மின்னிதழ் / நேர்காணல்
ஆளும் வளர்ந்தவர் அறிவும் வளர்ந்தவர்
அன்பெனும் தேசத்தில் நாளும் வளர்ந்தவர்
தாளும் கோலும் கையில் கிடைத்தால்
தாங்கா திவரின் தமிழ் விளையாட்டு
ஆளிவர் அனுதினம் ஆக்கிடும் படைப்பு
ஆகா சத்தின் சூரிய வெளுப்பு
பாலும் கசக்கும் பழமும் புளிக்கும்
பாயிவர் எழுதினால் பக்கங்கள் இனிக்கும்!
உருவங் கறுப்பு உள்ளம் வெளுப்பு
உயிர்திடும் பொழுதிவர் உயரிய சிரிப்பு
கருவ மறியா கவிஞர் விக்டர்தாஸ்
காலக் கிருபையின் கனத்தப் பிறப்பு
அரியவை யொன்றை அடைந்தது போலே
அகமகிழ் வெய்தினாள் தமிழி வராலே
சரியிவர் பதிலை சந்திப்போம் கொஞ்சம்
சந்தோஷிக்குது தமிழ்(மா) நெஞ்சம்!
நேர்க்ண்டவர்
தமிழ்நெஞ்சம் அமின்
1) பழமையான இலக்கிய நூல்களுக் கும், நவீன இலக்கிய நூல்களுக்குமிடை யில் இருக்கக் கூடிய ஒற்றுமை வேற்று மைகளை ஒரு கவிஞனாக எப்படி பார்க்கிறீர்கள்?
மனிதனை மனித குணங்களை மேம் படுத்தும் ஒரு மகத்தான கருவி இலக்கியம்.
ஈரத்தை இரக்கத்தை ஒழுக்கத்தை உயர் பண்பை சலவை செய்து தரும் ஒரு தங்க விரல் இலக்கியம்.
குழந்தையின் கண்களில் ஞானியின் பார்வையையும் ஞானியின் உதடுகளில் குழந்தையின் இதயத்தையும் உடுத்திக் காட்டி ஊஞ்சலாட்டும் ஓர் உன்னதப் பாடசாலை இலக்கியம்.
இப்படிப்பட்ட குணங்களை இறுக்கிக் கட்டியதே இலக்கியம்.
இதில் பழையது நவீனம் என்ற பாகுபாடு கிடையாது
அப்படி ஏதேனும் இடைவெளி இருந்தால் அது இலக்கியமே கிடையாது.
நற்றிணையில் ஒரு பாடல் வரும்.
மனிதநேயம் மிஞ்சிய மர நேயம் அந்தப் பாடல்.
ஒரு புன்னை மரத்தை தன் சொந்தத் தங்கையென்கிறாள் அந்தச் சங்ககாலத் தங்கத் தமிழச்சி.
வரி இதுதான்
‘‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்(று)
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொழி நகையே’’
இதற்குச் சற்றும் குறையாமல் நம் சமகால மகாகவி ஐயா.ஈரோடு தமிழன்பன் இப்படிச் சொல்கிறார்
‘‘போகும் போது
வாசலில் பூத்திருக்கும் பூவிடமும்
ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்
போகக் கூடாதா’’
ஆக பழமையின் சங்கிலிக் கண்ணி கள் பழுத்த விரல்களால் விதைகளாக நடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.
நந்தவனங்கள் நிறைய நிறைய பூத்துக் கொண்டேதான் வருகின்றன.
ஒன்றிரண்டின் தவறுகள் உலகத் தவறுகள் ஆகிவிடாது.
விதிவிலக்குகளை தொல்காப்பியம் நன்னூல் கூட தோள்தட்டிக் கொடுத் திருக்கிறதே அன்றி அதைத் துரத்தி விடவில்லை என்பதை நாம் உணர்வது அவசியம்.
அதனால் வேற்றுமைகளின் வேரறுத் தல் தேவையில்லை. விசனப் படவும் அவசியமில்லை.
காலம் நல்லவற்றை நிறுத்தும் அல்லவற்றை விரட்டும்.
2) பழங்காலக் கவிதைகளின் ஆழத்தை தற்போதைய கவிதைகளில் காணமுடிவதில்லையே! இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?
இதை சாயம் போன அல்லது சாரம் போன குற்றச்சாட்டென்றே சந்தேகிக் கிறேன்.
காரணம் பழங்கவிதைகள் அத்தனை யும் பவுன்கள் அல்ல. சமகாலக் கவிதைகள் அத்தனையும் சருகுகள் அல்ல.
அங்கும் சருகுகள் உண்டு. இங்கும் பவுன்கள் உண்டு.
2381 சங்கப்பாடல்களில் உள்ள 1862 அகப்பாடல்களும் ஆராதிக்கபட வேண்டிய ஒன்றல்ல.
அவை அத்தனையும் பூச் செண்டல்ல கற்கண்டல்ல. தேன் துண்டல்ல.. உண்மை யில் அவை யாவும் நன்றல்ல.
தூது உலா போன்ற சிருங்கார இலக்கியங்கள் இந்தச் சமூகத்திற்கு எந்த வகையிலும் அவசியமல்ல.
மட்டுமல்ல சங்க கால சங்கம் மருவிய காலப் பாடல்களில் கூட கள வொழுக்கமும் உடன்போக்கும் கதறலும் பதறலுமே பெரும்பாலான பாடல்களாக பின்னிக் கிடக்கின்றன என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது.
அதிலும் ஆண்கள் பேசுவதான பாடல்களில் ஒருவிதமான ஆணாதிக்கத் திமிரும் பெண்களை போகப் பொருளாகக் காணும் தன்மையும் இறைந்து கிடப்பதை நாம் கடந்து போகுதல் தகாது.
‘‘அரிவைக் கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே’’
இது குறுந்தொகைப் பாடல்.
‘‘குவளை அன்ன ஏந்தொழில் மழைக்கண்
திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு’’
‘‘அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
ஏறி மடமாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலிவரும் கூந்தல்’’
இது நற்றிணைப் பாடல்.
ஒன்று பெண்ணுண்ட எக்காளத்தில் ஆண் பாடுவது. இன்னொன்று பெண் ணுண்ண ஆண் வலை விரிப்பது.
சரி, புறப்பாடல்கள் மட்டும் பொருள் பொதிந்தவையா என்ன.
இல்லை. சரித்திரம் பேசிய சத்திய வார்த்தைகளா என்ன.
அன்றைய மன்னராட்சியில் குடி மக்கள் எல்லாம் உழைத்து உழைத்து ஓடாகி வரிகட்டி வரிகட்டி கேடாகி, அந்து அறுந்து நூலாகி, பந்து போல பாழாகி வறுமையில் வாடிய போதுதான் உழைக்க உடன்படாத இந்தப் புலவர்பிரான்கள் வாய்கொள்ளாத பொய்சொல்லி மன்ன னைப் புகழ்ந்து பாடி பொன்னும் பொருளும் பொட்டலங்கட்டி எடுத்தேகி இருக்கின்றனர்.
அந்தப் பாடல்கள் உண்மையு மில்லை அதனால் ஊருக்கு எந்த நன்மையுமில்லை.
அதனால்தான், புலவர்களின் சான்று களை எந்தச் சரித்திர ஆய்வாளனும் ஒப்புவ தில்லை.
தந்தால் போற்று தராவிட்டால் தூற்று. இது புலவர்கள் பொதுப்புத்தி.
சாட்சிக்கு ஒரு புறநானூற்றுப் பாடலை சபைக்கு அழைக்கிறேன்.
‘‘யாணர் வைப்பின்,
நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை!
நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி
ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட
பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும்
பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம்
வரையாது கொடுத்தோய்’’
இதன் பொருள் யாதெனில் மகாபாரதப் போர் நடந்த போது இரு பிரிவுகளுக்கும் சோறிட்டவன் நீ என்பதாகும்.
இதனின்று இதன் உண்மைத் தன்மையை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.
இப்படி என் சுட்டுவிரல் நீட்டிச் சுட்டாலும் நுட்பமான நுண்மாண் நுழைபுலம் ஆன பல பல பாடல்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் உண்டென்பதும் ஒதுக்க இயலாத உண்மைதான்.
நான் மேற்சொன்ன அத்தனைக் கூற்றும் நிகழ்காலக் கவிதைகளுக்கும் பொருந்தும்.
பல நல்லக் கவிதைகள் இன்றும் எழுதப்படுகிறது என்பதை நாம் மறைத்தல் தகாது.ஆனால் தகாத படைப்புகளும், விடாத கருப்பாக நம்மை விரட்டுவதும் சம நாள்களின் சாபம் என்றே கருதுகிறேன்.
