உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு….
திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில்
அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ…
ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை
அறவே துறந்த எழுத்துச்சித்தன்
நானே எனக்கொரு போதிமரம் எனும்
தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை
எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்
கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் !
வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியை
ஆய்ந்தாய்ந்து இலக்கியச் சிம்மாசனத்தில்
அமர்ந்தவன் நீ !
நிலாக்கால மேகங்களின் நிழல் யுத்தத்தில்
தாயுமானவனாய் நீ வருவாய் என
காத்திருந்த அறிஞருக்கு எல்லாம்
அறிவொளித் தீபம் ஏற்றியவன் !
பச்சை வயல் மனதுடன் மரக்கால் கொண்டு
மெர்க்குரிப் பூக்களை அளந்தவன் நீ !
உனது பிரம்புக் கூடைக்குள் வைத்திருந்த
பந்தயப் புறாக்களை இலக்கிய வானில்
பறக்கவிட்ட போதெல்லாம்
மௌனமே காதலாகி விழித்துணையோடு
முன்பனிக் காலத்தை எங்களுக்கு
அடையாளம் காண்பித்தவன் நீ !
இராசேந்திர சோழனின் பிறப்பின் பெருமைக்கு
மகுடம் சூட்டி மகிழ்ந்தவன்….ஆனால் அவனது
இறப்பு பிரம்மதேசமெனும் சிற்றூரில் நிகழ்ந்ததென்று
துடிதுடித்துப் போன வரலாற்று ஆய்வுக் காதலன் நீ !
நாயகன் முதல் புதுப்பேட்டை வரை
நின்புகழ் நிலைத்திருக்கும் திரையுலகில்
உனது அகன்ற விழிகளும் வெண்தாடியும்
குங்குமப் பொட்டோடு உறவாடும் நெற்றியும்
என்றென்றும் எங்கள் கண்முன்னே கொலுவிருக்கும் !
உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு…
பாலகுமாரன் எனும் பெயரோடு !
கா.ந.கல்யாணசுந்தரம்
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
3 Comments
பெண்ணியம் செல்வக்குமாரி · ஜூன் 1, 2018 at 6 h 57 min
அருமையான கவிதை.. மிக்க நன்றி ஐயா..
Vijayalakshmi · ஜூன் 1, 2018 at 19 h 18 min
Great
ஆ.நடராஜன் · ஜூன் 13, 2018 at 7 h 24 min
கண்டேன்
ரசித்தேன்
சிறப்பு.