடித் தீர்த்தார்கள். அப்போது பாரதியார் கவிதைகள் நூல் கையடக்கப் பதிப்புகள் உள்ளிட்டு பல வடிவுகளில், நேர்த்தியான அச்சோடு, மிகக்குறைந்த விலையில் பரவியது .
அடுத்த பத்தாமாண்டில்-1991-பாரதிதாசன் நூற்றாண்டு விழாவும் வந்து அவ்வண்ணமே நடந்திருக்க வேண்டும்தானே? அவரது நூல்களும் பரவியிருக்க வேண்டும்தானே என்றால் அவ்வாறு நடக்கவில்லை. ஒரு சடங்கு போல அவரது படத்துக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்தது, பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டது, இரண்டொரு விழாக்களை நடத்தியதோடு அது கடந்து போய் விட்டது.
வானொலியில் தண்டபாணி தேசிகரின் துன்பம் நேர்கையில், , சீர்காழியின் புதியதோர் உலகம் செய்வோம், டி எம் எஸ் சின் சங்கே முழங்கு, சித்திரச் சோலைகளே, சுசீலாவின் தமிழுக்கும் அமுதென்று பேர் எனச் சில பாடல்களைக் கேட்டதுண்டு,- திரை இசையில் மொத்தமாகவே 33 பாடல்கள் மட்டும்தான் வந்தன என்று அறிகிறேன் – இளையராஜா, ரகுமானின் இசையில் பாரதிதாசன் பாடல்கள் எதுவும் வந்ததாக நினைவில் இல்லை. மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சையில் பெரிய விழா எடுத்து பாடகர் கோவன் கலைக்குழு பாடிய ஓர் ஒலிநாடாவும் குறுந்தகடும் வெளியிட்டது. திரை இசை, வானொலி, இசைத்தகடுகள், ஒலி நாடாக்கள், குறுந்தகடுகள் எனத் தொழில் நுட்பங்கள் விரைந்து மாறிய ஒரு காலப் பகுதியினூடே வளர்ந்தவன் என்பதால் அவற்றில் அவரை இருட்டடிப்பே செய்தார்கள் என்று துணிந்து .சொல்லமுடியும்.
நூற்றாண்டுகளுக்கு முந்திய அச்சுத் தொழில்நுட்பம் சார்ந்தே அவரைப் பயில முடிந்தது. இன்றளவும் அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் என்னிடமே அவரது முழு நூல் தொகுப்பு கிடையாது. குயில் ஏட்டில் அவர் எழுதிய கட்டுரைகள் ஒன்று கூட இல்லை. வீட்டில் பார்த்த பழைய குயில் ஏடுகளின் நினைவு மட்டுமே உள்ளது. இணையம் வந்தபின்புதான் சில உணர்வாளர்கள், அவரது எல்லா நூல்களையும் இல்லை என்றாலும், பல நூல்களைப் பொதுவெளிக்கு கொண்டுவந்து அந்தக் கலி தீர்த்தனர்.
பாரதிதாசனின் நெறி என்பது தமிழுணர்வு, பெரியாரியம் நாத்திகம், தமிழ்த்தேசிய இன உணர்வு, திராவிடநாடு பொதுவுடைமை, மானுடம் என்று பல படிநிலைகளில் இயங்கியது. தொகுக்கப்பட்டு இதுதான் பாவேந்தரின் கருத்தியல் என்று எந்த நூலும் வந்து உள்ளதாக எனக்குத் தெரியவில்லை. அவர் போற்றிய சுயமரியாதை இயக்கத்திலிருந்து அவரைப் உயர்த்திப் பிடிக்கும் குரல்கள் தோழர் அருள்மொழி சுப.வீ எனச் சிலரோடு நிற்கிறது. திராவிட இயக்கங்களின் தொடக்க காலத்தில் இருந்த சிலரோடு அவரைச் சுட்டிப் பேசுவது குறைந்து, குறைந்து, இன்று நின்றே போய்விட்டது. பொதுவுடைமை இயக்கங்கள் மிகச் சிரத்தையோடு பாரதியைத்தான் கொண்டாடின. பாரதிதாசன் எதிர்க்கட்சிக் கவிஞராகிப் போனார். இவர்களிடையே, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி இதழ் வழிவந்த முதல் தலைமுறை தமிழ்த் தேசியம் மட்டுமே உணர்வெழுச்சியுடன் ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து’ சொல்லி இறுதி வரை அவரைப் போற்றிக் கொண்டாடியது. இன்று நிலை பெற்று உள்ள தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு திருட்டு திராவிடம் என்று பேசுவது நல்ல பலனீட்டித் தந்து கொண்டு இருப்பதால் பாரதிதாசனுக்குக் கிராக்கி இல்லை என்றாகிவிட்டது. இலக்கிய உலகில் இன்று அவரது பாடல்களை ஆய்வு செய்து பேசுவதற்கே ‘அவரது இறைமறுப்பு பெரியார் ஆதரவு பெரும்தடை. அவர் பாரதி போன்ற கவிஞனில்லை. ஏன் அவருடையதெல்லாம் கவிதையே இல்லை’ என்றெல்லாம் கூறக்கூட சில பீடங்கள், ‘ஆசான்கள்’ தலைப்பட்டிருக்கிறார்கள்.
