மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம். தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் மூலம் தமிழ்நெஞ்சம் வாசகர்களைச் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நெஞ்சம் வாசகர் என்ற முறையிலும் எனது மனமார்ந்த நன்றி.

1. பண்டைய இலக்கியங்கள் இன்றும் பேசப்படுவதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

இலக்கு நோக்கிய படைப்புகள் பண்டைய இலக்கியங்கள் என்பதும், இதயத்தூய்மை படைப்பாளர்களுடையது என்பதும், படைப்புக்கும் படைப்பாளனுக் கும் இடைவெளி இல்லாமல் அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதும் பல காரணங்களில் சில. பல்வேறு பட்ட இலக்கிய அழகுக் கூறுகள் மற்றும் திறன்செறி காரணங்களைத் தாண்டியும் இது மிகுந்து உள்ளது என்பதால் பண்டைய இலக்கியங்கள் இன்றும் பேசப்படுகின்றன. எப்படி எழுதினால் பொருள் சேரும் என்ற சிந்தனையோ, எப்படி எழுதினால் செயற்கையாகவேனும் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பண்டைய இலக்கியம் படைத்தவர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை, ஒரு துளியும் இருந்ததில்லை.. மக்களை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் அவர்கள் நலனுக்கு ஒவ்வாத எதனையும் எடுத்துக் கூற அவர்கள் விரும்பியதில்லை. முன்வந்த தில்லை. மக்களின் பலவீனம் மறைமுகப் பணமாக்கும் இன்றைய பல படைப்பாளிகளின் தரம் குறைந்த சிந்தனை அவர்களிடம் இருந்ததில்லை. பட்டிமன்றம், பாட்டுமன்றம், நகைச்சுவை மன்றம் என்று பெயர் வைத்துத் தமிழ்த்தாயைப் புண்ணாக்கிப் பார்க்கும் இழிசெயல்கள் அவர் களுக்குத் தெரியாத நிலையில் இலக்கியம் சமுதாயம் முன்னேற்ற வழிமுறை என்று எண்ணியே இலக்கியம் படைத்தார்கள். இன்றைய சூழலில், ஊடகங்கள், எழுத்தாளர்கள் எந்த எண்ணம் கொண்டுள்ளார்களோ அந்த எண்ணம் அவர் களிடம் இருந்திருக்கவில்லை. அதனால் அவை யாரையும் சார்ந்து நின்று எழுதப்படவில்லை. எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்து இதயத் தூய்மைக்கு ஆற்றுப்படுத்தின பண்டைய இலக்கியங் கள். எனவே அவை இன்றும் நின்று புகழ்படப் பேசப்படுகின்றன.

நவம்பர் 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
சென்னையில் நடைபெற்ற விழாவில் எழுத்து இமயம் விருது வழங்கி மகிழ்வித்த தருணம் தமிழ்சான்றோர்கள் முனைவர்.பா.வளன் அரசு ஏனையோருடன் கவிஞர் நீரை.அத்திப்பூ
இம்மாத இதழ் தரவிறக்கம் செய்ய
விழா ஒன்றில் ஐயா நல்லக்கண்ணுவுடன் நீரை அத்திப்பூ

2. அன்றும் இன்றும் ஒப்பிடும்போது தமிழின் வளர்ச்சி எப்படி?

வளர்ச்சி என்பதன் வரையறை முறையாகக் கணிக்கப்பட்டால் இன்றைய நிலையில் தமிழின் வளர்ச்சி மிகுந்து காணப்படுவதை எவருமே மறுக்க இயலாது. வட்டிலும், தட்டிலும் வடிவமைத்து வைத்தி ருக்கும் தமிழாக்கங்கள் முன்னைவிட இன்று தான் உலகம் முழுமையும் சென்றடைந் திருக்கிறது. அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியில் தமிழை உலக மக்கள் தாங்களாகவே முன்வந்து கற்று மகிழும் வாய்ப்பையும், தமிழையே மறந்திருந்த தமிழ்ச்சமுதாயவழி மக்களையும் தமிழின் இனிமையை, உயர்வை, எழிலை உணர வைத்துத் தமிழின்பால் ஈர்த்து பல்வேறு வளர்ச்சி நிலைகளை எட்ட வைத்திருக் கிறது. இதுதான் உண்மை.

