பாரதிக்குப்பிறகு தற்போது கவிதாமண்டலம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை வைத்து சங்க காலக் கவிஞர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் ஒரு மாபெரும் கவிஞர்; தமிழையும் கவிதையையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்படும் ஒரு தன்மானத் தமிழன்; மதுரையின் வீதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கவிதை வேள்வியை நடத்தி வருபவர். சோழமன்னனின் பெயரை இயற்பெயராகவும் பாண்டிய மன்னனின் பெயரைப் புனைப்பெயராகவும் சேரமன்னைப்போல் நம் தாய் கண்ணகியைப் போற்றிப் பாடும் கவிஞர் ஐயா பொற்கைப் பாண்டியன் அவர்களின் யதார்த்தமான நேர்காணலுக்கு வருவோம்.

வலது பக்கமுள்ள நூல் முகப்புபடத்தில் க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஜூலை – 2020 இதழ் தரவிறக்கமாகும்.

தமிழ்நெஞ்சம் - ஜூலை 2020

பாரதியாருக்குப் பிறகு வேறு யாராவது கவிதா மண்டலம் என்று அமைத்து கவிதையை, கவிஞர்களை வளர்த்தது உண்டா? தாங்கள் பொற்கைப் பாண்டியன் கவிதா மண்டலம் என்று தங்கள் அமைப்புக்குப் பெயர் வைக்கக் காரணம் என்ன?

கவிதாமண்டலம் பற்றிக் கேட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. பாவேந்தரைப்பற்றி பாரதியார் சொல்கையில் ஸ்ரீ சுப்ரமணியபாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்பு ரத்தினம் என்று சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாரதிதாசனுக்கென்று ஒரு பாட்டுப் பரம்பரை உருவானது. கவிதா மண்டலம் என்று பாரதிக்குப் பின் ஏதும் தென்படவில்லை. இருந்திருந்தா லும் தெரியாமல் இருந்திருக்கலாம். அடியேன் பாரதியைப் பின்பற்றியே அமைத்துக்கொண்டேன். இதுதவிர மற்ற அமைப்புகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வும் ஒரு தனித்துவத்தை நிலைநாட்டவுமே கவிதாமண்டலம் என பெயரிட்டேன்.

தங்களுக்குக் கவிதை எழுதக் கற்றுத் தந்த ஆசான்கள் பற்றி…

கவிதை எழுதுவது என் தாய் பாடிய தாலாட்டிலிருந்தும், கிராமத்து மனிதர்களின் எகனை மொகனைப் பேச்சுகளிலிருந்தும், எங்கள் ஊர் ஒயிலாட்டத்தின் இசையிலி ருந்தும் கற்றாலும், பாவேந்தரும், கலை ஞரும், கண்ணதாசனும் என் கவிதை உணர்வுகளைத் தூண்டினாலும் என் கவிதைகளை வழிமொழிந்து ஆற்றுப்படுத்தி பாக்களின் வடிவமைப்புகளை அடையாளப் படுத்தியவர் என் தமிழாசிரியர் முதுபெரும் புவவர் திரு.சடாச்சரம் அவர்கள்.

மரபின் மேல் மாறாத பாசம் கொண்டதற்குச் சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?

மரபின்மேல் மாறாத பாசம் என்பது வாழையடி வாழையாக வந்த தொப்பூழ்க்கொடி உறவு. தாயும் தந்தையும் போல் மரபு நமக்கு. தம்பி தங்கைகள்தான் மற்றவர்கள். நம் இலக்கியங்களின் இயங்கு தளம் மரபின் அடித்தளத்தில் நிற்கிறது. அதுவே என் மனதிலும்மங்காமல் நிற்கிறது.

தங்கள் முதல் கவிதை எது? எப்போது வாசித்தீர்கள் எனப் பகிரமுடியுமா?

முதல் கவிதை என்றால் அது நினைவு தெரிந்த நாட்களிருந்து தொடங்கி யது என்றாலும் ஊரில் மேடையில் பொங்கல் விழாவில் பொங்கல் சிறப்பை எழுதி வாசித்ததுதான். முதலில் ஏறிய பெரிய மேடை மீரா தலைமையில் மதுரை ஜீவாநகரில் போவோம் புதுஉலகம் என்ற கவிதைதான்.

