மின்னிதழ் / நேர்காணல்
இலங்கையின் தலைசிறந்த கவிஞர் களில் ஒருவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் என பல சிறப்புகளும் பன்முகத் திறமையும் கொண்ட இலக்கிய வாதி நீங்கள். உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் ஆரம்பியுங்கள்!
இலங்கை அம்பாரை மாவட்டத்தில்- பாலமுனையில் மீராலெவ்வை மரைக்கார் முஹம்மது லெவ்வை, ஆதம்லெவ்வை முஹல்லம் அலிமாநாச்சி தம்பதியினரின் புதல்வன்.
பாலமுனை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை, மட் / மெதடிஸ்த மத்திய கல்லூரி, கல்முனை ஸாஹிறா கல்லூரி என்பவற்றின் பழைய மாணவன்.
இலங்கை வங்கியில் 1977 ம் ஆண்டில் கனிஷ்ட இலிகிதர் / உதவிக் காசாளராகச் சேர்ந்து 2013ம் ஆண்டில் முகாமையாளர் தரத்தில் பணிஓய்வு பெற்றவன்.
கலை இலக்கிய முயற்சிகளில் நகைச்சுவை,மேடை அறிவிப்பு என ஆரம்பித்து, கலை இலக்கியத்தின் பல் வேறு துறைகளிலும் ஐம்பது வருடங் களுக்கும் மேலாக இயங்கி வருபவன்.
தந்தையின் வழியில், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் பள்ளி வாசல் தலைவராக, கிராமோதய சபைத் தலைவராக, மத்தியஸ்த சபை உறுப்பி னராக, அகில இலங்கை சமாதான நீதிபதியாக என்று பல தளங்களில் இயங்குபவன் என்று குறித்துக் கொண்டு தொடரலாம்.
ஆரம்பத்தில் வங்கியில் பணியாற் றிய அனுபவத்தைப் பகிருங்களேன்!
இலங்கை வங்கியில் நான் சேர்ந்த 1977 காலப்பகுதியில் கணினி வசதிகள் இருக்கவில்லை. பேரேடுகள் இருந்தன. அதனை தூக்கி எடுத்துவைத்துப் பதிவதே சிரமமாக இருக்கும். பதிவேடுகளைப் பதிவது, பரீட்சை மீதிகள் தயாரிப்பது, சமப்படுத்துவது, அறிக்கைகள் தயாரிப்பது என்பன அப்பொழுது கஷ்டமான பணியாகவே இருந்தது. இப்போது கணினி அப்பணிகளை மிக இலகுவாக்கி இருக்கின்றது.
வங்கியில் சேர்ந்த புதிதில், விவசாயக் கடன்களை அறவிடும் வெளிக்கள உத்தியோகத்தராகவும் நான் நியமிக்கப் பட்டிருந்தேன். வீடு, வீடாகச் சென்று கடன்களை அறவிட வேண்டிய கடமைப் பொறுப்பும் எனக்கிருந்தது. சூறாவளி கோரத் தாண்டவமாடி ஓய்ந்திருந்த சில மாதங்களின் பின், கடனை அறவீடு செய்வதற்காக நான் சென்ற பொழுது கண்ட காட்சி கதி கலங்க வைத்தது. கடனைக் கட்ட முடியாமல் இருப்பதற்கான காரணங்களைக் கேட்டபோது நெஞ்சம் நெகிழ்ந்தது. அப்போது அது ஒரு கவிதையாக நெஞ்சுக் குள் ஊற்றெடுத்தது. இன்னும் என் நினை வில் நிற்கும் அக்கவிதை இது…
‘‘இன்னும் கடனை ஏன்தீர்க்க வில்லை’’யென
உன்னி டத்தில் கேட்டேன்நான்
ஓ..!ஏன் அழுதாயோ?
எல்லோ ரிடத்தும் இயம்புதலைப் போலேதான்
சொல்லி வைத்தேன் உன்னிடத்தும்
சோகமேன் கொண்டாய்நீ?