3. தாங்கள் பல்வேறு ஆளுமைகளைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுக்குப் பிடித்த ஒருவரைப்பற்றி சொல்லுங்களேன். அது ஏன் எதற்கு?

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தொடங்கி அய்யா நல்லகண்ணு, திருமதி. சோனியா காந்தி போன்ற அரசியல் திறனாளர்கள், திரு சுர்ஜித்சிங் பர்னாலா போன்ற தமிழக ஆளுநர்கள், முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர், திரு. மு.க.ஸ்டாலின் போன்ற முதலமைச்சர்கள், திரு. ப.சிதம்பரம், திரு சு.திருநாவுக்கரசர், திரு. தயாநிதிமாறன், திரு.அ,இராசா போன்ற பல மத்திய அமைச்சர்கள் பேராசிரியர் க.அன்பழகன், திரு. பரிதி இளம்வழுதி, திரு. பொன்னையன் உள்ளிட்ட மாநில அமைச்சர் பெருமக்கள், கவிஞர் வேழவேந்தன், திரு. இரகுமான்கான் போன்ற முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை விழாதொகுப்புரையின்போதும், விழாவின் முன்னரும் பின்னரும் சந்திக்கும் வாய்ப்புகள் பெற்றிருந்தேன். முனைவர் பொற்கோ, முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, முனைவர் க. இராமசாமி, முனைவர். அவ்வை நடராசன், முனைவர் ம. இராசேந்திரன் உள்ளிட்ட பல தமிழறிஞர்களையும் கவிக்கோ அப்துல் ரகுமான், கவியரசு வைரமுத்து, காப்பியக் கவிஞர் வாலி, உவமைக் கவிஞர் சுரதா, கவிஞர் ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, கவிஞர் பிறைசூடன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் பூவை. செங்குட்டுவன் உள்ளிட்ட கவிஞர் பெருமக்களையும் நேரிலும், விழா அரங்குகளிலும் சந்தித்து உரையாடும் பேறு பெற்றுள்ளேன். திரைத்துறை மார்கண்டேயர் இலக்கிய விற்பன்னர் நடிகர் திரு. சிவகுமார், நூல் உயிராய் போற்றும் திரு. ராஜேஷ், இலக்கிய ஆர்வலர் திரு. டெல்லி கணேஷ், திரு. பிரபு உள்ளிட்ட திரைத்துறையாளர்களையும், கலைமாமணி கவிஞர் பொன்னடியார், கலைமாமணி கவிஞர் ஏர்வாடி இராதா கிருஷ்ணன், மறைந்த தமிழ்வாணன் அவர்களையும், அவருடைய மைந்தர்க ளான திரு. லேனா தமிழ்வாணன், திரு . ரவிதமிழ்வாணன் உள்ளிட்ட இதழியல் ஆளுமைகள் பலரையும் அடிக்கடி சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றுள்ளேன். எனக்கு தொடக்கப்பள்ளி தொடங்கி மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என்று பல்வேறு நிலைகளில் ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள், பேராசிரி யர்கள், கல்லூரி முதல்வர்கள் என்று பலரோடு நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளேன். சிங்கப்பூரின் இலக்கிய ஆளுமைகள் அய்யா ஏ.பி.இராமன், அறிவிப்பாளர் திலகம் பி.எச். அப்துல் ஹமீது, ஊடகவியல் வல்லுநர் முகமது அலி, தேசிய நூலகச் சிறப்பாளர் அழகிய பாண்டியன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோருடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்புகள் பெற்றேன்.