தமிழ்கூறும் நல்லுலகில் நெடிய தொரு கவிதைப் பயணத்தைத் தொடரும் தாங்கள் எழுதிய நூல்கள் பற்றி…

89-ல் விழிகள் சிவக்கின்றன, 93-ல் அங்கயற்கண்ணி அந்தாதி, 98 ல் காற்றுக்குச் சிறை இல்லை, 2005 ல் அங்கயற்கண்ணி அருள் உலா, 2007ல் நூபுரகங்கை வரலாற்றுப்புதினம், 2011ல் மருதுகாவியம், 2014ல் கவிதைக்கு மெய்யழகு, உள்ளங்கள் பேசும் மொழி (காமத்துப்பால் கவிதைகள்) 2015ல் தேவர்காவியம், 2017ல் மக்கள்போராளி, சின்னமருது, கண்மாய்க்கரை மனிதர்கள் (நாவல்), தமிழ்ப்பாவை போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன.

மதுரை மீனாட்சி அம்மனைப் பற்றி எழுதிய தங்கள் நூலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மீனாட்சியை தெய்வமாகப் பார்ப்ப தில்லை. மாறாக மதுரையை ஆளும் பேரரசியாகவும், நெடிய தமிழ் மரபில் வந்த நம் மூதாதைகளில் ஒருத்தியாகவே பார்க்கிறேன். அவளை எழுதிய பின் என் அனைத்துத் துன்பங்களும் ஓடி மறைந்தன. அவள் தரும் சமிக்ஞைகள் என்னை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தங்கள் பாடல்கள் இசைத்தட்டில் வெளியானதாகக் கேள்வியுற்றேன். அவற்றை பற்றிய நினைவுகளைப் பகிர்வீர்களா?

ஆம். அவை பக்திப் பாடல்கள்.சிங்க வாகனம் என்ற பத்ரகாளியம்மன் பாடல்கள், நவக்கிரக நாயகி என்று ஒன்பது கோள்கள் அவைகளின் செயல் பாடுகள், அவைகளின் தாக்கங்கள், அதிலிருந்து மீளும் வழிகள் இவைகளை அந்தப்பாடல் விளக்கும். இவை தவிர தென்பாண்டித் தேவியர்கள் என மதுரை மீனாட்சி, தேனிவீரபாண்டி கௌமாரி, தாயமங்கலம் முத்துமாரி, மடப்புரம் காளி, நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் எனப்படும் தெய்வங்களின் பெருமை கூறும் பாடல்களவை.

சென்னையில் நடைபெற்ற கவிதா மண்டல நிகழ்வில் திரு நல்லக்கண்ணு அவர்களுடன் பொற்கைப்பாண்டியன் மற்றும் ஆளுமைகள்.
வலங்கைமான் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்ச்சியில் அக் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளருக்கு நினைவுப்பரிசு வழங்கியது. அருகில் மதுரை மீனாட்சி மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் இரவி மற்றும் கல்லூரி கண்காணிப்பாளர்

தற்போது அந்த இசைத்தட்டுகளை யூடியூப் வழியாக உலகத்தமிழர்களுக்கு அறியத்தரும் முயற்சி உள்ளதா ஐயா?

ஆம். அதை விரைந்து செய்ய வேண்டும்.

தங்களின் தமிழ்ப்பாவை உருவானது எப்படி?

நான் எழுதிய நூல்களில் எனக்குப் பிடித்த நூல் அது. ஒரு மார்கழியில் ஆண்டாளின் திருப்பாவை படிக்கும் போது அதே இலக்கணத்தில் தமிழ்ப்பாவையை உருவாக்கினேன். முப்பது பாடல்களே ஆனாலும் தமிழின் தமிழரின் பெருமை களை, தமிழின் தொன்மைகளை தலை முறைகளுக்கு உரைக்கும். இதை வாழ்நாள் கடமையாக எழுதினேன்.

செந்தமிழர் திருப்பள்ளி எழுச்சி எப்போது நூலாக வெளிவரும்?

அதே இன்னொரு மார்கழிதான் இந்த உந்துதலைக் கொடுத்தது. ஆண்டாளும் மாணிக்கவாசகரும் உள்ளுக் குள் ஒலிஎழுப்ப செந்தமிழர் திருப்பள்ளி எழுச்சி உருவானது. விரைவில் அதுவும் நடைவிருத்தமும் வெளிவரும்.

சங்கத்தமிழ்ப் பாடல்களையும் சங்கப் புலவர்களையும் கைகளில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன ஐயா?

