1.0 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் அறுபதுகளளவில் முற்போக்குக் கவிதைச் செல்நெறி முகிழ்க்க ஆரம்பித்தது, எழுபதுகளிலும் தொடர்ந்தது. இந்த எழுபது காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்டு இத்தகைய கவிதை எழுதியோருள் ஒரு சாரார் குறிப்பாக முஸ்லிம் கவிஞர்கள் இஸ்லாமிய மதப்பற்றுடையவர்களாகவும் விளங்கினர். கீழைத்தேய நாடுகளிலே இது தவிர்க்க வியலாததொன்று என்ற புரிதலின்மையும், இத்தகைய கவிஞர்களின் தொகுப்புகள் வெளிவரத்தாமதமானமையும், வெளிவந்தவைகூட கிடைப்பதற்கரிதாகவிருந்தமையும் காரணமாக ஈழத்துக் கவிதை வரலாற்றில் இடம்பெறத்தவறிய கவிஞர்கள் சிலருள் முக்கியமானவர் பாலமுனை பாறூக்! இவ்விதத்தில் அறியப்படாத ஆரம்பகாலகட்ட (1970-1990) கவிதைகளில் இவரின் முக்கியத்துவம் பற்றியே இங்கு கவனிக்கப்படுகின்றது.
இவரது முற்போக்கு நோக்குடைய கவிதைகளுள் கணிசமானவை சமகால ஈழத்து முற்போக்கு சஞ்சிகைகளான குமரன், தேசாபிமானி, அக்னி, களம், புதுயுகம், புதுக்குரல் முதலானவற்றிலும் தமிழ்நாட்டு செம்மலர், திருப்பம், ஏன் முதலானவற்றிலும் பன்முகப்பரிமாணங்களுடன் வெளிப்பட்டுள்ளன.
பாவேந்தல் பாலமுனை பாறூக் இலக்கியப் பணியில் பொன்விழாக் காணுகின்றார். தமிழ்நெஞ்சத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர். இலங்கை இந்திய கலை உறவுப் பாலமாக இருப்பவர்.இலங்கையில் கலாபூஷண விருது, அரச சாஹித்ய மண்டல விருது,கொடகே சாஹித்ய விருது, கிழக்கு மாகாண வித்தகர் விருது யாழ் இலக்கியப் பேரவை சான்று உட்படப் பல்வேறு விருதுகளையும் சான்றுகளையும் பெற்றவர்.
புலவர்மணி ஆ.மு ஷரிபுத்தீன் ஞாபகார்த்த சர்வதேச மரபுக்கவிதைப் போட்டியிலும் முதலிடம் பெற்றுப் பணப்பரிசுக்குத் தேர்வானவர்.
இலங்கை, இந்திய , மலேசிய இலக்கிய மாநாடுகளில் பங்கேற்பவர்..
வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் சுடர் ஒளி பத்திரிகைக் குழுமம் இவரின் வாசிப்பு தொடர்பான கவிதையைப் பதாகையாக இலங்கையின் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் காட்சிப் படுத்தியிருப்பது குறி்ப்பிடத் தக்க விடயம்.
பொன்விழாக்காணும்
பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களை வாழ்த்துவதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் அடைகின்றது. அவரின் பொன்விழா தொடர்பில் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
1.1.1 கொள்கைப்பிரகடனம்
நாங்கள் புதிய பறவைகள்
‘‘…………..
நாங்கள்
இந்தயுகத்தின் ஏற்றத் தாழ்வுகள்
இந்தயுகத்தின் இழிச லொழுக்குகள்
என்பவை கண்டு சினந்தவராதலால்
இந்தப்புவியில் இவற்றையொழிக்க
நடந்தும் ஓடியும்
இன்னும் சொன்னால்
பறந்தே நாங்கள் செயற்படப் போகிறோம்.’’
1.1.2 சமூகப் பிரச்சினைகள்
1.1.2.1 தீர்வு:
அறுவைச் சிகிச்சை
‘‘கறுப்புக் கொடிகளும்
உண்ணாவிரதமும்
பொருத்தமானதா
புதுயுகம் சமைக்க
பருத்த உடம்புகள்
பார்த்து ரசிக்க
கறுப்புக் கொடிகளை
உயர்த்திப் பிடித்து
பசியால் நாமா வாடவும் வேண்டும்?