எனது அரசியல் கருத்தியலைக் கட்டமைத்த தொடக்கமே பெரியாரிலிருந்து என்பதால் அவரை அச்சட்டகத்தோடு சேர்த்து இணைத்துக்கொள்ள எந்தத் தடையும் இருக்கவில்லை. என் குடும்பத்தின் இலக்கியச் சூழல் அவரை எனக்குத் தேவையான அளவு அறிமுகம் செய்துமிருந்தது. தொடர் மார்க்கெட்டிங் உத்திகளால் பாரதியியல்தான் பரவலாக எல்லாருக்கும் புகட்டப்பட்டு இருந்தது. இன்று அவருடைய நெறி என்ன என்று நானே அமைத்துப் பார்க்க முற்படுகையில் பெரிதும் உதவுவது எனது அம்மாவும் குடும்பச் சூழலும் ஊட்டிய அறிவே. இன்றும் பாரதிதாசனை விரித்துரைத்து விளக்க என் அம்மாவைப் போல வெளியிலும் இயக்கங்கள் சாராத பல தமிழ்ச்சான்றோர்கள் இருப்பது பெரிய நிறைவுதான்.
பொதுவுடைமைக் தத்துவத்தில் ஆழ்ந்த பற்றுறுதியும் செயல்பாடும் கொண்டிருந்திருக்கிறீர்கள். தங்கள் பணிகளால் தங்கள் இலக்குகளை அடையமுடிந்திருக்கிறதா?
இலக்குகளை அடைய முடியவில்லை என்பது வெள்ளிடைமலை. தத்துவத்தில் பற்றுறுதி, செயல்பாடு குறித்துச் சில கருத்துகள் சொல்லுகிறேன்.மக்களுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தின் மீதான பற்றுறுதி மாறுமா அல்லது குறையுமா இல்லாமலே போய் விடுமா?
.
ஒருசிறு விழுக்காட்டினரிடம் தொடர்ந்து பொருள் குவிந்துகொண்டே செல்கிறது. நேரெதிர் முனையில் வறிய மக்கள்தொகை கூடிக் கொண்டே போகிறது. OXFAM நிறுவனம் கொடுத்த ஓர் அறிக்கை இந்தியாவில் 2017ல் பணக்காரர்களான 1% பேருக்கு நாட்டில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் 73% சென்றது. அதே சமயம் 67 மில்லியன் இந்தியர்களின் செல்வம் 1% மட்டுமே அதிகரித்தது என்கின்றது. இந்த நிகழ்ச்சிப்போக்கு இன்றைய ஆட்சி அரசியல் போட்டியில் உள்ள கட்சிகள்/ தத்துவங்களை கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுவுடமைத் தத்துவத்தைத் தவிர வேறெதுவும் இந்த நிலையை மாற்றும் அரசியல்திட்டத்தை முன்வைக்கவில்லை. இந்த முரண் தீரும் வரை அல்லது சாத்தியமான வேறொரு மாற்றைத் தத்துவங்கள்/இயக்கங்கள் காட்டும் வரை மக்களுக்குப் பொதுவுடமைத் தத்துவத்தின் மீதான நம்பிக்கை, பற்றுறுதி மறையாது. மாறாது.
பற்றுறுதி கொண்டிருந்தீர்கள் என்று இறந்தகாலத்தில் வினவுகிறீர்கள். இருந்தேன், இருக்கிறேன், எதிர்காலத்திலும் கூட அதே பற்றுறுதியுடன் இருப்பேன் என்பது என் விடை.