நம் சொத்துகள் சங்க இலக்கியம். சங்கப் புலவர்கள் நம் பரம்பரையின் இரத்த நாளங்கள். உலகில் இதுபோல ஒரு இலக்கியம் இல்லை. ஒப்பனை இல்லாத உண்மையைச் சொல்லும் வாழ்வியல் இலக்கியங்கள். இவை தமிழ்மக்களிடம் போய்ச் சேர வில்லை. தழுவல் இலக்கி யங்கள் பெற்ற பெருமைகளை செவ்வியல் இலக்கியங்கள் பெற வில்லை எனும் ஆதங்கமே என் சங்க இலக்கியக் காதல்.

கவிதை எழுதுபவர்களை சமூகம் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை என்பது உண்மையா? (ஒருசில பெரிய பிரபலமான கவிஞர்களைத் தவிர்த்து)

உண்மைதான். கவிதை பணம் தராத வரைக்கும் கவிதையை உணர்ந்தவர்கள் தவிர சமூக அங்கீகாரம் கிடைக்காது. இது ஒருசாபக்கேடு. உண்ணும் உணவு? பருகும் நீர், குடியிக்கும் வீடு எல்லாமே ஓரளவு கவிதையால் சாத்தியமான என் நிலையைக் கூட பலர் நம்புவதில்லை. ஏதோ எங்கள் முதலாளி பரிதாபப்பட்டுத் தருவதுபோலவே எண்ணுகிறார்கள். என்ன செய்வது..? மாற்றுவோம்.

எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்று கவிஞர்களை இகழ்வது குறித்து தங்கள் கருத்து

அதை அப்படி எடுத்துக் கொள்ள வேண்டாம். எழுதிய புலவனின் ஏட்டுக் கருத்துகளை இடைச்செருகலாக எழுதிச் சிலர் கெடுத்திருக்கலாம். அதைச்சசொல்ல வந்தவர்களின் மொழி கவிஞர்களின்மேல் இழிவானதாக எறியப்பட்டிருக்க வேண்டும்.

சங்க இலக்கியங்கள் பாடத்திட்டங் களில் மட்டுமே உள்ளன. அவற்றை மதிப்பெண் பெறவே மாணவர்கள் படிக்கி றார்கள். அதனால் வேறு பயன் இல்லை என்பது உண்மையா?

கல்வியாளர்களின் செயல் அது.பலர் சாய்சில் வந்தவர்கள். அவர்களில் பலருக்கு சங்க இலக்கியங்களை வாசிக்கக் கூடத் தெரியாது. திருப்புகழை ஏன் கம்பனைக் கூட சந்தத்தோடு வாசிக்கத் தெரியாதவர்கள், இலக்கிய அறிவு இல்லாதவர்களால் வடிவமைக்கப்படும் பாடத் திட்டங்களினால் நேரும் கொடுமை இது. ஒழுங்காக சங்க இலக்கியங்களைச் சொல்லிக் கொடுத்தால் இன்று ஆணவக் கொலைகள், முறையற்ற உறவுகள் நேராது. மனித நேயம் மேம்படும். யாதும் ஊரே யாவருங் கேளிர் என்பது மெய்யாகி இருக்கும். பயனற்றவர்களால் நேர்ந்த பரிதாபம் இது.

பாரதி என்றொரு கவிஞன் பிறவா திருந்தால்?

l பாரதி என்ற ஒரு கவிஞன் பிறவாதிருந்தால் கவிதைகளில் ஆண்மைத் தன்மை குறைந்திருக்கும். ஒரு மானமுள்ள கவிதைப்பரம்பரை தோன்ற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆயிருக்கும். தமிழகம் தமிழுக்குத் தனி உயர்வளிக்கும் தலை வனை எண்ணித் தவங்கிடக்கையிலே இலகுபாரதி புலவன் தோன்றினான் என்ற பாவேந்தர் கூற்று முற்றிலும் உண்மை. பாரதி தமிழ் செய்த தவம்.

கம்பனைவிட இன்று யாரும் கவிச் சக்கரவர்த்திகள் உள்ளனரோ?

கம்பனின் அரியணை அப்படியே தான் இருக்கிறது. அது இன்னும் சில காலம் அப்படியேதான் இருக்கும். யார் அதில் அமர்வார்கள் என்பதைத் தமிழ்த்தாய்தான் தீர்மானிப்பாள் .