இத்தனை பேர்களிலும் என் மனத்தின் அடித்தளத்தில் என்றும் நிலைத்து நின்று அத்தனை உணர்வுகளிலும் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டிருப்பவர் எனக்கு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரிய ராக இருந்து, பின்னர் தலைமை ஆசிரியாரகப் பணிநிறைவு பெற்ற பிரிஞ்சைப் புலவர் வை. தட்சணாமூர்த்தி அவர்கள் என்பதில் நான் மிகுந்த பூரிப்படைகிறேன். என்னை அவர் மாணவர் என்று அழைத்ததே இல்லை. ”அன்புத் தம்பி என்றே அழைப்பார். எனக்கு பள்ளிகாலத்தில் தமிழுணர்வையும் தமிழ் அறிவையும் ஊட்டி வளர்த்த பெருமை அவரையே சாரும். எனக்குள் இருந்த கவிதைத் திறமையை அடையாளம் கண்டு ஆற்றுப்படுத்தி பள்ளி நாட்களிலேயே பரிசுகள் குவிக்க வைத்தவர். கல்லூரி சென்றபின் என் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டியானார். நான் இலக்கிய உலகில் நுழைந்து பெயர்பெறத் தொடங்கியதும் பூரித்து வாழ்த்திக் கொண்டே இருந்தார். வானொலியில் என் குரலைக் கேட்டு விட்டாலும், தொலைக்காட்சியில் என் முகத்தைப் பார்த்து விட்டாலும், இதழில் என் பெயரைப் பார்த்து விட்டாலும் அடுத்த நாளில் அஞ்சலட்டையில் ஒரு வாழ்த்து அன்பின் மிகுதியில் வந்தடையும். இப்போது நினைவுகளால் என்னை தமிழ்வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி நான் எழுதிய சில வரிகளை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். நீதிபதி விடைத்தாளைத் திருத்தும் போது நிகழ்கால காந்திமகான் உபதேசத்தில்

பாதிமதி மீதியெல்லாம் கற்ற கல்வி
பாமரர்க்கு இவரேதான் ஆத்திச் சூடி
சாதிமத பேதமில்லாத் தூய உள்ளம்
சான்றாண்மைத் தாயுள்ளம் அன்பு வெள்ளம் 
ஓதிவிதந் துரைத்துவிட சிறியேன் புத்தி
உதவாது காலடியில் விழுந்து விட்டேன்”

1993ஆம் ஆண்டு திருவாரூர் திரு.வி.க.அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் மன்ற விழாவில் உவமைக்கவிஞர் சுரதா, அவர்கள் முன்னிலையில் சிறப்பு சொற்பொழிவாற்றி பாராட்டுப் பெற்ற நிகழ்வில் திருத்துறைப்பூண்டி கவிஞர் பத்மநாபன் அவகளுடன் கவிஞர் நீரை.அத்திப்பூ
முத்தமிழ் டாக்டர் கலைஞர்,அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் கலந்து சிறப்பித்த பன்னாட்டு தமிழ்நடுவ அறிவியல் அரங்கில் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியமைக்காக பாராட்டுப்பெறுகிறார் கவிஞர் நீரை.அத்திப்பூ.தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மேளால் துணைவேந்தர். முனைவர் அவ்வை நடராசன்.ஆஸ்திரேலிய தமிழறிஞர் பஞ்சாட்சரம் ஆகியோர் உள்ளன

4. மரபுக் கவிதைகள் தற்காலம் நிரா கரிக்கப் படுவதாக ஒரு குற்றச்சாட்டு அது சரியா?

மரபுக் கவிதைகளோ சந்தக் கவிதை களோ எந்தக் காலத்திலும் நிராகரிக்கப்பட முடியாதவை. நினைவில் நின்று நெஞ்சத்தை மகிழ்விப்பதோடல்லாமல், கேட்டார் பிணிக்கு தகைவாய் அமைவது மரபுக் கவிதைகளே. 1970 ஆண்டு வானொலியில் ஒலிபரப்பான கவிதைகளை இன்றும் என்னால் அரங்கங் களில் கூறி அன்பான வரவேற்பைப் பெற முடிகின்றது என்றால் அது மரபின் மாண்பும் சந்த இசையின் சிறப்பும்தான் என்றால் மிகையில்லை. ஆனால் மரபு என்ற ஒன்றைப் பற்றிக் கொண்டு கவித்துவத்தை விட்டு விடும் போக்கால் மரபுக் கவிதைகள் நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ”திண்ணை என்பது தெருவில் உயர்ந்தது \ அண்ணன் என்பவன் தம்பிக்கு மூத்தவன் \ கிழக்கு என்பது மேற்கில் இருந்து பார்த்தால் தெரியும்” என்பது போன்றவை இயல்பாகவே இறந்துபடும்.