இதன் அடுத்த பகுதி செயல்பாடு குறித்த உங்கள் கேள்வி. இப்போது இருக்கிற குழுக்கள் கடந்த காலத்தில் காட்டிய திட்டங்கள், வழிமுறைகள் வெற்றியடையவில்லை. அதன் காரணங்கள் என்ன என்று அறிந்து மாற்றிக் கொள்ளவும் இல்லை. தொடர்ந்து மார்க்சின் லெனினின் படைப்புகளில் ஏதோ ஒரு வரியைத் தவறாகப் படித்துவிட்டதால்தான் இலக்குகளை அடையமுடியவில்லை என்றே நம்புகின்றன. அதற்கு பிறரது நூல்களைப் பாராமல் ஒதுக்கி வைத்துவிட்டு மறுபடி மறுபடி அவர்களது மூல நூல்களைப் பயில்வது மட்டுமே தீர்வென்றும் சொல்லுகின்றன. சிலர் மாற்று என்ற பெயரில் ஸ்டாலினுக்கு மாற்றாக ட்ராட்ஸ்கி, காவுத்ஸ்கி என்று அதே காலத்தின் சாம்பல்களைத் தீற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் பின் நவீனத்துவம் என்ற பெயரில் எந்த வகையான கூட்டு முன்னெடுப்பும் கூடவே கூடாது,பெருங்கதையாடல், பயனில்லை என்று எல்லாவற்றையும் விளையாட்டாகக் கட்டுடைத்துச் சிதற அடிப்பது என்று ஏதோதோ பினாத்துகிறார்கள். எங்கேயோ மந்திரத்தைத் தவறாகச் சொல்லிவிட்டதால்தான் வேள்வியின் பயன் கிட்டவில்லை என்று சாதிக்கும் மனநிலைதான் இயக்கங்களின் பெரும்போக்காக இருக்கிறது. நான் சொல்வது சரியா நீங்கள் சொல்வது சரியா என்று கேட்டால் இலக்கைச் சென்று அடையாததால் இருவருமே தவறு என்று மட்டும்தான் சொல்ல முடியும். ஓடியவர்கள் களைத்துப் போனால். புதியவர்கள் அவர்கள் இடத்தை நிரப்புவார்கள். சரியான ஒரு வழிமுறையை கண்டு பிடித்து வென்ற பின் கடந்த காலத்தில் எப்படியெல்லாம் 99 தவறான வழிகளின் மூலம் எண்ணிய முடிவுக்கு சென்று சேராமல் போய் இருந்திருக்கிறோம் என்று அனுபவமாகத் தொகுத்துக் கொள்வார்கள். எனக்கு விடை தெரியவில்லை என்றால் கேள்வி தவறு என்று பொருள் கொள்ள முடியாதல்லவா? அதுபோலத்தான். கேள்வி இன்னும் முழு உயிர்ப்போடுதான் இருக்கிறது. சரியான விடை கிடைக்கும் வரை அது இருக்கவே செய்யும். தனிப்பட்ட முறையில் இயக்கத்தில் என் செயல்பாடுகள் நின்று போனதற்கு இது முழுக்காரணம் இல்லை என்பதையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். இதற்குமேல் இங்கே இதனை விளக்கி உட்புக வேண்டாம் என்று கருதுகிறேன்.
தமிழ் இலக்கியம் செய்யுள்களால் அரசு நடத்தி இலக்கணம் சிறையென்று வசனகவிதைக்கு வந்து இப்போது புதினங்களால் புதுநடைபழகி வருவது பற்றி என்ன சொல்கிறீர்கள்
n எந்த இலக்கியத்திலும் எல்லா வடிவமும் அதை நுகர்வோருக்காகவே அமைக்கப்படுகிறது. இலக்கண விதிகளின்படி செய்யுள் வடிவம் படைக்கவும், அதை நுகரவும், தேவையானோர் இருந்தபோது அந்த வடிவம் போதுமானதாக இருந்தது. நுகர்வோர் பெரும் அளவு கூடும் பொழுது அவர்களது தேவைக்கேற்ப புதிய தளர்வான வடிவங்கள் தோன்றின. அச்சு ஊடகம் தோன்றிய பின்பு முதலாளித்துவ வளர்நிலைக் காலத்தில் பெரும் இலக்கிய உற்பத்திக்கான தேவை எழுந்தது. புதினம் என்ற வடிவம் அதன் சமூக உற்பத்தித் தன்மைக்குப் பொருத்தமானதாக இருந்தது. வடிவங்களில் மாற்றம் தோன்றுவது மொழிக்குக் கேடு என்று நான் கருதவில்லை. மொழிக்கு அந்த ஆற்றல் இருப்பதால்தானே எப்படிப்பட்ட புதிய வடிவமும் சாத்தியமாகிறது? ஒரு புது வடிவம் தோன்றிவிட்டால் அதற்கு முந்தைய வடிவங்கள் முற்றிலும் அழிந்து போய் விடும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. புதினம் என்ற வடிவம்தான் முற்போக்கு என்று நம்ப இடமில்லை. பழைய வடிவங்களின் செழுமையான படைப்புகள் சமூகத்தால் மறந்துபோகப்படுவதும் இல்லை. அப்படி மறந்து மறைந்து போய்விடும் என்றால் நாம் ஏன் பாவேந்தர் குறித்து இன்றும் பேசுகிறோம்?