பாரதிதாசனின் எழுச்சிமிகு பாக்கள் பற்றி

பாரதி கண்டெடுத்த புலி. இந்தச் சூழலிலும் தமிழர்கள் பலர் இனவுணர்வு, மான உணர்வு, மண்ணுணர்வு சுயமரி யாதையுடன் குகைவாழ் ஒரு புலியே என குணமேவியவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பாரதி தாசனின் பாக்கள். அவை தமிழர் ஏந்த வேண்டிய வாட்கள்.

தங்களது இயற்பெயரே பொற்கைப் பாண்டியனா? அல்லது புனைப்பெயரா? இதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா?

இயற்பெயர் இராசேந்திரசோழன். பள்ளியில் சேர்க்கும்போது எந்த ஆசிரியரோ பெயரில் சோழனை எடுத்துவிட்டு இராசேந்திரன் என சேர்த்துவிட்டனர். பின்னாளில் என் முதல்மேடையில் கவிதை வாசிப்பைக்கேட்ட முன்னாள் சபாநாயகர் அண்ணன் காளிமுத்து தம்பியின் கவிதைவரிகள் பாண்டியனின் வாற்வீச்சுப் போல என்றார். அதற்கு முதல்நாள் சிலம்பை வாசித்தபோது பொற்கைப்பாண்டியன் கதை படித்தேன். இவர் பாண்டியன் என்றதும் அதன் முன் பொற்கை என்று சேர்த்துக்கொண்டு பொற்கைப்பாண்டியன் ஆனேன். எனக்கு இயற்பெயர் சோழமன்னன் பெயர். புனைபெயர் பாண்டியமன்னன் பெயர்.

தங்களது அன்றாடப் பணிகளுக் கிடையே கவிதை எழுதுவதற்கென ஏதும் நேரம் ஒதுக்குகிறீர்களா? அல்லது தோணும்போதெல்லாம் எழுதுகிறீர்களா?

கவிதை மூச்சுவிடுதல் போல் அமைந்துவிட்டதால் இதற்கென நேரம் ஒதுக்குவதில்லை. சில நேரங்களில் அது அடம்பிடிக்கும். அப்போது அதன் போக்கில் விட்டுவிட்டால் அதுவே வந்து பற்றிக்கொள்ளும். மழை பொழிவது போல, பூ மலர்வது போல இயல்பிலே கவிதை இருக்கிறது.

தங்களது மேடைகளில் சங்க இலக்கியத்தில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும் சொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளீர்களே? அதற்கு ஏதும் காரணம் உண்டா? எவ்வளவு காலமாக இதனைச் சொல்லி வருகிறீர்கள்?

அதற்கும்அண்ணன் காளிமுத்துதான் காரணம். மதுரைவடக்குமாசிவீதி மேலமாசி வீதியில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் 1980-ல் அவர் மளமள வென்று சொன்னதைப் பார்த்து நான் மிரண்டேன். எனக்கு விபரந்தெரிய அவர்தான் அதைச் சொன்னவர். அடுத்த நாளே நானும் மனப்பாடம் செய்துவிட்டேன். பின்னாளில் அவரை தக்கார் வி.என். சிதம்பரம் அவர்களுடன் ஒரு விழாவில் சந்தித்தபோது அவரிடம் நானும் உங்கள் பூக்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன் என்றேன். அதை ஓயாமல் சொல்லும்போது சிலர் கேலி செய்கின்றனர் என்றேன். சொல்றவன் சொல்லட்டும் நீபாட்டுக்குசொல்லு. உன்னைப்பார்த்துப் பலர் சொல்வர். சங்கத்தமிழ் பரவட்டும் என்றார். ஆனாலும் அதை கடந்த இருபதாண்டுகளாகச் சொல்லிவருகிறேன். ஆனால் அதைச் சொல்லும்போது நடிகர் சிவகுமாரையும் அவர் மகன் சூர்யாவையுமே மற்றவர்கள் சொல்லும் போது எரிச்சல் வரும். நடிகர்கள் சொல்வது மகிழ்ச்சியே. அதை ஒப்பிடும் போது எரிச்சல் வரும். இப்போதெல்லாம் அதைக்கண்டு கொள்வதில்லை.

மற்றொரு நிகழ்வில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களுடன்...
கொரானா ஊரடங்கின்போது மருத்துவப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு கைகளைத்தட்டுகிறார் தனது இணையருடன் பொற்கைப்பாண்டியன்
மதுரை திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்ற கவியரங்கில் திருவாளர்கள் கவிஞர் வெற்றிப்பேரொளி மற்றும் மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஜெனிஃபர் பவுல்ராஜ் அவர்களுடன் பொற்கைப்பாண்டியன்.

