மின்னிதழ் / நேர்காணல்
தமிழ் படித்தவர்களைவிட தமிழ் ஆசிரியர்களைவிட மற்ற துறைகளில் உள்ளவர்களே தமிழ்க்கவிதை யாப்பதில் வல்லவர்களாக உள்ளனர். ஒரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் உயர்பதவியில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி ஓய்வு பெற்றவுடன் தமிழ்க் கவிதை மேல் கொண்ட பற்றின் காரணமாக அதனை யாப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து தற்போது மாணவராக மட்டுமின்றி ஆசிரியராகவும் மிளிரும் ஒரு வங்கி அதிகாரி. பெரியார் கொள்கைகளில் இம்மியும் வழுவாத கொள்கைக் கோமான். கவியரங்க மேடைகளில் முழங்கும் மரபுத்தங்கம். மதுரைக்கருகில் உள்ள சோழவந்தானில் பிறந்தாலும் தற்போது சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்களே இம்மாத நேர்காணலுக்குரிய கவிஞர். அவரிடம் நமது ஆசிரியர்குழுவில் உள்ள தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் அவர்கள் கேட்ட வினாக்களையும் அதற்கு அவர்தந்த விடைகளையும் காண்போம்.
மரபுக்கவிதையின் மீது ஏன் திடீரெனக் காதல் வந்தது?
எண்பதுகளில் திராவிடர் கழக மேடைகளில் புரட்சிக் கவிஞர் பாடல்களை சேலம் அருள்மொழி அவர்கள் சிறுமியாக உணர்ச்சி பொங்கப் பாடக் கேட்டது முதல் பாதிப்பு. பின்னர் மதுரை புரட்சிக் கவிஞர் வாசகர் வட்டம், மதுரை புரட்சிக் கவிஞர் பேரவை போன்ற அமைப்புகளில் இணைந்து ஒரு பொறுப்பாளனாகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு.
மொத்தத்தில் மரபுக் கவிதைகளின்பால் என்னை ஈர்த்தது புரட்சிக் கவிஞரின் பாடல்களே!
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!
பெரியாரை ஓவியமாய் வரைந்த புரட்சிக் கவிஞரின் மறக்கவொண்ணாப் பாடல்.
அடுத்து அன்புச் சகோதரர் சுப.முருகானந்தம் அவர்களின் வாழ்வியல் குறள் வெண்பா.
ஏன் புதுக்கவிதை ஹைக்கூ போன்றவற்றை முயற்சிக்கவில்லை?
.
வெறுப்பு ஏதுமில்லை. புதுக்கவிதை ஹைக்கூ கவிதைகளின் பொருண்மையும் நுட்பமும் இன்னும் கற்றேனில்லை.
கருத்தினைச் சொல்லும் ஊடகமாகத் தான் கவிதையைப் பார்க்கின்றேன். அது எந்த வடிவமாக இருந்தால் என்ன?
முதலில் மரபு வகைகளைப் பழுதறக் கற்பதே எனது எண்ணம். இன்னும் மரபைக் கற்றுக்கொள்ளும் மாணவனாகத்தான் உள்ளேன். தேர்ந்த மரபுக் கவிஞனே புதுக் கவிதையிலும் வெற்றிபெற்றுள்ளார்கள் என்பது மறுக்கவியலாத உண்மை. நானும் எழுதுவேன் வரும் நாட்களில்.
விருத்தங்கள் எழுதுவதில் வல்லவராகத் தங்களை உருவாக்கிக் கொண்டது எவ்வாறு?
