கலையரசன் கந்தசாமி, சுருக்கமாக கலை கந்தசாமி புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். புதுவை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு கடந்த 14 வருடங்களாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவத்தில் மென் பொருள் வல்லுனராக பணி புரிந்து வருகிறார்.

குறள் எனும் தமிழ்ச் செயலியை தனி ஒருவராக உருவாக்கி அதனை இலவசமாக வழங்கிவருகிறார் கலை. இந்த தொகுப்பில் உள்ள கவிதை என்ற சொற்செயலி ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழ்ச் சொற்கள் அடங்கிய அகராதியுடனும் சொற்பிழை திருத்தும் வசதியுடனும் அமைந்திருப்பது பெருஞ்சிறப்பு. தமிழில் எழுதியதை அப்படியே வாசித்துக் காட்டும் ஓசை எனும் தமிழ் உரை ஒலி (Text to Speech) செயலி இத்தொகுப்பின் தனிச் சிறப்பு.

தமது ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியை தமிழ்ப் பணிக்காகச் செயல்படும் இவர் போன்ற செயல்வீரர்கள் இருக்கும் வரை தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற பயம் நமக்குத் தேவையில்லை.

கணினியில் தமிழின் முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் இருக்கிறதா?

அவ்வளவாக இல்லை என்பது தான் என் கருத்து.பொதுவாக மென் பொருட்களின் பட்டியல் (Menu) மற்றும் திரையில் தோன்றும் செய்திகளைத் தமிழாக்கம் செய்வது மட்டுமே கணித் தமிழ் (Tamil Computing) என்ற தவறான கருத்து பரவிக் கிடக்கிறது. யாரோ தாயாரித்த மென் பொருட்களின் திரையில் தோன்றும் ஆங்கிலச் சொற்களையெல்லாம் தமிழில் தோன்றும் படிச் செய்வதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு நிச்சயமாக அதிகரிக்காது. அத்துடன் இது ஆராய்ச்சி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தமிழ் மொழிக்கேற்பச் சிறந்த செயலிகளை எளிய முறையில் பயன் படுத்தும் வண்ணம் வடிவமைப்பதே கணித் தமிழாகும். உதாரணமாக ஒளி வழி எழுத்துணர்தல் (Optical Character Recognition) , உரு மாற்றிகள் (Morphological Analyzer/Generator), உரை ஒலி (Text To Speech), ஒலி உரை (Voice To Text), தமிழ்த் தொழிலகச் செயலிகள் (Tamil Enterprise Software) போன்ற தலைப்புக்களில் ஆராய்ச்சியை மேற்கொள்வதால் அல்லது இருப்பதை எளிமையாக்குவதால் மட்டுமே கணித் தமிழ் முன்னேற்றம் அடையும். அப்போது தான் அதனைப் பயன் படுத்துவோர்களும் அதிகரிப்பர்.

தமிழ் இணையத் தளங்களின் தோற்றம், கட்டமைப்பு, பொருளமைப்பு தமிழின் வளர்ச்சிக்கு உதவும் முகமாக இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது, ஏனைய இந்திய மொழிகளை விடத் தமிழின் இணையப் பயன்பாடு மிகவும் முன்னேறிய இடத்தில் இருக்கின்றது என்பது என் கருத்து. தமிழ் இணையத் தளங்களின் தோற்றம் அதன் கட்டமைப்பு, பொருளமைப்பு யாவும் உலகத் தரமானதாகவும் இருப்பது தமிழின் வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும். இன்றைய முன்னணி நாளேடுகள், வார இதழ்கள், செய்திக் குழுக்கள் யாவும் தமிழ் இணையத் தளங்களாக அவதாரம் எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கதே. அத்துடன் புத்தம் புதுத் தொழில் நுட்டமான வலைப் பதிவுகள் (Blogs) மூலம் பதியப் பட்ட பக்கங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

அதே சமயத்தில் சில குறைபாடுகளையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு தமிழ் இணையத் தளமும் தங்களுக்குப் பிடித்த வெவ்வேறான குறியீட்டு முறைகளைப் (Encodings) பயன் படுதுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இது தமிழின் வளர்ச்சிக்குச் சிறு தடைக் கல்லாகவே இருக்கிறது. அதே சமயத்தில், இன்றைய ஒருங்கிணைந்த குறியீடான யுனிகோட், வருங்காலத்தில் இக்குறையைப் போக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

நீங்கள் “குறள்” செயலியை ஆக்க உந்துகோலாக அமைந்தது எது?