ஓர் அப்துல் ரகுமானை
ஓர் ஈரோடு தமிழன்பனை
ஒரு மீராவை
ஒரு மேத்தாவை
ஒரு துரை வசுந்தராசனை
ஒரு வெற்றிப்பேரொளியை
ஓர் ஆரூர் தமிழ்நாடனை
ஒரு வண்ணதாசனை
ஒரு பொன்மணி தாசனை
ஒரு பொற்கைப் பாண்டியனை
இன்னும் பல அபூர்வக் கவிஞர்களை அருகில் வைத்துக்கொண்டு தற்போதைய கவிதைகளில் தங்கம் இல்லையா எனச் சந்தேகிப்பது தமிழுக்கு நல்லதல்ல என்றே தழுதழுக்கிறேன்.
3) ஒரு கவிஞன் எதையெல்லாம் பாட லாம்? எதைப் பாடுவதைத் தவிர்க்கலாம்?
இது ஒரு நல்ல கேள்வி
கவிஞர்களுக்கான ஒரு செல்ல வேள்வி என்றே இந்த வினாவை எதிர் கொள்கிறேன்.
கவிதை என்பது கார்மேகம் கட்டி வைத்த மழை மாதிரி. அது எப்போது அவிழும் எவ்விடம் நெகிழும் எவ்வாறு நிகழும் என்பது எவருக்கும் தெரியாது. ஏன் கவிஞனுக்கே தெரியாது.
ஒரு நல்ல கவிதை என்பது கவிஞன் எழுதுவதில்லை. அது கவிஞனைக் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வளவுதான்.
ஏதோ ஒரு சக்தி, எங்கிருந்தோ வரும் ஓர் ஆற்றல் படைப்பாக கவிஞன் விரல்வழி வழிகிறதே அன்றி, அது அவனால் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இதன் கர்த்தா யாரென இதுவரை தகவல் இல்லை.
இதில், கவிஞன் ஒரு கருவி மட்டுமே. கருவிகளுக்கு கர்வம் கூடாது.
குழந்தைகள் நம்மூலம் வருகிறார் கள். அவர்கள் நமக்கானவர்கள் அல்ல என்பது எத்தனை நிஜமோ அப்படித் தான் ஒரு கவிஞனுக்கு அவன் கவிதை என்பது.
எங்கோ தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் வந்திறங்கும் சந்தைதான் கவிஞன் என்பவன்.
மட்டுமல்ல கவிதை என்பது கறப்பதல்ல சுரப்பது.
எதைப் பார்க்கிற போது
எதை நினைக்கிற போது
எதை வாசிக்கிற போது
எதை யோசிக்கிற போது
இதய நாளங்களில் ஈரம் பூக்கிறதோ
எது கனக்கிற போது
எது மணக்கிற போது
எது கடைகிற போது
எது உடைகிற போது
மனத்தின் மையங்களில் வெப்பம் காய்க்கிறதோ
அவ்வாறானவற்றை ஆழ மண்தோண்டி ஆயிரஞ் சூரிய வெளிச்சத்தோடு எழுதுதல் நன்று.
எதை தன் தாயிடமும், தன் சகோதரியிடமும், தன் மகளிடமும் பேசத் தகாதென உள் மனது உத்தரவிடுகிறதோ அதை அமிலக் குழிதோண்டி எழுதாமல் புதைப்பது இனிது.
ஓர் எழுத்து என்பது குறைந்தபட்சம் ஒரு கண்ணின் நீர் துடைப்பது.
அதிகபட்சம் இந்த பூமி கொண்ட காயங்களின் வேர் அடைப்பது.
பெண்களை கொச்சையாக ஆபாச மாக எழுதும் போக்கு இப்போது அதிகரித் திருக்கிறது என்பது அகற்ற முடியாத உண்மை.
அவ்வாறு எழுதுபவர்களின் ஆதர் அட்டை, வாக்காளர் அட்டை, உணவுப் பங்கீட்டு அட்டை, வங்கி அட்டை, கடவுச்சீட்டு அனைத்தையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.
மட்டுமல்ல, அப்படிப்பட்டவர்களை திறந்தவெளிக் கைதிகளாக உள்ளூர் அகதி களாக ஊருலகுக்கு அறிவிக்க வேண்டும்.
எழுத்துச் சுதந்திரம், பேச்சு ஜன நாயகம் என எவரேனும் கொடி தூக்கினால் பிரம்பாலே உரிக்க வேண்டும்.
4) கவிதைகளின் மூலமும் சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரலாம். அந்தவகையில், இயற்கை வளங்களைக் காத்தல், துஷ்பிரயோகங்களில் இருந்து பெண்கள் சிறுவர்களைக் காத்தல், ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல் இன்னும் இதுபோன்ற விடயங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக்காக கவிஞர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ன?
ஆதங்கத்தோடு எறிந்த ஆக்கப்பூர்வ மான சாட்டை இது.
அதற்காகவே உங்களை ஆரத் தழுவுகிறேன். அன்பால் வாழ்த்துகிறேன்.
புரட்டிப் போட்ட புரட்சிகள், பொறுக்க முடியாத போராட்டங்கள், மறுக்க இயலாத மாற்றங்கள், சீறிக் கிளம்பியச் சீர்திருத்தங்கள் இவை அத்தனையும் ஏதோ ஓர் எழுத்தால், இடைவிடாத பேச்சால் தொடர் முழக்கங்களால் தொடர்ந்து எழுதப்பட்ட துண்டறிக்கைகளால்தான் என்பதை நம் இளையச் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கின்றது.
கத்தியின்றி ரத்தமின்றி, யுத்தமின்றி எல்லாம் இந்தச் சுதந்திரம் வரவில்லை என்ற வரலாற்று உண்மையை நம் வீட்டுப் பிள்ளைகளின் புத்தியில் விளக்கேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது.
பாரதி காலத்தில் ஓரே ஒரு எதிரி தான். ஒரே ஒரு வெள்ளைக்காரன்தான்.
இப்போது அப்படியல்ல. கண் ணுக்குத் தெரியாத பல துரோகிகள். கட்டுக்கடங்காத பல கொள்ளைக் காரன்கள்.
இவர்களை அறுக்க, இழிசெயல் களை நொறுக்க, ஐம்பூதச் செல்வங்கள் காக்க, பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் பேண, தற்சார்பு பெருக, வறுமை அருக, சாதி சமயச் சழக்குகள் விலக, அனைவருமே களமாடல் அவசியம்.
இது காலத்தின் கட்டாயம். இதன் ஒருங்கிணைப்பை ஒவ்வொரு கவிஞனின் எழுத்தும் செய்ய வேண்டும். ஈட்டிமுனையாய் எழுத்துமுனை விழிப் புணர் வைப் பெய்ய வேண்டும்.
காசுக்கு விலை போவதை கவிதை தடுக்க வேண்டும்.
கவிஞன் முதலில் களவு போகா திருக்க வேண்டும்.
குண்டர்களை கவிதைக் குண்டு களால் ஒடுக்க வேண்டும்.
இண்டு இடுக்கெல்லாம் இணையத் தளம் மூலமாக எழுத்து பீரங்கிகள் இறங்க வேண்டும்.
ஊழல் அதிகாரிகளை, உதவாக்கரை அரசியல்வாதிகளை, தோல்கனத்தத் தொழி லதிபர்களை, வாக்குக்கு பணம் பெறுபவர் களை, சட்டத்தின் முன் நிறுத்த கவிஞர்கள் எழுதுகோல் சவுக்கு எடுக்க வேண்டும்.
அறைக்குள் இருந்து அறிவிப்பு மட்டுமே செய்வதல்ல கவிதை.
தேவை வந்தால் தரையில் இறங்கி மக்களோடு மக்களாக இயங்கி நீதி வென்றெடுக்க கவிஞன் களப்போராளி ஆக வேண்டும்.
அப்போதுதான் எழுதுகோல் என்பது ஒவ்வொரு உள்ளத்தையும் உழுத கோலாகவும் உலகே தொழும் கோலாகவும் மாறும். இல்லை இல்லை மாற வேண்டும்.
5) ஒரு கவிதையின் வடிவம் எப்படி அமையவேண்டும்?
வடிவம் எப்படி இருந்தால் என்ன வளைந்துதான் இருக்கட்டுமே வானவில் அழகு தானே.
நிறங்கள் ஏதோ ஒரு மாயாஜாலம் செய்கிறதல்லவா
அதுதான் அதன் பயன்பாடு அது போதும். தோற்றம் எப்படி இருந்தால் என்ன அழுக்காகவே இருக்கட்டுமே… ஆறு அழகு தானே.