01.பாட்டரசர் கி.பாரதிதாசன் அவர்களின் வழிகாட்டுதலோடு பாவலர் பயிலரங்கத்தில் பெற்ற எழுத்துப் பயிற்சி. அதைத் தாண்டி பல நாட்கள் அவருடன் மணிக்கணக்கில் இலக்கியம் இலக்கணம் பற்றி அவருடன் பேசியினூடாய்ப் பேசிப் பெற்ற தெளிவு. சென்ற வாரம் கூட என்னை அழைத்து நான் எதுகையைக் கையாள்வதில் செய்யும் ஒரு பிழையைச் சுட்டினார். நான் செய்தது தவறில்லை என்றாலும் புலமை குன்றிய செயல் என்று சுட்டினார். பாட்டரசர் சொல்வதுபோல் மரபுக் கவிதையை ஆசான் ஒருவரிடம் நேரடியாகக் கற்றால் புலமை மேம்படும். இன்றும் தொடர்ந்து வழிநடத்தும் பேராசானாய் பாட்டரசரைப் பெற்றதென் பேறு.
02.தொடர்ந்து எழுதுவது. மற்றவர்களின் கவிதைகளைப் படிப்பது. பாவலர் பயிலரங்கத்தில் எனது முன்னோடிகளான திரு.இராம வேல்முருகன், திரு.சிவப்பிரகாசம் திரு.சுப முருகானந்தம் ஆகியோரின் பாடல்களை பயிலரங்கத்தில் படித்துச் சுவைத்தது.
03. கவிக்கோ துரைவசந்தராசனின் பாடல்களைப் படித்துச் சுவைத்து அதன் நுட்பங்களைக் கண்டு வியந்தது. பின்னர் அவருடன் நட்பு கொண்டு பழகும் வாய்ப்பில் இன்னும் பல நுட்பங்களை அறியத் தந்தார். முதலில் சீர்களை அடர்த்தியாக எப்படிப் படைக்க வேண்டும் என்பது பற்றி விளக்கம் தந்தார். சமகாலச் சொல்லாடல்களை அறிவியல் சொற்களைப் பாடலில் பயன்படுத்தும் நுட்பம் அறிந்தவர் கவிக்கோ. புதுக்கவிதையை மரபு வடிவத்தில் எழுதும் திறன் வாய்த்தவர் அய்யா கவிக்கோ அவர்கள்.
இவர்கள் அனைவரின் கலவைக் கொடையே இன்றைய நான். விருத்தம் இயற்றுவதில் வல்லவன் நான் என்பதை ஏற்றேனில்லை.
பெரியார் மீது அளவற்ற பற்று வரக் காரணம் என்ன?
இன்று நான் மானமுள்ள மனிதனாக வாழும் வாய்ப்பைத் தர வாழ்நாள் முழுவதும் போராடியவர் என்பதால். ஆணாக இருந்து பெண்ணுக்கும் உயர்ந்த இடைநிலைச் சாதியில் பிறந்தும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் செல்வந்தராய்ப் பிறந்தும் ஏழைக்கும் வக்காலத்து வாங்கிய கட்டணம் வேண்டா வழக்கறிஞர்! தான் எதுவாக இல்லையோ அந்த எதிர்நிலையை ஆதரிப்பது அரிய குணம். அவர்தான் பெரியார்.
கடவுள் மறுப்பாளர்கள் ஆன்மிகவாதிகளுடன் அதிகம் நட்பு பாராட்டுவதில்லை என்பது உண்மையா?
தங்களின் இந்தக் கருத்து உண்மையானால் என்னால் குடும்பம் நடத்த இயலாது. எனது இணையர் கடவுள் நம்பிக்கை கொண்டவராக திருமணக் காலகட்டத்தில் மாறிவிட்டார். பலமுறை அவருக்குத் துணையாகக் கோயிலுக்கும் சென்றுள்ளேன். இன்றும் என்னை சூடம் ஊதுபத்தி பூ வாங்கி வரச் சொல்வார். எங்கள் மகனும் பகுத்தறிவாளர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள். இறை நம்பிக்கை தனியரின் விருப்பம் எனும் புரிதல் கொண்டவன் நான்.
