மின்னிதழ் / நேர்காணல்

நேர்கண்டவர் 
வெண்பா வேந்தர் ஏடி வரதராசன்

1. ஐயா வணக்கம்?

வணக்கம் ஐயா
.
2. எல்லோரும் கொரானா தொற்று காலத்தில் உள்ளோம். அதனால் உங்க ளுக்கே உள்ள தொனியில் கவித்துவத் தோடு மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்குங்களேன்.?

வல்லவனுக்கு வல்லவனை இயற்கை உரு வாக்கிக் கொண்டே இருக்கும்..ஆம் பெரிய உயிருக்கும் சிற்றுயிருக்கும் இடையேயான போராட்டமே உலகியல்..

அளவு மீறிப் பெருகும் உயிர்களை இயற்கையே அழித்துச் சமநிலைப் படுத்திவிடும்..இந்த வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணியிரிகளுக்கும் மனிதனுக்குமான போராட்டம் இப்போதல்ல காலகாலமாக நடப்பதுதான்..

ஒரு காலத்தில் காலரா என்ற பாக்டீரிய நோயால் கொத்துக் கொத்தாய்ச் செத் தோம். நுண்ணுயிரியைப் பற்றிய ஆய்வு மிகுந்தபின் பாக்டீரிய நோய்கள் பலவற்றி லிருந்து மனித இனம் இன்று விடு பட்டுள்ளது.. குறிப்பாக காலரா என்ற கொள்ளை நோயிலிருந்து மருத்துவ விஞ்ஞானம் மனித குலத்தையே மீட்டெடுத் துள்ளது

இப்போதோ பெருந்தொற்று என்னும் கொரோனா வைரசுக்கு எதிராக மனித நுண்ணறிவு போராடிக் கொண்டிருக் கின்றது..! அந்த மருந்துவ அறிவு நமக்காகத் தற்போது பரிந்துரைக்கும் ஒரே ஆறுதல் மற்றும் ஆயுதம் தடுப்பூசிதான்..

‘‘அடுத்தடுத்து அலைகள் வந்த போதும் துடுப்பையே ஆயுதமாக யோசித்த மனிதன்
கடலையே கடந்தான்.. நாம் இப்போது தடுப்பை ‘ஊசியாக நேசிப்போம்’ அலைகள் என்ன செய்துவிடும்…!’’

செப்டம்பர் 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் படத்தில் அல்லது கீழ்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
இங்கே டச் அல்லது கிளிக் செய்யவும்
இல்லறத்துணையாள் மற்றும் பிள்ளைகளுடன் பாவலர் வள்ளிமுத்து

3. நானும் கவிஞன் எனும் அடிப் படையில் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். இது பழைய கேள்விதான். ஆயினும் ஒரே ஈற்றடிக்கு பற்பல கோணத்தில் கற்பனை முளைக்கு மல்லவா? அதுபோல் இந்த கேள்விக்கும் சற்று வித்தியாசமான பதிலை எதிர்பார்க்கிறேன் இதோ கேள்வி. புதுக் கவிதை மரபுக்கவிதை இரண்டுக்கும் இலக்கணத்தைத் தாண்டி உள்ள வேறுபாடு என்ன?

‘‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே’’

என்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் கவிதையின் வடிவத்தில் நடக்கப் போகும் புரட்சியை நுட்பமாக ஆய்ந்து, அதை ஏற்றுக்கொள்வது வழுவல்ல அது காலத்தின் கட்டாயம் என்று நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கின்றார் நன்னூலின் இறுதிச் சூத்திரத்தில் பவணந்தி முனிவர்..

கவிதை என்பது அழகான குழந்தை.. அதைப் பார்த்தவுடன் அனைவருக்கும் பிடிக்கும்..

அதற்கும் பூ வைத்து பட்டாடை உடுத்தி மைதீட்டிப் பின்னலிட்டு பார்த்தாலும் அழகாய்த்தான் இருக்கும்..

கிராப் வெட்டி பவுடர் பூசி ஜிகினாப் போட்டு சுடியணிவித்துப் பார்த்தாலும் அழகாய் த்தான் இருக்கும்..

மொத்தத்தில் குழந்தை என்பது உணர்வுப் பூர்வமாக அனைவருக்கும் ஒன்றுதான்.. அதை அழகுபடுத்தும் (கவித்துவப்படுத்தும்) முறைகள்தான் வேறு வேறு

எல்லா மரபுகவிதையும் வெற்றி பெற்றது மில்லை. எல்லாப் புதுக் கவிதையும் தோற்றதுமில்லை. படைப்பாளியின் கவித் துவப் படுத்தும் உத்திகளால் (Technic) வாசகனின் உள்ளத்தைத் தட்டியெழுப்பும் கவிதைகள் காலம் கடந்து வாழ்கின்றன..

தில்லை தமிழ்சங்கத்தில் இரட்டுற மொழிதல் நூல் வெளியீட்டு விழா.

4. புதுக்கவிதையில் சொல்லும் ஒருசில கற்பனை கலந்த செய்திகளை அதே அழகோடு மரபில் சொல்ல இயலாது என்கிறார் களே அதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?

