மின்னிதழ் / நேர்காணல்
ஒரு கருத்த ஒல்லியான தேகம்! அதனுள்ளே அணையாது நிற்பது தமிழ்த் தாகம்! எல்லாரும் வளமையைப் பாடினால் இவர் மட்டும் வறுமையைப் பாடுவார். தமிழ்க்கவிதைக்குழுமங்கள் அனைத்திலும் பங்கு பெற்று அசத்தும் தோழர்..ஆழ்ந்த தமிழறிவு அடக்கமே அணிகலனாய் வலம் வரும் நண்பர். சமீபத்தில் தனது தன்முனைக் கவிதைத் தொகுப்பான போன்சாய் மரங்கள் எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். ஆம் கவிஞர் செல்வா ஆறுமுகம்தான் அந்தக் கவிஞர் இம்மாதம் தமிழ்நெஞ்சத்திற்காகத் தனது அனுபவங்களைத் தருகிறார். அவரை நேர்காணல் செய்கிறார் நமது ஆசிரியர் குழுவில் உள்ள தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன். இதோ கவிஞரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் கவிஞர் தரும் சூடான சுவையான பதில்களும்… வாசகர்களுக்காக… வாருங்கள் உள்ளே…
1. தங்கள் பெயர் இயற்பெயரா? புனைப்பெயரா?
இயற்பெயர் : செல்வம் முக நூலில் ஏகப்பட்ட செல்வங்கள் இருப்பதால் என் தந்தையின் பெயரை பின்னால் சேர்த்துக்கொண்டு செல்வா ஆறுமுகமாக இருக்கிறேன். அதனால் உங்கள் அனைவரின் மனதிலும் இப்போதும் ஏறுமுகமாகவே இருக்கிறேன்.
2. தமிழ் மீது ஆர்வம் வரக்காரணம் என்ன?
ஆர்வம் எல்லாம் ஒன்றுமில்லை
ஆரம்பத்தில் என்னை கட்டாயப்படுத்தி உள்ளே தள்ளினார்கள்.
என் பள்ளிப்பருவத்தில் எனக்கு தமிழாசிரியராக இருந்த ஐயா சட்டையப்பன் அவர்களை சொல்லலாம்.
இவர்தான் என் தமிழுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது பாரதியார் பிறந்த நாள் விழா பள்ளியில் நடத்தப்பட இருந்தபோது ஒரு சிலரை மட்டும் தெரிவு செய்து ஆளாளுக்கு ஒரு கவிதை எழுதிக்கொண்டு வந்து அதை மேடையில் வாசிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்கள்.
நான் வரமாட்டேன் எனக்கு எதுவும் தெரியாது என எவ்வளவு சொல்லியும் என் தமிழாசிரியர் கேட்கவில்லை
வேறு வழியில்லாமல் நானும் கவிதை ஒன்று எழுதிக்கொண்டு அதை மேடை யிலும் வாசித்துவிட்டு ஒரு பரிசினையும் பெற்றேன் என்பதுதான் சிறப்பு.
அது பாரதியின் தலைப்பான : அச்சமில்லை… அச்சமில்லை என்பதாகும்.
இதுவே என் முதல் கவிதை.
பரிசு : எவர்சில்வர் தட்டு – இன்னும் எனக்கு அந்தத் தட்டில்தான் சாப்பாடு.
அப்போது பெற்ற அந்தப் பாராட்டு தல்கள்தாம் என் தமிழ் மொழியின் ஆர்வம் எனலாம்.
3. வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றுள்ளீர்களாமே உண்மையா?
நான் படித்தது முதுகலை வரலாறு. அதன் பிறகு ஆசிரியர் பணிக்குச் செல்லப் பயன்படுமே என்று இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் எனும் தலைப்பில்ஆராய்ச்சி செய்து M, Phil. பட்டம் பெற்றேன்
நான் M, Phil. படித்ததாலோ என்னவோ முனைவர் பட்டம் வந்து ஒட்டிக்கொண்டது
4. முனைவர் பட்டம் பெற்றும் ஏன் தனியார் நிறுவனத்தில் வேலை?
அதன் பிறகு வாழ்க்கைப் பயணம் என்னை வேறு பாதைக்கு தானாகவே அழைத்துக்கொண்டுவிட்டது.