இன்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டிப் போராடுபவர்கள் நாங்கள். கடவுள் எங்கள் எதிரி அல்ல. ஏற்றத்தாழ்வுகளைப் போற்றும் சாதிமுறையே எங்கள் எதிரி.
சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் மதக்கோட்பாடுகள் எங்கள் எதிரி. இந்த மதங்களின் அடிக்கட்டுமானமாக ஆணிவேராக கடவுள் என்னும் கருத்தை இந்த மதவாதிகள் முன்நிறுத்துகிறார்கள். எனவே நாங்கள் கடவுள் என்னும் கருத்தியலை எதிர்க்கிறோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்ல.
நான் நாமக்கல் கிளையில் வங்கியில் மேலாளராகபணியாற்றிக் கொண்டிருந்த வேளை (2009) பெங்களூரில் இருந்து ஆஞ்சநேயரை வழிபட வந்த பக்தர் ஒருவர் எனது அறைக்குள் நுழைந்தார். கோயில் கூட்டத்தில் அவருடைய பணப்பை திருடப்பட்டு விட்டது. கையில் பணமும் இல்லை வங்கி அட்டையும் இல்லை. ஆனால் அவருக்கு பெங்களூரில் உள்ள எங்கள் வங்கியின் கிளையில் வைப்புத் தொகையும் கணக்கில் பணமும் இருந்தது. என்னிடம் வந்து உதவி கேட்டார் ஊருக்கு செல்வதற்கு பணமே இல்லை என்று. தேவையான அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு பெங்களூர் கிளையைத் தொடர்பு கொண்டு அவருடைய கணக்கிலிருந்து ரூபாய் ஐயாயிரம் எனது கணக்கிற்கு மாற்றச் சொல்லி வாங்கி பின்னர் அவருக்கு ஊருக்கு திரும்பிச் செல்ல பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். இந்த நடவடிக்கைக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்த பின்னரே பணம் எனது கணக்கிற்கு மாற்றப்பட்டது. அப்போது அவரின் துயர மனநிலையைக் கண்டு இரங்கித்தான் இந்த உதவியைச் செய்தேனே தவிர அவர் பெங்களூரில் இருந்து நாமக்கல்லுக்கு ஆஞ்சநேயரைக் கும்பிட வந்த ஒரு பக்தர் என்ற வெறுப்பு என் மனத்தில் துளியும் இருந்ததில்லை என்பதே உண்மை.
தந்தை பெரியார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த அடிப்படைப் பாடமே மனிதநேயம். அதை எப்படி மறப்பது? பெரியாரியவாதிகள் மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கக் கற்றவர்கள்.

உங்கள் சொந்த ஊரான சோழவந்தான் பற்றி.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மதுரையில் தான். என் அப்பா பிறந்தது சோழவந்தானில். சில வேளைகளிள் சோழவந்தானுக்குச் சென்று வந்துள்ளேன். எங்களுக்குச் சொந்தமான ஒரு தென்னந் தோப்பு வைகை ஆற்றங்கரையை ஒட்டியே இருந்தது அந்த தோப்பில் ஓடியாடி விளையாடியது ஆற்றில் நீர் வரத்து இல்லை என்றாலும் வெட்டிய ஓடுகாலில் குளித்து மகிழ்ந்ததும் மறக்கவியலாத நினைவுகள். மதுரை வட்டாரத்தில் சோழவந்தான் வெத்தலை பலரும் விரும்பிக் கேட்பது. வேரை மறந்தவர்கள் இல்லையே நாம் எனவே எனது சொந்த ஊரின் மேல் பற்று உள்ளவன்தான் நான்.




தங்கள் வங்கிப் பணியில் மறக்க இயலாத நிகழ்வு ஏதாவது நடந்ததுண்டா?