தமிழ்ப்புதினங்கள் நாட்டார் வழக்கென்றும் வட்டார வழக்கென்றும் தலித் இலக்கியமென்றும் இட ஒதுக்கீடு பெறுவது போல் இருக்கும் தற்காலப் போக்கிற்கு என்னசொல்வீர்கள்?.
தமிழ்ப் புதினங்கள் காவிரிக் கரையின் மேன்மைகள், காற்றில் மிதந்து வந்த கல்யாணி ராக ஆலாபனை, தளிர் வெற்றிலைகளை மெல்லுவதில் உள்ள சுவை, பித்தளை டம்ளரில் தரப்பட்ட டிகிரி காப்பி, சூடே ஒரு ருசி சிவப்பே ஒரு அழகு, ரீதிகௌளையின் சொகுசு வளைவு, இதயம் என்று சொல்வதை விட ஹ்ருதயம் என்பது நெருக்கமாக இருக்கிறது என்றெல்லாம் தகுதி அடிப்படை இலக்கியங்களைப் ‘படைத்துக்’ கொண்டு இருந்தன அல்லவா? அதில் இருந்து எந்த ஒதுக்கீடு பெற்றும் அல்ல, மாறாக ஒதுங்கி நாட்டார் வழக்கு, வட்டார வழக்கு, தலித் இலக்கியம், என்றெல்லாம் மாறி வரத் தற்காலம் வரை ஆகிவிட்டது என்றும் சொல்லலாமே?
சமூகத்தின் பெரும்பான்மையான பிரிவுகளுக்குத் தனியே இலக்கியங்கள் உண்டா? மொத்த இலக்கியமும் ஒரே மாவு. அவித்துப் போட்டால் இட்லி சுட்டுப் போட்டால் தோசை என்றுதானே இருந்தது? வந்திருக்கும் இலக்கியங்களே போதும் போதும் என்று சித்தரித்து முடித்து விட்ட அதே பழங்கதைகளுக்குப் பதில் வேறு கதைகளையும்தான் கேட்போமே! ஒரு கி.ராஜநாராயணன் மூலம் மட்டுமே நாட்டார் வழக்கின் ஆழமும் பொருளும் நாம் உணரவில்லையா? இமையமோ கண்மணி குணசேகரனோ, நடராஜன் காளிதாசோ உலகில் இப்படியும் உண்டு என்று நமக்கு அதிர்வூட்டி அறிவுறுத்தவில்லையா? என் கருத்தில் சமூகத்தின் செயல்பாடுகளில் நேரடியாகச் சிக்கி உழன்று கொண்டு இருக்கின்ற பெரும்பகுதியானோரின் இலக்கியம் இன்னும் வரவேவில்லை. அதனால் கொஞ்ச காலமாவது முழுவதுமே அவர்களுடையதாகவே வந்தாலும் தப்பில்லை..
புனைவு அபுனைவு என்ற வகையை விளக்குங்கள்.
‘பொய் புகலேன் புனைந்துரையேன் சத்தியம் புகலுகின்றேன்’ என்று வள்ளல் பிரான் உருகுவார். உண்மையை ஒருநிலையிலும் பொய் புனைவு என்பனவற்றை எதிர்நிலையிலும் வைத்துக் காணுகிறார் என்போம். பொய் நடந்ததற்கு மாறாகக் கூறுவது. புனைவு நடக்காததை நடந்ததாகக் கூறுவது அல்லது நடந்ததைக் கூட்டி / குறைத்துக் கூறுவது என்று வைத்துக் கொள்ளலாம்தானே? புனைவு என்றால் அலங்கரித்துக் கொள்ளுவது, இருப்பதைக் காட்டிலும் கூட்டிக் கொள்வது, தளைப் படுத்துவது – பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் – பேதை வினைமேற் கொளின் என்று வள்ளுவர் சொல்லுகிறாரே? பேதை ஒருவன் வினை செய்யப் புறப்பட்டானேயாகில் ஒன்றா பொய்யாகி (தவறாகி) விடும், மாட்டியும் கொள்ளுவான். சிறைப் படுவான். அவன் சொன்னதுக்கு நான் என்ன புனையா? பொய்யும் புனைசுருட்டும் என்றெல்லாம் மக்கள் வழக்கில் உண்டு. உயர்த்திக் காட்டுதல் – வசிட்டனே புனைந்தான் மௌலி – என்று பலவாறாக புனை புனைவு கையாளப்படுகிறது. ஆகவே புனைவு என்பது இன்றைய காலத்தில் இலக்கியத்தில் சுவைக்காக ஏற்றியும் கூட்டியும் உரைக்க அனுமதிக்கப்படும் இடத்தைக் காட்டுகிறது. fiction என்று ஆங்கிலத்தில் சொல்லுவது.