அவர்களின் இந்தக் கருத்தை முழுவது மாக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும், அவர்கள் பக்க நியாயத்தைக் மறுத்து விட்டுக் கடந்து செல்ல முடியாது.

இலக்கணத் தடைகளும் முன்னோர் கட்டிவைத்த மரபுகளும் வழக்கொழிந்த சொற்களும் ஒருவித இயலாமையை உள்ளுக்குள் புகுத்தியதாக உணர்ந்தனர். சொல்ல வந்த உணர்வை துல்லியமாகச் சொல்ல அவையே தடைக்கல்லாக உணர்ந்ததனால் அதை உடைத்துவிட்டு வெளியேறத் துடித்த கவிஞர் பலருக்கும் புதுக்கவிதை வடிகாலாக அமைந்தது..

இலக்கணம் படிக்காமலும் இலக்கியம் படிக்காமலும், பேனா எடுத்தவனெல்லாம் கவிஞனாக மாறிவிட்ட காலத்தின் கோலத்தில் சிலர் இவ்வாறு பிதற்றுவதை யும் காணத்தான் முடிகிறது..

சிலை செதுக்குபவனால் அம்மி கொத்த முடியாதா என்ன.? மரபாய்ந்த புலவருக்கு உணர்வும், சந்தமும், உவமையும், கற்பனை யும் கடலலையாய் வந்துவிழும்..! அதை உள்வாங்கும் அளவிற்குத் தன்னைத் தகுதி படுத்திக் கொள்ளாதவர்களின் புலம் பலைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

5. நால்வகை பாக்களில் உங்களுக்கு பிடித்த பாவகை எது? ஏன்? அந்த பாவகையை அழகாகக் கையாண்ட பழம்பெரும் புலவர் யார்? அவர் எழுதிய செய்யுளில் உங்கள் மனங்கவர்ந்த கற்பனையில் அமைந்த செய்யுள் ஒன்றை சொல்லுங்களேன்?

இலக்கணத் தடை அதிகம் இல்லாத பா என்றால் அது ஆசிரியப் பா தான்.. சொல்லவந்த கருத்தை எளிமையாகச் சொல்லிவிடலாம் என்றதானால் சங்க இலக்கியத்தின் 95 விழுக்காடு இதே பா வகையால் நிரம்பிக் கிடக்கின்றது..

இலக்கணத் தடை அதிகம் உள்ள பாவென் றால் அது வெண்பாதான்.. அதனால் அதைச் சவாலாக ஏற்றுப் புலவர்கள் அனைவரும் புலியை அடக்கும் வீரம்போல் கருதி வெண்பாவில் வித்தகம் காட்டினர்…!

வடிவத்தால் தோல்வியடைந்த பா என்றால் அது கலிப்பாதான்… சொல்வடிவத்தால் தோல்வியடைந்த பா என்றால் அது வஞ்சிப்பாதான்..

ஆனாலும் நான்கு வகைப்பாவின் இனங்க ளான தாழிசை, துறை, விருத்த மென பாவின் வடிவங்கள் பல்கிப் பெருகியப் பின் விருத்தம் என்னும் பாவகை பேரிலக்கியங்களையும், காப்பியங்களை யும் புராணங்களையும் ஒருசில சிற்றிலக் கியங்களையும் தனது ஒழுகிய ஓசையாலும் விதவிதமான வடிவங்க ளாலும் ஆளத் தொடங்கியதை மறுக்க முடியாது. மற்றபடி…

நால்வகைப் பாவில் புலவருக்குப் புலி வெண்பா என்பதனால் புலியை அடக்குவதே எல்லாப் புலவருக்கும் விருப்பமாக இருக்கும் என்பதனாலும் நானும் விதிவிலக்கல்ல என்பதனால் வெண்பாவே எனக்குக் கூடுதல் விருப்பம்.

அந்த வகையில் வெண்பாவில் வித்தகம் மட்டுமல்ல புரட்சியும் செய்த ஆதிகவி ஐயன் வள்ளுவரே முதல்விருப்பம்.. அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் தத்துவ ஞானியாக விளங்கும் வள்ளுவன் காமத்துப் பாலில் மாபெரும் கவிஞனாக மாறிப் புகுந்து விளையாடியிருப்பார்.

மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியின் கலங்கிய மீன் – குறள் 1115

வானத்தில் இரவு நேரத்தில் விண்மீன்கள் மின்னுவது, அதாவது அவை அசைந்து நடுங்கிக் கொண்டே இருப்பதுபோல் தெரிவது இயல்பு, அதுவும் முழுநிலவு நாட்களில் இன்னும் மங்கலாகத் தெரியும்…

வள்ளுவர் இக்காட்சியைப் பார்க்கிறார் உற்று நோக்குகிறார். தன்கற்பனையை இரவுக் குறியில் நடுயாமத்தில் தன் காதலியைச் சந்திக்கும்போது பார்த்த அவள் முகத்தோடு நிலவையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார், உடனே இரண்டையும் ஒப் பிட்டுத் தன் கற்பனையையும் ஏற்றி இரண்டு வரியில் தனது குறளில் அடக்கு கிறார். இப்படி இந்த விண்மீன்கள் இருக்கின் றனவே இவை ஏன் இப்படித் தடுமாறி தடுமாறி அசைந்து அசைந்து ஒளிர்கின்றன. என்ன காரணமாக இருக்கும்..!