முதலில் நான் தமிழில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று எண்ணி ஒரு நல்ல தமிழ் மென் பொருளைத் தேடினேன். என் தேடலில் கிடைத்த யாவும் என் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. சில மென் பொருட்களோ என் கணினியை இடையிடையே உறைய வைத்தன. இப்படி என் தேடலுக்கு என்னால் எனக்காகத் தயாரிக்கப் பட்டதே இக் குறள் தமிழ்ச் செயலி.

பின்பு என் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் வலம் வந்து, அதன் பின் அவர்களின் அறிவுரைப் படி இவ்வுலகில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் பயன் படுத்தும் வகையில் 2000 ஆம் ஆண்டு குறள் தமிழ்ச் செயலியின் முதல் வெளியீட்டினைச் செய்தேன். அன்றிலிருந்து இன்றுவரை இதனை மென்மேலும் உயர்த்த என்னால் முடிந்த வரை முயன்று கொண்டிருக்கின்றேன்.

“குறள்” மென் பொருளின் மேலதிகச் செயலிகள் ஏதாவது தற்போது ஆக்கத்திலுள்ளதா?

குறள் தமிழ்ச் செயலியின் மூலம் பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவதே என் கடமையாகும். அதன் படி, தற்போது வெளியிட்ட குறள் 3.1 என்ற வெளியீட்டில் ஓசை – தமிழ் உரை ஒலி (Text to Speech) என்ற ஒரு வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தேன். தமிழில் எழுதியதை அப்படியே வாசித்துக் காட்டும் இந்த அம்சம் பலரையும் கவர்ந்ததிருக்கிறது. மழலைத் தமிழ் பேசும் இவ்வம்சத்தை இன்னும் செம்மையாக்கிக் கொண்டு இருக்கின்றேன். அது போல இப்போதைய வெளியீட்டில் வழங்கப் பட்டிருக்கும் தமிழ்ச் சொற் பிழை திருத்தியின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் வடிவமைத்துக் கொண்டுள்ளேன். குறள் தமிழ்ச் செயலியின் சமீப வெளியீட்டினை KuralSoft.com என்ற இணையத் தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அடுத்து வரும் வெளியீட்டில் இது போன்று இன்னும் நிறையத் தொழில் நுட்பங்களையும் அறிமுகப் படுத்த உள்ளேன்.

தாங்கள் “குறள்” மென் பொருளை உருவாக்கியதன் முழுப்பலனை அடைந்ததாக எப்போது எண்ணுவீர்கள் அல்லது அப்படியான ஒரு நிறைவை ஏற்கனவே அடைந்து விட்டீர்களா?

மென் பொருளென்று இல்லை, நாம் செய்யும் எந்த காரியமும் எப்போது ஒரு சமுதாயத்திற்குப் பயன்பட்டு அச்சமுதாயத்தின் ஒரு அங்கமாக மாறுகின்றதோ அப்போதுதான் அது முழுப் பயனும் அடைந்தது என்பது என் தாழ்மையான கருத்து. அதன்படிக் குறள் தமிழ்ச் செயலி இன்று நம் தமிழ் சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஆனதன் மூலம் இதனைத் தயாரித்ததன் முழுப் பலனும் அடைந்து விட்டேன் என்றே கூறலாம்.

உதாரணமாக அமெரிக்க விமான நிலையத்தில் நான் சந்தித்த ஒரு தமிழ் நண்பர், தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தந்ததில் குறள் தமிழ்ச் செயலி பெறிதும் உதவியது என்று கூற, நான் மிகவும் மகிழ்ந்து போனேன்.