பிரசவம் ஒன்று நிகழ்வதில் தடையெனில்
அறுவைச் சிகிச்சையே அதற்கு வைத்தியம்’’
1.1.3 சமூக எழுச்சி
‘‘விழலுக்கு நீரிறைத்து மாய மாட்டோம்
வேதனைகள் தீர்க்காது ஓயமாட்டோம்
விழித்துவிட்டோம், இனியும்நாம்
வழிதவறி வீழ மாட்டோம்
புரியாத புதிரெல்லாம் புரிந்ததாலே
புறப்பட்டோம், ஆகையினால்
சரித்திரத்தை மாற்றிவிடத் தயங்கமாட்டோம்
உலக்கையராய் எமை மதித்து
உதைத்த காலம்
ஓடோடிப் போக
இளங்காலைச் சூரியனாய் எழுந்தே விட்டோம்
இனி இருள்கள் இறந்துவிடும்
வெற்றி காண்போம்
………………’’
1.3 காதல்
புரிந்துணர்வுக்காதல்
வித்தியாசமானதொரு காதல் உறவின்் வெளிப்பாடாக அமையும் கவிதையின் (காதலிக்கு ஒரு கடிதம்) ஒருபகுதி பின்வருமாறு :
‘‘………………….
சொன்னபடி நீசெய்தாய்
சுணங்கியும் தானிருந்தாய்
என்னை அடைவதற்காய்
இருவருடம் காத்திருந்தாய்
என்னால் இயலவில்லை
தங்கைகளைைைக் க ரைசேர்க்க
நல்ல வரன்தேடி
நாயாக நான் அலைந்தும்
விலைவாசி உயர்வேபோல்
மலையாகி, சீதனமும்
உயரத்தில் இருப்பதனால்
ஒன்றும் முடியவில்லை
என்னை அடைவதற்காய்
இருவருடம் காத்திருந்த
அன்பே உனக்கெனது
ஆசிர்வாதங்கள்..’’
ஏனையோர் போல் ஏமாற்றிச் செல்லாமல் பொருளாதாரச் சிக்கல் காரணமாக, தனது காதலியைத் திருமணம் செய்யாமல், அவளது திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கிறான் இக்காதலன். வித்தியாசமான யதார்த்த நிலைப்பட்ட காதலைப்பாடிய நுஃமான் போன்ற மிகச் சிலருள் பாலமுனை பாறூக்கும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது!
2.1. மத்தியதர வர்க்கம்
படைப்பாளிகளுள் கணிசமானோர் ஆங்கில அரசு உருவாக்கிய மத்தியதர வர்க்கத்தினராகவிருப்பினும் அவ்வர்க்கத்தினரின் தொழில்சார் – குடும்பம்சார் – பிரச்சினைகளை பற்றிச் சிந்திப்பது அரிது. மாறாக, பாலமுனை பாறூக்கின் கவிதைகளில் இவ்விடயமும் வெளிப்பட்டிருக்கிறது! இவர்களது வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்கள் இவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, காரியாலயத்திற்கு நேரத்திற்கு செல்லமுடியாத நிலை, ‘சிவப்புக் கோட்டு» பிரச்சினைகள், எவ்வித முன்னேற்றமுமின்றி எழுதுவினைஞனாக நீண்ட காலமிருப்பது முதலான பிரச்சினைகள் சார்ந்த கவிதைகள் பதம் தொகுப்பிலே காணப்படுகின்றன (எ-டு : காரிகையே நீயே சொல், சிவப்புக் கோடு, இன்னும் நீ இலிகிதரா?)
2.1.1 வங்கித் தொழில் அனுபவம் :
எழுத்தாளராகவிருக்கின்ற வங்கி அலுவலர் எவரும் தமது அனுபவங்களை வெளிப்படுத்துவதில்லை, மாறானது இக்கவிஞர் நிலை என்பதற்குப் பெண்ணே நீ மறந்துவிடு! என்ற கவிிிதை சான்று பகர்கின்றது.
எ-டு
……………….,…..
‘இன்னும் கடனை ஏன் தீர்க்கவில்லை’யென
உன்னிடத்தில் கேட்டேன் நான்,
ஓ.. ஏன் அழுதாயோ?
எல்லோரிடத்தும் இயம்புதலைப் போலேதான்
சொல்லிவைத்தேன் உன்னிடமும்
சோகமேன் கொண்டாய் நீ?
தீராப் பிரச்சினைகள் சொல்லியழுது நின்றாய்
உன்னைநான் நோவிக்க ஒருபோதும்
எண்ணவில்லை
என்றன் கடமையிது,
இதனால் உனைக் கேட்டேன்
என்னைநீ தவறாக ஏதும் நினைத்திருந்தால்
பெண்ணே மறந்துவிடு!