தரையில் அது மெழுகும் நீராடை எத்தனை நிலத்திற்குப் பச்சைப் புடவை போர்த்துகிறது. அதுதான் அதன் பிறவிப் பயன் அதுபோதும்.
பார்க்கக் கூட முடியாவிட்டால் என்ன. உருவமே இல்லாதிருக்கட்டுமே… காற்று அழகு தானே.
ஒவ்வொரு உடலுக்கும் அதுதானே உயிரூட்டுகிறது. அதுதான் அதன் செயப் பாட்டு வினை. அதுபோதும்.
கவிதையும் அதுபோல் தானே. என்ன வடிவம் என்றால் என்ன
இந்த உலகுக்கு உதவுகிறதா? உணர் வுகளை மென்மை செய்கிறதா? விலங்குத் தோல் உரிக்கிறதா? ஞானநதி பொரிக்கிறதா? மனிதநேசம் வளர்க்கிறதா? உயிர்களிடம் அன்பு பாராட்டுகிறதா? இயற்கையை காதலிக்கச் சொல்லித் தருகிறதா? பெண் மையை மதிக்கப் பழக்குகிறதா.?
அதுபோதும் ஒரு கவிதைக்கு.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை யாய் இருப்பதை விட, ஒழுகும் குடிசைக்குள் உள்ளங்கை ஏந்தலாக இருத்தலே உன்ன தமான கவிதையின் உயரமான இலக்கணம் என நம்புகிறேன் நான்.
இப்போதெல்லாம் நிறைய பேரிடம் வடிவம் இருக்கிறது. கவிதை இல்லை என்ற குற்றச்சாட்டை அத்தனை எளிதாக நாம் புறந்தள்ளிவிட முடியாது.
வடிவம் என்பது உடல் மாதிரி. கவிதை என்பது உயிர் மாதிரி
உயிரற்ற உடல் வெறும் பிணம். செத்த பிணத்தைக் கொண்டாடுவது சிறப்பல்ல.
ஒரு செய்தி சொல்கிறேன்.
ஒரு மன்னனுக்குப் பிறந்தநாள் வருகிறது. அதனால் அரண்மனையைச் சுத்தப்படுகிறார்கள்.
அப்போது அங்கிருந்த சிலந்தியின் கூடொன்றைச் சிதைத்துச் சிதிலமாக்கி சிரச்சேதம் செய்து விடுகிறார்கள்.
ஆனால், பொன் பூ பழம் பொருள் என யார் யாருக்கெலாமோ என்னென் னவோ தானம் தருகிறார்கள்.
இங்கே பாருங்கள்.
சிலந்தியின் வாழ்வாதாரம் போயிற்று. கட்டிய வீடு களவு போயிற்று. இருந்த இடமும் பறிபோயிற்று.
இரவானால், அது எங்கே போய் உறங்கும். குளிரெடுத்தால் எந்த நூலெடுத்துப் போர்த்தும். உணவு பெற எங்கே வலை வாங்கும்.
இல்லாதவன் என்பதால் இந்த இழிநிலையா? கேட்க ஆளிலையா.
இத்தனைக் கேள்விகளால் கிழிந்து போன ஒரு புலவன் முத்தொள்ளாயிரத்தில் முகம் வீங்கக் கண்ணீர் விடுகிறான்.
அது இது
‘‘அந்தணர் ஆவொடு
பொன்பெற்றார் நாவலர்
மந்திரம்போல் மாண்ட
களிறூர்ந்தார்-எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி
இரேவதிநாள் மன்னோ
சிலம்பி தன் கூடிழந்த
வாறு’’
இதில், வெண்பா என்ற வடிவம் தாண்டி அந்தப் புலவனின் உயிர் நேசம் நம்மை ஏதோ செய்கிறதல்லவா. அதுதான் கவிதை.
சமகாலச் சங்கதி ஒன்று தருகிறேன்.
‘‘பித்தன்
தன் சட்டையைக்
கிழித்துக் கொண்டிருந்தான்.
சட்டையை ஏன்
கிழிக்கிறாய் என்றேன்
கடிதத்தைப்
படிக்க வேண்டும் என்றால்
உறையை
கிழிக்கத்தானே வேண்டும் என்றான்’’
இது, கவிக்கோ அப்துல் ரகுமான் கஜல் வடிவக் கவிதை.
இந்த வடிவம் கடந்து ஏதோ ஒரு மின்னல் கீற்று நம் இதய ரேகையுள் ஏதேதோ தோகை விரிக்கிறதல்லவா
அதுதான் கவிதை.
மரபு
புதிது
ஐக்கூ
தன்முனை
சென்ரியு போன்ற நவீனம்
இப்படி எந்த வடிவத்திலும் பயணம் போக தமிழ் தயாராகவே இருக்கிறது
வாசகர்களும் வாஞ்சையோடுதான் காத்திருக்கிறார்கள். நல்ல மாலுமிகளே நமக்கான தேவை.
6) சாதி, மதம், அரசியல் இவற்றில் கவிதைகளின் நிலைப்பாடு என்ன? சரியான திசை நோக்கிய பயணமாக அது அமையுமா?
அரசு அரசியல் சமூகம் தேர்தல் கோவில் இவை சாதி மதம் வளர்க்கும் சங்கட மடங்கள்.
இவற்றின் சங்கறுக்க கையில் உள்ள ஒரே ஆயுதம் கல்வியும் விழிப்புணர்வும் மட்டும்தான்.
கல்வி எத்தனை முக்கியம் என்பதற்குச் சான்றாக ஒரு புறப்பாடல் தருகிறேன்.
‘‘உற்றுழி உதவியும்,
உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது,
கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன
உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால்,
தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த
பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’
என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு
அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த
நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன்
கற்பின்,
மேற்பால் ஒருவனும்
அவன்கண் படுமே’’.
இந்தப் பாடல் சொல்வது யாதெனி்ல் கல்வி பரவாலானால் மேல் கீழ் பேதம் தகரும். கீழ் என்ற அமைப்பே சிதறும். கற்றால்தான் மதிப்பே உயரும். கற்றவனைத் தான் அரசே மதிக்கும்.
மட்டுமல்ல கல்விதரும் ஆசிரியர் களுக்கு கணக்குப் பாராமல் தர வேண்டும்
அவர்களுக்கொரு இடரெனில் அரணாக நாம் வர வேண்டும்.
ஆனால் நம்மூரில் கல்விக்கூடங்கள் வாசலிலேயே என்ன சாதி நீ
எனக் கேட்கிறது அரசு.
அங்கேதான் சாதிகள் இல்லையடி பாப்பா என்றும் கற்றுத் தரப்படுகிறது.
சமூகமோ ஆயிரம் உண்டிங்கு சாதி என அசுரத்தனமாக கிளைபரப்பிக் கிடக்கிறது.
அதில்தான் ஆரம்பிக்கிறது ஆபத்தான அரசியல்.
இந்தச் சாதி மதங்களைக் கொண்டே அரசியல் என்பது ஏற்றத்தாழ்வுகளை இறக்குமதி செய்கிறது.
பிரிவினைகளை பேதங்களை சண்டை சச்சரவுகளை வன்மங்களை உயிர்க் கொலைகளை ஊக்குவிக்கிறது.
இதைச் சலவை செய்ய கவிதை என்ற சவர்க்காரம் அவசியம்.
கவிதை இந்த நூற்றாண்டு கால இருட்டை நொடிப்பொழுதில் துடைக்கும் வல்லமையுடையதுதான்.
ஆனால் அது மட்டும் போதா.
இனியேனும் நாம் கடைக்கோடி மனிதருக்கும் கல்வியைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.
அதன்மூலம் ஒவ்வொருவரும் தங்கள் அறிவு விரிவு செய்ய வேண்டும்.
இந்தக் கல்வியறிவின் மூலம் பொருளா தாரத்தின் முதல்வரிசை நாற்காலிக்கு அவ ரவர்களே தங்களை நகர்த்த வேண்டும்.
பணியாளர் என்பதைத் தகர்த்து தொழில்முனைவோர் என்ற நிலைக்கு இந்தச் சமூகம் உயர வேண்டும்.
அவ்வாறாயின் சாதி மத அரசியல் சல்லடையாகும்.
பிரச்சினை எதுவெனில் இங்கே கவிஞர்களே சாதி மதக் கிடங்குகளில் சட்டை தயாரிப்பவர்களாக இருக்கிறார்கள்.
சாதி மதத்தின் கொடூரங்களை ஒவ்வொரு மனிதருக்கும் உணரவைக்க கவிதை கண்ணாடியாக நிற்பது நன்று.
அதன் வல்லாதிக்கம் வீழ்த்த கவி தைக்கு வாளாய் நிற்கும் வலிமை உண்டு.