அது போல் கடந்த வருடம் என் இந்தியப் பயணத்தின் போது ஹிக்கின் பாதம்ஸ் சென்று வாங்கிய “இயல் தமிழ் இலக்கணம்” என்ற நூலின் முன்னுரையைப் படிக்கும்போது, அதன் ஆசிரியர் தனது புத்தகத்தை வடிமைக்கக் குறள் செயலி பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்து என்னை வியக்க வைத்தது.

மேலும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து என்னைத் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள், குறள் செயலியை எப்படி எல்லாம் மாணவர்களுக்குக் கற்பிக்கப் பயன் படுத்துகின்றார்கள் என அறிந்து கொண்ட போது, நான் முழுப் பலனும் அடைந்ததாகவே நினைத்தேன்.

ஆனாலும் மேன் மேலும் இச்செயலியைச் செம்மையாக்கி வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களையெல்லாம் இதன் மூலம் நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்குவதே என் நோக்கமாகும்.

தமிழ் இலக்கிய உலகில் உங்களுடைய ஆர்வம் எத்தகையது?

எனது இலக்கிய அறிமுகம், சிறு வயதில் திருக்குறளை மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டதிலிருந்தே துவங்கியது எனலாம். அப்போது அதன் பொருள் உணராது மனனம் செய்த திருக்குறட்களைப் பிற்காலத்தில் அர்த்தம் புரிந்து படித்த போது ஏற்பட்ட வியப்பு எனது இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது எனலாம். அதன் பின் அறிமுகமான பாரதியார், பாரதிதாசன், வைரமுத்து, அப்துல் ரகுமான் போன்றோர்களின் கவிதைகள் என்னைத் தேடித் தேடிப் படிக்க வைத்தன. தி.ஜானகிராமன், நீல பத்மநாபன், ராஜ நாராயணன், பாலகுமாரன், சுஜாதா போன்றோர்களின் எழுத்துக்கள் என்னுள் தமிழார்வத்தைத் தூண்டியது எனலாம்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கலந்து கொண்ட பேச்சுப் போட்டிகள், நாடகங்கள், கையெழுத்துப் பத்திரிக்கைகள் போன்றவை என் தமிழார்வத்திற்கு மைல் கற்களாகவே அமைந்தன. 1989 ஆம் ஆண்டு நான் எழுதிய, எனக்கு மிகவும் பிடித்த மாமேதை சர் சி.வி ராமன் அவர்களைப் பற்றிய மூன்று பக்கக் கட்டுரை, அறிவியல் ஏடான கலைக் கதிரில், அதுவும் அவர் நூற்றாண்டுச் சிறப்பு மலரில் வெளி வந்தது எனது எழுத்து ஆர்வத்திற்கான முதற் படியாகும்.

புலம் பெயர் நாடுகளில் இனி வரும் இளம் தலைமுறை தமிழின் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் நாட்டம் கொள்ள இப்போதிருந்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?

புலம் பெயர்ந்த நாடுகளில் என்ன மொழி வழக்கில் உள்ளதோ அதை மட்டுமே தங்கள் குழந்தைகள் படித்தால் போதும் என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். அவர்கள் முன் நல்ல தமிழ் நூற்களைப் படிக்க வேண்டும், அதில் ரசித்த பகுதிகளை ஒரு கதை சொல்வது போலச் சொல்ல வேண்டும். இப்படிப் பெற்றோர்களே முன்னுதாரணமாக இருப்பதன் மூலம் இளம் தலைமுறையினர் நிச்சயமாகத் தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுக் கொள்வர் என்பது உறுதி.

நேர்காணல் சத்தி சக்திதாசன்

Related Posts

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்

இலங்கை திருநாட்டில் எழில் கொஞ்சும் மலையகத்தில் கம்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா டீன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். கலைக்குடும்பத்தின் வாசனையில் பூத்த இவர் இலங்கையின் முதல் தினசரியான “தினதபால்” ஆசிரியர் காலஞ்சென்ற மீரா மொஹியிந்தீன் அவர்களின் பேத்தியாவார்.

 » Read more about: மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்  »

நேர்காணல்

ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்

  1. உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன்.

எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன்,

 » Read more about: ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்  »