பிழைசெய்யவில்லை நான்!!’’
3 மதப்பற்று
இஸ்லாமிய மதப் பற்றுச்் சார்பான கவிதைகளும் பன்முகப் பார்வையோடு வெளிப்படுகின்றன.
(I) மாநபி பெருமை (II) நோன்பின் சிறப்பு (III) ரமலான் பிறை முதலானவை சார்ந்த கவிதைகள் பதம் தொகுதியில் இடம்பெற்றுள்ளனமை இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது!
4. மதப்பற்றும் முற்போக்கும்
இஸ்லாமிய மதப்பற்றும் முற்போக்கும் இணைந்துள்ள கவிதைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது ‘மரணம்» . இதன் ஒருபகுதி பின்வருமாறு அமைகிறது.
‘‘………………….
எத்தனையோ மையத்தை
குளிப்பாட்டிக் கபனிட்டு
மையத்துக்கென்றே
மார்க்கத்தில் சொன்ன
அத்தனையும் செய்த
அவர் இன்று மையத்தா?
அல்லாஹ் பெரியவனே,
அனைத்தும் அவன்கையில்!
யாரை எவ்விடத்தில்
என்றவனைக் கேட்பவர் யார்?
மரணத்தை நினையாதோர்
மானிலத்தில் பலருண்டு
முஅத்தினார் மௌத்தானார்!
இந்த உலகிற்கு இவர்
எதையும் சேர்க்கவில்லை
இதனாலே
போடியார் வீட்டு மௌத்திற்கு
வந்ததுபோல்
ஆள்கூடி வரவில்லை
அநேகம்பேர் இருக்கவில்லை
இறைவன் பெரியவன் நீ!
எல்லாம் அறிந்தவன் நீ!
எந்த உலகிற்கு
இவர் சேர்த்து வைத்தாரோ
அந்த உலகில்
அவரை நீ வாழவைப்பாய்
உன்றன் கிருபைக்கே
உளமுருகி நிற்கின்றோம்!’’
5. போர்க்கால அவலங்கள்
எண்பதுகள் தொடக்கம் முனைப்புறத் தொடங்கிய இப்பொருண்் மரபின் வெளிப்பாடுகளும் இவரது கவிதைகளில் தலைநீட்டுகின்றன. அன்றாட வாழ்க்கை போர்க் காலச் சூழலில் எதிர்கொண்ட சிக்கல்கள் கவிதைகளில் இடம்பிடித்துள்ளன.
‘‘……………..
வேலைக்கென்று நான்
வெளிக்கிடப் போகிறேன்
போருக் கென்று
புறப் படல் போலது!
அடையாள அட்டை
அதனையும் கொண்டுவா,
தடைகள் பற்பல
தாண்டிட வேண்டுமே!
செல்லும் வழியில்
அதிரடி, எதிரடி
எதிரெதிர் கொள்ளுமோ?
அதிலெதில் பட்டுநாம்
இறையடிசெல்வதோ?
கொண்டுவா இப்படி
கோப்பியை குடிக்கிறேன்
சென்று முடிக்குமோ
செல்கிற வாகனம்?
சாதனை புரிந்த
வீரனாய் நானும்
காரியாலயம்
போய் அடைவேனோ?’’
‘சிவப்புக்கோடு» என்ற கவிதையின் ஒருபகுதியே மேலே தரப்பட்டுள்ளது. இவ்வாறான போக்குடைய அதாவது போர்க்காலம் அன்றாடவாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதித்தது என்பதான நோக்கில் எழுதப்பட்ட கவிதைகள் கிழக்கிலே குறைவாக வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
6. இனி இதுவரை கூறப்பட்டவாறமைந்த பொருள் மரபுசார்ந்த கவிதைகளின் வெளிப்பாட்டு முறைபற்றியும் சில கூறவேண்டும்
அவையாவன.