தங்களின் ஞாபகசக்தி பிரமிக்க வைக்கிறது. இதற்கென ஏதும் பயிற்சி மேற்கொள்கிறீர்களா?

அப்படி எல்லாம் இல்லை. இயல் பாகவே இருப்பதைத்தக்க வைத்துக் கொள்கிறேன். ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுத் தந்த மனப்பாடப் பயிற்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தற்போதைய பணியிடத்தில் மருத்துவ மலர் ஒன்றின் ஆசிரியராக இருக்கிறீர்களே? அது எவ்வளவு காலமாக வெளியிடப்படுகிறது?

மீனாட்சி மருத்துவமலர் அது. ஆங்கில மருத்துவத்தைத் தமிழில் கொண்டு வந்த முதல் இதழ் அது. என் திறமைகளை எல்லாம் அதில் கொட்டியிருக்கிறேன். தினம் இரண்டு துறை சார்ந்த மருத்துவர்களிடம் பேட்டி, நவீன மருத்துவம் அறிமுகம், வெண்பாப் போட்டிகள் என தமிழ் கூறும் நல்லுலகெங்கும் வலம் வந்த இதழ். அனைத்து நூலகங்கள் அயல்நாடுகள் என ஒரு இருபதாண்டுகள் வெளிவந்தது. கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைப் படித்தால் ஒரு மருத்துவ கல்லூரியில் படித்த அனுபவம் ஏற்படும். இப்போது மகிழ்ச்சி என்ற இதழ் தற்போது என்னை ஆசிரியராகக்கொண்டு வெளிவருகிறது.

தமிழ்க் கவிஞர்களில் தாங்கள் சிறந்தவர் என்போரை வரிசைப் படுத்த இயலுமா?

வாழையடி வாழையாக வந்த கவி மரபில் மக்களுக்காகப் பாடிய கவிஞர்கள் அனைவரும் உயர்ந்தவர்களே. சங்கப் புலவர் களையும், வள்ளுவன் இளங்கோ கம்பன் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்ற பாட்டுப் பரம்பரையின் தொடர்ச்சியில் மக்களைச் சிந்திக்கும் கவிஞர்கள், நாமார்க்கும் குடியல்லோம் என்ற.அப்பர், தமிழ்க் கவிதை உலகில் பெரியாருக்கு முந்திய சீர்திருத்தக் கருத்துகளை விதைத்த இராமலிங்க அடிகளார், பெண்ணுரிமை பேசிய முன்சீப் வேதநாயகம் பிள்ளை என நம் பாட்டுப்பாட்டன்களை நிறையவே வரிசைப்படுத்தலாம்.

தற்போதைய கவிஞர்கள் பற்றி தங்களுடைய கருத்து என்ன?

கவிதை எழுதவும் கவிஞர் என தங்களை அழைக்க விரும்புவதும் அதற்கான உழைப்பதும் மிக அருமை. ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ளும் வண்ணம் தமிழின் வேர்களை அறிவதும், இலக்கிய இலக்கணச் செழுமைகளைக் கூர்தீட்டவும் பலர் முயல வேண்டும். கவிச்சக்கரவர்த்தி என்ற கம்பன் பட்டத்தை நாம் பெறுகிறோமே கம்பனை ஓரளவாவது அறிந்துள்ளோமா என்ற கூச்ச உணர்வு விருது தருபவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் இருக்க வேண்டும். விருதுகள் ஒருவரை அடையாளப்படுத்தாது. கவிதைத்திறம்ந்தான் உலகிற்கு ஒருவரை அடையாளம் காட்டும். அதை இளைய தலைமுறைகள் உணரவேண்டும். பொது வாகவே அனைவரிடமும் ஒரு விழிப்புணர்வு பெருகியே வருகிறது. இது மேலும் பெருக வேண்டும்.

தமிழ்ச்சங்கங்களுக்கும் முகநூல் குழுமங்களுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை காணப்படுகிறது ?

