க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களில் ஓவியம், நடனம் குறித்த இவரின் கட்டுரைகளும், இவை தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. மொழிபெயர்ப்பையும் விட்டு வைக்காத இவர் ஒரு சகலகலாவல்லி. எழுத்தில் ஆளுமை பெற்றிருக்கும் இவர் நகைச் சுவையுணர்வுடைய, இளமையோடு உறுதியும் கொண்ட எப்போதும் இருபது வயதைத் தாண்டாத இளகிய, மென்மையான, மனதையுடையவர். ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ என்னும் உலகளாவிய பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலை பெண் ஓவியர்களின் கோட்டோவியத்தோடு வெளியிட்டார்.
உள்ளத்தில் எழுத்தின் மீதான ஆர்வம் உதித்தது எப்போது? உள்மனதில் அதற்கான உந்துதல் உருவானது எப்படி?
பழனி ராமசாமி ஐயர் எனது பாட்டனார். நல்ல செல்வாக்கோடு வாழ்ந்த குடும்பம். அம்மா பூரணி அந்தக் காலத்திலேயே கதை, கவிதைகள் எழுதுவார். அமராவதி ஆற்றின் அந்தக்கரையில் இருந்து இக்கரைக்கு தாராபுரத்திலிருந்து கொளிஞ்சவாடிக்கு வரும் காலக்கட்டத்தில் நிகழ்ந்த பெருத்த பொருளாதார மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த செல்வாக்கான வாழ்க்கைக்கும் இப்போதுள்ள வாழ்க்கைக்கும் இடையேயான வேறுபாட்டின் காரணம் அறிய இயலாத இளம் வயது. உணவு உண்ணும் விதத்திலான மாறுதலும் கேள்வியைத் தோற்றுவித்தது. அச்சமயத்தில் காய்ச்சல் வந்து எழ இயலாவண்ணம் படுத்திருந்தேன். சாக்லேட் சாப்பிட வேண்டு மென்ற எண்ணம் தோன்றியது. உணவு உண்ண இயலாதவருக்கு சாக்லேட் உண்ணத் தோன்றலாமா என்று உள்ளக் குமுறல்களை எழுதினேன். அம்மா அதனைப் படித்து அழுது விட்டார். அப்போதும் அந்த உணர்வு சிறுகதை வடிவில் வந்திருப்பதாக மகிழ்ந்தார். அண்ணன் K.V.ராமசாமி மிகவும் ஊக்குவிப்பார். ‘வட்டத்தை விரி வாக்கு, நிறைய மெனக்கெடு’ என்று வழிநடத்தியவர் அவர். எட்டாம் வகுப்பில் solitary reaper, the daffodils கவிதை படித்த பின் அதன் இனிமை பிடிபட்டது. கவிதை எழுதுவதற்கான உந்துதல் இயல் பாகவே வந்து விட்டது.
கலைகளின் மீதான ஈடுபாடும் உங்களின் சிறுவயது கனவுகள்தானா? அவை நனவாகினவா?