6.1 ஈழத்தில் புதுக்கவிதை, தமிழக ‘‘எழுத்து’’ ஊடாக அறுபதுகளில் ஆரம்பித்தாலும் ‘வானம்பாடி» ஊடாகவே ஈழத்துக் கவிஞர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இத்தகைய வானம்பாடிக் கவிஞர்களே முற்போக்கு நோக்குடைய புதுக்கவிதைகளை முதன்முதல் எழுத ஆரம்பித்தாலும் இத்தகைய கவிஞர்கள் பலரின் கவிதைகளில் குறைபாடுகள் சில – உதாரணமாக, கோஷங்கள், மலினமான சொற்பிரயோகங்கள், அந்நியமான படிமங்கள், குறியீடுகள், அநாவசியமான வடமொழிப்பிரயோகங்கள், மனோரதியப்பாங்கு, முதலியன வெளிப்பட்டிருந்தன. ஈழத்துக் கவிஞர்களிடம் இவ்வழிச் செல்வாக்குகள் வெளிப்பட்ட சூழலில் வ.ஐ.ச ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சிவசேகரம் முதலான சிலரே தரமான கவிதைகளை எழுதுகின்றனர் இவ்வரிசையில் இப்போது பாலமுனை பாறூக்கும் இணைந்து கொள்கின்றார்
6.2 படர்க்கை நிலையை இயன்றளவு தவிர்த்து, தன்மை இடத்திலும் பாத்திரங்களின் கூற்றாகவும் யதார்த்தமான சம்பவங்கள், குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள் முதலானவற்றை அடித்தளமாகக் கொண்டும் இவரெழுதியமை காரணமாக ஏனைய பெரும்பாலான கவிஞர்களது கவிதைகளில் காணப்பட்ட சில குறைபாடுகள் இவரது கவிதைகளில் பெருமளவு காணப்படாமையும் கவனத்திற்குரியது.
7. தொகுத்துக் கூறுவதாயின் பாலமுனை பாறூக்கின் ஆரம்ப காலகட்ட கவிதைப்போக்குகளாக இதுவரைகூறப்பட்ட பல்வேறு விடயங்களும் சமகாலக் கவிஞர்கள் பலரது கவிதைப் போக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டனவாகவிருப்பது புலப்படுகிறது. இவ்விதத்தில் அறுபதுகளின் பிற்பட்ட காலந்தொடக்கம் எண்பதுகளின் முடிவுவரையான காலகட்ட ஈழத்துக் கவிதை வரலாற்றில் இவரது கவிதைகளினூடாக இவருக்குரிய இடம் மறுக்கப்படமுடியாததாகின்றது. பதம் என்ற ஒரு தொகுப்பை மட்டும் வைத்து இதுபற்றிி கூறமுடியுமா என்று வாசகர்கள் கேட்கக்கூடும். அதற்கு இருவிடைகள் உள்ளன.
(I) பதம் என்ற தொகுப்பின் தலைப்புப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தல்.
(II) பின்னர் வெளிவருகின்ற நவீன காவியங்கள், குறும்பாக்கள், ஹைக்கூக்கள் ஆகியவற்றிலும் மேற்குறிப்பிட்ட சிறப்புக் கள் வேவ்வேறு நோக்கிலும், போக்கிலும் வெளிப்படுவதை அவதானித்தல்.
ஆயினும் இவரது பிற்காலக் கவிதைப் பயணம் தடம் மாறாதிருந்திருப்பின் மேற்கூறிய விதங்களில் முக்கியமான கவிஞராகத் திகழ்ந் திருப்பார் என்பதில் ஐயமில்லை. (எனினும் இவரது புதிய தடங்களும் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் இன்னுமொரு முக்கிய பங்களிப்பினைக் காட்டுகின்றதென்பதைக் கூறாமலிருக்க முடியாது)
8. இறுதியாக இன்னொன்று – பாலமுனை பாறூக் கவிதைத்துறையில் ஈடுபட்டதற்கப்பால் தொகுப்பாளராக (மற்றவர் அன்புமுகையதீன்) தொகுத்த எழுவான்கதிர்கள் (1986) என்ற -எம்.எச்.எம் அஷ்ரப் தொடக்கம் சித்தி ஜெரீனா கரீம் – வரையில் இருபத்தினாலு கவிஞர்களது கவிதைகள் கொண்ட தொகுப்பின் வரவும் கவனத்திற்குரியது. இத் தொகுப்பிலுள்ள இளங்கவிஞர்கள் சிலர் இத்தொகுப்பின் ஊக்கத்தினால் தொடர்ந்து எழுதிவந்தமையும் வேறு சிலர் இத்தொகுப்புடன் மட்டும் தம்மை ஈழத்து நவீன கவிதை வரலாற்றில் நிலை நிறுத்திக் கொண்டமையும் மனங்கொள்ளப்படவேண்டியன. கவிதைத் தேர்வில் அன்புமுகையதீனுக்கு மட்டுமன்றி பாலமுனை பாறூக்கிற்கும் சமமான இடமுண்டு என்று கூறுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்!