காலை 9.20 மணி. வங்கிக்குக் கிளம்பத் தயாராக இருந்தேன். எனது அலைபேசியில் என்னை துணை மேலாளர் அழைத்தார். எங்களுடன் பணியாற்றிய வேளாண் அதிகாரி வங்கியின் முதல்மாடியில் உள்ள கழிவறையில் தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். முதல்நாள் இரவு 8 மணிக்கு நானும் அவரும் ஒரு கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பினோம். இன்று காலை இப்படியொரு கொடூர முடிவு. திருமணம் செய்யாத இளைஞர்.
அடுத்த பத்து நிமிடங்களில் வங்கியில். கொண்ட தொடர்புகளைப் பயன்படுத்தி காவல் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினேன். நான் வருவதற்கு முன்னரே தீயணைப்புத்துறைப் போராளிகள் வந்து தீயை அணைத்துவிட்டனர். 10.20க்கு இறந்தவரின் உடல் மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டது. 10.30 க்கு வங்கிப்பணிகளை தொடங்கிவைத்து மருத்துவமணை சென்றேன். எல்லா சட்டபூர்வமான நடைமுறைகளையும் முடித்துவிட்டு உடலை எடுத்துக் கொண்டு 60 கிமீ தொலைவிலுள்ள அவரது சொந்த ஊருக்குச் சென்று இறுதிச்சடங்கை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பினேன்.
மறுநாள் வங்கியில் ஒரு நடைமுறைச் சிக்கல். வங்கியின் கழிவறை முதல் தளத்தில் உள்ளது. அதில் ஒன்றில்தான் நண்பர் தீயிட்டுச் செத்தார். மாடிக்குச் செல்லவே அஞ்சினர். கழிவறை வசதியின்றி எப்படி ஊழியர்கள் 10 மணி நேரம் பணியாற்ற இயலும்.
நகராட்சி சென்று அதிகாரிகளைப் பார்த்துப் பேசி விபத்து நடந்த கழிவறையைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தேன். கருகிய உடலின் சிதறல்கள் செருப்பு எரிந்தும் எரியாத உடையின் பகுதிகள் என அரைச் சாக்குப்பை கழிவு அகற்றப்பட்டது.
உடன் பணியாளர்கள் சிலர் வங்கியில் ஹோமம் நடத்த வேண்டினார்கள். எனது நம்பிக்கை வேறு பணியாளர்களின் உணர்வு வேறு. அடுத்த இரண்டு நாட்களில் சுவருக்கு புதிய வண்ணத்தில் சுண்ணாம்பு பூசி திங்கள் கிழமை ஹோமம் நடத்த ஏற்பாடு செய்தேன். திங்கள் கிழமை ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய போது அவர்களின் தலையில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் இரண்டு மூன்று பேர் சேர்ந்து மாடியில் உள்ள கழிவறைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். ஒரு மாத காலத்தில் இயல்புநிலை திரும்பியது. எனது பணிக்காலத்தில் நடைபெற்ற மறக்கவியலாத துன்பியல் நிகழ்வு இது.
இதில் நான் எனது பணிக்காலத்தில் பின்பற்றிய இரண்டு கோட்பாடுகள் அடங்கியுள்ளன.
1. தலைவன் தனது செயல்பாடுகளில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
2. இக்கட்டான நெருக்கடி நேரத்தில் தளராது உறுதியுடன் நின்று இன்னும் கூர்மையுடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பணியாற்றியிருப்பீர்கள். உங்கள் பார்வையில் எந்த மாநிலம் அழகானது?
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பணியாற்றியபோது ஜம்மு வரையில் இருந்த கிளைகளை நிர்வகிக்கும் மண்டல மேலாளர் பொறுப்பு. இரண்டு மாநிலங்களிலுமுள்ள பல பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளேன். பொற்கோயிலுக்கும் சென்று வந்துள்ளேன்.மும்பையின் பரபரப்பான 8 வருட வாழ்க்கை. வானுயர்ந்த அடுக்குமாடிகள். மனிதர்களைக் காட்டிலும் பரபரப்பாய் இயங்கும் மின்சாரத் தொடரிகள். நாரிமன் முனையின் அழகிய கடற்கரைச் சாலை.
எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த நிமிடம் உருண்டோடி மழைநீர் தேங்காத மங்களூர்
இவை எல்லாவற்றையும் விட ஆந்திராவில் விஜயவாடாவில் பணியாற்றும் போது நான் கண்டு வியந்து மகிழ்ந்தது கோதாவரி ஆற்றைத்தான். பரந்து விரிந்து நீர் நிறைந்து ஓடும் கோதாவரியைப் பார்த்து மகிழ்வது கண்கொள்ளாக்காட்சி. அதன் இருகரைகளிலும் அமைந்துள்ள கிழக்குக் கோதாவரி மாவட்டமும் மேற்குக் கோதாவரி மாவட்டமும் பசுமை வளம் நிறைந்த வயல்வெளிகளால் ஆனது. குறிப்பாக கிழக்கு மாவட்டத்தில் உள்ள மலர்த் தோட்டங்களைப் பார்த்து மெய்மறந்து நின்றதுண்டு. குடும்பத்தாருடன் கோதாவரி ஆற்றில் ஒரு நாள் முழுவதும் படகுச் சவாரி செய்து மகிழ்ந்ததை மறக்கவியலாது.
எது கவிதை எனும் பகுதியில் கம்பர் கோதாவரியைப் புகழ்ந்து பாடியதை இராம.வேல்முருகன் அவர்கள் மேற்கோள் காட்டியிருப்பார். படித்து வியந்தேன். போக்குவரத்து வசதிகளற்ற அந்தக் காலத்தில் கம்பர் எப்படிப் போய் கோதாவரியைப் பார்த்திருப்பார் என்று வியந்தேன். கோதாவரி ஒரு அழகிய கவிதை.. எனக்கு மிகவும் பிடித்தது.
கூடுதலாக ஒரு செய்தி…
கோதாவரி மாவட்டத்தின் கிராமங்களில் கூட குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு ஆங்கிலேயரின் சிலையைப் பார்க்கலாம். அவர் பெயர் ஆர்தர் காட்டன். வாய்க்கால் வெட்டி கோதாவரியை பல கிராமங்களுக்கும் அழைத்துச் சென்றவர். எங்கள் மதுரை மாவட்டத்து பென்னி குயிக் போல (முல்லைப் பெரியார் அணையைக் கட்டியவர்).
அதிகமாகத் தங்களுக்குக் கோபம் வரும் எனக் கேள்வியுற்றுள்ளேன். அதனால் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?
நான் கவிஞனாவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருந்திருக்கலாம். எனது கோபம் நிலைக்காத கோபம். வன்மம் பாராட்ட மாட்டேன். வங்கியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்ததால் பல சமயங்களில் தவறிழைத்தமைக்காகவும், கடமை தவறியதற்காகவும் உடன் பணியாளர்களைக் கோபத்துடன் கடிந்து கொண்டதுண்டு. அடுத்த சில மணிகளில் அதை மறந்து அவர்களுடன் இயல்பாய்ப் பேசுவேன். முதுகில் குத்துவது எனது இயல்பில்லை. அதனால் முகத்திற்கு நேரே திட்டிவிடுவேன். ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சனையோடு இணைத்துப் பார்க்க மாட்டேன். இது பணியிடத்தில்.
நண்பர்கள் வட்டாரத்தில் பெரும்பாலும் கோபப்பட மாட்டேன். பிரச்சனை என்று வந்தால் விலகிச் சென்று விடுவேன். உறவை மேலும் கெடுக்காமல் இருக்க இது உதவும். வீட்டில் அவ்வப்போது கோபப்படுவது உண்டு. நண்பர்கள் உறவினர்களுடன் மோதல் வந்து அது எனது தன்மானத்திற்கு குந்தகம் செய்தால் என்னால் சினத்தை அடக்க முடியாது. எந்த நிலையிலும் தன்மானத்தை இழந்தவனில்லை விலைபேசியவனுமில்லை. வன்மம் கொள்ளாக் கோபக்காரன்.