ஒரு காலத்தில் சைவமுந் தமிழும் தழைத்தினி தோங்குக என ஆரம்பிக்கப்பட்ட சைவமடங்கள் அதை மறந்து விட்டன. தமிழுக்கு என்றே தோன்றிய சங்கங்கள் அதை பெயரளவிற்கு நடத்துகின்றன. ஆனால் அவைகள் செய்யத்தவறியவைகளை முக நூல் குழுமங்கள் சிறப்பாகச் செய்கின்றன. கூடலில் புலவர்கள் கூடியதுபோல் இன்று ஒவ்வொரு குழுமத்திலும் புவவர்கள் கூடுவதும், தமிழ் தமிழ் என்று பேசுவதும் ஒரு புரட்சிதான். இது மகிழ்வான ஒன்று. ஆனால் அதை அனைத்தே புலவர் தொழில் என்று கூடிக் கலந்து மேடை ஏறி உவப்பத்தலைகூடி உள்ளப்பிரிதல் இன்றி கற்றுக்கொள்வதிலும், குறைகளை ஏற்றுக் கொண்டு அதைக்களையும் மனப்பக்குவமும் குழுமக்கவிஞர்களுக்கு வரவேண்டும்.

முகநூல் குழுமங்கள் நாளுக் கொன்று தோற்றுவிக்கப்படுவது குறித்து…

தோன்றுவது பெரிதல்ல. தோன்றிற் புகழுடன் தோன்ற வேண்டும். இனம், மொழி, பண்பாடுகளின் காவலாக இருந்தால் வரவேற்க வேண்டியதுதான். செயல் பாடுகளைப் பொறுத்து அது வெல்லும். இல்லையேல் காலம் அதைத் தள்ளும்.

இளைய கவிஞர்களுக்குத் தங்களது அறிவுரை என்ன?

அறிவுரையெல்லாமில்லை. அனு பவங்களிலிருந்து நாங்கள் கற்றோம். நீங்களும் அனுபவங்களில் அறிந்து கொள்ளுங்கள். முன்னோடிகளின் கருத்து களையும் உள்வாங்குங்கள். அகந்தைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பணிவு வளர்க்கும் அகந்தை அழிக்கும் என்பதை உணருங்கள். உங்கள் தமிழ் உலகாளும்.

நா. காமராசர், மு.மேத்தா, அப்துல் ரஹ்மான் இவர்களைப் பற்றி…

நா.காமராசன் புதுமைகளின் ஊற்று! மேத்தா புதுக்கவிதையின் நாற்று! கவிக்கோ ஒரு கவிதைச் சிற்பி. தமிழ் இவர்களால் ஒருகௌரவமகுடம் சூடியது.

வைரமுத்து அவர்களுடன் தங்கள் உறவு – நட்பு குறித்து…

கவிப்பேரரசு வைரமுத்து சமூக இலக்கியப் பேரவை அமைத்த போது அறிமுகம் அரும்பியது. அவர் கலந்துகொள்ளும் எங்கள் பகுதித் திருமண நிகழ்வுகளை நான் தான் தொகுத்து வழங்குவேன். பின் அது வெற்றித் தமிழர் பேரவையாக மாறியது. எங்கள் மருத்துவமலரின் முதல் இதழை அவர்தான் வெளியிட்டார். எங்கள் மருத்துவமனைக்கு இரண்டு மூன்று நிகழ்விலும் கலந்து கொண்டார். எங்களுடன் நெருக்கமான உறவும் கொண்டிருந்தார். ஒருமுறை ஏ.ஆர்.ரகுமானுடன் சிறு ஊடல் நிகழ்ந்தபோது திருப்புவனம் திருமண விழாவில் எனக்குப் பதிலாக பொற்கை பேசுங்கள் என்பார். இப்போது சந்தித்து வெகுகாலமாகி விட்டது.

திரைப்படங்களுக்குப் பாட்டெழுத முயன்றுள்ளீர்களா? அந்த அனுபவம் பற்றி…

முயலவில்லை. அவர்களாக வரு வார்கள். மெட்டுத் தருவார்கள். பாட்டு வாங்குவார்கள் படமெடுக்கமாட்டார்கள். இரண்டு படங்களுக்கு எழுதியுள்ளேன். ஒரு படத்தில் எல்லாப்பாட்டுமே எழுதியுள்ளேன். சைந்தவி, மாலதி, முகேஷ் பாடியுள்ளனர். ஒருபடத்திற்கு நெல்லைத்தமிழில் இரண்டு பாட்டு எழுதியுள்ளேன். என் நண்பர் கவிஞர் சிநேகனின் சொந்தப்படமான பொம்மிவீரனில் மதுரையைப் பற்றி எவரும் சொல்லாத வண்ணம் ஒருபாட்டு. வேல்முருகன் பாடி யுள்ளார். படம் எப்போது வருமென்று தெரியாது. அதே சிநேகனின் இராஜராஜ சோழனின் போர்வாள் படத்திலும் ஒரு டைட்டில் பாட்டு வாங்கியுள்ளார். வரட்டும்.