நள்ளிரவில் வானத்தில் நிலவும் ஒளிர் கின்றது.. அதே இரவில் பூமியிலோ என்காதலியின் முகமும் நிலவைப்போல் இரவில் ஒளிர்கின்றது. பாவம் எது உண்மையான நிலவென்று தெரியாமல் வானத்தையும் பூமியையும் பார்த்துப் பார்த்துக் கலங்கித்தான் விண்மீன் மின்னு வதாகக் காட்டியிருப்பார் வள்ளுவரின் எத்தனை அழகான கற்பனை.. இதைப் போலவே

1114 வது பாடலிலும் 1120, 1145 வது பாடலிலும்

கற்பனையில் கொடிகட்டிப் பறந்திருப்பார்..
வெண்பாவில் அழகியலைத் தொடங்கிவைத்தவர்
வள்ளுவரே என்பதால் வள்ளுவரை அதிகம் பிடிக்கும்.

6. சில பாடல்களை நாம் படிக்கும் போது இது கற்பனையின் உச்சம் என புகழ்வதுண்டு. அந்த உச்சம் என்பது மற்ற பாடல்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் எப்போதும் அதிசயம்தான். பெண்களின் பேரழகை அணுஅணுவாக உற்றுநோக்கிப் பாடாத கவிஞர் எப்படிக் கவிஞராக இருக்கமுடியும். பாதாதி கேசம் என்றும் கேசாதி பாதம் என்றும் முடிமுதல் அடிவரையும் அடிமுதல் முடிவரையும் வரிசைமுறைப்படி அடுக்கிப்பாடும் தனிச் சிற்றிலக்கியமே படைக்கும் முறையைப் பழம்புலவர்கள் வகுத்திருந்தனர் என்றால் புரிந்து கொள்ளலாம் அவ்வகையில்…

பெண்களின் கண்களை மீனாகவும், வண்டா கவும், தாமரை மலராகவும், கணை யாகவும் வாளாகவும் தமிழிலக்கியம் முழுவதும் காட்டியிருப்பர், அவ்வாறே முகத்தை நிலவாகக் காட்டி மயங்கியும் இருப்பர்.. கைகளை தாமரை மலரோடும் ஒப்பிட்டிருப்பர்..

அவை அனைத்தையும் தொகுத்துக் கூறிக் கற்பனையின் உச்சத்தில் கொண்டு வைத்திருக்கும் பாடலொன்றை விவேக சிந்தாமணியில் படித்துள்ளேன்..

அழகான பெண் ஒருத்தி குளக்கரையில் நடந்து வருகின்றாள்.. அவள் காதல் மயக்கத்தில் வேறு உள்ளாள்.. குளத்தில் நிறைந்து கிடக்கும் தாமரைப்பூவில் தேனைக் குடித்துவிட்டுப் போதையில் கரை யோரத்தில் மயக்கிக் கிடக்கின்றது வண்டு.. கரையிலிருந்த நாவல் மரத்திலிருந்து விழுந்த பழம்தான் கீழே விழுந்து கிடக்கின்றதோ என்று கையில் எடுத்துப் பார்க்கின்றாள் அவள்…

போதையில் கிடந்த வண்டு லேசாக விழித்துப் பார்க்கின்றது… அவள் முகம் நிலவைப் போல் தெரிகின்றது.. அவளின் கைகள் தாமரைப் பூவை நினை வூட்டுகின்றது..

அடடா நிலவு வந்துவிட்டதே.. இரவாகி விட்டால் தாமரை கூம்பிவிடுமே.. ஒருவேளை கூம்பிவிட்டால் தாமரைப் பூவுக்குள் இரவெல்லாம் சிக்கிவிடுவோமே எனப் பதறியடித்துப் பறக்கின்றது..

அதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணான வள் என்னடா இது..! என்ன அதிசயம் இது..! பழம் பறக்கிறதே பழம் பறக்கிறதே..! என்று பின்னால் ஓடுவதாகக் காட்டும் இப்பாடலில் மயக்க அணி தற்குறிப்பேற்ற அணி என அணிநயமும் நல்ல நகைச்சுவைத் தன்மையும், புலவர் தனது கற்பனையில் ஏற்றிக் காட்டியிருக்கும் பாங்கு வியக்கத் தக்கது.. இதோ அந்தப்பாடல்

‘‘தேனுகர் வண்டு மதுதனை யுண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனியென்று
தடங்கையா லெடுத்துமுன் பார்த்தாள்,
வானுற்றமதியும் வந்ததென் றெண்ணி
மலர்க்கரங் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்..!
புதுமையோ விதுமெனப் புகன்றாள்.!’’