எனது மாமா மகன் ஓவியர். அவருடன் திருமணம் இனிதே நிகழ்ந்தது. அவரும் எழுத ஊக்கம் அளிப்பார். ஓவியத்தின் மீதான விருப்பம் அதிகம். வோர்ட்ஸ் வர்த்தின் ‘டெபோடில்ஸ்’ பாடலில் வரும் மஞ்சள் மலர்கள் என்னை வண்ணத்துக்குள் கொண்டு செலுத்தியது எனலாம். எனது கவிதைகளில் வண்ணங்கள் அதிகம் வருவதன் காரணம் என்கணவர் ஓவியர் என்பதால் என்று எண்ணுகிறார்கள். ஓவியக் கணவருடையது கூடுதலானதே தவிர இயல்பாக ‘டெபோடில்ஸ்’ மஞ்சள் தான் முதலில் மனத்தில் அப்பியது. 1945ல் எனது மாமனார் அதாவது என் தாய் மாமன், கலாஷேத்ராவில் சரித்திர ஆசிரியராக வந்தார். பின் என் கணவரது தங்கை, ருக்மணிதேவியிடம் நேரடியான சிஷ்யையாக இருந்து, பரதம் பயின்று பிறகு கலாஷேத்ராவின் முதல்வராகவும், பதவி வகித்து சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ந்ருத்ய சூடாமணி திருமதி கிருஷ்ணவேணி லட்சுமணன் அவர்கள். மேலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஒரு கலையைச் சார்ந்தவர்கள் தனது கலை தவிர இன்னும் சில கலைகளிளாவது நேர்த்தியானதைப் புரிந்து கொள்ளும் படி தனது கலை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது. அடுத்த மொழி மீது காட்டும் அக்கறை போல, மொழிபெயர்ப்பு மீது காட்டும் ஆர்வம் போல. கணவருடன் இணைந்து எழுதிய தொடர் ‘ஓவிய நிகழ்வு’ என்று கணையாழி இதழில் 2000 – த்தில் தொடர்ந்து வெளிவந்தது. இசையும் பரதமும் என்னில் இணைந்ததே எனது மகள் நீரஜா பரதத்தில் நிகரிலா சிறப்புடன் ஓன்றியிருப்பதற்கான காரணம் என நினைத்துக் கொள்வேன்.ஆக கலையை ஒட்டியே வர்ணஓவியமாய், மலர்கொத்தாய் எனது வாழ்க்கை அமைந்து விட்டது. அதனால் தான் நீரஜாவுடன் இணைந்து ‘ஆறாம்திணை’ இணைய இதழில் ‘அபரதம் புரிதல்’ எனும் தொடர் எழுதி பின்பு சென்னை ஆன்லைன் – இல் (ஆங்கில இணைய இதழ்) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்தது. தாமரை, வைகைச்செல்வி, சங்கரி, பூரணி கி. விஜயலட்சுமி ஆகியோரின் கவிதைகளை பாரம்பரிய பரதத்தில் முறையான சங்கீதம் அமைத்து தனி நபர் நிகழ்ச்சியாக ‘அவ்வைக்குப் பின் ஆங்காங்கே’ என்று பெயரிட்டு சென்னையில் எனது மகள் நீரஜாவின் உதவியுடன்(அவளும் கலாஷேத்ராவில் படித்துவிட்டு தற்போது சிங்கப்பூரில் ஆசிரியையாகவும், நிகழ்கலை நிகழ்த்துபவராகவும் பணி புரிகிறாள்.) உலக மகளிர் ஆண்டை ஒட்டி 2001 டிசம்பர் இசை விழாவில் கொடுத்தேன். அதற்கு முன்பாக 2001 மார்ச் 3முதல் 8வரை மகளிர் தினத்தை ஒட்டி 32 பெண்களின் கவிதைகளை பெரியதாக்கி, ‘3அடிக்கு 4அடி என கதவுகள் போல’ அதனுடன் ஓவியத்தையும் இணத்து ‘கவிதைக்காட்சி’ அமைத்தேன்; எனது சொந்த செலவில். அது பெரும் வெற்றி பெற்றது.
எத்தகைய சூழலில் இவ்வாறு செய்யும் எண்ணம் தோன்றியது ?
20 வயதில் விவாகரத்து பெற்று, தனது 48-ம் வயதில் வத்ஸலா எனும் பெண்மணி கவிதையாய் பதிவு செய்கிறார். அவரின் கவிதை வெளியீடு நிகழ்ச்சியில் பேச வந்தவர்களில் ஒருவர் அவ்வைக்குப் பிறகு பேசப்படும் அளவில் பெண் கவிஞர்கள் இல்லை என்கிறார். பெண்களின் கவிதைகள் புலம்பல்களாக உள்ளன என்கிறார். எனது புத்தக வெளியீட்டு நாளில் விழா மேடையிலேயே உடனிருந்த நண்பரே தவறான விமர்சனத்தைச் செய்தார். வருத்தம் தெரிவித்து பிறகு கடிதம் எழுதியது வேறு விஷயம். இவை போன்ற சூழல்களே அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தியது.
‘பறத்தல் அதன் சுதந்திரம்’ நூலும் அந்த உத்வேகத்தில் வெளி வந்தது தானா? கவிதைநூல் தொகுப்பு செயல்பாட்டில் சிரமம் தெரியவில்லையா ?