5. மரபுக் கவிதை எளிதின்மைதான் புதுக்கவிதையின் வளர்ச்சி என சிலர் கூறுகிறார்கள். தாங்கள் கூறும் கருத்து?

மரபுக் கவிதை வேர்கள் போன்று மறைந்திருக்கும். மிகுந்த செயலாற்றும். சிறிது முயற்சி மேற்கொண்டு வேரைப் பார்க்கலாம். அதன் உயிருக்கு நீரூற்றலாம். உயர்ந்த பலனைப் பெற்று மகிழலாம். புதுக்கவிதை விழுதுகளாக வெளியில் தெரிந்து வளரும். பிடித்துக் கொண்டு ஊஞ்சல் கூட ஆடலாம். வேரின் சிறப்பில் தான் அது வளர்கிறது. எனவே விழுதுகளை வேர்கள் வெறுக்காமல் இருப்பதும் வேர்களின் உன்னதத்தை உணர்ந்து கொண்டு விழுதுகள் வளர்வதும் முன்னேற்றம் கொடுக்கும். சமுதாயம் வளர்ச்சி பெறும், புதுக்கவிதைகளின் மின்னல் வெட்டும் நொடிப்பொழுதில் கிடைக்கும் படைப்பும் எளிமைபோல் தோன்று கின்றது. வேர் பிடித்த மரபு வியந்து போற்றும் தன்மையதாகும்.

6. கவியரசருக்குப் பின்பு அந்த இடம் காலியாக இருப்பதாய் உணர்கிறேன். நான் உணர்வது சரியாகுமா?

நீங்கள் உணர்வது சரியில்லை என்றுதான் நான் கூறுவேன். இடம் நிரப்பப் படாமல் இருக்கிறது என்பது முற்றிலும் சரியில்லை. பகுதி பகுதியாக நிரப்பப் பட்டுதான் வந்து கொண்டிருக்கிறது. பொன்மணிதாசன் கவிதைத் தொகுப்புகள் அனைத்தையும் படித்துப் பார்த்தவர்கள். ஆழ்ந்து சுவைத்த வர்கள் என்னுடைய இந்தக் கருத்தை ஒத்துக் கொள்வார்கள். பாதிக்குமேற்பட்ட கவிதைகளை பகுதியை நிரப்ப வந்தவை என்று சொல்வது தவறாகாது. இதனை வேளாங்கண்ணியில் நடைபெற்ற விழாவில் எடுத்துரைத்தேன் என்பது பலருக்கு நினைவில் இருக்கும் வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்ட பொன்மணிதாசன்கள் அங்கங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிச்சத்திற்கு வரவேண்டும். தமிழ்நெஞ்சம் அந்த வகையில் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது மிகையில்லை. அதன் முயற்சி அந்தந வெற்றிடத்தை நிரப்பும் பணியில் நிலைத்திருக்கும்.

7. நமது காலத்தில் தமிழமைப்புகள் பல தோன்றின. ஆனால் எதுவும் நிலைக் கவில்லை. இன்று பல முகநூல் குழுமங்கள் புதிது புதிதாய் புற்றீசலாய்ப் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இவை ளின் நிலை என்னவாகும்?