சாதி மதம் கழற்றி வீச ஒவ்வொரு கவிஞர்களின் விரலும் ஒவ்வொரு கொடிக் கம்பமாக உயர வேண்டும்.
ஒவ்வொரு கவிதையும் சாதி மதத்திற்கு எதிராக அறிவுப்பூர்வமாக விஞ்ஞானப்பூர்வமாக பகுத்தறிவு மிளிர இனியாவது வேள்வி நடத்த வேண்டும்.
சாதி மதமற்றச் சமூகம் ஒவ்வொரு கவிஞனின் மனிதனின் இலக்காக மாற வேண்டும்.
இவை சரியானால் போதும். அரசியல் தானாக மாறும்.
7) ஒடுக்கப்பட்ட ,ஆதரவற்ற, பாதிக்கப் பட்ட மக்களின் ஏகோபித்த குரலாக கவிஞனின் குரல் ஓங்கி ஒலித்தால், அதன் மூலம் சமூக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா? அது எந்தவகையில் சாத்தியமாகும்?
விழப் போகும் கொடிக்கு ஒரு கொம்பு நம்பிக்கை தரும் போது ஒரு கவிஞனால் முடியாதா என்ன.
முடியும் நிச்சயம் முடியும்.
பகல் வந்த ஒரு சூரியனின் பாதிப்பு இரவு நிலாவுக்கு எரிபொருள் தர இயலும் போது, ஒரு கவிஞனால் ஏலாதா என்ன.இயலும் நிச்சயம் இயலும்.
தொடர் முயற்சிகள் கண்டிப்பாக பலன் தரும்.
ஆனால், அதை மக்கள் இயக்கமாக மக்கள் குரலாக வெகு ஜன ஊடகங்கள் பேசும் இடத்திற்கு எடுத்தேக வேண்டும்.
ஒவ்வொருவர் கையிலும் ஓர் ஆண்ட்ராய்டு உலகம் இருக்கிறது. இதைக் கொண்டே ஒரு கவிஞன் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக் காக ஓங்கிக் குரல் கொடுக்கலாம்.
இதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு சரியான உதாரணம்.
மட்டுமல்ல
டெல்டா பிரச்சினை
கதிராமங்கலம்
நெடுவாசல்
ஒக்கிப்புயல்
கூடங்குளம் அணு உலை
நியூட்ரினோ மீத்தேன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்
பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு இப்படிப்பட்ட மக்கள் போராட் டங்களில் என் போன்ற கவிஞர்களின் பங்கும் கணிசமான ஒன்றென்பதை அறிந்தவர் அறிவர்.
இப்போதெல்லாம் விவசாயிகள் வாழ்வு அந்தரத்தில்தான் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
வேளாண் சட்டங்களை விரட்டி யடிக்க விழிப்புணர்வு கொடுக்க ஒவ்வொரு பேனாவும் பேராயுதமாக நிமிர வேண்டும்.
தில்லி விவசாயிகளுக்கு அனை வருமே ஆதரவு தர வேண்டும்.
மாநிலத்தில் இப்போது ஓரளவு நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது.
இதைக் கொண்டே இருட்டுள்ள இடங்களை துரத்தியடிக்க கவிதை கடைத்தெரு வந்தாக வேண்டும். கவிஞன் பாரதியின் கனலோடு களமாட வேண்டும்.
8) இந்த விஞ்ஞான யுகத்தில் நம் மொழி, ஒழுக்கம், கலாச்சாரம்,பண்பாட்டு விழுமியங்களைப் பழுதின்றி காப்பது அனை வரது கடமை. இதில் கவிதையின் மற்றும் கவிஞனின் தேவையும் அத்தியா வசியமாகிறது. இவற்றைக் காக்க, கவிஞனானவன் கவிதை யின் மூலம் எப்படிப்பட்ட முன்னெடுப்புகளை செய்யலாம்?
உலகின் சக்கரம் வேக வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
இங்கே யாருக்கும் நிற்க பேச சிந்திக்க நேரமில்லை.
கலாச்சாரம் பண்பாடு பற்றி யெல்லாம் கவலையுமில்லை.
இங்கே மொழி என்பது தொடர்பு கொள்ள என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இதில் கவிதை கவனிக்கப்படுமா என்பது கவலையான கேள்விதான்.
ஆனால், இணையத்தில் கவிதைக் கான ஆதரவு கனமாகவே இருக்கிற தென்பது சற்றே ஆறுதலான ஒன்று.
ஒவ்வொரு கவிஞனும் சமூக அக்கறை யோடு, நீதி வழுவாத நிலை யோடு, இயற்கை மீது பரிவோடு, பெண்கள் மீது மதிப்போடு, பழைய பண்பாட்டின் தொடர்ச்சியோடு, கவிதை களாக… இசைப் பாடல்களாக… கதை சொல்லிகளாக… ஓரங்க நாடகங்களாக… நகைச்சுவைத் தொடர்களாக… யூ டியூபில், இன்ஸ்டாகிராமில், ட்வீட்டரில்; க்ளப் ஹவுசில், ஃபேஸ் புக்கில், வாட்ஸ் அப்பில், இன்னும் உள்ள பிற நவீனச் சாதனங்களில், இளைய பிள்ளைகளின் பார்வைக்குக் கடத்த வேண்டும்.
விவாத அரங்குகளில் தர்க்க ரீதியாக, தத்துவ ரீதியாக, தமிழை கொண்டு போக வேண்டும்.
பள்ளிகளில், கல்லூரிகளில், பொது வெளி அரங்குகளில், கோவில் கூடங்களில், சமகாலத் தமிழால் சங்க காலத் தமிழை ருசியோடு பரிமாற வேண்டும்.
கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழின் தொன்மையை, தமிழின் அழகி யலை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தாலே நம் ஒழுக்கம், விருந்தோம்பல், பண்பாடு, பாசம், பிறரன்பு, கலாச்சாரம் இன்னபிற தானாகவே தழைத்தோங்கும்
இப்படிப்பட்ட தொடர்ந்த முன்னெ டுப்புகள் ஒருநாள் நிச்சயம் பலன் கொடுக்கும்.
அப்போது தமிழ் வாழும். தமிழே ஆளும்.
9) முற்காலத்தில் புலவர்கள் அரச சபைக்கு ஆலோசனை சொல்பவர் களாகவும், மக்களுக்கு நன்னெறியைப் போதிப்பவர்களாகவும் இருந் துள்ளனர். இன்றைய காலக்கட்டத்திலும் இவர்கள் தம் புலமையால் பாரிய தாக்கத்தை செலுத்த முடியும் என நினைக்கிறீர்களா?
பாரிக்கொரு கபிலர். அதியமானுக் கோர் அவ்வை. பேகனுக்கொரு பரணர். தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்கொரு நக்கீரர். சேரமான் இரும்பொறைக்கொரு மோசுகீரனார். ஆய் அண்டிரனுக்கொரு முடமோசியார். கரிகாலனுக்கொரு உருத்திரங் கண்ணனார் இப்படி ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
இந்தப் புலவர்கள் அரசனுக்கு ஆலோசனை சொல்பவர்களாகவும் வழி காட்டி களாகவும் இருந்திருக்கிறார்கள்.
இந்த அரசர்கள் ஆண்ட நிலப்பரப்பு இன்றைய தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது மிக மிகச் சிறியதென்பதை நாம் நம் கவனங் கொள்வது நன்று.
இப்போது உள்ள சூழலே வேறு.
நீங்கள் எந்தக் கட்சி, எந்தச் சாதி, என்ன செல்வாக்கு, யாருடைய பின்புலம் என்றெல்லாம் பல ஆய்வுக்குப் பின் கூட அதிகார வர்க்கத்தின் வாசல் கதவு திறக்குமா என்பதே வினா தான்.
இன்று அறிவு, அனுபவம் இருப்பதை விட «லைம்லைட்»டில் இருப்பதே தகுதி எனக் கருதப்படுகிறது.
மட்டுமல்ல, பொருள் உடையா ருக்கே இவ்வுலகம் என்றாகி பலகாலம் ஆகிவிட்டது.
நிஜம் சொல்வதென்றால் மொழி தன் மகுடம் இழந்து வருகிறது
தொழில்நுட்பம் அறிவியல் விஞ்ஞானம் இணையத்தளம் இவை தமிழை பின் வரிசைக்கு நகர்த்தியிருக்கிறது என்பதை ஒப்ப நாம் தயாராக வேண்டும்.
காரணம்… அரை நூற்றாண்டுகளுக் கும் மேலாக புதிய கண்டுபிடிப்புகளுக்கு புதிய கலைச்சொல்களை தமிழில் கண்டுபிடிக்க நாம் தவறி இருக்கிறோம் என்பதே உண்மை.
அதனால்தான் அரசின் ஆலோசனைக் குழுவில் ஒரு தமிழ்க் கவிஞன் கூட இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உலகமயமாதல் வந்த பிறகு தொழில் நுட்பம் ஒன்றே வணிகத்தின் எல்லா வாசல்களிலும் வாய்திறந்து நிற்கிறது.
கடன்சுமை ஒருபக்கம் அரசுகளின் கழுத்தைத் திருகிக் கொண்டிருக்கிறது.
ஆக, இப்போது பொருளாதார வல்லுனர்கள்தான் தேவையே தவிர புலவர்கள் அல்ல.
ஒருவேளை நம் தமிழக முதல்வர் கண்ணில் விக்டர்தாஸின் இந்த நேர் காணல் பட்டால் அரசவைக் கவிஞர் ஆக அவன் ஆகலாம் எனச் சொல்லலாமே தவிர, அதற்குமேல் சொல்ல வேறொன்றுமல்ல.
10) அகப்பாடல்கள் தேவைதான். ஆயினும் அவற்றைக் கொண்டே கவிஞனின் தகுதியும் நிர்ணயிக்கப்படும் நிலை தற்போது உள்ளதே! இது சரிதானா?
அப்படியா… எனக்குத் தெரிய வில்லை. அப்படி இருந்தால் அது சரியில்லை.
ஒரு கவிஞன், வெறும் பழைய இலக்கியம் மட்டும் படித்தால் போதாது.
உலக இலக்கிய அறிவு, உலக நூலறிவு, உலகப் பொது அறிவு வேண்டும்.
மருத்துவம், விஞ்ஞானம், விண்ணியல், பொறியியல், எந்திரவியல், கட்டட வியல், தொழில்நுட்பம், கலைப் பாடங்கள், இயற்கை நுட்பம், புவியியல், வரலாறு என பலவும் தெரிந்திருக்க வேண்டும்.
தன்னைச் சுற்றி நடப்பதையும், தன்னைத் தாண்டி இருப்பதையும், தன்னுள் என்ன என்பதையும், ஒரு ஞானி யைப்போல் அறியும் நுண்ணறிவு வேண்டும்.
அப்படிப் பார்த்தால் அகத்திணை என்பது கடுகினும் சிறிதளவே ஆகும்.
அதை விடுத்து இந்த பூமி மேம்பட, இந்த மக்கள் உயர்வுற, இந்த இயற்கை வளம்பெற, ஒரு கவிஞன் வள்ளுவரைப் போல, வள்ளலாரைப் போல, பாரதியைப் போல சிந்திக்க வேண்டும்.
காலம் வெல்லும் படைப்புகளை கல்கியைப் போல, கண்ணதாசனைப் போல தர வேண்டும்.
11) முன்னைய காலங்களில் எழுதப்பட்ட அழகிய காவியங்கள் தமிழிலக்கியத்தை அலங்கரித்து, தமிழுக்குப் பெருமை சேர்த்தன. ஆனால், தற்காலத்தில் துணுக்குகளோடும், பலதரப்பட்ட கடைநிலைக் கவிதைகளோடும் தமிழ் ஊசலாடிக் கொண்டிருக்கிறதே! மொழிவளத்தைக் கையாளும் திறமை குன்றி வருகிறதா?
இல்லை. அப்படி நான் கருத வில்லை. நம்மிடையே கனத்தப் படைப்பாளிகள் கடலளவு இருக்கிறார்கள்.
அதனால்தான் இந்தளவாவது தமிழ் தங்கத் தலைப்பாகை கட்டி நிற்கிறது.
பசி பொறுத்தே பானைகளின் அளவு என்பர் கிராமத்தில்.
இப்போது மொழியின் தேவை முடங்கியிருக்கிறது.
பத்து வருடம் பாடையில் இருந்தது தமிழ்நாடு.
இப்போதுதான் புதிய நீர் பழைய வாய்க்காலில் ஓட ஆரம்பித்திருக்கிறது.
அரசு தமிழை உயர்த்த நினைத்தால் ஒரே நாளில் மொழி அதன் உச்சாணிக் கொம்பேறும்.
தமிழுக்கு முன்னுரிமை. தமிழ் படித்தால் அரசு வேலை. தமிழ்நூலுக்குப் பொற்கிழி. தமிழ்ப்புலவனுக்குச் சலுகை என ஒரே ஓர் அரசாணை போதும்.
அடுத்த நொடியே
ஆயிரம் கணியன் பூங்குன்றன்
ஆயிரம் கம்பன்
ஆயிரம் கபிலன்
ஆயிரம் அவ்வை
ஆயிரம் நப்பசலை
ஆயிரம் காக்கைப்பாடினி
ஆயிரம் ஓதலாந்தை
ஆயிரம் அம்மூவன்
ஆயிரம் காளமேகம்
ஆயிரம் புகழேந்தி
ஆயிரம் ஒட்டக்கூத்தன்
ஆயிரம் இளங்கோ
ஆயிரம் பாரதி
ஆயிரம் பாரதிதாசன்
ஆயிரம் வாணிதாசன்
ஆயிரம் சுரதா
ஒரே நாளில் உங்கள் கண்முன் வருவர்.
ஆயிரம் குழுக்கள் ஆயிரம் தனி மனிதர்கள் செய்ய முடியாததை அரசு எந்திரத்தால் ஒரே ஒரு கையெழுத்தில் ஓர் ஒளிவானத்தையே உற்பத்தி செய்ய முடியும்.
செய்யுமா என்பது கேள்வி. செய்ய வேண்டும் என்பது என் போன்றோரின் வேள்வி.
மற்றபடி கவிஞர்களில் திறமைக்குப் பஞ்சமில்லை என திடமாகவே நான் நம்புகிறேன்.
12) தமிழைக் காப்பதில் இலக்கிய ஆளுமைகள் முன்னோக்கியுள்ள சவால்கள் எவையென கருதுகிறீர்கள்?
என் முந்தையப் பதில்களில் இந்த வினாவுக்கான விடையை சந்தைப் படுத்தியதாக நம்புகிறேன்.
கொண்டு பொருள் கூட்டும் அணிபோல் கண்டறிவீர்கள் எனக் கருதுகிறேன்.
13) நவீன தொழில்நுட்ப யுகத்தில் கவிதையின் இருப்பு என்ன? இந்த எந்திர யுகத்தில் நம் மொழியைக் காக்கவும், எதிர்கால சந்ததியிடம் அதைப் பழுதுபடாமல் கொண்டு சேர்க்கவும் கவிதைக்கும் கவிஞனுக்கும் உரித்தான பணிகள் எவை?
எமக்குத் தொழில் கவிதை எனும் சூழல் இப்போது இல்லை என்பதில் இருந்தே கவிதைக்கான இடத்தைக் கண்டு கொள்ளலாம்.
கவிதை பொதுவெளியின் பயன் பாட்டுக்கு என்ற நிலையில் இருந்து சுய மகிழ்ச்சிக்காகவும், சுய தகுதியின் அளவீட்டுக்காகவும், பொழுது போக்கிற் காகவும், விரும்பியவரோடு வாயாடு வதற்காகவும் சமீப காலங்களில் திரிந்து போய் கிடக்கிறது என்பதை ஒப்பனை யில்லாமல் நாம் உள்வாங்க வேண்டும்.
தொழிலாக யாவருக்கும் வேறொன் றிருக்க நம்மை ஆசுவாசப்படுத்த தலையில் சூடும் ஒன்றாகவே தமிழுக்கு கவிதை கட்டுரை என்ற பூக்கள் இருக்கிறதோ என ஐயமுறுபவர்களில் நானும் ஒருவன்.
ஒரு ஜென் தத்துவம் சொல்கிறேன்
‘‘ஒன்றை அசுத்தப்படுத்த நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் சும்மா இருந்தாலே போதும்தானாகவே அது அழுக்காகி விடும்’’
அதையே மாற்றிச் சொல்கிறேன்
தமிழைக் காப்பாற்ற நீங்களோ நானோ ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா இருந்தாலே போதும்.
தமிழ் தன்னை வளர்த்துக் கொள்ளும். தன்னை உயர்த்திக் கொள்ளும்
காரணம் தமிழ் ஒரு சுயம்பு.
அது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த ஒன்று.
தமிழுக்குச் சோறு போடுகிறேன் என வந்தவனெல்லாம் தன் சந்ததிக்குச் சோறு போட மண்டபம் கட்டினானே அன்றி தமிழ் வாழ நூல் கூட கிழித்தானில்லை.