சூறாவளி வந்து சுழன்றடித்து
உங்களது கூரையினைப் பிய்த்து குடிசைகளைச் சீரழித்துப்
பேராபத்தைத் தந்த
பெருங் கஷ்டம் சொன்னாய்நீ!
தீராப் பிரச்சினைகள் சொல்லி யழுதுநின்றாய்!
‘‘அப்பா இறந்து விட்டார்
அண்மையிலே’’ என்றுரைத்தாய்
அப்படியே பயிர்களதும்
அதைத் தொடர்ந்த வெள்ளத்தால்
செத்து மடிந்து சீரழிந்து போனகதை
செப்பி யழுதேநீ சிந்தை கலங்கி நின்றாய்!
உன்னைநான் நோவிக்க
ஒருபோதும் எண்ணவில்லை
என்றன் கடமையிது இதனால்
உனைக் கேட்டேன்.
என்னைநீ தவறாக ஏதும்
நினைத் திருந்தால்
பெண்ணே மறந்துவிடு
பிழை செய்ய வில்லை நான்!

இலக்கியத்துடன் உங்கள் வாழ்வை இணைத்துக் கொண்டது எப்போது? எப்படி?
பாடசாலைக் காலத்தில் இருந்தே பேச்சு, விவாதம், நாடகம் போன்ற துறைகளில் ஆசிரியர்களின் ஒத்துழைப் போடு ஈடுபாடு காட்டி வந்தேன். மட் / மெதடிஸ்த கல்லூரியில் படிக்கும் போது எனது ‘‘ஹோல்டம்’’ இல்லத்திற்காக விவாத, பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் சான்றிதழ்களைப் பெற்றிருக்கின்றேன்.
அதன் தொடர்ச்சியாகவே எழுத்துலக முயற்சிகள் அமைந்து வந்திருக்கின்றன. எழுபதுகளில், ‘‘சிந்தாமணி’’யில் நகைச்சுவை எழுதிப் பரிசு பெற்று, அதன்பின் ‘‘தினபதி’’யில் கிடைத்த கவிதாமண்டலம் பகுதியைப் பயன்படுத்தி அறிமுகம் பெற்றதனூடாக எனது படைப்பாக்க முயற்சிகள் தொடர்கின்றன.



எழுத்துலகில் பேசப்படும் ஒருவராகத் திகழ்கிறீர்கள். ஆரம்பத்தில் உங்கள் எழுத்துக்களுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?
இப்போது போல அப்போது பிரசுர வசதிகள் நிறைந்திருக்க வில்லை. இலங்கை யில் வெளிவந்த சில தினசரிப் பத்திரிகைகள், அவற்றின் வார வெளியீடுகள், சில சஞ்சிகைகள் இலங்கை வானொலி என்பனவற்றையே நமது படைப்புகளை வெளியிடுவதற்கு நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது. என்ற போதிலும், எனது படைப்புகள் இலங்கையில் வெளியான பெரும்பாலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம் பெற்றிருக்கின்றன. பத்திரிகை சஞ்சிகை களில் ஆசிரியர்களாக இருந்தவர்கள், பிரபலம் பெற்ற எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் இருந்தார்கள். தரமான படைப்புகளும் வெளி வந்தன.
எனது படைப்புகளுக்கும் சிறந்த வரவேற்புக்கள் கிடைத்தன. பத்திரிகை ஜாம்பவான் எனப் புகழ் பெற்றிருந்த தினபதி, சிந்தாமணி ஆசிரியர் எஸ். டீ. சிவநாயகம் ஐயா அவர்கள், சிந்தாமணி வாரப்பத்திரிகையில் எனது «சிவப்புக் கோடு «என்ற கவிதையைப் பிரசுரித்துப் பாராட்டி இருந்தார். அவருடைய காத்திரமான குறிப்பும் பாராட்டும் என்னை எழுத்துத் துறையில் ஊக்குவித்தது. அந்தக் கவிதை, அன்றைய இக்கட்டான பயங்கரவாத சூழல் குறித்து நானெழுதிய கவிதை.