உலகளாவிய பெண்கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வழங்கமுடிவு செய்ததும் நூற்றுக்கணக்கான இதழ்கள், தொகுப்புக்கள் படித்துத் தேர்வு செய்தேன். முதலில் எல்லோருடைய கவிதைகளையும் 8 அல்லது பத்து என்று தேர்வு செய்து, பின் அதை மறுபடியும் சலித்து என நிறைய மெனக்கெட்டேன். என் கணவர் இதற்கு துணை செய்தார். ஒரு கவிஞருடைய கவிதை என்றால் தொகுப்புகளில் வந்தது பலருடைய இணைந்த தொகுப்புக்களில் இடம் பெற்றது என்பன போன்றவற்றைத் தவிர்த்து – அதாவது சில கவிதைகள் சிலர் முகங்கள் என அடையாளப் படுத்திய கவிதைகளைத் தவிர்த்து – தேர்ந்து எடுத் தேன். உயிரோடு இருக்கும் கவிஞர்களைக் கூடிய மட்டும் அவர்களோடு தொடர்பு கொண்டு அவரின் சமீபத்திய கவிதைகளை இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும், அனைவருடைய அனுமதியுடனும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் சிரமம் கொண்டேன். இதில் ஈழக் கவிஞர்களிடமிருந்து அனுமதி பெறுவதில் மாலதி மைத்ரி பெரிதும் உதவினார். காவ்யா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டோம்.
உங்கள் கவிதைகள் பெரிதும் சதுரம், வட்டம், வர்ணங்களால் நிறைந்துள்ளதே ?
ஆம். கானல் சதுரம் எனது முதல் கவிதைத்தொகுப்பு நூலின் தலைப்பு. நமது வாழ்வே சதுரத்தின் உள்ளே எல்லை கட்டப்பட்டு தானே உள்ளது. பதிப்பகத்தின் பெயர் ‘அகானல் சதுரம்’ என்று வைத்துள்ளேன்.
கவிதை முயற்சிகளுக்கு விருதுகள் பெற்றிருக்கிறீர்களா ?
ஆமாம். ‘கவிஞர் தேவமகள்’ அறக்கட்டளையின் 2000 ம் ஆண்டிற்கான ‘கவிச்சிறகு’ விருது பெற்றேன். அது எனது முதல் நூலான கானல் சதுரம் தொகுப்புக்கு கிடைத்த விருது.
தாங்கள் பெற்ற வேறு விருதுகள் ?
‘சமகாலப் புள்ளிகள்’ சிறுகதைத் தொகுதி சிறுகதைத் தொகுப்பிற்கான இரண்டாம் பரிசு பெற்றது. இந்திய அரசின் மனித உரிமைக் கமிஷனில் அமையப்பெற்ற கலை கலாச்சார மையத்தின் உயர்நிலை மான்யம் 2002 – 2004 (senior fellowship) கிடைத்தது.
கவிதையில் புதிய உத்திகள் கையாள்வது உங்களுக்கு கைவந்த கலையாகத் தெரிகிறதே. மொழி பெயர்ப்பில் தங்கள் பணி?
(frontloading machine, washing machine) கர்ப்பிணிப்பெண் பிரசவித்தலையும், வாஷிங் மெஷினின் செயல்பாட்டையும் இணைத்து ‘இரட்டுற மொழிதல்’ பாணியில் புதிதாய் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.
“அடைத்து உள்செலுத்தியும்
கதவை அழுத்தி மூடியபின்
நீரும் நிழலும் அதற்குள்ளேயே
திரவத்தில் மிதக்கும்,
உருளும், புரளும்
உரிய நேரம் வரும்வரை
சுழன்று சுழன்று மேலெழும்பும்
அறைக்குள் சிறைவாசம்
சிறுதுளை வழியே உள்நீர் வெளிவடிய
உச்சக் கட்ட அலறலுக்குப் பின்
கையிரண்டு இழுத்துப்போட
சுற்றிய கொடியும் ஈரமணமுமாக
ஏந்திய பாத்திரத்தில் இறக்கி கீழே விழும்.
அம்மாவைக் குறித்துச் சொல்லுங்கள்?
அம்மா பூரணிக்கு 90 வயதாகிறது. முன்பே எழுதியவர். இப்போதும் எழுதுகிறார். சிறந்த விமர்சகர்.
இலக்கியப்பணியில் இனிமேல் என்ன செய்ய நினைத்துள்ளீர்கள்?
‘கானல் சதுரம்’ பதிப்பகம் ஆரம்பித்து எனது தாயின் பூரணிகவிதைகள் முதல் தொகுப்பாகவும், அடுத்து அவரின் சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிடவேண்டும். தமிழில் 50-களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக்கவிதையில் பெண்களின் கருப்பொருள், அணுகுமுறை குறித்து ஆய்வு செய்யவேண்டும். பரத நாட்டியம் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அடிப்படை விஷயங்களை என் மகள் நீரஜாவின் உதவியுடன் எழுதி டிசம்பரில் வெளியிட உள்ளேன். மேலும் நவீன ஓவியங்களில் 100 ஆண்டுகள் உலகில் ஏற்பட்ட பரிசோதனை முயற்சிகள், அதன் பின் விளைவுகள் பெண்ணியம் சார்ந்த ஓவிய முயற்சி என அவற்றை தமிழில் ஓவியங்களுடன் ஒரு புத்தகம் கொணர வேண்டும். ஆனால் இதற்கு என்னிடம் போதிய பொருளாதாரம் கிடையாது. பெயிண்டிங் உடன் புத்தகம் போட லட்சக் கணக்கில் செலவாகும். ஆசைப்பட காசு தேவையில்லை.
சாதனையாக ஏதேனும் செய்ய விருப்பம்…?
சாதனையாக அல்ல. இவைகளும் ஆசைகளே. பெண்களுக்கான documentary film ஒன்று எடுக்க வேண்டும். பெண்களின் கவிதைகளை அடிப்படையாகவைத்து visual – ஆக பண்ண வேண்டும் பெண்களின் பிரச்சினைகளைப் பதிவு செய்ய வேண்டுமென நல்ல பல ஆதங்கங்களைச் செயல்படுத்தவேண்டும்
நீங்கள் பெண்ணியவாதியா ?
மனிதவாதி.
பிடித்த எழுத்தாளர் ?
ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், வேணுகோபாலன், குட்டிரேவதி ஆகியோ ரின் எழுத்துக்கள் பிடிக்கும். நகுலனின் … ‘இருப்பதற்காக வருகிறோம். இல்லாமல் போகிறோம்.’ … எனக்கு பிடித்த வரிகள்.
விருப்பத்தில் தத்துவ வேட்கை தெரிகிறதே!?
பெரிய பெரிய சம்பவங்கள் கவிதையாயில்லாமல் போய்விடுகறது. மரங்கள் கவிதையாயுள்ளது. உருவத்தை உடைத்துத்தான் அரூபத்திற்குச் செல்ல வேண்டும். இல்லாத ஒன்று சூன்யத்திற்குப் போக முடியாது.
எனக்கு தத்துவம் எட்ட வில்லை. ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டா ?
விசேஷமாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் விவேகத்தில் நாட்டம் உண்டு. சகல ஜீவன்களையும் நேசிக்க வேண்டும். ஆனால் எல்லோருக்கும் இப்போது அன்பு செய்வது என்பது இயலாத விஷயமாகத் தெரிகிறது.
இதில் ஸ்காண்டிநேவியாவிலிருந்து பெண் ஓவியர்கள் கவிஞர்கள் இந்தியா வந்து தங்கள் ஓவியக் கண்காட்சியை நடத்தினார்கள். அப்போது தமிழ்நாடு சார்ந்த பெண் எழுத்தாளர்களும் இவர்களுடன் இணைந்து கவிதை வாசித்தல், உரையாடல், கருத்துப் பரிமாற்றம், பெண்ணிய விழிப்புணர்வு எனப் பல தளத்தில் தினமும் பரிமாற்றம் நடந்தது. அதை அவர்கள் தொகுப்பாகவும் கொணர்ந்தனர்.
நேர்க்காணல் : மஞ்சு ரெங்கநாதன்