அ-புனைவு என்பது தமிழ் இலக்கணத்துக்குட்பட்டதா என்பது தெரியவில்லை. வடமொழியில் சுபம் அசுபம், மங்களம் – அமங்களம், க்ரமம் – அக்ரமம் (முறையாகச் செய்வது – முறையின்றிச் செய்வது) என்று அ எதிர்மறை முன்னொட்டாய் வரும். non-fiction என்பது பொதுப் பொருளில் மெய்யானது கற்பனை கலவாதது. கதை என்றால் கற்பனையானது fiction. கட்டுரை என்று சொல்வது non-fiction.
பின்நவீனத்துவத்தில் எல்லாமே fiction தான் என்பர். அவர்களுக்கு எல்லாமே கட்டி அமைத்த உரை என்னும் பொருளில் கட்டுரைதான். கட்டுரை உண்மை என்பதற்கு எதிர்ச்சொல் அல்ல. உண்மை என்பதே கட்டி அமைக்கப்பட்டதுதான் என்பார்கள்.
Fact + Fiction = Faction என்றொரு வகை உண்டு. உண்மையாக இருந்தவர்களிடையே நடக்கும் உரையாடல்களைப் புனைந்து சொல்லும் ஒரு முறை. நார்மன் மெயிலர் என்பவரின் Armies of the Night என்ற ஒரு புதினத்தை creative non-fiction என்ற வகையென்று சொல்லுகிறார்கள். அதை எப்படி மொழியாக்கம் செய்வது என்றே எனக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. புனைந்துரைத்த கதையல்ல என்றா கதையில்லாக் கதை என்றா? அந்த நூல் இங்கே கார்முகில் என்றொரு நூலகத்தில் கண்டதுண்டு. வரலாறு புதினமாக, புதினமாக வரலாறு History as Fiction, Fiction as History என்று அட்டையில் எழுதியிருக்கும். பொதுவாக அவரது கதைகள் மிக நீளமாக இருக்கும். இந்தக் கதை நீளமானது இல்லை. ஆனால் நான் படித்ததில்லை.
இந்தப் புதுவகைகள் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு பரபரப்பாக இருக்கும். அப்புறம் புதினம் என்றே சொல்லி விடுவார்கள். மெயிலரின் நூலோ 1967 ல் வெளிவந்தது. ஆனால் நூலகங்கள் புதினம் என்ற வரிசையில்தான் வைத்திருக்கும். அ-புனைவு, மாய எதார்த்தம் Magical realism என்பது போல ஏற்கனவே ஒரு கருத்தின் எதிர்மறை சொல்லுக்கு இன்னொரு எதிர்மறை முன்னொட்டை இணைக்கிற புத்துருவாக்கச் சொல் neologism. மாய எதார்த்தம் காப்ரியல் கார்சியா மார்க்குவெசின் ஒரு நூற்றாண்டுத் தனிமைக்குப் பிறகு மிகப் பரபரப்பான ஒன்றாய் இருந்தது. சல்மான் ருஷ்டியின் புதினங்களில் மாய எதார்த்தம் என்ற தலைப்பில் பல ஆய்வுகள் உண்டு. நானும்கூட ஒருவருக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இப்போது வரும் ருஷ்டியின் புதினங்கள் / நூல்களில் மாய எதார்த்தம் என்று அட்டையிலேயே அறிவிப்பது இல்லை.