கவியரங்க மேடையில் சக கவிஞர்களுடன் ...

தமிழ்நெஞ்சம் இதழைப் பற்றியக் கருத்துகள்… அதன் வாசக எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவதென்ன?

தமிழர் நெஞ்சமெல்லாம் தங்கித் தமிழ் வளர்க்கிறது தமிழ் நெஞ்சம்.

உலகத் தமிழர்களின் ஒன்றி ணைப்பாக, உலகக்கவிஞர்களின் ஒருங் கிணைப்பாக, உன்னதக் கவிஞர்களின் அறிமுகமாக தன்பணியைப் பொன்பணி யாகச்செய்து வருகிறது தமிழ்நெஞ்சம்.

அந்த வகையில் திரு. அமின் உச்சியில் வைத்து மெச்சக்கூடியவர்.

இலக்கியத் திறவுகோலாக இருக் கும் தமிழ்நெஞ்சம் இதழின் வாசகர் களுக்கு ஒரு இலக்கிய கிரீடத்தை இதழ் சூட்டுகிறது. அதை உள்வாங்கி உணர்ந்து இதழின் வாசிப்பையும் நேசிப்பையும் ஒரு தவமாகவே செய்வது உன்னதமான செயல். இதழில் எழுதுபவர்கள் சிறப்பாக எழுதுகிறார்கள். தொடர்ந்து தமிழ், தமிழுணர்வு, உலகியல்பார்வை, படைப்பில் சமரசமின்மை, செவ்வியல் சிந்தனைகளோடு தமிழ்நெஞ்சத்தை மலரச் செய்வோம். வாழ்க.

ஐ யாவின் பணிசிறக்க தமிழ்நெஞ்சம் வாழ்த்துகிறது. நன்றி!


8 Comments

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · ஜூலை 4, 2020 at 5 h 13 min

சிறப்பான பதிவு, இனிய நல்வாழ்த்துகள்.

A.muthu Vijayan · ஜூலை 6, 2020 at 9 h 08 min

அய்யா பொற்க்கையாருக்கு வாழ்த்துகள்

இராமதாசு காந்தி · ஜூலை 6, 2020 at 9 h 18 min

கவிஞர் பாண்டியனார் அற்புதக் கருத்துக்களைகேள்விபதிலில் தன் அற்புத அனுபவங்ளை கூறியுள்ளார் .
அவரின் அனுபமே இன்று பிற்றினால் நாமும் உயரலாம் .

தமிழ் தம்பி · ஜூலை 6, 2020 at 15 h 23 min

சிறந்த நேர்த்தியான
நேர்காணல்
ஐயா…

பாவேந்தன் · ஜூலை 7, 2020 at 5 h 09 min

கவிஞரின் நேர்காணல் சிறப்பு. பலதுறைகளில் முயற்சியும் வெற்றியும் மன நிறைவளிக்கிறது. தமிழ்ப்பாவை கண்ணதாசனின் தைப்பாவையை நினைவூட்டுகிறது. படிக்க அவா. மேலும் திருவும் புகழும் நிறைவும் ஈட்ட வாழ்த்துகள். பாவேந்தன்

மாலதி சந்திரசேகரன் · ஜூலை 15, 2020 at 11 h 06 min

அருமையான இதழ். அக்கரையிலிருந்து கொண்டு இக்கரை தமிழ் நெஞ்சங்களை ஊக்கப்படுத்தி, பிறருக்கு அறியப்படுத்தும் நூல். தமிழ்நெஞ்சமே, பல்லாண்டு வாழ்க

பொற்கைப்பாண்டியன் · ஜூலை 25, 2020 at 22 h 11 min

தமிழ்நெஞ்சம் ஜூலை 2020 இதழ் முழுவதுமாக படித்தேன் மனித பேதங்களை தீயிட்டுக் கொளுத்தி அன்புச் சுடரேந்தி அகிலத்தை அழகாக்குவோம் என்ற தலையங்கத்தின் கொள்கைபோல் இதழெல்லாம் மனங்களின் ஒருங்கிணைப்பாக எழுத்துப் பூக்கள் வாசம் தருகின்றன.