விரைவுக் கேள்விகள் ஒரு சில வார்த்தைகளில் பதில்
1. துரை வசந்தராசன் – மரபுப் போர்வையுள் புதுக்கவிதை. சொல்லாக்கம் செய்யும் இயந்திரம்.
2. ச.சுப்ரமணியன் -எளிய எழுத்தாளனுக்கும் விலையில்லா வெளிச்சம் பாய்ச்சும் தமிழ்த் தொண்டர்.
3. பாட்டரசர் பாரதிதாசன் – தமிழ்க் கடல்.
4. சுப முருகானந்தம் – நாற்பது ஆண்டுகளாக இணைந்து பயனிக்கும் இணைகோடு.
5. ஆசிரியர் கி வீரமணியார் – பெரியாரின் இன்றைய வாழும் உருவம்.
6. தளபதி மு.க.ஸ்டாலின் – கலைஞர் எனும் மரபுக் குதிரையை விட வேகமாய்ப் பாயும் அரபுக் குதிரை.
7. தந்தைப்பெரியார் – தமிழருக்கு மானமும் அறிவும் உரிமையும் பெற்றுத் தர நாளும் உழைத்த போராளி.
8. பேரறிஞர் அண்ணா –
பெரியார் எனும் கவிதையின் பொழிப்புரை.
9. சமூக நீதி –
மனித நேயமற்ற ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகத்தைச் சமநிலைப்படுத்த வந்த நீதி
10. சமத்துவம் –
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ – பெரியார்
“எண்ணம் பிறந்த மின்னல்” பிறந்த கதை பற்றி..
எனது கனவை நனவாக்க வந்த மின்னல். இந்நூல் பாவலர் பயிலரங்கத்தில் எனது பயிற்சிக் காலத்தில் நான் எழுதிய பாடல்களின் தொகுப்பு. எனது மூன்றாம் குழந்தை. எனது கவிதைப் பயணத்தின் வரலாற்று ஆவணம்.




எதிர்கால இலக்கு என்ன?
நிறையப் படிக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும். தமிழ்ச் சமுதாயத்திற்கு பயனுள்ள செயல்களை வரும் நாட்களில் செய்ய வேண்டும்.
இக்கால இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இக்கால இளைஞர்கள் நம்மைவிட புத்தி கூர்மை மிக்கவர்கள். எல்லா முனைப்புகளிலும் மனித நேயம் அடிக்கட்டுமானமாக இருக்கட்டும். புதுமை வேண்டும். மரபு மறக்கப்பட வேண்டியதில்லை. அதன் படிமங்களில் நமது பண்பாட்டின் வரலாறு புதைந்துள்ளது. தாய்மொழி இனநலம் போற்றுங்கள். உங்களின் முகவரி மாற்றப்படாமல் காத்துக் கொள்ளுங்கள்.
வளரும் கவிஞர்களுக்கு உங்கள் அறிவுரை
நிறைய படியுங்கள். நிறைய எழுதுங்கள். எழுதியவற்றை மீள்பார்வை செய்யுங்கள். பிழையில்லாமல் எழுத இலக்கண அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நெஞ்சம் இதழ் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அய்யா அமின் அவர்களின் கைம்மாறு கருதாத் தமிழ்த் தொண்டிற்கு எனது தலைதாழ்ந்த வணக்கம். வளம்பொருந்திய ஐரோப்பாவின் பிரான்சு நாட்டில் வசித்தாலும் பொருளீட்டலை முதன்மையாய்ப் போற்றாது தமிழ்த் தொண்டாற்றுவது அரிய செயல். தன்னலம் கருதாத அந்த தமிழ்த் தொண்டருக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்.