ஆசிரியர் வேலை கிடைக்க தாமதமாகிக் கொண்டே வர வர வீட்டில் வறுமை.. வேறு வேலைக்கு ஏதேனும் சென்றாக வேண்டிய கட்டாயம் பசி என்பது… இலட்சியங்களைச் சாகடித்துவிடும் கிடைத்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில் வயிற்றை கழுவவே வாழ்க்கை என்னைத் தின்றுக்கொண்டிருந்த வேளையில்…
ஆசிரியனாக ஆக வேண்டும் என்ற கனவு கடைசி வரை கனவாகவே போய்விட்டது.
5. காவல்துறையில் பணியாற்றினீர்களாமே? எப்போது ஏன் அப் பணியை விட்டுவிட்டீர்கள்?
இதற்கு பதில் எழுதுவதென்றால் நிறைய பக்கங்கள் பிடிக்கும்.
ஆகவே சுருக்கமாகச் சொல்கிறேன். சென்ற கேள்விக்கு ஒரு வரியில் சொல்லியிருப்பேன்… கிடைத்த வேலை களைச் செய்தேன் என்று..அப்படிச் செய்த ஒரு வேலை நான் காவல் துறைக்கு Informer – ஆக இருந்தது
நிறைய கூலி வேலைகள் செய்தேன். அப்படிச் செய்த சில வேலைகளில் கட்டப் பஞ்சாயத்தும் ஒன்று. அப்போது… உள்ளூர் தொழிலதிபர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை பலருக்கும் நான் கையாள். பந்தமாக அவ்வப்போது காவல் நிலையங்களில் விசாணைக்கு கூப்பிடுவார்கள் அப்போது அடிக்கடி சென்று வந்ததில் சில காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு கிடைக்க
Informer – ஆக வரியா…?என கூப்பிட்டார்கள்.. அதற்குப் பணமும் தருகிறேன் என்றதின் பேரில் இரண்டு பக்கமும் உழைக்க ஆரம்பித்தேன்.
Under Ground – ல் வேலையும் செய்வது….அதை காவல் துறைக்கும் போட்டுக் கொடுப்பது. (டகால்டி வேலை)
இரண்டு பக்கமும் வருமானம் பார்த்தேன்.
அப்படியே காலம் உருண்டோட ஒரு கால கட்டத்தில் என் உடல் வாகும் பேச்சுத் திறமையும் எதையும் சமாளிக்கும் திறனும் என்னிடம் காவல் துறை கண்ட காரணத்தால் நான் காவல் துறைக்கு முழுநேர ஊழியனாகத் தேவைப்பட்டேன்.
சொந்த ஊரிலேயே வேலை.போக்கு வரத்துக்கு காவல் மிக மகிழ்ச்சியாக நான் என்னை உணர்ந்த நேரம்
ஒரு வருடம்… அதன் பிறகு காலால் துறை.
நானும் சும்மா மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் கணக்கா சும்மா கிழிச்சிட லாம்… பெயர்த்துடலாம் என்று எண்ணித் தான் போனேன். என்ன செய்வது…? நான் என்னை மிகத் துயரமாக என்ன உணர்ந்த நேரம்.
காலால் பணி என்பது..காபி டீ வாங்கி வருவது, உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்வது… பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருவது, நாயை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது… இதுதான்.
உயர் அதிகாரிகளின் ஏவலாளாகாவே இருந்ததில் என் தன்மானம் எனக்கே எதிரியாக மாறிவிட்டது. நான் இயல் பாகவே ரொம்ப திமிர் பிடித்தவன்.
நான் ஒரு வேலையாளாக வேலை பார்க்க என் உணர்வு (வயசு அப்புடி) ஒத்துபோகவே இல்லை.
ஒரு காலகட்டத்தில் என்னை நானே வெறுப்பு கொண்டு வேலையை விட்டு விட்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு நடந்ததெல்லாம் இரண்டாம் பாகம் போட்டு எழுதலாம். அவ்வளவு இருக்கிறது..
6. தமிழ்க்கவிதைகளில் எந்த வகைக் கவிதை எழுதப்பிடிக்கும்? எது படிக்கப் பிடிக்கும்?
இந்த நடை அந்த நடை என்றெல்லாம் இல்லை எல்லா நடைகளுமே எழுதப் பிடிக்கும்… படிக்கப் பிடிக்கும்.