தமிழைக் காப்பாற்றப் போகிறேன் என தலை தூக்கிய ஒவ்வொருவனும் தலைமுறைக்குச் சொத்து சேர்த்தானே யன்றி தமிழுக்கு ஒரு வித்து கூட தரவில்லை.
ஆழியிலும் ஊழியிலும் அனலிலும் புனலிலும் காற்றிலும் காலத்திலும் காயப்படாமல் கடந்துவந்த பெருமைக் குரியது நம் கன்னித்தமிழ்.
அது எந்த எந்திரப் புயலையும் கடக்கும். எந்தத் தொழில்நுட்ப யுகத்தை யும் துரத்தும். எந்தப் பொருளாதார மாற்றத்திலும் புதுக்கும்.
ஊரில் சொல்வார்களே…
‘‘உதவி செய்யலனாலும் பரவா யில்ல. உபத்திரவம் பண்ணாத’’
தமிழை வாழ வைக்காமல் போனால் கூட தவறில்லை.
தப்பும் தவறுமாக பேசாதிருங்கள். ஒற்றுப் பிழையோடு எழுதாதிருங்கள். பிறமொழிக் கலப்பை முடிந்தவரை தவிருங்கள். தொலைக்காட்சித் தமிழைத் தொடராதிருங்கள்.
தமிழ் இலக்கணம் வழுவறப் பயிலுங்கள். பழந்தமிழ் இலக்கியம் வாசியுங்கள். நிறைய படியுங்கள். நிறைவாக எழுதுங்கள்.
அத்தனை எழுத்தையும் ஆவணமாக் குங்கள். புதிதாக எழுத வருபவர்களை ஊக்குவியுங்கள் விமர்சிக்காதிருங்கள். இது போதும் இன்தமிழ் ஆயுள் நீளும்.
14) தாங்கள் இலக்கியத்துறையிலும் திரைத்துறையிலும் பயணித்ததை நன்கறி வோம். எப்போதாவது திரைத்துறை இது நமக்கு ஆகாது என நினைத்ததுண்டா?
இல்லை. இல்லவே இல்லை.
திரைப்படங்களுக்குப் பாடல் எழுது வது என்பது சாரலில் நனைந்து கொண்டே பூக்களின் பள்ளத்தாக்கில் நடந்து போகும் பட்டாம்பூச்சி மாதிரி ரம்மியமானது. ரசனையானது. ராத்திரிச் சந்தோஷம் போன்ற ரகளையானது.
மழைவிழும் ஒரு பின்சாம இரவில் ஒரு மலைக்கிராமத்தில் ஒழுகும் குடிசையின் திண்ணையமர்ந்து குறிஞ்சி நிலக் காடுகளை ஒரு தேநீர்க் கோப்பையோடு ரசிப்பது எத்தனை ரசமான சுகமோ அதனினும் சுகம் சினிமாச் சூழலுக்குப் பாட்டெழுதுவது.
காரணம் சினிமா என்பது புலன் கெடுக்காத ஒருவித போதை. அதை தொட்டால் விடாது விட்டாலும் விலகாது.
கடற்கரை வந்த காதலியின் கால்கொலுசுகளைக் கட்டிக் கொண்டு நகர மறுக்கும் அலைகள் மாதிரியானது சினிமாப் பாடல் மீதான என் காதல்.
அது தொடரும். அது தொடரும் வரை என் உயிர் வண்டி உருளும்.
15) ஐயா எம் எஸ்வி இசையிலும் இளையராஜாவின் இசையிலும் பாடல்கள் எழுதியிருப்பீர்கள். இதில் யாருடன் எழுதும் போது உங்களுக்கான சுதந்திரம் அதிகம் கிடைக்கும்?
மெல்லிசை மன்னர் ஐயா. எம் எஸ் வி அவர்களால் இசைஞானியிடம் பிரசாத் ஸ்டூடியோவில் நான் அறிமுகப் படுத்தப்பட்டேன்.
அப்போது அவர் ஒரு மெட்டு வாசித்தார். சட்டென்று அதற்குத் தமிழ் செய்தேன்.
மற்றபடி ராகதேவனோடு நான் பணியாற்றவில்லை.
மெல்லிசை மன்னர் ஐயா.எம் எஸ் வி, தேவா, சபேஷ் முரளி, யுவன் சங்கர் ராஜா, இமான் இப்படி நிறைய இசையமைப்பாளர்களோடு பணியாற்றி இருக்கிறேன்.
ஐயா இசைக்கு எழுதுவது அடக்க முடியாத பாக்கியம்.சாகாவரம் பெற்ற சஞ்சீவி மூலிகை அவர் விரல்கள். ஆர்மோனியத்தில் அவர் விரல் வரையும் ஓவியம்.
அடேயப்பா
பச்சைக் குழந்தை பவளமல்லி மீது நடப்பது மாதிரி அத்தனை தெய்வீகமானது.
என்ன எழுதிக் கொடுத்தாலும் அசரவே மாட்டார். ஏராளமான மெட்டுகள் அமைப்பார்.
அதே போல மெட்டு தந்தால் சந்தம் மாறாமல், அநேக தாள ராக பாவங்களில் ஒரு ராகமாலிகாவே நிகழ்த்துவார்.
அவர் ஓர் அதிசயம். அள்ள இயலாத அபூர்வம்.
அவரோடு தங்கி, அவ.ரோடு பய ணித்து, அவரோடு அளவளாவி அவருக்குப் பாடல்கள் எழுதி, அவரென்னைச் சினிமா வில் அறிமுகப் படுத்தி நினைத்தாலே புல்லரிக்கிறது.
எந்த முன்ஜென்மப் பலனோ யார் செய்த புண்ணியமோ இது தெரியவில்லை.
அதன்பிறகு, ஓரளவு அந்த வேகம், ஓரளவு அந்த லாவகம் இசையமைப்பாளர் இமானிடம் பார்த்திருக்கிறேன்.
எதை எழுதிக் கொடுத்தாலும் பட்டென்று மெட்டமைத்துப் பரவசம் செய்வார்.
யுவன் இசை கேட்கவே வேண்டாம்.
அது ஷாம்பெய்னில் நனைந்து போகும் சாக்லெட் ரிவர்.
அண்ணன் சபேஷ்-முரளி இருவரும் இசையிலும், இலையிலும் எனக்கு அன்னமிட்ட அன்னையர்.
தேனிசைத் தென்றல் தேவா ஒரு நீண்ட பயணத்தில் என் விரல்பிடித்து அழைத்து வந்த மெட்டுக்குச் சொந்தக்காரர்.
இப்படி அனைத்து இசையமைப் பாளர்களிடமும் ஆனந்தமாக சுதந்திரமாக எழுதியதாகவே உணர்கிறேன்.
இப்போதும்… அதே சுதந்திரத் தோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் என்பதே என் ஆயுள் ரேகையை நீட்டியதாக உணர்கிறேன்.
16) தற்காலம் சினிமாவில் இசைத்துறை மிகவும் சீர்கெட்டுப் போய்விட்டதாக சொல்கிறார்கள் அது ஏன்? வருங்காலத்தில் அது சீராக வழியுண்டா?
நான் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் உலகம் இசையின் ஓடுதளம் மாற்றியிருக்கிறது.
அதனால், வாத்தியங்களின் ஆடு களம் வாலிபமாகி இருக்கிறது.
யூ டியூப் இன்ஸ்டாகிராம் வந்த பிறகு களம் கனமாகி இருக்கிறது.
இசையில் நிறைய பரிசோதனை முயற்சிகள் நடக்கிறது.
புதிய புதிய ஒலிகள் பூப்பூக்கின்றன. இசை தனக்கான ஆடையை தானே தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதன் மேசையில் பழமையின் பரிமாறல் இல்லை.
பல மென்பாடல்கள் பவனி வரத் தான் செய்கின்றன.
ஒவ்வொரு மெட்டுக்குள்ளும் ஒரு கோடி கவிதை நிலாக்கள் ஒளியரும்பு அவிழ்க்கத்தான் செய்கின்றன.
குழந்தையின் மழலையை தாய் புரிந்து கொள்வது மாதிரி இசைக்கருவிகளின் பாஷையை நாம் புரிய முயன்றாலே போதும்.
உங்கள் வனம் வானமாகும் வாழ்க்கை கானமாகும்.
17) உங்கள் தந்தையார் உங்களிடம் எழுத்துத் துறையைப் பற்றி விவாதித்த துண்டா? அதுபற்றிய சுவாரஸ்யமிருந்தால் பகிருங்களேன்?
என் தந்தையார் அவர்கள், கவியரசர் கண்ணதாசன், ஐயா. எம் எஸ் வி, டி.எம்.எஸ், சிவாஜி இவர்களின் கனத்த ரசிகர்.
கவிஞர் பாடலென்றால் உயிர்.