பழந்தமிழ் செவ்வியல் மரபு பற்றிய தங்கள் கருத்து என்ன
தமிழின் இலக்கியங்கள் நமக்குக் கிடைத்திருக்கும் அளவில் கூட உலகின் தலைசிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் போற்றவேண்டியவை. அவற்றைத் தேடித் தேடி எடுத்துப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா உ.வே.சா விற்குக் கட்டாயம் இன்றைய தமிழர்கள் கடமைப் பட்டிருக்கிறோம். அதே சமயம் அவருக்குச் சுவடிகளைக் கொடுத்து உதவ அத்தனை நூற்றாண்டுகளாய் அந்த நூல்களைப் போற்றிப் பாதுகாத்து வைத்திருந்த அந்தப் பெயரறியாப் பெருந்தகைகளை நாம் மறந்து விடுகிறோம். நமது மரபை நமக்குக் காத்துக் கையளித்த அந்தப் புலவர் பெருமக்கள்தான் நமக்குக் குலசாமிகள். மூலவர்கள். மகோ மகோபாத்யாயர் புதிய கோபுரம் எழுப்பிக் குடமுழுக்கு செய்து தந்தார் என்று சொன்னால் அது நாள் வரை நம் தெய்வங்களைக் கரையான் தின்ன விடாது காப்பாற்றியவர்கள் பங்கையும் சேர்த்துத் தானே சொல்ல வேண்டும்?. இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன். .
எகிப்திய வரை எழுத்துகள் hieroglyphs எழுதிய பாப்பரைஸ் சுருள்கள் மலை போன்ற பெரும் பிரமிடுகளின் உள்ளே புதைந்து 4500 ஆண்டுகள் காக்கப் பட்டிருந்தன. சுமேரியர்களின் ஆப்பெழுத்துகள் மண்ணில் புதைந்து காக்கப் பட்டிருந்தன.. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அவற்றைத் தோண்டியெடுத்த போது அவற்றை என்ன என்று படித்துச் சொல்ல அங்கிருந்த மக்கள் ஒருவருக்குமே தெரியாதிருந்தது.
ஐரோப்பியர்களே அங்கே கிடைத்த இருமொழி ரோசெட்டா பலகை, பெஹிஸ்டுன் (Behistun inscriptions) பொறிப்புகள் உதவியால் அவற்றை மறுபடிப் படிக்க வழி கண்டுபிடித்தனர்.. அசிரியன், எலாமைட், அக்கேடியன் மொழிகள் படிக்கிற முறையின் தொடக்கம் 1802ல் ஜியோர்க் பிரடெரிக் க்ரோட்பென்ட் (Georg Friedrich Grotefend.) என்பவரால் அமைந்தது. 1820ல் ழீன் பிரான்சுவா ஷாம்போல்லியன் ரோசெட்டா பலகை துணையோடு (Jean-François Champollion) எகிப்திய எழுத்துகள் படிக்கும் முறையைக் கண்டறிந்தார். 1835ல் ஹென்றி ராவ்லின்சன் (Henry Rawlinson) என்ற கிழக்கிந்திய கம்பனியின் அலுவலரால் பாபிலோனிய, சுமேரிய மொழிகளை, பழைய பாரசீக மொழியின் துணையால் படிக்கிற வழிமுறை கண்டறியப்பட்டது, ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்ட போதும் இன்றளவும் சிந்துசமவெளி எழுத்துகள் படிக்கப் படாமலேயே இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏன் இந்த நீளத்துக்கு இதைச் சொல்லுகிறேன்?
உ.வே.சா வின் பெரும்பணி ஒரே நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்புநோக்கி பாடபேதம் இடைசெருகல் கண்டு இறுதி அச்சு வடிவுக்கு கொண்டு வந்ததே. அவருக்கு சுமேரியன் எகிப்தியன் போன்று தமிழ் எழுத்துகளைப் படிக்கிற வழிமுறையைக் கண்டறியத் தேவை இருக்கவில்லை. அதற்குக் காரணம் இங்கே யாரும் இளங்கோவடிகள் கைப்பட எழுதிய சுவடியைத் தேடியெடுத்துக் கொடுத்து அதிலிருந்து சிலம்பை நமக்கு மீட்டுத் தரவில்லை. அந்தச் சுவடி என்றில்லாது எல்லாத் தமிழ் நூல்களையும் தலைமுறை தலைமுறையாய் பனையோலைகளில் கீறி எழுதியிருந்த எழுத்தெல்லாம் படித்துப் பொருளோடு நெஞ்சில் பதித்துக் கொண்டு தமிழ்ப்புலவர் பெருமக்கள் பாடம் சொல்லியும் படி எடுத்தும் வைத்திருந்தார்கள் இல்லையா அங்கே தொடங்குகிறது நம் மரபு.
[இருபது நூற்றாண்டுகள் சாகாமல் அவர்கள் அப்படிக் காத்து வைத்த மரபை அச்சில் ஏற்றி நிலை பேறுடையதாய் ஆக்கிக் கொடுத்தது உவே சாவின் சிறப்பு. அதைக் குறைத்து மதிப்பிடவில்லை]
இதற்குப் பொருள் தமிழ் தொடர்ந்து பயிலப்பட்டு வந்தது என்பதுதான். இன்றைக்கு நிலைத்து நிற்கிற பாடல்கள் அந்த வகையில் இத்தனை ஆண்டு கால வாசகர்களால் படித்துப் பொருளுணர்ந்து காக்கப் பட்டவை. கால உரைகல்லில் தேய்த்துப் பார்த்து தேறி நின்று நிலைத்தவை.
இன்றைய எகிப்தியர்களுக்குக் கிடைத்தது 4500 ஆண்டுகளுக்கு முன் உயிரோடு இருந்து அதன் பின் பாடம் செய்யப் பட்ட மம்மிகளோடு சேர்த்துக் கிடைத்த கூட்டை ஒத்த மொழி. தமிழ் தொடர்ந்து கண்ணுக்குள் வைத்துக் காக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்ட உயிர்ப்பு மாறா மொழி. நமக்கு அடுத்து வரும் தலைமுறைகளுக்குச் அந்தத் தமிழ் நாம் சிதையாது காத்து கொடுக்க வேண்டிய குல சொத்து. அறிவியல் காலத்தில் வாழும் நாம் அந்த மரபை அறுந்து விடாது காக்க வேண்டியவர்கள்.
பழந்தமிழ் இலக்கியங்களை எனக்கு எவ்வளவு தெரியும்?
வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயறுரா – ஆங்கதுகொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று.
என்று நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் பாடுவாரில்லையா அப்படிப் பல களிறுகள் உடன் வாழப் பேறு பெற்றிருந்தாலும் எறும்பின் வயிறு எவ்வளவுதான் கொண்டு விடும்? ஒரு பருக்கை உண்ணுவேன். சுவை வியப்பேன். மயங்குவேன். மறுபடியும் ஒரு பருக்கை. இப்படித் தெரிந்து கொண்டதுதான். சுவை அமுத மலைத் தேனூற்றே எதிரே இருந்தாலும் குடிக்கிற வயிறு தானே அளவு! அதனால் என்ன? உயிர் இருக்கிற வரை பசி இருக்கத்தான் போகிறது. எனக்கும், இன்னும் பல கோடி பேருக்கும் உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையாக இருந்தாலும் சற்றும் குறைவுபடாது தமிழும் இருக்கும்.
தமிழ் எழுத ஆர்வலர்கள் மிகுந்திருக்குமளவு ஆழமின்மை என்ற குறைபாடும் உள்ளதே உங்கள் கருத்து என்ன?
ஆழம் அகலம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்றால் நான் அகலமாக்குதல் என்ற பரவலாக்குவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். நிறைய பேர் எழுதட்டும். எது நிலைத்து இருக்கிறதோ அது இருந்து விட்டுப் போகிறது. ஆழம்தான் எழுதுவதற்கே முன்நிபந்தனை என்றெல்லாம் விதிக்க வேண்டியதில்லை.விதிக்கவும் கூடாது. நீங்கள் கூட ஆழமின்மை ஒரு குறைபாடு என்று சொல்லுகிறீர்கள் அல்லவா? அதனுள்ளே. ஆழமானதும் சில இருக்கிறது என்றுதானே பொருள், விதிவிலக்குகள் விதியைத்தான் உறுதி செய்கின்றன.
நிறைய நேரம் எடுத்துக்கொண்டு பலவற்றைப் பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி. தமிழ்நெஞ்சம் ஆசிரியர் குழுவின் வாழ்த்துகள்.
உங்களோடு உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நன்றி. என்னுடைய கருத்துகளைப் பகிர வாய்ப்பளித்த தமிழ்நெஞ்சம் ஆசிரியர் குழுவுக்கு எனது உளமார்ந்த நன்றி.
4 Comments
Tamilchittu · ஆகஸ்ட் 30, 2022 at 15 h 16 min
அண்ணனின் நேர்காணலை வெளியிட்ட தமிழ் நெஞ்சம் இதழுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் இனிய நன்றிகள்…
அண்ணன் பாவேந்தன் மிகவும் திறமையானவர்….இவரது சிந்தனைகள் தனித்தன்மையாக இருக்கும் .எங்கள் வீட்டின் மூத்தவர்.இவரின் அறிவுத்திறன் மற்றும் கண்டு நாங்கள் மிரண்டு இருக்கின்றோம்.. படித்துக்கொண்டே இருப்பார் எப்போதும் குறிப்பாக உணவு உண்ணும் போது அன்று முதல் இன்று வரை ஏதாவது ஆங்கிலப்புத்தகம் கையில் இருக்கும்… வீட்டிலும் நிறைய நூல்கள் வைத்துள்ளார்… தமிழ் இலக்கியங்கள் மட்டும் அல்லாது ஆங்கில இலக்கியங்களும் அத்துப்படி.. இவரின் அறிவுத்திறன் எங்களில் யாருக்கும் இவர் அளவு இல்லை என்றே கூறவேண்டும்…
பாவேந்தன் அண்ணன் எங்களுக்குக்கிடைத்த ஒரு பொக்கிசம்.. நீண்ட ஆயுளும் நிறைசெல்வமும் பெற இறைவனை வேண்டுகிறேன்
இன்னணம் அன்புத் தங்கை தமிழ்ச்சிட்டு (எ)தென்றல்கவி.
விக்டர்தாஸ் · ஆகஸ்ட் 31, 2022 at 10 h 55 min
நீண்ட காலங்களுக்குப் பிறகு
நெஞ்சு நிறைகிறேன்.
எத்தனை பெரும் அறிவாளியை
இதுவரை கவனியாது இருந்திருக்கிறேனே என கண்கள் கசிகிறேன்.
என்போலவே
ஒரு சிவப்புச் சிந்தனைக்காரரை தரிசித்ததில் மகிழ்ந்து நெகிழ்கிறேன்.
அவரின் ஒவ்வொரு கருத்துகளும்
ஒவ்வொரு பவுன் விஞ்சும்.
தமிழ் மரபிற்கு
அவர் தந்த விளக்கம்
ஆனைத் தந்த வெளிச்சம்.
கருவிருந்து கைவந்த போதே
கவனித்தே பெயர் வைத்திருக்கிறார்
எங்கள் வாழும் அவ்வை
பாவேந்தன் என.
ஒவ்வொரு சொல்லிலும்
ஜெயகாந்தனையும்
ஜீவாவையும்
பெருஞ்சித்திரனையும் பார்க்கிறேன்.
பாரதிதாசன் பற்றிய அவர் பார்வை சரி.
ஆனால்
எல்லாம் சரி என ஒப்ப ஏலவில்லை எனக்கு.
மற்றபடி
இந்த நேர்காணல்
ஒவ்வொரு படைப்பாளன் வீட்டிலும்
உட்கார வேண்டிய பொக்கிஷம்.
இந்த நேர்காணல் போலவே
இந்த மனிதனையும்
நம்
தமிழ் கூறும் நல்லுலகு
நீண்டகாலம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டும்.
இது நம் கடமை என்றே கருதுகிறேன்.
அற்புதமான நேர்காணல் திரு.அமீன்.
உங்களுக்கென்
உயரமான வாழ்த்துகள்.
இப்போதுதான் திறந்தேன்
படிக்க ஆரம்பித்தேன்
முடிக்காமல் மூட முடியவில்லை.
மனிதர் என்னை
சிலுவையால் அடித்து
ஆணிக்குள் அறைந்துவிட்டார்
இதிலிருந்து
இப்போதைக்கு இறங்கிவர மனமில்லை
வரவும் மாட்டேன்.
வாழ்த்துகள் திரு.பாவேந்தன் அவர்களே.
நன்றி
அன்பன்
விக்டர்தாஸ்
கே.ராம்ஜி உலகநாதன். Ulaga · செப்டம்பர் 2, 2022 at 5 h 31 min
சிறப்பான நேர்காணல்.
வாழ்த்துக்கள்!
வெற்றிப்பேரொளி · செப்டம்பர் 6, 2022 at 17 h 53 min
அன்புச்செல்வர் பாவேந்தன் நேர்காணல் அரிய பல செய்திகளின் பெட்டகம்.
தன்னைப் பற்றிய தம்பட்டத்தைவிட
இனம் மொழி குறித்த கருத்துகள் பதிவிடலில் கவனம் செலுத்தியுள்ளார். அதற்கு இசைவான உங்களுடைய கேள்விகள் நேர்காணலின் வேரில் நீர்பாய்ச்சுகின்றன.
108 பக்க அறிவுழைப்புக்கு இனிய வாழ்த்துங்க தோழர்.