இப்படி வியந்து மகிழ்ந்த பாடல்கள் பலவுண்டு. விரிவு கருதி இந்த ஒருபாடலே இப்போதைக்குப் போதுமென நினைக்கின் றேன்..

7. தாங்கள் சிலேடைச் செம்மல் விருது பெற்றதை நான் அறிவேன். அதற்கான வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன். தாங்கள் எழுதிய சிலேடையில் தங்க ளுக்குப் பிடித்த பாடல் எது?

நன்றி ஐயா… சிலேடை என்னும் வித்தகம் அவ்வப்போது செய்யுளின் இடை யிடையே பாடப்பட்டு வந்தாலும் அதனைத் தனி இலக்கியமாக்கி உலகறியச் செய்தவர். காளமேகப் புலவரே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. அவருக்குப் பின்னர் நானூறு ஆண்டுகால வரலாற்றில் பலரும் முயற்சி செய்து பல பாடல்களை இயற்றினாலும் அது தோல்வியாகவே முடிந்திருந்தது.. அதன் பயன் படித்து மகிழ்தல் என்னும் உணர்வினைத் தாண்டி வேறொரு பயனும் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.

சொல்லாட்சியால் செய்யும், இரட்டுற மொழிதல் என்னும் சிலேடை முயற்சியைப் பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுமத்தில் சிறுமுயற்சியாகச் செய்துபார்த்தேன். பல புலவர்கள் தந்த ஊக்கத்தால் வாரம் ஒரு சிலேடை வெண்பா எனத் திட்டமிட்டு இரண்டாண்டு கால உழைப்பில் நூறு சிலேடை வெண்பாக்கள் கொண்ட நூலை இயற்றி வெளியிட்டேன்..

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் நூறும் பிடித்திருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக குதிரைக்கும் மத்தளத்துக்குமாக நானெழுதிய சிலேடை

‘‘வார்பிடிப்பர் வாகாகத்
தோள்சுமக்க வைத்தடிப்பர்
போர்தொடுக்கும் முன்னால்
புகுத்திடுவர் – நேரிழையே..
கொட்டில் அடக்கிடுவர்
கொள்க குதிரையுடன்
மட்டும்நல் மத்தளம்நே
ரென்று..!’’

குதிரையில் செல்லும்போது வாரைப் பிடிப்பர், வாகாக நம்மைத் தோளில் சுமந்து செல்வதற்காக அதனை அடிப்பர், போரில் குதிரைப்படையையே முன்னால் செல்ல வைப்பர்.. கொட்டிலில் அடைத்துப் போடுவர் என்று குதிரைக்கும் மத்தளத்துக்கு வார் அடிப்பர், தோளில் சுமந்து கொண்டு வாகாக அடிப்பர், போருக்கு செல்லும் முன் மத்தளம் முழக்குவர், கொட்டும் மேள வகைகளுள் ஒன்றாக மத்தளத்தை அடக்கிக் காட்டுவர்..

இந்தச் சிலேடை நானெழுதி எனைக்குப் பிடித்த சிலேடைகளில் ஒன்று

சிலேடை வகை என்பது வாசகர்களுக்கு எந்த விதத்தில் பயன்படுகிறது.?

சிலேடையின் வாழ்வியல் பயன் அறநெறிப் பொருளியல் பயன் என்று ஏதுமில்லை. இப்பாவகை தோல்வி யடைந்ததற்கு அதுவும் கூடக் காரணமாக இருக்கலாம்..

படித்துச் சுவைக்கும் இன்பத்துப் பயன் என்பதைத்தாண்டி பெரிதாக ஒன்று மில்லை. என்றாலும் புலவருக்குச் உற்று நோக்கும் பண்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஆற்றலையும் சொற்களஞ்சியப் பெருக்கத் திற்கும் துணையாக நிற்பதுடன்.. சொல் ஆளுமை மிக்க புலவர்களாலேயே இது சாத்தியப்படும் என்பதே உண்மை..

இதைப்பற்றி விரிவு காணவேண்டுமாயின் vallamai.com ல் படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்-2 ல் முனைவர் சுப்பிரமணியம் அவர்கள் எனது சிலேடையை விரிவாக ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளார் அங்குப் பார்க்கலாம்..

மதுரை தமிழ்சங்க நூல் அரங்கேற்ற விழாவில்...
வீறு கவியரசர் முடியரசனார் ப்ட்டம் பெற்றாபோது....
பழந்தமிழ்ச் செம்மல் பட்டம் பெற்றபோது....

8. மரபிலக்கணம் கற்றவுடன் தாங்கள் எழுதி ரசித்த பாடல் ஞாபகம் இருப்பின் பகிரலாம்,

பைந்தமிழ்ச் சோலையில் பாட்டியற்றுக பயிற்சியில் மரபிலக்கணம் அடிப்படை விதிகளைக் கற்று 2015 ஆண்டு நானெழுதிய முதல் மரபு பாவே வெண்பா தான்.. பாட்டியற்றுக பயிற்சி எண் இரண்டில்.. பட்டாம்பூச்சியைப் பற்றி எழுதியிருந்தேன்..