என் தகப்பனார் அவர்கள் தென்னக இரயில்வேயில் பொறியியல் துறையில் ஓர் உயரமான இடத்தில் பணி புரிந்தார்கள்.
அவர்களுக்கு கவிதை மீது அப்படி யொன்றும் கனத்தக் காதலில்லை.
கவிதை என் வாழ்க்கை மீது கல்லெறிந்து காயம் செய்து கலவரம் செய்து விடுமோ என ஒரு தகப்பனாக பயப்பட்டார்கள்.
ஆனால், என் மேடைப் பேச்சுகளை, என் கவியரங்குகளை, தூரமிருந்து துப்பறிந்து மகிழ்ந்தார்கள் என்பது பின்னாளில் நானறிந்த பெருஞ்சந்தோஷத் செய்தி.
சன் தொலைக்காட்சியில் என் நேரலை நேர்காணல் வந்த போது ஊரெல்லாம் தொலைபேசி செய்து உயிர் நனைந்தார்கள் என்பது என் தாய்சொல்லி நான் தெரிந்த தகவல்.
‘‘உங்க அப்பா நல்லா எழுதுவான். மேடையில அப்டி பேசுவான்’’ என என் பிள்ளைகளிடம் அடிக்கடி சிலாகிப் பார்களென குழந்தைகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
மற்றபடி அப்பா அவர்கள் என் எழுத்து குறித்து என்னிடம் எதுவும் சொன்னதில்லை.
அளவிட முடியாத மரியாதை அன்பு கலந்த பயம். எதிரே அமரக் கூட தைரியமின்மை. தேவைகளை அம்மாவிடம் மட்டுமே கேட்டுப் பழகியது. இப்படி அந்தத் தங்க வானத்தை தள்ளி நின்றே நான் தரிசித்திருக்கிறேன்.
அப்பா அவர்கள் என் சின்ன மகனிடம் சிரித்து விளையாடியதைப் பார்த்த பிறகுதான் அப்பாவுக்குச் சிரிக்கத் தெரியும் என்பதும் அவர்கள் இத்தனை எளிமையானவர்கள் என்பதும் நானே அறிந்து வியந்து போன ஒன்று.
வெளியே முள் உள்ளே பழம் விளங்க முடியாத கவிதை அவர்கள்.
வெளியே பாறை உள்ளே மெழுகு விளக்கத் தெரியாத குழந்தை அவர்கள்.
மருத்துவமனையில் கடைசி பன் னிரண்டு நாள் என் கைப்பிடித்து அவர்கள் கொட்டிய பாசப் பரல்களை கடல்கொண்டு கூட மொண்டுவிட முடியாது.
அந்த அதிர்வலைகளில் இந்தத் துடுப்பு இன்னும் துடித்தபடி கிடக்கிறது.
ஆனால், அந்தப் படகோ படியேறிப் போய்விட்டது.
உயிரறுந்த உச்ச வலியில் நான்.
வேறென்ன சொல்ல.
18) இறுதியாக ஒரு கேள்வி. அண்மை யில் தங்கள் அப்பாவின் மறைவு (தனது ஆழ்ந்த இரங்கலை தமிழ்நெஞ்சம் தெரிவித்துக் கொள்கிறது) தங்களது மனதை மிகவும் பாதித்திருக்கும். எழுபத்தாறு வயதில் இறைவனடி சேர்ந்த தந்தைக்காக அழுதபோது அவரது விருப்பம் இதை நிறைவேற்றாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்து வருந்தியதுண்டா?
தவற விட்டு விட்டோமே அந்தத் தங்கத்தை
களவு தந்து விட்டோமே அந்தக் கற்பூரத்தை
இழந்து விட்டோமே அந்த இமயத்தை என்றுதான் இப்போதுவரை அழுது கொண்டிருக்கிறேன்.
பொருளாதார ரீதியாக அப்பாவை யும் அம்மாவையும் நான் பூர்ஷ்வாக்க ளாகவே வைத்திருந்தேன்.
புறத்தேவைகளைப் பொறுத்தவரை போதும் போதும் எனும் அளவுக்குப் பொன்னாடைகளால் நான் போர்த்தியிருந்தேன்.
ஆனால், அவர்கள் அகத்தேவை யான அருகிருத்தலை என் அருகாமையை அத்தனை நெருக்கமாக நெய்துதர இயலவில்லை என்பது என் நெஞ்செரிக்கும் உண்மை.
கொரோனா எங்கள் சந்திப்பின் சந்தோஷத்தில் பாறாங்கல் உருட்டி வைத்திருந்தது.
‘‘இது என் மகன் வாங்கிக் குடுத்த காஸ்ட்லியான ஃபோன் என தூங்கும் போதும் தலைமாட்டிலேயே வச்சிருப்பாங்க அப்பா’’ என அம்மா சொன்ன போது இன்னும் பலதரம் அழைத்திருக்கலாமோ என ஏங்கி நிற்கிறேன்.
ஒரு தேசிய விருதாவது வாங்கி அவர்கள் கையில் தந்திருந்தால் இவனை பொறியியலுக்கு அனுப்பாமல் தமிழ் படிக்க அனுப்பியிருக்கலாமோ என மகிழ்ந்திருப்பார்கள். அதைத் தவற விட்டு விட்டேனே என்றுதான் தாங்கவொணாத் தவிதவிப்பில் தலைவெடித்து உயிர் துடிக்கிறேன்.
19) தமிழ்நெஞ்சம் இதழைப் பற்றிய உங்கள் கருத்தை எம் வாசகர்களுடன் பகிரலாமே!
தமிழ்நெஞ்சம் வாசகன் என்ற முறையில் என் சக வாசகர்களுக்கு என் வணக்கம் வாழ்த்து நன்றி.
அரை நூற்றாண்டுக் காலம் கடந்தும் ஆகாயச் சௌந்தர்யத்தோடு இதழ் நடத்துவதென்பது எளிதான பணியன்று.
அதுவும், தமிழிற்காக இலக்கியத்திற் காக, கவிதைக்காக, கடல்கடந்த தாகத்தோடு எப்படி ஓடி வருகிறீர்கள் திரு. அமின் என்ற மாபெரும் ஆச்சரியம் என் மண்டைக்குள் உண்டு.
வெகுஜன ஊடகமே பொருளாதாரச் சுனாமியில் புதைகிற போது நீங்கள் எப்படி தாங்குகிறீர்கள் என நினைக்காத நாளில்லை திரு.அமின்.
எந்த இதழுக்கும் போகிற போக்கில் பேசிவிட்டுப் போகிற நான் தமிழ்நெஞ்சம் என்றதும் சற்றே தடுமாறினேன் என்பதே தடுமாறாத உண்மை.
காரணம்… வாசகர்கள் ஒவ்வொரு வரும் கவிஞர்கள் ஒவ்வொருவரும் ஆய்வா ளர்கள் ஒவ்வொருவரும் வல்லுனர்கள் ஒவ்வொருவரும் படிப்பாளர்கள்.
கடுகு நான்
கடல்முன் சொற்பொழிவா என கால் நடுங்கினேன். ஆயினும் நம் வாசகர்கள் பிழை பொறுப்பார்கள் என்ற பெருந் தைரியத்தில் பேசியிருக்கிறேன்.
உங்கள் கேள்வியின் கனத்தில் என் விரல்கள் பல இடங்களில் வியர்த்ததை யாரிடம் சொல்வது நான்.
வாசகர்கள் ஒப்புவார்கள் என்ற நம்பிக்கையில் பல இடங்களில் நிஜத்தின் தோளேறித் தொங்கியிருக்கிறேன்.
எந்த பிம்பங்களுக்கும் (Image) ஆட்படாமல் நான் உற்றதை உணர்ந்ததை கற்றதை கடைந்ததை பெற்றதை பிறழ்ந்ததை பொய் கலவாமல் பொங்கி வைத்திருக்கிறேன்.
பழைய இலக்கியத்தின் மீது அதிகமாகவே காதலெனக்குண்டு. அதனால் தான் அப்படி விமர்சித் திருக்கிறேன். என் தந்தையை நான் சொல்லாமல் யார் சொல்வது.
இப்படி ஒரு வாய்ப்பு தந்த திரு.அமினுக்கும் வாசகப் பிதாக்களுக்கும் எந்த லிபியில் நன்றி பிலிற்றுவதெனத் தெரியவில்லை.
என்றாலும் கனத்த நன்றி மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள்.
தமிழ் வாழ்கதமிழே ஆள்க.
7 Comments
பால தியாகராசன் · அக்டோபர் 1, 2021 at 4 h 44 min
விக்டர் தாஸ் ஐயாவுடன் நேர்காணல் மிகவும் சிறப்பு ஐயா…
88 பக்கங்களை பலரின் எண்ணப் பொக்கிஷங்கள் ததும்ப எங்களின் விழிகளுக்கு இனிய விருந்தாய் நல்கி அயராது எழுத்துப் பணியாற்ற உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நெஞ்சம் ஐயாவிற்கு எனது சிரம் தாழ்ந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும்,
பால தியாகராசன், கோவை.
சுமதிசங்கர · அக்டோபர் 1, 2021 at 9 h 09 min
வணக்கம் ஐயா. திரு.விக்டர்தாஸிடம் கேட்கப்பட்வைகளுக்கு சிறப்பான பதில்.. அனைவருக்கும் புரியும்படியான கருத்துகள். மிக நீண்ட நேர்காணலாக இருந்தாலும் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..
Prof.Dr.S.A.V.Elanchezian · அக்டோபர் 1, 2021 at 15 h 26 min
Fine interview with senior Thiru. Victor Doss. Fully I have read and agree his perspective. However the negative crticizm on Sangam literature is little bitter thing. There are good contemporary poets available as the same worst and fakes too protruding unfortunately.
Thayumanavan AR · அக்டோபர் 1, 2021 at 19 h 26 min
மொழியை மட்டுமே வளர்க்கும் முகமூடிக் கவிஞராக இல்லாமல், சமுதாய நலன்களை, சமூக சீர்திருத்தங்களை,மடமைகளைக் கொளுத்தும் மகிமைகளை, கலாச்சாரத்தைக் காக்கும் கடமையாளராய், பொறுப்பான நேசத்தின் குடிமகனாய் நேர்காணல் பேட்டியில் நெற்றியடியாக நேர்மைவழுவாத பதில்களைப் பதிவு செய்திருப்பது கவிஞர் விக்டர் தாஸின் அறிவுக் கூர்மையையும் உள்ள்ளக் கிடக்கைகளின் உயர்ந்த எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக வே உணருகிறேன்!. வாழ்க கவிஞர்!
வாழ்க தமிழ்! ஆள்க தமிழ்!
கடுகுக் கவிஞன் தென்கரை தாயுமானவன்.
கலையரசிஅன்பழகன் · அக்டோபர் 2, 2021 at 4 h 33 min
அருமை பதிவு
வெற்றிப்பேரொளி · அக்டோபர் 6, 2021 at 19 h 18 min
|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|
கேட்காமலே கிடைக்கும்!
|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|÷×÷|
கேள்வி :
நீங்கள் படித்து வியந்த அண்மைக்கால நேர்காணல் ஏதும் உள்ளதா?
பதில்:
ஆகா….
பாரீசு நகரிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும்… தீநுண்மிக் கால எதிரொலியாக இப்போது மின்னிதழாக வலம் வந்து கொண்டிருக்கும் , கவிஞர் தமிழ்நெஞ்சம் அமீன் Nenjam Tamil அவர்களை ஆசிரியராகக் கொண்ட, “தமிழ்நெஞ்சம்” …
2021 அக்டோபர் இதழில் காந்தத்தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான விக்டர்தாஸ் அவர்களின் நேர்காணல் நெஞ்சுக்குள் கணினித்தமிழ்க்கடலாய் என்னுள் அலையடித்துக் கொண்டிருக்கிறது.
நாம் படித்துக் கொண்டிருப்பது ஒரு நேர்காணலா… அல்லது ஒரு நிறை தமிழ் இலக்கிய ஏட்டைப் புரட்டிக் கொண்டிருக்கின்றோமா என்ற ஐயத்தின் மடியில் என்னை அமரவைத்துவிட்டது அது.
தவிலின் ஆக்ரோசமும் நாதசுரத்தின் மென்வருடலும் கலந்து வரும் ஓர் இசைக் கச்சேரி போல் பதில்கள் பதிவாகியுள்ளன.
பதினெட்டுக் கேள்விகளில் இறுதி மூன்றைத் தவிர எஞ்சிய பதினைந்தும் துஞ்சிய புலியின் வாலை முறுக்கி எழுப்பிவிட்ட உறுமலும் பாய்ச்சலுமாக பதில்கள் சமூக தளத்தில் அதிர்கின்றன.
இப்படியோர் இலக்கிய நயமான சொல்லணிகள் பூண்ட சுந்தர வடிவாக இதுவரை நான் எந்த நேர்காணல் நங்கையையும் சந்தித்ததில்லை.
அந்தக் கால – இந்தக் காலக் கவிதைகள் – கவிஞர்கள் குறித்த அவரின் கருத்துகள் காதில் போட்டுக் கொள்ளும் கடுக்கன்கள் இல்லை… நெஞ்சில் அணிந்து கொள்ள வேண்டிய மணியாரங்கள்!
சில
அமுதச் சொட்டுகள்… இங்கே….
ஃ ” குழந்தையின் கண்களில் ஞானியின் பார்வையையும், ஞானியின் உதடுகளில் குழந்தையின் இதயத்தையும் உடுத்திக்காட்டி ஊஞ்சலாடும் ஓர் உன்னதப் பாடசாலை இலக்கியம்.”
ஃ ” பழங்காலக் கவிதைகளின் ஆழத்தை தற்போதைய கவிதைகளில் காண முடியவில்லையே ? என்பது கேள்வி. வெடித்துப் பிறக்கும் விடையின் தொடக்கத்தைப் பாருங்கள்… ” இதைச் சாயம் போன அல்லது சாரம் போன குற்றட்சாட்டென்றே சந்தேகிக்கிறேன். காரணம்…. சங்ககாலக் கவிதைகள் அனைத்தும் பவுன்கள் அல்ல. சமகாலக் கவிதைகள் அனைத்தும் சருகுகள் அல்ல. அங்கும் சருகுகள் உண்டு. இங்கும் பவுன்கள் உண்டு”! இது வெறும் தொடக்கம் தான். இதன் தொடர்ச்சி சங்ககாலக் கவிதைகள் பற்றிய ஆய்வாகவே தொடரடிகள் எடுத்து வைக்கிறது.
ஃ ” ஒரு கவிஞனுக்கு அவன் கவிதை என்பது… எங்கோ தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் வந்திறங்கும் சந்தைதான் கவிஞன்”!
ஃ “காசுக்கு விலைபோவதைக் கவிதை தடுக்க வேண்டும்.”
” கவிஞன் என்பவன் களவு போகாமலிருக்க வேண்டும்.”
ஃ ” கவிதையின் வடிவம் எப்படி இருக்க வேண்டும்?” – என்பது கேள்வி…
வந்து விழுகிறது பதில்….
” வடிவம் எப்படி இருந்தால் தான் என்ன? வளைந்துதான் இருக்கட்டுமே…. வானவில் அழகு தானே? இது மேலும் நீண்டு தொடர்ந்து இவ்வாறு வந்து முடிகிறது… ” மரபு, புதிது, ஹைக்கூ, தன்முனை, சென்ரியூ போன்ற நவீனம் … இப்படி எந்த வடிவத்திலும் பயணம் போக தமிழ் தயாராகவே உள்ளது.
ஃ ” கவிஞன் பாரதியின் கனவோடு களமாட வேண்டும்.”
ஃ இப்போது பொருளாதார வல்லுநர்கள் தாம் தேவையே தவிர புலவர்கள் அல்ல.”
ஃ ஆர்மோனியத்தில் அவர்
(எம் எஸ் விஸ்வநாதன்) விரல் வரையும் ஓவியம் , அடேயப்பா… பச்சைக் குழந்தை பவளமல்லி மீது நடப்பது மாதிரி அத்தனை தெய்வீகமானது.”
ஃ ” ஒருவேளை நம் தமிழக முதல்வர் கண்ணில் விக்டர்தாஸின் இந்த நேர்காணல் பட்டால் அரசவைக் கவிஞர் ஆக அவன் ஆகலாம். ”
* இதைத் தலைக்கனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது…
தன் தமிழ் மீது வைத்திருக்கும் நன்னம்பிக்கை என்றே ஏற்கலாம் .
தொடக்கத்தில் விக்டர் தாஸை அறிமுகப் படுத்தி எழுதப்பட்டுள்ள இரு பாக்களும் தேன் பூக்கள்.
வற்றா அன்புடன் உங்கள்,
வெற்றிப்பேரொளி
Tamilchittu · மே 21, 2022 at 14 h 10 min
மீச்சிறப்பு… மிகச்சிறந்த நேர்காணல்.. கவிப்பேரரசுவின் கவியாளுமை … வார்த்தைகள் இல்லை… தொடரட்டும் இதுபோன்ற மிகச்சிறந்த நேர்காணல்
இனிய நல்வாழ்த்துகள்!
Comments are closed.