தமிழரின் நெஞ்சமெலாம் தமிழ்நெஞ்சம் நிறையட்டும்.

6 Comments
நிறைமதி நீலமேகம் · ஜூலை 31, 2022 at 2 h 08 min
மிக மிகச் சிறப்புங்க அண்ணா, இனிய நல்வாழ்த்துகள்.
Kalaiarashi anbazhagan · ஜூலை 31, 2022 at 5 h 25 min
பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்பற்றிய செய்திகள் அருமை
S.SUBRAMANIAN · ஜூலை 31, 2022 at 6 h 29 min
வணக்கம்! படைப்பாளன் ஒருவன் அதுவும் கவிஞன் ஒருவன் தன் வரலாற்றை உரைநடையாகவே ஹைக்கூவில் பதிவிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த நேர்காணல். விடைகளின் செப்பத்திற்கு வினாக்களும் காரணம். ‘எளிய எழுத்தாளனுக்கும் விலையில்லா வெளிச்சம் பாய்ச்சும் தமிழ்த் தொண்டர்’ என என்னையும் நினைவிற்கொண்டு சரியான தளத்தில் என்னை அடையாளம கண்டு பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. தம்பி செல்வமீனாட்சி சுந்தரத்தின் கருத்துககளோடு பெரும்பான்;மையும் உடன்பாடு என்பதால் என்னையே நேர்காணல் செய்தது போல் உள்ளது. கருத்து வேறுபாடு என்றவுடன் விலகிவிடுவதே மேல் என்னும் தொடர் என் நெஞ்சில் வைத்துக் கொண்டாடும் தொடர்.. கோபம் இருக்கும் இடத்தில் பாசாங்கு இருக்காது. பாசாங்கு இருக்கிற இடத்தில் சத்தியம் உண்மை தங்காது. தம்பி செல்வம் கோபத்தைக் கொணடாடுபவர் என்னைப்போல. வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!
அமுதகவி · ஜூலை 31, 2022 at 8 h 46 min
உயர்திரு பெரும்மதிப்பிற்குரிய பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் நேர்காணல் கட்டுரை வாசித்து அகம் மகிழ்ந்தேன் தமிழ் நெஞ்சம் இதழின் ஆசிரியர் மற்றும் நிர்வாக பெருமக்கள் அனைவருக்கும் கவிப்பெருந்தகை செல்வ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகளுடன் 💐💐💐
பாலசுப்ரமணியன் ஆறுமுகம் · ஜூலை 31, 2022 at 15 h 35 min
அருமையான நேர்காணல். மீனாட்சி அவர்கள் திறமை வல்லமை படைத்தவராக இருப்பினும் இன்னும் மாணவனாக இருந்து கற்று கொண்டுஇருக்கிறேன் என்பது தன்னடக்கம். அவர் வங்கியில் எப்படி திறமையுடன் பணியாற்றினாரோ அதேபோல் யாப்பிலக்கண கவிதைகளையும் நல் சொல்லற்றாலுடன் எழுதுகிறார். வஞ்சகம் இல்லா வல்லவர், பழகுதற்கு இனிமையானவர். அவர் நேர்காணல் படித்து பேரானந்தம் புலங்காகிதம் அடைந்தேன். அவர் மென்மேலும் பல அற்புத கவிதைகள் படைத்திட வாழ்த்துக்கள்
Selladurai Sinnadurai · ஜூலை 31, 2022 at 17 h 59 min
தமிழ்நெஞ்சம் ஒரு மனிதம் வாழும் அன்பில்லம்.
அற்புதமான இச்செய்திகளை எமக்களித்து இன்புறும் மென்னுள்ளம்..
மனிதநேயத்தின் உயர்குன்று.
கவிஞரின் வாக்குப்படி ஐரோப்பாவில் பலன் தேடாப் படைப்பாளி.
வங்கியாளர் வளர்ச்சியில்பாட்டரசரின் பங்கு மகிழ்ச்சி.