கவிச்சுடர் கல்யாணசுந்தரத்தின் காற்றில் பயணிக்கும் ஊர்வலத்தோடு சொற்கள் என்ற தன்முனைக் கவிதைபோல் பக்கத்திற்கு பக்கம் சொற்கள் சமூகப் பார்வைகளாக தன்னம்பிக்கை ஊட்டுபவையாக கதைகளாக, கவிதைகளாக, பெண்ணியமாக, சமூகப் பார்வைகளாக, அகப்பிரச்சனைகளுக்கு, தீர்வு சொல்பவைகளாக இதழ் நம் விரல்பிடித்து நம்பிக்கையூட்டி வழிகாட்டுகிறது.

பெண்கள் நிறைய எழுதியிருப்பது இதன் பெருமை. ஹைக்கூ வடிவம்போல் மணிக்கூ கவிவடிவம் பற்றிச் சொன்ன நஸீரா எஸ்.ஆப்தீன், பெண்ணியம் செல்வக்குமரியின் அகவெளியும் புறவெளியும், கவிதைக்களத்தில் கவிசெல்வா உள்ளிட்ட பெண்கவிஞர்களின் கவிதைகள், மனோபாரதியின் முகங்கள் என்று நிறைய பெண்ணிய படைப்பாளர்களின் எழுத்துக்கள் இதழ்களுக்கு மெருகூட்டுகிறது.

தமிழ்நெஞ்சம் அமின் பிறந்தநாள் கவிதைகளாக பாட்டரசர் பாரதிதாசன், அன்புவல்லி தங்கவேலன், இராமவேல்முருகன், ஏ.டி.வரதராசனின் வெண்பா , பொன்மணிதாசன், கோகிலா ஜெயக்குமார், தென்றல் கவி போன்றோரின் விருத்தங்கள்என அனைத்து கவிஞர்களின் கவிதையும் அன்பை அள்ளி தெளித்திருக்கின்றன.

இத்தனைப் பெருமக்களின் படைப்புக்களிடையே இந்த எளியவனின் நேர்காணலும் இடம்பெற்றிருப்பது மகிழ்வுக்குரியது. நான் நேர்காணலில் சொன்னதுபோல உலகத் தமிழர்களின் ஒன்றிணைப்பாக, உன்னதக் கவிஞர்களின் அறிமுகமாக தன்பணியை பொன்பணியாகச் செய்து வருகிறது தமிழ்நெஞ்சம்.

ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நெஞ்சம் திகழ்வதை நானும் ஒரு இதழாசிரியன் என்கிற முறையில் பாராட்டுகிறேன்.

எழுதிய அனைவருக்கும் எழுதும் அனைவருக்கும் என் இதய வாழ்த்துகள்.

தொடரும் நம் தமிழுறவால் இனமும், மொழியும், இலக்கியமும் பெருமை அடையட்டும்.

இத்தனைச் சிறப்புகளுக்குச் சொந்தமான தமிழ்நெஞ்சம் அமின் அவர்களின் இலக்கியப்பயணத்தில் இணைந்து கைகோப்போம்.

அன்புடன்,
பொற்கைப்பாண்டியன்

பாவேந்தன் · செப்டம்பர் 20, 2020 at 18 h 32 min

கவிஞர் பொற்கைப்பாண்டியன் நேர்காணல் சிறப்பு. பின்னூட்டமிட்டேன். பக்கம் இக்கருத்து முன்பே இடப்பட்டதின் நகலென மொழிந்தது. ஒருவேளை என் மின்னஞ்சல் முன்பே உள்ளதை குறித்திருக்கக்கூடும்.
நேர்காணல் கவிஞரின் தொடர் இயக்கத்தையும் பல்துறை முயற்சிகளையும் வெற்றிகளையும் தெளிவுற விளக்கிய பாங்கு போற்றுதற்குரியது. தமிழ்ப்பாவை கண்ணதாசனின் தைப்பாவையை நினைவூட்டுகிறது. படித்ததில்லை. பரந்த படிப்பும் கவிதைச்சுவையும் அறிந்த கவிஞரின் திரைத்துறை முயற்சிகள் வெல்லவும் மேலும் திருவும் புகழும் உயர்வும் எய்தவும் அன்பினிய வாழ்த்துகள். பாவேந்தன் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »