தமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.
உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?
பாய்ந்தோடும் இயற்கை எழிலாய் நில்வளா கங்கையும் நீலவானின் நிறத்தை யொத்த அழகிய கடலும் கொண்டமைந்த இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள வெலிகமையே எனது பிறப்பிடமாகும். இந்த ஊரின் நாமத்தை எனது பெயரோடு இணைத்து, வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் எழுதி வருகின்றேன்.
2004 ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதைத் தொடர்ந்து 16 ஆண்டுகளாக எழுதி வருகின்றேன். இதுவரை 13 நூல்களை வெளியிட்டுள்ளேன். இவை கணக்கீடு, கவிதை, நூல் விமர்சனம், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், ஆய்வு ஆகிய வகைகளிலான நூல்களாகும்.
2004 ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதைத் தொடர்ந்து 16 ஆண்டுகளாக எழுதி வருகின்றேன். இதுவரை 13 நூல்களை வெளியிட்டுள்ளேன். இவை கணக்கீடு, கவிதை, நூல் விமர்சனம், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், ஆய்வு ஆகிய வகைகளிலான நூல்களாகும்.
அகம் சார்ந்தவை, பெண்ணியம், நட்பு, சமூக அவலம், சீதனக்கொடுமை, போர்ச்சூழல், போரின் அவலங்கள், நாட்டு நடப்புகள், உலக நடப்புகள், உறவுகளின் விரிசல், தனிமனித வாழ்வு, சமூக அக்கறை, மானிட நேயம், இயற்கை யின் வனப்பு, இயற்கை அனர்த்தங்கள், போதையின் அவலம், வறுமைப்புயல், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஜீவகாருண்யம், ஆன்மீகம் போன்றவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டே எனது படைப்புக்கள் அமைந்துள்ளன.
இலக்கியத் துறையில், உங்களுக்கு ஈடுபாடு எப்படி ஏற்பட்டது? அந்த முதல் அனுபவத்தைப் பற்றி…?
வாசிப்பு அனுபவம்தான் என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கியது. நான் பத்திரிகை உலகத்தையோ அல்லது எழுத்துத் துறையையோ அறிந்திருக்க வில்லை. எதுவும் தெரியாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன்.
நான் வாசிக்க ஆரம்பித்த காலங் களில் எமது உறவினரான மாமா ஒருவர் அந்தக் காலத்தில் ஒரு பிரபல்யமான எழுத்தாளராக இருந்தார். அவரது பெயர் எஸ்.ஐ.எம். ஹம்ஸா என்பதாகும். அக் காலத்தில் அவர் திக்குவல்லை ஹம்ஸா என்ற பெயரில் தனது படைப்புக்களை பத்திரிகைகளில் களப்படுத்தி வந்தார். இந்த மாமாவே தனது சிறுகதைகளை எனக்கும் வாசித்துக் காட்டி, என்னை இத்துறையில் ஈடுபாடு காட்ட ஒரு அடிக்கல்லை நாட்டினார். நிச்சயமாக இந்த மாமா இன்று உயிரோடு இருந்தால் என்னைப் பார்த்து மிகவும் சந்தோசப்படுவார். அவரின் இழப்பு இன்றும் எனக்கு ஆ(மா)றாத வடுவாகவே உள்ளத்தில் பதிந்துள்ளது.
2004 ஆம் ஆண்டில் திக்குவல்லை ஸப்வான் என்ற ஆசிரியரே முதன் முதலில் என்னைப் பற்றிய அறிமுகத்தை தினகரனின் இணைப்பிதழான செந்தூரத்தில் இடம்பெறச் செய்து, என்னை ஊக்கப்படுத்தினார்.
2004 ஆம் ஆண்டில் திக்குவல்லை ஸப்வான் என்ற ஆசிரியரே முதன் முதலில் என்னைப் பற்றிய அறிமுகத்தை தினகரனின் இணைப்பிதழான செந்தூரத்தில் இடம்பெறச் செய்து, என்னை ஊக்கப்படுத்தினார்.
பூங்காவனம் சஞ்சிகை தொடங்க உந்துதலாய் அமைந்த விடயம் எது?
மல்லிகை, ஞானம் போன்ற சஞ்சிகை கள் அந்நாட்களில் மிகவும் பிரபல்யம் பெற்றவையாக இருந்தது. ஞானம் சஞ்சிகை எனக்கு அறிமுகமான புதிதில் மாதா, மாதம் ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தி, அவரது கவிதையையும் பிரசுரித்து வந்தது. அதில் எனது அறிமுகமும் எனது கவிதையும் பிரசுரமாகியது. அந்த மகிழ்ச்சியை இன்றும் அளவிட்டுச் சொல்ல முடியாது. எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை எனது எழுத்தாள நண்பர்களுக்கும் வழங்கினேன். அதாவது அவர்கள் பற்றிய அறிமுகத்தையும், அவர்களது கவிதையையும் பிரசுரமாக நான் உதவியாக இருந்தேன்.
2004 ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகையில் நிர்மூலம் என்ற எனது கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் 16 வருடங்களைக் கடந்து நின்றாலும் ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த களங்கள் மிகவும் பெறுமதியானவை. அவையே என்னை ஊக்குவித்தன.
என்றாலும் புதிய எழுத்தாளர் களுக்கு வாய்ப்புக் குறைவாக அமைந்ததைக் காணமுடிந்தது. அதன் விளைவால் 2010 ஆம் வருடம் பூங்காவனம் என்ற சஞ்சிகையைத் தொடங்கி அதில் மூத்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் உள்வாங்கி, கூடுதலாகப் புதிய எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தேன்.
நீங்கள் இதுவரை எழுதிய நூல்கள் எவை? அவை, மக்கள் மத்தியில் எந்தளவு வரவேற்பைப் பெற்றுள்ளன?
தென்றலின் வேகம் (2010), எரிந்த சிறகுகள் (2015) என்ற இரண்டு கவிதை நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். அவை இளசுகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. அவர்கள் ஒத்த மன நிலையில் கவிதைகளை வாசித்ததாகவும், ஒரே மூச்சாக புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்ததாகவும் கூறியதைக் கேட்டு மன நிறைவு கொண்டேன்.
கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை (2013) மற்றும் அறுவடைகள் (2015) என்ற இரண்டு நூல் விமர்சனங்கள் அடங்கிய நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். இந்த இரண்டு நூல்களைப் பற்றிச் சொல்லும் போது மூத்த எழுத்தாளர்கள் பலர் தங்களது நூல்களுக்கு, நானே நூல் விமர்சனம் எழுத வேண்டும் என்று விரும்பி, என்னிடமே அவர்களது நூல்களைத் தருகின்றார்கள். கிட்டத்தட்ட நான் இன்றுவரை எழுதிய நூல் விமர்சனங்கள் சுமார் 150 போல் இருக்கும். மூத்த எழுத்தாளர்கள் தொடக்கம் இளம் எழுத்தாளர்கள் வரை பாகுபாடின்றி நூல் விமர்சனங்களை எழுதியுள்ளேன். இத்துறையில் ஈடுபாடு காட்ட விரும்புபவர்கள் எனது நூல்களை வாசிப்பதன் மூலம் பல எழுத்தாளர்களது நூல்களை வாசித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விடியல் (2017) என்ற ஆய்வு நூலானது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் இதழியல் கற்கும் போது சமர்ப்பித்த ஆய்வாக அமைகிறது. இந்த நூலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் என்னிடம் கேட்டு பார்வையிடுகின்றார்கள். ஒரு ஆய்வு நூல் எப்படியிருக்க வேண்டும் என்ற அறிமுகத்தை இந்த நூல் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
எனவே எந்த வகையான நூலாக இருந்தாலும் அவை பலருக்கும் பல வகைகளில் மிகுந்த பிரயோசனம் உடையதாக அமைய வேண்டும். இப்படியான நூல்கள் தான் காலத்தின் தேவையாக உள்ளது என்று நினைக்கின்றேன்.
இலக்கியம், பத்திரிகை தவிர, மற்ற துறைகளில் உங்களுக்கிருக்கும் ஆர்வம் பற்றி..?
கணக்கீட்டுத் துறையில் உயர் தரம் கற்றதால் கணக்கீட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த ஈடுபாட்டின் காரணமாக பாடசாலை மாணவர்களை நோக்கியதாக கணக்கீட்டுத் துறையில் மூன்று நூல்களை என்னால் வெளியிட முடிந்தது. இந்த நூல்கள் அந்தப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளன. அத்துடன் இப்போதைய கொரோனாக் கால ஓய்வு நாட்களில் அடிப்படைக் கணக்கீடு என்ற புதிய நூலொன்றையும் தயார்செய்துக் கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இந்த நூலும் கணக்கீடு பாடம் கற்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில்எந்தவித ஐயமும் இல்லை.
உங்கள் வாழ்க்கையில் ரோல் மாடலாக நினைப்பது யாரை?
அவ்வாறு குறிப்பாக சொல்வதற்கு யாருமில்லை. ஒவ்வொரு விடயங்களிலும் பலதரப்பட்டவர்களை முன்னுதாரணமாகக் கொள்கின்றேன் அவ்வளவே. புதுக் கவிதை களைப் பொறுத்தவரை கவிஞர் மு. மேத்தா அவர்களின் கவிதைப் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். நூல் விமர்சனங்களைப் பொறுத்தவரையில் கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் திறனாய்வுப் போக்கு மிகவும் பிடிக்கும். இப்படி சில துறைகளில் சிலரை முன்னுதாரணமாகக் கொள்கிறேன்.
இன்றைய பெண்கள் சமுதாயம் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினை எது? உங்கள் பார்வையில் அதற்கான தீர்வு என்னவென நினைக்கிறீர்கள்?
தற்காலத்தைப் பொறுத்தவரை பொது வெளியில் பேசக் கூடிய அல்லது பேச வேண்டிய ஒரு விடயமாக பெண்கள், குழந்தைகளின் பாது காப்பு முக்கிய இடம் பெறுகிறது. குறிப்பாக தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பஸ்களிலும், அலுவல கத்திலும் மட்டமான சில ஆண்களின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. பலர் எதிர்த்தும் சிலர் வெளியே சொல்ல முடியாமல் கண்ணீ ரோடும் வாழ்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தளவில் சொந்த பந்தத்திலுள்ள சில ஆண்கள், சில ஸ்கூல் சர்விஸ் சாரதிகள், சில ஆண் ஆசிரியர்கள் போன்றவர்களின் தகாத தொடுகைகளுக்கு உள்ளாகி சில குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லப் பயந்து ஒரு வகையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் தைரியமாக தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அலுவலகங்களில் தம் சக பெண் ஊழியர்களிடம் தமக்கு நடந்த அநீதியைத் தெரிவித்து அவர்களையும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் பெண் மேலதிகாரிகளிடமும் இதுபற்றி முறையிட வேண்டும். குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ சொல்லிக்கொடுப்பதைவிட ‘டோன்ட் டச்’ என்று சொல்லிக் கொடுங்கள். பெண் பிள்ளைகள் ஆண் நண்பர்களுடன் பழகுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அவதானியுங்கள். மிக முக்கியமாக ஸ்மார்ட் போன்களை பிள்ளைகளுக்கு கொடுக்காதீர்கள். அதே போன்று தற்காலத்தைப் பொறுத்தவரை பெண் பிள்ளைகளுக்குப் போன்றே ஆண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
இலங்கையில் எழுத்துச் சுதந்திரம் திருப்திப்படக்கூடிய அளவில் உள்ளதா?
எழுத்துச் சுதந்திரம் என்பது உலகள வில் நோக்கினாலும் நூற்றுக்கு நூறு வீதம் இல்லை என்றே கூற வேண்டும். அரசியல், இலஞ்சம், ஊழல், மோசடி போன்ற எதுபற்றிக் கூறினாலும் அவற்றை மேலோட்டமாக விமர்சிக்க முடியுமே தவிர, ஆழமான கருத்துக்களை பதிவிடுவது உயிர் அச்சுறுத்தலுக்கே வழிவகுக்கும் நிலமை காணப்படுகின்றது. இதில் இலங்கை மட்டும் விதிவிலக்கு அல்லவே. இந்தக் கேள்விக்கான விடையை இதற்கு மேலும் விரிவாகச் சொன்னால் அதுவே ஒரு பிரச்சினையாகவும் மாறிவிடக் கூடும்.
நூற்றுக் கணக்கானவர்களை நீங்கள் பத்திரிகை, சஞ்சிகை, இணையத் தளங்கள் வாயிலாக நேர்காணல் செய்துள்ளீர்கள். உங்களது அறிமுகம் மற்றும் நேர்காணல்கள் ஊடகங்களில் வெளிவந்தது தொடர்பாகப் பகிர்ந்து கொள்ளலாமே?
திக்குவல்லை ஸப்வான் என்ற ஆசிரியரே முதன் முதலாக என்னைப் பற்றிய அறிமுகத்தை தினகரனின் இணைப்பிதழான செந்தூரத்தில் (2004.07.04) இடம் பெறச் செய்து என்னை ஊக்கப்படுத்தினார். அதைத் தொடர்ந்து இன்றுவரை 20 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் இதழ், வானொலி, தொலைக்காட்சியாக வந்துள்ளது.
ஊவா சமூக வானொலியில் நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒலிபரப்பப்பட்டுள்ளன. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஒலிபரப்பான இந்த நேர்காணலை பாத்திமா ரிஸ்வானா செய்தார். இந்த நேர்காணல் மூலமே எனக்குத் தாராளமாகக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அவகாசம் கிடைத்தது.
இலக்கியத் துறையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம்?
விருது வழங்கும் ஒரு தனியார் அமைப்பு, பத்திரிகைகளில் ஆய்வு நூல் மற்றும் மொழி பெயர்ப்பு நூல் போன்றவற்றுக்கு விருது கொடுப்பதாக தகவல் தந்து, நூல்களை அனுப்பி வைக்கும்படி கோரியிருந்தார்கள். அதற்கிணங்க நானும் எனது நூலையும் குறிப்பிட்ட அமைப்புக்கு நேரில் கொண்டு போய்க் கொடுத்தேன். சில நாட்களில் தொடர்பாளர் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஒரு இலக்கிய நிகழ்வைக் குறிப்பிட்டு அதற்கு வருமாறும், நிகழ்வு முடிந்த பின்விடியல் நூல் பற்றிக் கதைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதன்படி நானும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றிருந்தேன்.
தொடர்பாளர் என்னை ஒரு தனிப்பட்ட ரீதியாக நேர்காணல் செய்தார். இந்த நேர்காணலில் முழுக்க, முழுக்க எனது வருமானம், குடும்பப் பொருளாதார நிலைமை, ஆண் சகோதரர்களின் தொழில், அதிலும் வெளிநாட்டில் யாராவது உறவுகள் வசிக்கின்றார்களா போன்ற கேள்விகள் முக்கிய பேசு பொருளாக அமைந்தன. அவர் எதிர்பார்த்த கேள்விகளில் அவருக்கு சாதகமாக எந்தப் பதிலும் அமையவில்லை.
நான் மிகவும் வறுமையான குடும்பத்தி லிருந்து வந்தவள் எனும் உண்மையைச் சொன்னேன். அவரைப் பொறுத்தவரை அந்த நேர்காணலில் நான் தோல்வியடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆகக் குறைந்தது அவரது பெயரை எனது விடியல் நூலில் குறிப்பிடவில்லை என்றும் கடிந்துகொண்டார்.
என்ன ஆச்சரியம் எனது விடியல் நூல் தேர்வுக் குழுவுக்கே போகவில்லை. இதுபற்றி மிகவும் உறுதியாகத் தெரிந்து கொண்ட நான், அவரிடம் எனது நூல் தொடர்பாக வினவினேன். அவர் மிகவும் காரசாரமாகப் பேசினார். உங்கள் நூலை தேர்வுக் குழுவுக்குப் அனுப்புவோம் அல்லது அனுப்பாமல் விடுவோம். அதனை முடிவு செய்வது நாங்கள். மட்டுமல்லாமல் நாங்கள் நினைத்தவர்களுக்குத்தான் விருதும் கொடுப் போம் என்றும் குறிப்பிட்டார். இதனை ஒரு கேள்வியாக கேட்டுக் கொண்டு நீங்கள் வருவது தான் சரியில்லை என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.
விரும்பியவர்களுக்கு விருதுகளைக் கொடுக்கட்டும். எதற்காக உலகத்தை ஏமாற்ற வேண்டும்? பின்னர் இந்த எனது பிரச்சினையை நான் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தினேன். அமைப்பின் தலை வரும், தொடர்பாளர் பேசியது போலவே என் கார், என் பெற்றோல், என் இஷ்டம் என்ற அதிகாரத் தோரணையில்தான் பேசினார்.
சத்தியமாக எனக்கு விருது கிடைக்க வில்லை என்பது எனது கவலையல்ல. எனது நூல் தேர்வுக் குழுவுக்குப் போய் விருது கிடைக்காமல் இருந்தால் அது நியாயமானதே. அந்த நூல்களைத் தேர்ந் தெடுக்கும் நடுவர்கள் ஒருவரும் எனது நூலைக் கண்ணாலும் காணவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம். இப்படியான ஒரு போலிக் கும்பலுக்கு எனது நூலைக் கொடுத்தேன் என்று நினைக்கையில்தான் கவலையாக இருக்கிறது.
நூல் தரமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குறிப்பிட்ட நபரை ஏதோ ஒரு (பொருளாதார) காரணத்துக்காக பிடித்திருந்தால் விருது கொடுப்பார்கள். இப்படி விருதுகள் பற்றி பலரும் பலதையும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்த ஒரு புதுமையான அனுபவம். இந்த நிகழ்வை என்னால் இன்றும் மறக்கமுடியவில்லை.
இப்படித்தான் 2018 இல் முக நூல் நுட்(அற்)பமான குழுமமொன்று விழாவமைத்து எனக்கு ‘’கலைப்பொழில்’’ நுட்ப விருது தருவதாக அறிவித்து மூன்று மாதம் பதிவுகள் போட்டு அமர்க்களப் படுத்தினார்கள். இவர்களை நம்பியும் பலர் வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களிடம் நன்கொடையென சொல்லி பணம் பறித்திருக்கிறார்கள். விருது தயாரிப்பில் தாமதமாகி விட்டதென்று சொல்லி சமாளித்தி ருக்கிறார்கள். பெரும் செலவு செய்து வந்தவர்கள் வேதனைப்பட்டதை நான் அறிவேன். எனக்கும் இதுவரை அந்த குழுவினர் எனக்கு எந்த விதமான விருதுகளையும் அனுப்பி வைக்கவில்லை. இப்படியான அமைப்புகள் பணத்தை மட்டுமே நோக்க மாகக் கொண்டு செயல்படுவதைதிருத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் இதுவரை சாதித்ததும், சாதிக்க நினைப்பதும்?
2010 ல் பூங்காவனம் இலக்கிய வட்டத்தை நிறுவி, அதன் மூலம் இதுவரை 37 பூங்காவனம் காலாண்டு சஞ்சிகைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டிருப்பதைப் பெரும் சாதனையாகவே நினைக்கின்றேன். ஏன் என்றால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு விளம்பரங்களைத் தேடுவதிலுள்ள சிக்கல், ஆக்கங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தட்டச்சு செய்வது, அச்சகங்களின் தாமதம் போன்றவற்றைத் தாண்டி குறிப்பிட்ட காலத்துக்குள் சஞ்சிகையை வெளியிடுவது ஒன்றும் அவ்வளவு இலேசான காரியமல்ல. எனவே அதை நான் சீராக வெளியிட்டு வருவதே ஒரு சாதனை என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
ஒரே துறையில் அல்லாது கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம், ஆய்வு போன்ற பல தளங்களிலும் இலக்கியம் படைப்பதோடு மேலதிகமாக கணக்கீட்டுத் துறையையும் இணைத்து இதுவரை 13 நூல்களை வெளியிட்டிருப்பதும் என்னைப் பொறுத்த அளவில் ஒரு சாதனையாகவே நினைக்கிறேன்.
கணினி வடிவமைப்பும் முழுமையாக செய்த நிலையில் அச்சுக்குத் தயாராக இருக்கும் இன்னும் 5 நூல்களை எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்.
ஊடகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் கால் பதிக்க ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண் களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
இலக்கியம் என்பது ஒரு அழ கான பூஞ்சோலை. அதிலே பலர் தேனெ டுத்துக் கொண்டிருப்பார்கள். சிலரோ அப்பூஞ்சோலையை அழிக்க வாளெடுத்துக் கொண்டிருப்பார்கள். இலக்கியத் துறையில் சாதிப்பதற்கு பலர் எமக்கு கைகொடுத்தாலும் சில நேரங்களில் வெட்டுக் கொத்துக்கள் நிறைய இடம் பெறும். முதலில் அவற்றை எதிர்கொள்ள தைரியம் வேண்டும். அவ்வாறானவர்களைக் கண்டு ஒதுங்கி விடாமல் தன் முயற்சியில் உறுதியாக நிற்க வேண்டும். சமூகத்திற்காக தான் சொல்ல வந்ததை துணிவோடும் உளத் தூய்மையோடும் படைப்பாக்கம் செய்வதில் உறுதியாக நின்று முன்னேற வேண்டும்.
உங்கள் இலக்கியப் (இலட்சியப்) பயணத்தில், மேலும் சாதனைகளுடன் தடம் பதித்து வெற்றிவாகை சூட, தமிழ்நெஞ்சம் இதழ் சார்பாக எம் இனிய வாழ்த்துகளையும், நன்றிகளையும் கூறிக்கொள்கிறோம்.
3 Comments
A.muthu Vijayan · மே 31, 2020 at 7 h 50 min
அருமை வாழ்த்துகள்
நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மே 31, 2020 at 8 h 47 min
வெகு சிறப்பு சகோதரி…இலக்கியம் என்பது ஒரு அழகானப் பூஞ்சோலை அதில் சிலர் தேனெடுத்துக் கொண்டிருப்பார்கள் சிலரோ அப்பூஞ்சோலையை அழிக்க வாளெடுத்துக் கொண்டிருப்பார்கள்… துணிவோடும் தூய்மையோடும் படைப்பாக்கம் உருவாக்குவதில் உறுதியாக நின்று முன்னேற வேண்டும்… இனிய நல்வாழ்த்துகள் சகோதரி.
Kohila · மே 31, 2020 at 15 h 30 min
வாழ்த்துக்கள் சகோதரி ! இலங்கையில் உங்களைப்போன்று பெண்கள் ஆய்வு மற்றும் நூல் விமர்சனத் துறைகளில் மிளிர்வது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது எனவே எமக்கு இவை பெருமைக்குரியதாகவே உணர்கின்றேன். வாழ்த்துக்கள் 💐💐💐