

ஆண்டுதோறும் பிரான்சு கம்பன் கழகம், கம்பன் விழாவைச் சிறப்பாக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிறப்பான வர்களை அழைத்துச் சிறப்புச் செய்து விழாக்கொண்டாடுவது வழக்கம். இவ் வாண்டு கொரோனாக் காலத்தில் விழாக் கொண்டாட முடியுமா என்ற ஐயப்பாடுடன் அதிகமானவர்களை அழைக்காமல் குறைந்த எண்ணிக்கையாளருடனே விழாச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது.
கம்பன் கழகத்துக்காக உழைத்த நல்லிதயம் பாவலர்ஆதிலட்சுமிவேணுகோபல் அவர்கள் மறைவை நினைவு கூறும் வகையில் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவராலும் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செய்யப்பட்டது.
இசைமாமணி கிருபாபரணன் சிவபாதசுந்தரம் திருமதி மணியன்செல்வி இவர்களின் தமிழிசையுடன் பாவலர் பயிலரங்க மாணவ மாணவியரின் இறை வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டுப் பாவலர் நெய்தல்நாடன் வரவேற்புரையைக் கவிதை வடிவில் நிகழ்த்த விழாத்தலைமையைப் பாரிசு பார்த்தசாரதி நிகழ்த்தினார்.
ஆண்டுதோறும் தமிழுக்கு உழைத்த பெருமக்களுக்கு கம்பன் விருது அளித்து மகிழும் கம்பன் கழகம் இவ்வாண்டு பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்பாளர் திருமிகு அ. நாகராசன் அவர்களுக்கும், தமிழ் இதழியல் செல்வராகத் திருமிகு தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கும் விருதளித்துச் சிறப்புற்றது.
கம்பன் விழாமலர் வெளியிடப் பட்டது. அழகிய வண்ணப் பக்கங்களால் அமைந்திருந்தது மிக்க சிறப்பு. மலரினைத் திருமிகு செய மாமல்லன் இலிங்கம் வெளியிடத் திருமிகு செயசீலன் பெற்றுக் கொண்டார்.
பாட்டரசர் கி. பாரதிதாசன் எழுதிய நூல்களிரண்டு வெளியீடு கண்டது. மார்கழித் திங்கள் கவிதை நூலைத் திருமிகு போர். என்செல்வம் வெளியிட முதல் நூலினைப் பாவலர் கவிப்பாவைப் பெற்றுக்கொண்டார்.
வெண்ணிலவே… வெண்ணிலவே கவிதை நூலைத் திருமிகு மீ.கிருட்டினமூர்த்தி வெளியிட முதல் நூலினைத் திருமிகு தீபன் நடராசன் பெற்றுக்கொண்டார்.
இறுதியாகப் பாட்டரசர் கி.பாரதிதாசன் அவர்கள் ‘‘ஆழ்வாரும் கம்பரும்’’ எனும் தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுபெற்றது.
செய்தி :
நிரவி நிலவன்


கம்பன் விருது பெற்ற
தமிழ் இதழியல் செல்வர்
தமிழ்நெஞ்சம் அமின்
நன்றி நவிலல்!
கம்பரின் பெயரால் இங்கே
கவின்மிகு விருத ளித்தீர்!
விம்மிடும் நெஞ்சத் தாலே
வியத்தகு நன்றி சொல்வேன்!
எம்பெரு மானார் கம்பர்
இனிதுடன் அளித்துச் சென்ற
நம்மெழில் தமிழுக் கன்றோ
நவிலுவேன் நன்றி இன்றே!
கடல்மலை கடந்த போதும்
களிக்கிறோம் தமிழால் தானே
உடல்பல என்றபோதும்
உயிர்க்கிறோம் தமிழால் தானே
தடைபல வந்தபோதும்
தாங்குவோம் தமிழால் தானே
இடையறா நம்மி யக்கம்
இயங்குதல் தமிழால் தானே
இத்தனை தொலைவுக் கப்பால்
எம்மினம் வாழும் போதும்
அத்தனை நெஞ்சத் துள்ளும்
அருந்தமிழ் ஒன்றே வாழும்
வித்தகர் குழுமம் இந்த
வியன்றமிழ் மேடை யேற்றிச்
சொத்தெலாம் வழங்கி னாற்போல்
உளந்தொழ விருது தந்தீர்!
ஆவலாய் வரும்மா ணாக்கர்
அருந்தமிழ் பாக்கள் யாவும்
பாவலர் அரங்கின் மூலம்
பயின்றிட உதவும் ஆசான்
சேவலாய் மயிலாய் வந்து
செந்தமிழ் மொழிக்கு நல்ல
காவலாய்த் தமிழுக் கான
கவிக்கடல் பாட்டின் வேந்தர்
கூடிய பெரியோர் மற்றும்
குலவிடும் சீடர் கூட்டம்
பாடியே மனத்தை வெல்லும்
பைந்தமிழ்க் கவிக ளுக்கு
நாடியே நானும் வந்து
நல்குவேன் நன்றிப் பாக்கள்!
ஈடிலாத் தமிழைக் கொண்டே
இயம்புவேன் நன்றி நன்றி!

2 Comments
நிறைமதி நீலமேகம் · அக்டோபர் 30, 2020 at 10 h 34 min
இனிய நல்வாழ்த்துகள்..
பூங்குழலிபெருமாள் · அக்டோபர் 30, 2020 at 10 h 38 min
தகுதியானவருக்குத் தகுதியான விருது ஏற்றிவிடும் ஏணி பைந்தமிழ்த்தேனி
அயராதுழைக்கும் இதழ்ப்பணி எழுத்தாளர் தமிழ்நெஞ்சன் ஐயாவிற்கு பாராட்டுகள்