படிப்பவரின் உணர்வுகளைத்தட்டி எழுப்பும் வலிமைமிக்கச் சொற்கள் எதுவாயினும் அந்தத்தப் பாவகைக் கேற்ப அது தன் வலிமையை தீர்மானித்துக் கொள்ளும்.
நானும் அப்படிதான் எழுதுகிறேன்.. அப்படிதான் வாசிக்கிறேன்.
7. மங்கலங்கிழாருக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?
இந்தியாவில் மொழி வாரி மாகாணம் பிரிக்கப்பட்டபோது… இன்றைய நம் திருத்தணி ஆந்திர மாநிலத்தோடு இணைக்கப்பட இருந்தது.
அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம். பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.
சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்று உயிர் நீத்தவர் அவரது அறப் போராட்டத்தின் காரணமாகவே இன்றைய நம் திருத்தணி நம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
இதை கொண்டாடும்விதமாக 2002 ஆம் ஆண்டு திருத்தணி ஊரில் அவரது பெயரில் ஒரு படிப்பகம் அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது
அப்போது நான் தமிழ் ஒளி என்ற இலக்கிய அமைப்பின் தமிழ் நாடு மாநில ஒருங்கிணைப்பாளர்.
ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளர். நீங்கள் அனைவரும் அறிந்த ஐயா சேலம் பாலன் அவர்கள் இதன் நிறுவனர்: ஐயா கதிர் முத்தையன் அவர்கள்.
இவர்களது அழைப்பின் பேரின் அந்நிகழ்வில் நான் கலந்துகொண்டு அந்த மாநாட்டை சிறப்புற நடத்திக் காட்டினேன். அது மட்டுமல்லாது
என் வீட்டில் என் நூலகமாக இருந்த என் நூலகத்தில் இருந்த பல நூற்றுக்கணக்கான புத்தகங்களை அந்தப் பதிப்பகத்திற்கு நண்கொடையாகக் கொடுத்திருந்தேன்.
மங்கலங்கிழாருக்கும் எனக்கும் உள்ளத் தொடர்பு இதுவன்றி வேறொன்றுமில்லை.
இந்த மாநாட்டில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியர் க ப வளனரசு அவர்கள் நிகழ்த்திய உரை.
என் தமிழ் இனப் பற்றுக்கு இவர் ஆற்றிய அந்த மூன்று மணி நேர உரை என் இதயத்தையே இடம் மாற்றி வைத்தது எனலாம்.
நானும் என்னை ஒரு எழுத்தாளனாக என்னை நான் இத்தனை நாள் என்னை நினைத்திருந்த வேளையில்… இவரது பேச்சு என்னை ஒரு உணர்வாளனாக மாற்றியது எனலாம்.
8 உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிகழ்வு எது?
கேள்வி எண் 5 ன் தொடர்ச்சிதான் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பதிலாக இரண்டாம் பாகம்.
காவல் துறை வேலையை விட்டுவிட்டேன் என்று சொன்னேன் அல்லவா…அதன் பிறகு நடந்தவை எல்லாமும் சொல்லவே இல்லையே. (எங்கே சொல்ல விட்டிங்க…?)
ம்…
வேலையை விட்டுவிட்டேன் என்று வீட்டில் வந்து சொல்ல தைரியம் இல்லாததால்… (சொன்னாக்கா பெரிய களேபரம் நடக்கும்… தெரியும் எனக்கு…)
அதனால் இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என யோசித்து ஒரு முடிவெடுத்தேன்.
அதாவது… நான் வீட்டை விட்டு வெளி யேறுவது என்பது..துணிச்சலான முடிவு தான் என்ன செய்வது…வேறு வழி…?
கையில் காலணா காசில்லாமல், மாற்றுத் துணி கூட இல்லாமல், (உள்ளாடையையும் சேர்த்து) எதுவுமே இல்லாமல் வெறுங் கையோடு கிளம்பிவிட்டேன்
இது என் உலகம். நான் ஒரு தேசாந்திரி. வாழுடா மவனே வாழ்க்கையை என்று…
ஆனால் வீட்டில் சொன்னது பொய்.அதாவது : ஒரிசாவில் புயல் பேரிடராம்…தமிழகக் காவல் காவல் துறையின் சார்பாக நான் அங்கே செல்கிறேன்..
வருவதற்கு ஒரு மாதமாகும் என்று பொய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
அப்போதெல்லாம் அலைபேசி இல்லாத காலகட்டம் அது.