‘‘காற்றில் மிதக்கும்
கவியாய்ச் சிறகடிக்கும்
சேற்று மலரிலும்
தேன்குடிக்கும் – போற்றும்
புகழுடைய வண்ணத்துப்
பூச்சி மலத்தில்
இகழவே வாய்வைக்கா
தே..!’’

இந்த வெண்பாதான் மரபில் எழுதிய முதற்பாட்டு.

9. மொழியாளுமை, சொல்லாளுமை இவைகள் அழகாகப் பிரதிபலிப்பது கவிதையிலா? உரைநடையிலா? காரணம் என்ன?

உரைநடையோ கவிதையோ எந்தத் துறையாக இருந்தாலும் ஆளுமைகள் எழுத்தை ஆளும்போது அவர்கள் வெற்றி யடைந்தே காட்டுவர்..

அலங்காரமும், கவிநயமும், கற்பனையும் சொல்லடுக்கும் கொண்டு சிறப்பதே கவிதை..! கவியழகோடு கருத்தை நெய்வதே புலவர்தொழில்..

சுருங்கக் கூறின் சொல்லுக்குள் வித்தை செய்வதே கவிதை பொருளை எளிதில் புலப்படுத்த பயன்படுத்தப் படும் ஆயுதமே உரைநடை.. எனவே மொழிநடையோ சொல்லழகோ பேரழகாகப் பிரதிபலிப்பது கவிதையில்தான் என்பது எனது பார்வை.

10. ஒரு தனிப்பட்ட கேள்வி… நிச்சயம் நீங்கள் காதல் வயப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. காதலிக்கும் போது எழுதிய வரிகள் சில…?

பத்துவயதில் காதலென்றால் என்ன வென்றே தெரியாமல் சில திரைப்படங்களைப் பார்த்த பூரிப்பில், பூவரசம் இலையில் பந்துமுனைப் பேனாவால் I LOVE YOU ன்னு அந்தப் பொண்ணு பேரப் போட்டு எழுதியதைப் பக்கத்திலிருந்த நண்பன் சிரித்துக் காட்டி விட. ஐந்தாம் வகுப்பு தலைமையாசிரியரிடம் பட்ட அடிகள்.. பத்தாம் வகுப்பைத் தாண்டும் வரைப் பெண்களென்றால் அருச்சுனன் பேர் பத்து என்று தலைதெறிக்க ஓடுமாறு பாதுகாத்தது..

பதினொன்றாம் வகுப்பில் கூடப்படிக்கும் ஒரு பெண்ணின் மீது ஒருதலையாகக் காதல் இருந்தது.. கிட்டத்தட்ட என்னைக் கவிதைக்கடலில் தள்ளிவிட்டது அவளுடைய கண்களாகத்தான் இருக்கும்.. என் செய்முறைப் பதிவேட்டின் பல பக்கங்களில் காதல் கவிதைகள் பட்டாம் பூச்சியாய்ச் சிறகடித்ததும் அந்தக் காலங்கள்தான்..

சேரவும் முடியாமல்
பிரியவும் முடியாமல்
தண்டவாளத்தைப் போலவே நாம்..!

இப்படியே
ஓடிப்போகுமோ
இறுதிவரை நம்காதல்..!

என்ற எனது கவிதையைப் போலவே அந்தக் காதலும் பன்னிரண்டாம் வகுப்போடு ஒருதலைக் காதலாகவே முடிந்து போனது..

11. தலைப்புக்கு எழுதுவது, ஈற்றடிக்கு எழுதுவது, நடப்புச் செய்திக்கு எழுதுவது, இவைகள் மாறி தற்பொழுது ஒரு ஓவியத்தையோ அல்லது புகைப் படத்தையோ பார்த்து எழுதும் வழக்கம் மேலோங்கி உள்ளது. இது சரியா தவறா?

என்னைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல கவிதை என்பது கவிஞனால் கவிதை எழுதப்படும் என்பதைத் தாண்டிக் கவிதை தான் தானாய் வந்து கவிஞனை எழுதும் படித் தட்டி எழுப்பும் அப்படிப்பட்ட கவிதைதான் தானும் வாழும்.. தன்னால் அந்தக் கவிஞனையும் வாழவைக்கும்..

மற்றபடி தலைப்புக்கு எழுதுவதென்பது ஏற்கனவே நமக்குள் புதைந்து கிடக்கும் மொழியறிவை வார்த்தை கோலங்களால் நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தி.. கவிதை யாக ஒப்பனை செய்து காட்டுவதேயன்றி வேறல்ல..

படத்தைப் பார்த்துப் பாட்டெழுதுவ தென்பது அதனினும் கூடுதலாகப் படத்தைப் பார்த்தவுடன் ஏதோ ஒன்று உள்ளுக்குள் பொறிதட்டுவதால் ஏற்படும் உணர்வால் எழுதுவதால் கொஞ்சம் கூடுதல் கவித்துவம் பெறும்..