கவிதை இதுதான்..
விடிந்து விட்டது
வெளிக்கிட வேண்டுமே!
இல்லத் தரசியே இங்குவா,
இப்படி பிள்ளையைக் கொண்டு வா
முத்தம் கொடுத்திட..!
கன்னம் இங்கே காத்திருக் கின்றது
இன்னுமோர் முத்தம்
எனக்கிடு இச்சென..!
வேலைக்கென்று நான்
வெளிக்கிடப் போகிறேன்
போருக் கென்று புறப்படல் போலது!
அடையாள அட்டை
அதனையும் கொண்டுவா
தடைகள் பற்பல
தாண்டிட வேண்டுமே!
கொண்டுவா இப்படி
கோப்பியைப் குடிக்கிறேன்
சென்று முடிக்குமோ
செல்கிற வாகனம்..?
செல்லும் வழியில்
அதிரடி, எதிரடி
எதிரெதிர் கொள்ளுமோ?
அதிலெதில் பட்டுநான்
இறையடி செல்வதோ?
சாதனை புரிந்த வீரனாய் நானும்
காரியாலயம் போய் அடைவேனோ?
காரியாலயப் படிகளைத் தாண்ட
நேரம் ஒன்பதைத் தாண்டி அங்கும்
‘‘சிவப்புக் கோடு’’ சிக்னல் செய்யுமோ?




காவியங்கள் படைப்பவர்களை மிக அரிதாகவே இப்போது காணக்கூடியதாக உள்ளது. அப்படி இருக்கையில், உங்களுக்கு காவியங்கள் எழுத தூண்டு கோலாய் அமைந்தது எது?
காவியம் எழுதுவது என்பது கடினமான முயற்சி யென்று சொல்வர். கற்பனை வளம், மொழியறிவு, தொடர்ந்து தொய்வு பெறாமல் கதையை நகர்த்திச் செல்லும் ஆற்றல் என்பன வாய்க்கப் பெற வேண்டும். இலங்கையில் வரன் முறையான காவியங்களை காப்பியக்கோ ஜின்னா படைத்து வருகின்றார். எனது காவியங்கள் மக்களின் வாழ்வியலை- அவர்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்கின்ற நவீன காவியங்கள். நவீன கவிதை,காவிய முன்னோடியாகப் பார்க்கப் படுபவர் பாரதியாரே. அவருடைய குயிற்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்பன நவீன காவியத்திற்கு முன்னுதா ரணமான படைப்புகள். இலங்கையில், மஹாகவி, முருகையன், நீலாவணன், அப்துல்காதர் லெவ்வை, எம்.ஏ. நுஃமான் உட்பட இன்னும் சிலர் நவீன காவியங் களைப் படைத்தனர்.பெரிய காண்டங்களாக அமைந்து விடாமல் சிறிய இயல்களாக அமைந்து மக்களுடைய வாழ்வியலை எளிமையாய், இயல்பாய் சொல்லக் கூடியவாறு அமைந்த நவீன காவிய வடிவம் எனக்குப் பிடித்திருந்தது.
மஹாகவி இலங்கையில் நவீன காவிய முன்னோடியாக இருந்தார். அவருடைய நவீன காவியங்களோடு, இலங்கையில் இருந்து வெளிவந்த நுஃமான், அப்துல்காதர் லெவ்வை, முருகையன், போன்றோரினதும் ஏனையோரினதும் பல நவீன காவிய நூல்களையும் நான் படித்திருக்கின்றேன்.இவற்றைப் படித்ததனால் ஏற்பட்ட உந்துதலும் நவீன காவிய முயற்சியில் நான் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கலாம். இப்போது இலங்கையில், நவீன காவிய வடிவத்தில் தொடர்ந்து இயங்குபவனாக நானே இருப்பதாக விமர்சகர்களால் நான் அடையாளப் படுத்தப்படுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. எனது நான்காவது நவீன காவியமும் (மீளப் பறக்கும் நங்கணங்கள்) அண்மையில் வெளிவந்திருக்கின்றது.
இதுவரை நீங்கள் எழுதிய நூல்கள் பற்றியும், அவைகளுக்கு கிடைத்த வரவேற்பு, விருதுகள் பற்றியும் குறிப்பிடலாமே!
எனது முதலாவதுகவிதைத் தொகுதி ‘‘பதம்’’ என்ற பெயரில் 1987ல் வெளிவந்தது எனது தனிப்பட்ட கவிதைகளின் தொகுப்பு அது. மருதூர்க்கொத்தனின் கனதியான அணிந்துரை அதற்கு அழகு சேர்த்தது. அண்மையில்,’’ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் பாலமுனை பாறூக்கின் சில தடங்கள்’’ எனும் தலைப்பில் பேராசிரியர் செ.யோக ராசா அவர்கள் அந்நூலை முழுமையாக ஆய்வு செய்திருந்தார்.
சந்தனப்பொய்கை 2009ல் வெளி வந்த எனது 2வது கவிதை நூல் .மத ஆன்மீகம் சார்ந்த கவிதைகள் அதில் இடம் பெற்றன. காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷெரிபுத்தீன், பேராசிரியர் கலாநிதி தீன்முஹம்மது ஆகியோர் அந்நூலுக்கு அணிந்துரை களைத் தந்திருந்தனர்.
கொந்தளிப்பு 2010ல் வெளியான எனது முதலாவது நவீன காவிய நூல். சுனாமிப் பேரவலம்,அதன் பின்னரான எமது தென்கிழக்கு முஸ்லிம் பிரதேசத்தாரின் வாழ்வியல், அரசியல், இருப்பு என்பன பற்றிப் பேசிய நவீன காவியம். வயல் பிரதேசத்தின் குழுக் குறியீட்டுச் சொற் களையும் இந்நூல் பிரதிபலித்தது. கவிஞர் மு.சடாட்சரன், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோரின் அணிந்துரை யோடு இந்நூல் வெளிவந்தது. இந்நூல் இலங்கை சாஹித்ய மண்டலத்தின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் சான்றிதழைப் பெற்றுக் கொண்டது.
2011ல் எனது 2வது நவீன காவியம் தோட்டுப்பாய் மூத்தம்மா வெளிவந்தது.செய்னம்பு என்ற பெண்ணை முதல்நிலைப் பாத்திரமாகக் கொண்ட கதையம்சத்தோடு வெளிவந்த அக்காவியம் முஸ்லிம் மக்களின் பேச்சுமொழி, பழமை,பழக்க வழக்கங்கள்,
சடங்குகள்,சம்பிரதாயங்கள்,என்பவற்றைப் பதிவுசெய்யும் படைப்பாகவும் இருந்தது. பேரா. .செ.யோகராசா,ஏபிஎம் இத்ரீஸ் என்பாரின் அணிந்துரையோடு வெளிவந்த இந்நூலுக்கு இலங்கை அரச சாஹித்ய மண்டல விருது, கொடகே நிறுவன சாஹித்ய மண்டல விருது ,இலங்கை இலக்கியப் பேரவை சான்று என்பன கிடைத்தன.
2012ல் எஞ்சியிருந்த பிரார்த்தனை யோடு என்ற எனது 3 வது காவிய நூல் வெளிவந்தது.இந்திய அமைதி காக்கும்படை இலங்கையில் இருந்த காலகட்ட யுத்த சூழல், கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக் கிடையே ஏற்பட்ட இனவிரிசல் என்பன வற்றை அந்நூல் பேசியது. பேரா. எம்ஏ.நுஃமான் அவர்களின் எனது கவிதைகள், காவியங்கள் பற்றிய விரிவான பார்வை ‘‘பாலமுனை பாறூக்: கவிதைகளும் காவியங்களும்’’எனும்தலைப்பில் அந்நூலில் இடம் பெற்றது.
2013ல் ‘‘பாலமுனை பாறூக் குறும்பாக்கள் ‘‘ எனும் தலைப்பில் எனது 100 குறும்பாக்களின் தொகுதி வெளியாகிற்று. ஆங்கிலக் கவிதை வடிவமான Limerickஐ தமிழுக்கு இலங்கைக் கவிஞர் மஹாகவி அவர்கள் கொண்டுவந்து குறும்பா என்று பெயரிட்டார். குறுமையும குறும்பும் சேர்ந்த அந்த வடிவம் என்னைக் கவர்ந்தது.
இலங்கையில் குறும்பா வடி வத்தைக் கையாளுபவர்கள்் மிகச் சிலரே. தற்போது, அவ்வடிவத்தை இலக்கியச் செழுமை யோடு ,பல்வேறு பரசோதனை முயற்சிளையும் செய்து விரிவுபடுத்தி அடையாளப்படுத்தி வருகின் றேன். எனது குறும்பாக்களுக்கு நல்ல வரவேற்பிருப்பதை விமர்சகர்கள், ஆய்வாளர்களின் குறிப்பு களினால் உணர முடிகின்றது. எனது அந்த நூலுக்கு பேரா.சி. மௌனகுரு, புதுக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர், முனைவர் மு.இ. அகமது மரைக்காயர், கவிஞர்ஏ.எம்.எம். அலி ஆகியோர் அணிந்துரை வழங்கி இருந்தனர்.
எனது ‘‘வலைக்குள் மலர்ந்த வனப்பு’’ (2017) முக நூலில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு. தமிழ்நெஞ்சம் ஆசிரியர் அமின் அவர்களின் முயற்சி யினால் வெளிவந்த நூல் அது. எனது முக நூல் லிங்கை மாத்திரம் பெற்றுக் கொண்டு அதனை அவர் நூலாக்கம் செய்து உதவியிருந்தார். கவிஞர் ஜவாத் மரைக்காரின் அணிந்துரை, இசைவாசி க.சிவராஜின் சிறப்புரை, தமிழ்நெஞ்சம் அமின் அவர்களின் மகிழ்ந்துரை என்பன நூலை அலங்கரித்தன.
‘‘பாலமுனை பாறூக்கின் மூன்று நவீன காவியங்கள்’’ எனது முந்தைய மூன்று நவீன காவியங்களின் தொகுப்பு இது.2020ல் ஜீவநதி வெளியீடாக வெளி வந்திருக்கின்றது. எனது மூன்று காவியங் களையும் ஆய்வு செய்து சென்னை புதுக்கல்லூரியில் திரு சேகர் என்பவர் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். இதனால் இக்காவியங்களை ஒருசேரப் பார்க்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.
மீளப்பறக்கும் நங்கணங்கள் 2020ல் வெளிவந்த எனது நான்காவது நவீன காவியம் .தள்ளாத வயதில் பெற்றோர் பிரித்து வைக்கப்படுவதால் ஏற்படும் உடல் உளநோய்கள் குறித்தும், உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்தும் பேசுகின்ற நூல். பேராசிரியர் செ.யோகராசா, கலாநிதி த.கலாமணி ஆகியோரின் அணிந்துரை யோடு வெளிவந்திருக் கின்றது;



இலக்கியத்துறையில் முழு ஈடுபாட் டோடு இயங்கி வரும் நீங்கள், இலங்கை வானொலி நிகழ்ச்சிகள், கவியரங்கங்கள் போன்றவைகளிலும் கலந்து சிறப்பிப்பதை காணக் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது?
வானொலிக் கவியரங்குகள், நிகழ்ச்சிகள் என்பவற்றில் முடியுமான வரைப்் பங்கேற்கிறேன். வானொலி, சமுக வலைத்தள தொலைக் காட்சிகளில் இடம்பெற்று வருகின்ற கவியரங்க நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி நடத்தி வருகின்றேன். இலக்கியத்தில் இருக்கின்ற ஈடுபாடு, அவ்வாறான நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்யவேண்டுமென ஆர்வம் காட்டிவரும் நிறுவனங்களின் வரவேற்பு, நண்பர்களின் ஆதரவு என்பன எனது இவ்வாறான பங்களிப்பினைச் சாத்தியமாக்கு கின்றன என்று நினைக்கின்றேன்.
இதுவரை நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட உங்களால் மறக்கவே முடியாத நிகழ்வுகளாகப் பார்க்கப்படுபவை?
இலக்கிய நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே என்னைப் பொறுத்த வரை மறக்க முடியாதவை யும் மனதிற்கு இன்பமளிப் பவையுமே. அப்படி எனது ஒவ்வொரு நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் மறக்க முடியாதவை.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் – மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் பங்கேற்கக் கிடைத்தமை, இந்திய மாநாட்டில் ‘‘ஊடகம்‘‘ என்ற தலைப்பில் கவிபாடிக் கவனத்தைப் பெற்றமை, யோ. புரட்சி யாழ்ப்பாணத்தில் நடத்திய 1000 கவிஞர்களின் பெருநூல் வெளியீட்டிலும் பெரு விழாவிலும் அதிதியாக கலந்து கொண்டு கௌரவம் பெற்றமை, கல்முனையில் இலங்கை – இந்திய எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக அமைந்த கரவாகு இலக்கியச் சந்தி நிகழ்ச்சியினை தலைமை தாங்கி நடத்தியமை என்பன இன்றும் மகிழ்ச்சியைத் தருகின்ற வித்தியாசமான இன்பரசத்தை ஏற்படுத்திய மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
உங்களுக்கு கிடைத்த விருதுகள், கௌரவிப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?
இலங்கை அரசின் கலை, இலக்கியம் தொடர்பான உயர்விருதான ‘‘கலாபூஷணம்’’
கிழக்கு மாகாண கலாசார பண் பாட்டமைச்சு வழங்கும் உயர் விருதான, ‘‘வித்தகர் விருது’’
அரச சாஹித்ய மண்டலத்தின் நூலுக்கான விருது
கொடகே நிறுவனத்தின் நூலுக்கான ‘‘மஹாகவி உருத்திர மூர்த்தி விருது’’
கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ‘‘சிரேஷ்ட கவிஞர்’’ விருது
புகவத்தின் ‘‘பாவேந்தல்’’ பட்டம்காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் வழங்கிய ‘‘இலக்கிய வாரிதி‘‘ விருதும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கான பணப் பரிசும்
புலவர் மணி ஆமு.ஷரிபுத்தீன் அவர்கள் நினைவாக இடம்பெற்ற சர்வதேசக் கவிதைப் போட்டியில் முதற் பரிசு.
இலங்கை கலாசார அமைச்சு வழங்கிய ‘‘சுவதம்’’ விருது. இவற்றினோடு, கவிப்புனல், கவிஞர் திலகம், சிராஜுல் புனூன் என்று பல்வேறு அமைப்புகளாலும் வழங்கப்பட்டுள்ள பட்டங்களையும் ஞாபகப்படுத்தலாம்.


இலங்கையில் இலக்கியத் துறையின் வளர்ச்சி தற்போது எந்த நிலையில் உள்ளது?
இலங்கையின் இலக்கியத் துறையின் வளர்ச்சி காலகட்டங்களாகப் பிரித்து நோக்கப்படுகின்றது. நூல்வெளியீடுகள், எழுத்தாளர் சங்கங்களின் தோற்றம் அவற்றின் செயற் பாடுகள், சஞ்சிகைகளின் வரவு என்பவற்றை அடிப்படையாக வைத்தே இலக்கிய வளர்ச்சி நோக்கப்பட்டு வந்திருப்பதை அவதானிக்க முடியும்.
இலங்கையில் புதிய இலக்கிய முயற்சிகள் பெருகியிருக்கின்றன. புதிய இலக்கிய வடிவங்களில் (ஹைக்கூ,லிமரிக்ஸ்)இளைஞர்கள் காட்டிவருகின்ற அக்கறை, பிரசுர வசதிகள், இலத்திரனியல் ஊடகங் களினால் ஏற்பட்டுள்ள பன்னாட்டு இலக்கியத் தொடர்பு,, இலக்கியக் குழுமங்கள் நடத்திவருகின்ற துறைசார் இலக்கியப் பயிற்சி வகுப்புகள், என்பன அவ்வாறான வளர்ச்சியை சாத்தியப் படுத்துகின்றன என்று சொல்ல முடியும்.
யுத்தநிலைமையில் எம்மவர்கள் புலம் பெயர்ந்த நிலையில், புலம் பெயர்ந்தவர் களின் இலக்கிய முயற்சிகளும் இலங்கையின் இலக்கியத்தின் புதுவகையான திருப் பத்தை ஏற்படுத்தி இருப்பதைக் குறிப்பிட முடியும்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கியம் சார்ந்த விருதுகளுக்காகத் தகுதியானவர்கள் உள்வாங்கப் படுகிறார் கள் என நினைக்கிறீர்களா?
இலக்கியம் சார்ந்த விருதுகளை, இலங்கையில் அரசாங்க கலாசார அமைப்புகள், அரச மாகாண அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், குழுமங்கள் என்பன வழங்கி வருகின்றன.
இவ் விருதுகளுக்குத் தகுதியான வர்கள் உள் வாங்கப்படுகின்ற போதிலும் சில வேளைகளில் சில தவறுகள் நடந்து விடுவதை அவதானிக்க முடியும். இத்தவறுகள் பின் வரும் சில காரணங்களினால் ஏற்படுவதாகச் சொல்லப் படுகின்றது.
விருதுக்காக விண்ணப்பிக்க வேண்டி யிருப்பது (தகுதியான சிலர் விண்ணப்பித்து விருது பரிசுபெறுவதை விரும்புவ தில்லை)
வயதுக் கட்டுப்பாடு .(இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் குறிப்பிட்ட வயதை அடையாவிட்டால் விருது கிடையாமலிருப்பது. அதே வேளை மிகக் குறைந்த கால ஈடுபாட்டோடு குறிப்பிட்ட வயதை அடைந்து விட்ட வருக்கு விருது பெறும் வாய்ப்புக் கிடைப்பது.)
சில தனியார் நிறுவனங்கள்,குழுமங்கள் உறுப்பினர்களுக்கே விருதுகளை வழங்கு வது – பட்டங்களை அள்ளி இறைப்பது.
உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து விருது வழங்குவது..
போட்டி விதிமுறைகளில் உள்ள குறைபாடு, புள்ளி வழங்கும் முறையில் உள்ள குறைபாடு .
இப்படி… பல.
ஒரு சமூகத்தின் கட்டமைப்புக்கு இலக்கியத்தின் பங்களிப்பு எந்தவகையில் வழிகோலுகிறது?
இலக்கியம் என்பது சமூகத்தின் கட்டமைப்புக்கு பல வழிகளில் பங்களிப்புச் செய்கின்றது. ஒழுக்க விழுமியங்களை, அற நெறிக்கருத்துகளை சமுகத்திற்கு எடுத்துச் சொல்வதிலே இலக்கியம் பங்காற்றுகின்றது. நமது பண்பாடு, மரபு என்பவற்றை புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதிலும் அதன் பங்கு இருக்கின்றது.
மேலும், புதிய சிந்தனைகளை விதைப் பதிலும் ,சமூகத்தைத் தடம் புரளாமல் கட்டிக் காப்பதிலும் , மனதை இரம்மியப் படுத்தி சுகானுபவத்தைத் தருவதிலும் இலக்கியம் பங்களிப்புச் செய்து வருவதனையும் இங்கு குறிப்பிடலாம்.

இந்த சமுதாயத்தில் ஒரு கவிஞ னாக, கலைஞனாக ஒரு சிறந்த இலக்கியவாதியாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை என்ன?
எழுத ஆரம்பித்த பின்பும் ஒரு நல்ல வாசகனாக – கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு செயற்படுவது,
குழுநிலைப்பட்ட எண்ணத்தால் பிரிந்து விடாமல் பல தரப்பட்ட இலக்கிய வாதிகளையும் வாசிப்பது,
புதிது – பழசு என்ற விதத்தில் பிரிந்துவிடாமல் பழந்தமிழ் இலக்கிய நூல்களை கற்பதிலும், புதிய இலக்கிய வடிவங்களை தேடிக் கற்பதிலும் ஆர்வம் செலுத்துவது,
விருதுகள், பரிசுகள் என்பவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் எழுதிக் கொண்டே இருப்பது,
இவை ஒரு நல்ல படைப்பாளியாக நிலை நிறுத்த உதவக் கூடியன என்று நான் கருதுகின்றேன்.
நம் தமிழ்நெஞ்சம் இதழின் இலங்கைப் பிரதிநிதியாக ஆசிரியர் குழுவில் பயணிக்கும் தாங்கள் தமிழ்நெஞ்சம் பற்றிய கருத்து என்ன?
தமிழ்நெஞ்சத்தின் இலங்கைப் பிரதிநிதியாக ஆசிரியர் குழுவில் எனக்கு இடமளிக்கப்பட்டிருப்பதனை ஒரு உயர் கௌரவமாகவே நான் பார்க்கின்றேன்.
தமிழ்நெஞ்சம், தமிழ்கூறும் நல்லுல கெங்கும் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தன் மொழி அழகால்,இலக்கியச் செயற்பாட்டால், எழுத்தூழியத்தால் பெயர் பதித்திருக்கின்ற இதழ்.
மூத்த இலக்கியவாதிகளையும் புதியவர்களையும் ஒருசேரக் கவர்ந்திருக் கின்ற இதழ் இது. பழந்தமிழ் இலக்கிய வடிவங்களோடு, புதிய வடிவங்களை அறிமுகப் படுத்துவதில் அக்கறை செலுத்துகின்ற இதழ். கலை இலக்கியத்தின் பல்வேறு அமசங்களையும் உள்ளடக்கி அழகான வடிவமைப்பில் வெளி வருகின்றது.
உண்மையில் மொழிப் பற்றோடு, ஐம்பது வருடமாகத் தொடர்ந்து, இப்படி ஒரு நல்ல இதழை நமக்குத் தருகின்ற தமிழ்நெஞ்சத்தின் ஆசிரியராகிய அமின் தாஙள் பாராட்டப்படவேண்டியவர்.
தங்களின்் தேக நலனுக்காகப் பிரார்த்திக்கின்றேன்.


2 Comments
VijayalakshmiRadhakrishnan · ஜூலை 1, 2021 at 10 h 57 min
சிறப்பு, வாழ்த்துக்கள்
க.பன்னீர் செல்வம். சென்னை · ஜூலை 3, 2021 at 12 h 38 min
ஒரு மாபெரும் கவி நூலாசிரியரின் பெயருக்கு பின்னால் இருக்கும் சிகரச் சிறப்புகளை செம்மையாய் செதுக்கி வழங்கிய சிறப்புப் பேட்டித் தொகுப்பு கண்டு மனம் தோய்ந்துப் போனேன்! மிகவும் மகிழ்கிறேன் பெருங்கவிஞரைப் போற்றுகிறேன் இந்தச் சிறப்புப் படைப்பை வழங்கிய தமிழ்நெஞ்சம் ஆசிரியர் ஐயா அவர்களைப் பாராட்டுகிறேன் நெகிழ்வான நல்வாழ்த்துகள்