இந்தியா முழுவதும் சுற்றினேன்.
கோதாவரி ஆற்றங்கரையில் கனரக வாகனங்கள் கழுவினேன்… கிடைத்த இடத்தில் தூங்கினேன். கிடைத்த இடத்தில் சாப்பிட்டேன். சுவரொட்டிகளைக் கிழித்து அதை போர்த்திக்கொண்டு உறங்கினேன். கனரக வாகனங்களில்தான் பெரும்பாலும் இலவசமாகப் பயணித்தேன். குண்டூரில் (ஆந்திரா) காய்கறி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கினேன். கிடைத்ததைப் பகிர்ந்து உண்டேன்… நினைத்த இடங்களில் உறங்கினேன்… நொய்டாவில் (உத்திர பிரதேசம்) ஒரு இரவு ஒரு வழிப்பறி கும்பலால் (பத்துக்கும் மேற்பட்டோர்) தாக்கப்பட்டடேன். வழிப்பறி செய்ய வந்தவர்கள் என்னிடம் காசு இல்லை என்பதை அறிந்து வெறுத்துப்போய் நிறைய நிறைய அடித்தார்கள்.ஒருத்தன் இரண்டு பேர் என்றால் சமாளிக்கலாம். (நான் காவல்துறை ஆளாயிற்றே…அப்போது செல்வாவுக்கு செம்ம உடம்பு…சும்மா எஸ்சிஸ் பாடி) ஒருத்தன் இரண்டு பேர் என்றால் சமாளிக்கலாம்.
பத்துப் பதினைந்து பேரென்றால் எப்படி…? உதையை வாங்கி கொண்டு சும்மா இருந்தேன். இப்படி பலஅனுபவங்கள்…
கடலூரில் தொடங்கிய என் பயணம் இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கெல் லாம் என்னைப் பயணிக்க வைத்தது…
இந்த காலகட்டத்தில் என்னிடம் ஒரு பைசா இல்லை. மாற்றுத் துணிகூட இல்லை. ஒரேயொரு ஆடைதான் ஆனால் அனைத்து மக்களையும் சந்தித்தேன்… இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயணித்தேன்… அனைத்துமக்களையும் அறிந்தேன். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உண்டேன்.. நான் என்னை மனிதனாக உணர்ந்தேன்…
இதன் மூலம் நான் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான்… அதாவது… ஒரு மனிதன் வாழ்வதற்கு காசு தேவையில்லை… வாழ வேண்டும் என நினைக்கும்போதுதான் காசு தேவைப் படுகிறது என்பதை.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஒரு தேசாந்திரி வாழ்க்கையை. வாழ்ந்தேன்.இதைப் பாடமாக எனக்கு உணர்த்திய இந்த நிகழ்வே என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிகழ்வு எனலாம்.
வீட்டை விட்டு வெளியேறிய பின்பே புத்தன் ஞானம் அறிந்தானாம். நானும் அவ்வாறே.. அவனுக்கு கிடைத்தது போதிமரம்…எனக்கு நானே போதி மரம்.
9. சென்னை மொழியில் அசத்துவது எப்படி?
அது வேறொண்ணுமில்லே வாத்தியாரே.இந்த டாணாக்காரன் (போலீசு காரன்) ஜோலியிலே குந்துக்கினுகீறது மின்னாடி கொஞ்ச தபா மெட்றாசு காசி மேட்டுல மீனு யாவாரம் பாத்துக்கினுக்கிருந்தேன். அப்போ வந்து நாக்குல குந்திகிச்சி இந்த மெட்றாசு பாஷை. உடு நைனா… இதுவும் திருநவேலி தமிழ் மாரி ஒரு பாரம்பரியம் சொல்லுற தமிழ்த்தானே வாத்தியாரே…
இதுக்கெல்லாம் மாமே நானு ஜகா வாங்க மாட்டேன் ஆமா. உட்டாலங்கடி கிரி கிரி.. நாம பாஷை ஊசிப் போவா வட கரி ஆமாம் மாமே. கொய்யால… எவனாச்சும் மெட்றாசு பாஷையை காமா சோமான்னு சொன்னான்னு வெச்சுக்க அவனை நெஞ்சங் கூட்டுல இருக்குற மாஞ்சா சோத்த எடுத்துருவேன் ஆமா.