ஈற்றடிக்குப் பாட்டெழுதுதல் என்பதெல் லாம் பட்டறிவும் படிப்பறிவும் மொழிப் பயிற்சியும் நிரம்பப் பெற்ற புலவர் களுக்கே உரித்தானது அதில் நுட்பத்தை விரைவை ஆற்றலை நோக்க முடியுமே தவிர கவித்துவத்தைப் பெரிதாகக் காணமுடியாது..

மொழிவளத்தைக் கற்பனையைச் சொல் லாட்சியைப், புதிய கோணத்தில் சிந்திக்கக் கிடைக்கும் வாய்ப்பை இவை கூட்டு வதால் இப்படிப்பட்ட கவிதைகள் எழுதுவதில் தவறில்லை என்பதே எனது நோக்கு..

12. இதற்குப்பேர் தானா இறை? எனும் ஈற்றடிக்கு ஒரு நேரிசை வெண்பா பாடுங்கள்.

கூக்குரல் ஓலம்
கொடுந்தொற்றால் காதொலிக்கக்
காக்கும் மருத்துவரைக்
கண்டுநின்றோம் – யார்க்கும்
உதவாமல் வாய்மூடி
ஊரோரம் நின்ற
இதற்குப் பெயரா
இறை…!?

13. தமிழில் பா வகைகள் சிறப்பான இலக்கணத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஹைக்கூ, சென்றியூ, கஸல் போன்ற அந்நிய மொழிப் பாவகைகளை தேடிச் செல்லும் கவிஞர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

கம்மங்கஞ்சியும் சோளக் கஞ்சியும் குடித்து விட்டு மாட்டைக் கலப்பையிலேற்றிக் காடு உழுத இனம் டிராக்டரில் உழுது விட்டு சொமேட்டோவில் ஆர்டர் செய்து பீஸாவையும் பர்க்கரையும் சாப்பிடுவதைப் போன்றதுதான். இவ் விதமான புதிய தேடுலும் புதிய சுவையும்..

அது அவர்களின் குற்றமில்லை, காலச் சூழலுக்கு ஏற்ப புதிய பயணத்தைச் செய்கிறார்கள். செய்யட்டும் தவறில்லை.. ஆனாலும் நம் மொழி காப்பற்றப்பட வேண்டும் அதற்குப் புதிய புதிய கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கி அதைப் புதிய பாடல்களில் ஏற்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் மூலம் நமது மொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதை நினைவில் வைத்துக் கொண்டால் நலம்..

14. என்ன வறுத்தி நீ கவிசெயினும் முன்னோர்கள் செயததன்றி நூதனம் ஒன்றுமில்லை… இந்த சொற்றொடரை தாங்கள் நிச்சயமாக கேட்டிருப்பீர். ஏன்? தற்போது உள்ள கவிஞர்களால் அந்த இடத்தைப் பிடிக்க முடியாதா? அல்லது இது உளவியல் ரீதியான சொற்றொடரா?

எல்லாக் காலத்திலும் வல்லவனுக்கு வல்லவன் தோன்றிக் கொண்டே இருப்பான்.. அதைத் தவிர்க்க முடியாது.. ஆனாலும் அவனது திறமையைத் தீர்மானிப்பது காலமும் அவன் வாழும் சூழலுமே என்பதை மறுத்துவிட முடியாது..

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்ற ஐயனின் வரிகளைத்தான் சான்று காட்ட வேண்டியுள்ளது.. தான் வாழும் காலச்சூழலை மக்கள் வாழ்வியலை அறத் தோடு கூற வேண்டியதும்.. மொழியைத் தொடர்ந்து காக்க வேண்டி யதும் உள்ளதால் எழுத்தாளர்கள் பெருகிக் கொண்டே இருத்தல் வேண்டும்.. அவர்களின் முயற்சிக்குத் தக்க உயரம் உறுதியாய் கிடைக்கும்..

முன்னோர் எழுதாதையா நாம் எழுதி விடுவோம்.. ஆம் முன்னோர்கள் கனணியைப் பற்றியோ.. மின்சாரத்தைப் பற்றியோ தொடுதிரை செல்லிடப் பேசியைப் பற்றியோ எழுதியதில்லையே..

அப்படித்தான் அவன் வாழும் காலத்தை அழகாகப் பதிவு செய்வதே கவிஞனின் கடமை..

15. கடைசி கேள்வி. எது கவிதை?

வாசகனின் உள்ளத்தில் படித்தவுடன் உள்ளுக்குள் ஏதோ ஒன்று செய்ய வியந்து பார்க்கின்றானே அதுவே கவிதை..

நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையும் படித்துப் பார்க்கும் யாரோ ஒருவரின் உள்ளத்தை ஏதோ ஒரு கவிதை ஈர்த்துவிடும்..! எனவே கவிதை என்று எழுதும் அத்தனையும் யாரோ ஒருவருக்குக் கவிதையாக அமைந்துவிடுவதால்.. எது கவிதை என்னும் வினாவிற்குக் இதுதான் கவிதை என்று கவிதையைத் தீர்மானிக்கும் உரிமையை வாசகர் வசம் விட்டுவிடுவதே சரி..

புதுவை உலகப்பாவலர் தமிழன்னைத் தமிழ்ப் பேரவையில் சிலேடைச் செம்மல் பட்டம் பெற்றபோது....
விரைகவி வாணர் விருது பெற்றபோது

தங்களுக்கான வினாக்கள்

தங்கள் பெயர் மற்றும் புனைப்பெயர்.!?

புனைப்பெயர் வைத்துக் கொள்வதில் பொதுவாக எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஒருகுழந்தைக்குப் பெயர்வைக்கும் முன்னம் அவனது தந்தையும், தாயும் எத்தனை எத்தனை பெயர்கள் நினைவுகள் கனவுகள்..! எத்தனை தேடல்கள் எத்தனை ஆசைகளால் அந்தப் பெயரை வைத்திருப்பர்.. வெறும் போலிப் புகழுக்காக தாய்தந்தையர் வைத்த கனவுப் பெயருக்குக் கல்லறை கட்ட நான் விரும்பவில்லை…

என் பெயர் வள்ளிமுத்து… எனது தந்தை வழிப் பாட்டி இறந்தபின்பே., எனது தந்தையின் திருமணம்.. நான் முதல்குழந்தை அதுவும் ஆண் குழந்தை யாகப் பிறந்திருந்தாலும் குலதெய்வப் பெயரையெல்லாம் வைக்கா மல் எனது பாட்டி வள்ளியம்மாள் பெயரால் வள்ளிமுத்து எனக்குப் பெயர்வைத்துப் பார்த்த என் தந்தைக்கு..! அவரது அம்மாமேல் எத்தனை பெரிய காதல் இருந்திருக்கும் என்பதை என்பெயர்வைத்த காரணத்தை இப்போதுதான் உணர முடிகின்றது..

அத்தக்காதலை அந்த அன்பை அந்தக் கனவை புனைப்பெயரால் நான் புதைத்துவிட என் மனம் ஏற்று கொள்ளவில்லை.. எனவே வள்ளிமுத்து என்ற இயற்பெயரை மாற்ற ஒருபோதும் மனம் நினைத்ததில்லை..

 

மனைவி குழந்தைகள் பற்றி ..?

மனைவி பெயர் கௌசல்யா காதலுக்குப் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம்..

முகில் என்ற மகனும் மகிழ்மதி என்ற மகளும் எங்கள் காதல் என்னும் தவத்துக்குக் கிடைத்த வரங்கள்..

பெற்றோர்கள் பற்றி

தந்தை பெயர் பேச்சிமுத்து அன்பும் கண்டிப் பும் சரிசமமாகக் கலந்து என்னை வளர்த் தெடுத்ததில் அவரது பங்கு அளவில்லாதது.

தாயார் பெயர் ராமுத்தாய் அவரின் உழைப் பின்றி நான் ஒரு கவிஞாக ஒருபோதும் வளர்ந்திருக்க முடியாது..

தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி..!?

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கரடிகுளத்தில் ஐந்தாம் வகுப்புவரையும் அரசுமேல்நிலைப்பள்ளி கழுகுமலையில் ஆறுமுதல் பன்னிரண்டாம் வகுப்புவரையும் படித்தபின்னர்.. மாவட்ட அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்தேன். இடைநிலை ஆசிரியராக 2009 ல் பணியில்சேர்ந்து பின்னர் தமிழாசிரியராகத் தேர்வு பெற்றுத் தற்போது அப்பணியைச் செய்கின்றேன்

கல்லூரிக்குச் நேரில் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.. அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் பி.லிட் அஞ்சல்வழியிலும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ முதுகலையும், இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் பி.எட் படிப்பும்.. பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.பில் படிப்பும் என்று கல்லூரிப் படிப்பு முழுவதும் தொலைதூரப் படிப்பாகவே முடிந்துவிட்டது..

தங்கள் படைப்புகள் பற்றி சில சுவாரஸ்யங்கள்..!

ஒரு விபத்தாக கவிதை உலகத்திற்குள் வந்தேன்..

எங்கள் ஊரின் அவேக் டியூசன் சென்டரில் நடந்த சரசுவதி பூஜை விழாவில் நானெழுதிய போதை என்ற கவிதையைக் கேட்டு மகிழ்ந்த ஆசிரியர் மாரியப்பன் அவர்கள்தான் அந்தக் கவிதையை தைப் பொங்கல் விழாவில் மேடையிலேற்றி ஒலிப்பெருக்கியில் ஊர்மக்கள் முன் என்னைப் படிக்கவைத்துக் கவிஞனாக எமது ஊர்மக்களுக்கு என்னை அடையாளம் காட்டினார்…

எங்கள் ஊர் தீப்பெட்டி ஆலையைப் பற்றிப் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நானெழுதிய காதல் கவிதை எங்கள் ஊரில் மிகப்பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியது..! எனக்கு எங்களூர் படிப்பறிவில்லா மக்களிடத்தில் மிகச் சிறந்த வரவேற்பையும் ஊக்கத்தையும் தந்த கவிதை அதுவென்றால் மறக்கவே முடியாது.