சொல்லிவெய்யி அவங்களாண்ட…யாருகிட்ட…;? கொய்யால…வந்துருவேன் வகுந்து…
10. உங்கள் முதல் நூல் எது? எப்போது வெளியிட்டீர்கள்?
மதிப்பிற்குரிய இந்திய ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் 2002- ல் இந்திய ஜனாதிபதி ஆனபோது. அவரைப் போற்றிப் புகழும் விதமாக ஒரு கவிதை எழுதினேன்.
ஒரேயொரு கவிதைதான் 20 – பக்கங்கள் அச்சு செலவுக்கு அப்போது காசில்லை..கைப்பட 50 க்கும் மேற்பட்ட பிரதிகள் எழுங்கள் எழுதி.. அப்போது கடலூர் மாவட்ட அரிமா சங்க நிர்வாகியாக இருந்த டாக்டர் திரு திருமலை மூலமாக பாரதிதாசன் கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்டது.இதுவே என் முதல் நூல் ையெழுத்துப்பிரதியாக வெளிவந்தது)
11. உங்கள் நூல்வெளியிட்டின் சிறப்பு என்ன?
சிறப்பு எனச் சொல்ல வேண்டுமெனில்… என்னுடைய ‘போன்சாய் மரங்கள்’ பற்றிச் சொல்லலாம். இது தன்முனைக் கவிதைகளின் தொகுப்பு. அதன் அணிந்துரை ஐயா. இராம வேல்முருகன்.
இதுவே ஒரு சிறப்புதான்… பட்டி தொட்டி முதல் செல்வா எனும் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னுமொரு சிறப்பு என்றால் இந்த நூலை தஞ்சைத் தமிழ் மன்றம் வெளியிட்டது இதுவே மிகச் சிறப்பு எனலாம்…
12. நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் உங்கள் பணி என்ன?
Senior executive – Logistics – சரக்காளுனர்.
13. உங்கள் நிறுவனத்தில் தமிழைப் பயன்படுத்த வலியுறுத்துவீர்களா?
அதற்கான வாய்ப்புகள் வரும்போது அதை வலியுறுத்துவேன்.
14. பணம் வாழ்க்கைக்கு அவசியமா? மனிதர் அவசியமா?
கேள்வி எண் 7 க்கான பதில்தான்…
பணத்தை வைத்துக்கொண்டு நாம் நமது உள் கட்டமைப்புகளை மட்டுமே தீர்மானிக்க முடியும். உணர்வுகளின் கட்டமைப்பை பணம் என்பதைத் தாண்டித்தான் உணர முடியும். அதற்கு என் வீட்டை விட்டு வெளியேறிய பயணம் நல்ல உதாரணம்.
15. விக்டர்தாஸ் என்னும் இரத்தினம் குறித்து…
கவிதைகளின் காலக் குறிப்பு…
சொல் வன வித்தகன்…
அனைத்தையும் தாண்டி…
மனித நேயன்….
உணர்வுகளின் மதிப்பாளன்.
அனைத்திற்கும் மேலே அவன் ஒரு தமிழ் இலக்கியத்தின் Encyclopedia என் தமிழ்ச்சேவைக் குழுமத்தின் முதலாம் ஆண்டுவிழாவில் வெளியிட்ட காவியக் களஞ்சியம் நூலுக்கு இவர் எழுதிக்கொடுத்த அணிந்துரை உலகில் இதுவரை வெளியிட்டப் புத்தகங்களுக் கெல்லாம் மிகச்சிறந்த அணிந்துரை. ஏனெனில்… விக்டரே – ஒரு காவியம். விக்டர் – என் உடன் பிறப்பு.
இதற்கும் மேலே என்ன சொல்ல…
16. பொன்மணிதாசன் எனும் தங்கம் குறித்து…
இவர் தங்கமல்ல… தமிழின் அங்கம்..
நான் இவரை வாழும் கண்ணதாசன் என்றே சொல்வேன். என் நட்பு வட்டத்தில் நான் உணருகிற இமயம்.
என் பல்கலைக் கழகம். நான் கவிதைப் பழகும் கரும்பலகை.
17. கவிக்கோ துரைவசந்தராசன் எனும் சிங்கம் குறித்து...
ஆகா… என்னை உசுப்பி விட்டத் தங்கம். என் உணர்வை தட்டியெழுப்பிய சிங்கம். கவிக்கோ என்பதன் அர்த்தம் அறிந்த உண்மை கோ. அது – கவிக்கோ துரைவசந்தராசன்
18. தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி..
எனது வாழ்க்கையை தி மு / தி பி – (திருமணத்திற்கு முன்பு.. திருமணத்திற்கு பின்பு என இரண்டு வகையாக எழுதலாம்) ஏனெனில்… நான்
திருமணத் திற்கு முன்பு – மனிதன் மாதிரி… திருமணத்திற்கு பின்பு – முழு மனிதன். காரணம் அவள்.. என் தோழி… என் தோழன்… என் காதலி… என் மனைவி…
என எல்லாமே அவள்தான்.. எனக்குள்ளும் ஒரு ஆக்க சக்தி இருக்கிறது என என்னுள் உணர வைத்த ஒருத்தி… உன்னால் முடியும் என ஒவ்வொரு முறையும் என்னைத் தட்டியெழுப்பும் ஒரு வேட்கை.
இவள் மட்டும் எனக்கு வாய்க்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கைப் பயணம் வேறு திசையில் சென்றிருக்கும்.
19. தங்கள் குழந்தைகள் பற்றி..
எப்படியெல்லாம் என் பிள்ளைகள் இருக்க வேண்டும் என நினைத்திருந்தேனோ… அதன் படியே என் பிள்ளைகள் இருவருமே பெண் பிள்ளைகள். ஓவியம்…
கைவினைப் பொருட்கள் தயாரித்தாள்… படிப்பிலும் ஆளுமை… கவிதை எழுதுதல்…. பள்ளிக்கூடத்தில் நடக்கும்
பேச்சுப் போட்டி. கட்டுரைப் போட்டி – என எல்லாவற்றிலும் அசத்துகிற பிள்ளைகள்… (எல்லாமே என் DNA – லிருந்து கடத்தப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்) இவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு அந்த வானத்தை விடவும் பெரிது…
எல்லோரது வீட்டிலும் பிள்ளைகள் அப்பா வீட்டிற்கு வரும்போது…
அய்யய்யோ அப்பா வந்தாச்சு.. என்பதாகத் தான் இருக்கும்…
என் வீட்டில் நான் உள்ளே நுழைந்தால் –
ஹையா… அப்பா வந்தாச்சு என்பதாகத்தான் இருக்கும்.
அய்யய்யோ… அப்பா வந்தாச்சு. ஹையா… அப்பா வந்தாச்சு… இரண்டுக்கு மான வேறுபாடுகளை நீங்கள் உணர வேண்டுமெனில் அது என்வீடு ஒன்றுதான்..
என் பிள்ளைகள். என் பேர் சொல்லும் பிள்ளைகள். இறைவனுக்கு நன்றி.
20. ஞாயிறு ஒரு நாள் விடுமுறையிலும் இலக்கியப்பணிக்காக அலைவதை இல்லத்தில் கடிந்து கொள்கிறார்களா?
இல்லை
21. ஒரு வரியில் பதில் தருக
1. ஆண்டாள்
கடவுளைக் காதலித்து மானுடத்திற்கே ஒரு மரியாதை தந்த மகத்துவம்.
2. மீரா
கண்ணனின் உள்ளத்தையே மீட்டிய தம்புராவின் தந்தி..
3. மணிமேகலை
சீத்தலைச்சாத்தனார் உலக மக்களுக்கு வழங்கிய இலக்கிய அட்சயப் பாத்திரம்.
4. கண்ணகி
காப்பியத்தின் வழியே காவியமாய் ஆனவள்… தமிழினத்தின் கதாநாயகி.
5. மாதவி
இலக்கியம் அறிந்தோரால் மட்டுமே அறியப்பட்ட கற்புக்கரசி… இன்னும் இவளை பற்றி அறியாமலேயே இருக்கிறது தமிழினம்.
6. கம்பன்
கடவுளின் காதலையெல்லாம் விருத்தத்தில் கவி கவியாய் பாடிவிட்டு… அம்பிகாபதி காதலுக்காக ஒரு வெறுத்த கவிகூட எழுதாமல் போன உலக மகா கவிஞன்.
7. இளங்கோவடிகள்
உலகப் பெரும் காப்பியத்தை ஒரு காற்சிலம்பில் வைத்து கதை சொன்ன கவிக்கோ.
8. வள்ளுவன்
ஏழே சொற்களில் ஏழுலகை ஆளுகிற எழுத்தாணியின் பிரம்மன்.
9. கரிகாற்சோழன்
உலகிற்கே நீர் மேலாண்மையைத் தந்த சோழ வல்லாண்மை.
10. இராசராசன்
சோழப் பேரரசின் உச்சம். இம் மன்னனைப் பற்றி கற்பனை இல்லாத ஒரு முழு வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.
11. கவிதை எப்படி எழுதுவது…?
உணர்வுகளைக் கொண்டு எழுதுங்கள்.
22. தமிழ்நெஞ்சம் இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கடல் கடந்தும் தமிழ் வளர்க் கும் தமிழ்நெஞ்சம் இது.
கவிஞர் கள் அனைவருக்குமான தமிழ் மஞ்சம் இது.
23. தமிழ்நெஞ்சம் அமின் உங்கள் பார்வையில்…
கடல் தாண்டிப் போனாலும் தமிழை நேசிப்பவர் அமின்… இலக்கிய உலகில் படைப்பாளிகளைப் போற்றும் இன்னொரு ஜமீன்.
13 Comments
MuthuVijayan Alagar · மே 30, 2022 at 16 h 26 min
சிறப்பான பேட்டி வேல்முருகனுக்கும் செல்வ ஆறுமுகம் இருவருக்கும் இதழ். ஆசிரியர் அமினுக்கும் வாழ்த்துகள்
ramalingam velmurugan · மே 30, 2022 at 16 h 39 min
சிறப்பு , இனிய வாழ்த்துகள்
சந்திர சேகர் · மே 30, 2022 at 16 h 56 min
வெகு நாட்களுக்கு பிறகு சக தோழமை கவிஞரின் நேர்காணல் இதயம் நிறைத்தது..
சந்திர சேகர்
மருத்துவர் தேவி · மே 31, 2022 at 12 h 05 min
செல்வா ஆறுமுகம் அண்ணா அவர்களை பேட்டி கண்ட விதம் அருமை அதற்கு அவரின் பதில்கள் உள்ளது உள்ளபடி சொல்லிய திடம் சிறப்பு.
மாலதி. திரு · ஜூன் 2, 2022 at 14 h 59 min
செல்வா ஆறுமுகத்தின் சிலாகிக்கும் விமர்சனம் சிறப்பு.
கவிதை..கவின்
கண்ணதாச முருகன் · ஜூன் 2, 2022 at 15 h 30 min
சிறப்பான அழகான நேர்காணல். வாழ்த்துகள்
செல்வம் பெரியசாமி · ஜூன் 2, 2022 at 15 h 46 min
செல்வா ஆறுமுகம் என் இனிய அன்பர் அவரின் நேர்காணல் மிக அருமை
செல்வம் பெரியசாமி · ஜூன் 2, 2022 at 15 h 46 min
செல்வா ஆறுமுகம் என் இனிய அன்பர் அவரின் நேர்காணல் மிக அருமை
கவிஞர் அ.முத்துசாமி , தாராமங்கலம் · ஜூன் 3, 2022 at 9 h 44 min
செல்வா ஆறுமுகம் – இனி
வெல்வார் ஏறுமுகம் !
நல்லதைக் கூறுமுகம் – தீ
நட்புக்கு வேறுமுகம் !
படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி · ஜூன் 14, 2022 at 9 h 21 min
தமிழ் நெஞ்சம்
பாவலர் தம் பாங்கினை
உலகறிய வைக்கும் முயற்சி.
பாராட்டி மகிழ்கிறேன்
நிறைமதி நீலமேகம் · ஜூலை 31, 2022 at 2 h 12 min
அழகான அருமையான கேள்வியும் பதிலும், சிறப்புங்க தம்பி, இனிய நல்வாழ்த்துகள்.
புல்லாங்குழலன் · செப்டம்பர் 5, 2022 at 10 h 39 min
அடிபட்டு மிதிபட்டு உதைபட்டாலும் தங்கம் தங்கம் தானே. பேட்டி சிறப்பு தான்.
https://Hellspincasinoca.Wordpress.com/ · அக்டோபர் 20, 2025 at 13 h 57 min
An impressive share! I have just forwarded this
onto a colleague who was conducting a little research on this.
And he actually ordered me breakfast due to the fact that I discovered
it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!!
But yeah, thanks for spending time to discuss this issue here on your blog. https://Hellspincasinoca.Wordpress.com/