புதுக்கவிதையில் ஆரம்பித்து பைந்தமிழ்ச் சோலையின் பயிற்சியால் மரபுகவிதையில் தற்போது பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான்.. நானெழுதிய ‘‘காக்கைவிடு தூது’’ என்னும் சிற்றிலக்கியத்தை மிகவிரும்பி விரும்பிப் படைத்தேன்…!

தாங்கள் பெற்ற விருதுகள் பற்றி சொல்லுங்கள்..!?

பைந்தமிழ்ச் செம்மல், பைந்தமிழ்ச்சுடர், ஆசுகவி, விரைகவிவாணர் போன்ற விருதுகளைப் பைந்தமிழ்ச் சோலையிலும், சிலேடைசெம்மல், மற்றும் கவிக்காளமேகம் என்னும் விருதுகளைப் புதுவை உலகப்பாவலர் தமிழன்னை தமிழ்ப்பேரவையாலும், முடியரச னார் நூற்றாண்டு விழா விருதினையும் இன்னும்பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

எமது கவிப்பயணத்தில் என்னையும் ஒரு பொருட்டாகத் தேர்ந்தெடுத்து எமது இலக்கிய உலகத்தின் பழம்நினைவுகளை மீட்டெடுக்க வாய்புத்தந்த தங்களுக்கும் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்வதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.

நன்றி வணக்கம்…

உலக தமிழ்ச்சங்கத்தில் இரட்டுற மொழிதல் சிறந்த நூலாகத் தேர்வு செய்தபோது
பாவலர் வள்ளிமுத்து விடம்நேர்கண்டவர் வெண்பா வேந்தர் ஏடி வரதராசன்

6 Comments

தென்றல் கவி · ஆகஸ்ட் 29, 2021 at 18 h 33 min

மீச்சிறப்பு… இரண்டு கவியாளுமையின் நேர்காணலால் இதழ் வைரமாக மின்னுகின்றது…. இனிய நல்வாழ்த்துகள் 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

கிறிஸ்டினா அருள்மொழி · ஆகஸ்ட் 30, 2021 at 4 h 30 min

ஆராய்ந்து கேட்கப்பட்ட கேள்விகளும், நிதானமான பதிலும் இருவரின் ஆழுமைத் திறனையும் வெளிப் படுத்துகிறது. எதிர்க் கொள்ளும் துணிவை அறிந்து போடப் பட்ட ஒவ்வொரு பந்தும் சிக்சர். வாழ்த்துக்கள் இருவருக்கும். கேட்கவேண்டிய கேள்விகள் அபாரம்.

தென்றல் கவி · ஆகஸ்ட் 30, 2021 at 7 h 14 min

சிலேடைச்செம்மலின் கவிப்பயணம் மிகவும் சிறப்பானது… நேர்காணல் செய்த வெண்பா வேந்தர் ஏடி வரதராசன் அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.. வள்ளிமுத்து அய்யாவின் கவிப்பயணத்தின் சிறப்பு குறித்து அறிய முடிகிறது… காக்கை விடு தூது மிகவும் அற்புத படைப்பு… இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

சா.சோபனா · ஆகஸ்ட் 30, 2021 at 16 h 28 min

அருமை. சிறப்பான நேர்காணலும் மிகச் சிறப்பான பதில்களும். இருவருக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

Dhanaraj Pappanan · ஆகஸ்ட் 30, 2021 at 17 h 55 min

“இதற்குப்பேர் தானா இறை …”
ஈற்றடிக்கு இதைவிடச் சிறந்த வெண்பா எவர் படைக்க இயலும் ?
( வெண்பா வேந்தரே வியந்திருக்கக் கூடும் )
இன்னொன்று…
நோய்த் தொற்றின் தாக்கத்தையும் மருத்துவ உலகின் போர்க் களமும் கண்டவர் ஆத்திகர் எனினும் இந்தப் புலவரை கண்டு வணங்குவர் !
நேர்காணல் … ! இரண்டு சூரியன்களை எதிரெதிரே வைத்து இணைத்துவிட்ட தமிழ்நெஞ்சத்தை எப்படிப் பாராட்டுவது ?!

மாலதி. திரு · செப்டம்பர் 21, 2021 at 22 h 02 min

நேர்காணல் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

குறிப்பாகப் புதுக்கவிதை மரபுக்கவிதை வேறுபாடு அருமை.

புதுக்கவிதை பாரதியார் காலத்தில் தொடங்கியதாக நினைத்தேன்.

ஆனால் நன்னூலிலே பவணந்தி முனிவர் புதுக்கவிதை பற்றிய கூறியுள்ளதை அறிந்துகொண்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.

 » Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ  »

மின்னிதழ்

வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது

மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம்

நேர்காணல் :  பொன்மணிதாசன்

தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?

 » Read more about: வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.