தோன்றும் தமிழ் அமைப்புகள் நிலைக்கவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. நிலைத்திருக்கும் செயலை அவை நிறைவேற்றியுள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்று. 1964 ஆம் ஆண்டில் மாணவராக இருக்கும் போது தொடங்கிய மாலை இலக்கிய வட்டம்தான் மாலை கையேடு தொடங்கவும் அச்சுக்குக் கொண்டு வரவும் காரணமாயிருந்தது. அப்போது இலக்கிய ஆர்வம் மிக்கவர் மத்தியில் இனிய பெயரை நாட்டி வந்தது. திருத்துறைப்பூண்டி தமிழ்ச்சங்கம், ஞானபீடம் போன்ற பல அமைப்புகள் திருத்துறைப்பூண்டியிலும் சுற்றுவட்டாரத்திலும் ஆற்றிய இலக்கிய சமூக சேவைகள் இப்போது எண்ணிப்பார்த்தாலும் மகிழ்ச்சி தருகிறது. இவை கணினி பயன்பாடு காணாத காலங்கள். இவை சமுதாய நலனைமட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. இன்று உருவாகும் அமைப்புகளில் பல தனிமனித புகழ் வெளிச்ச வெறியில் குளிர் காய்கின்றன. பொன்னாடை போர்த்திக் கொள்ளவும், புன்னகை சான்றிதழ் பெறவும், ஊடகப் பதிவுகளில் உயிரூட்டம் காட்டவும் ஆர்வம் காட்டுகின்றன. அது நிதிநிலை ஆதாரங்கள் நிலைகுலைந்து போகும்போது நிச்சயம் மறைந்து போய் விடும் வாய்ப்புகள் அதிகம். சுற்றிலும் ஒரு கூட்டம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்ற நிலையில் இக்குழுக்கள் ஈசலின் குறுகிய கால வாழ்வை சுவைக்கின்றன.

8. தாங்கள் மாலை கையெழுத்து பிரதி முதல் தகவல் முத்து அச்சு இதழ்வரை பத்திரிகை நடத்தி வருகிறீர்கள். உலகறியும். அதன்மூலம் கிடைத்த அனுபவம்?

“அழுதாலும் பிள்ளை அவளேதான் பெறவேண்டும்” என்பது மட்டும் கிடைத்து விட்ட அழுத்தமான அனுபவம். பிள்ளை பெற வேண்டிய ஆசையும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் அனுபவமாகப் பெற எண்ணுகின்றபோது அழுதாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொள்ளத்தானே வேண்டும் என்பது ஏற்றுக் கொண்ட அனுபவம். 1964 ல் மாலை கையெழுத்து இதழ் தொடங்கியபோதும் நான்கு படிகள் எடுத்து திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு, கோட்டூர் நூலகங்களில் கொடுத்தது போக ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு காட்டிக் காட்டி படைப்புகள் வாங்கியதும் இனிய அனுபவம். நூலகங்களில் மறைந்திருந்து படிப்பவர்களைக் கண் காணித்து அவர்களின் உணர்வுகளைக் கண்டு உளம்பூரித்தது இன்னொரு வகை அனுபவம். ஆனால் எல்லாம் மறைந்து போகும் ஒரு அனுபவம் கிடைக்குமென்று அப்போது நினைக்கவில்லை. அச்சுக்கு வந்த முதல் இதழில் ” இலங்கை – போதிமரத்து புத்தரின் சீடர்கள் தூக்கு மரத்தால் தோரணங்கள் கட்டுமிடம்” என்ற வல்லம் தாஜுபால் கவிதையை அட்டையில் தாங்கி கவிஞர் காரை. எழிலன், கவிஞர். நிறைமகிழ்நன், கவிஞர். மணலி சோமன், கவிஞர். பொன்மணிதாசன் உள்ளிட்டோரின் படைப்புகளுடன் வெளி வந்தது. அதைத் தொடரமுடியவில்லை. ஒரு மோதிரம் போனதோடு இதழின் தொடர் முயற்சியும் நின்று போய் விட்டது. “வெளிச்சம் தெரிந்த பகல் பொழுதில் விளக்குகளைத் தூக்கி வந்தவர்கள், இருட்டியதும் எங்கோ ஒளிந்து கொண்டார்கள்” என்று தொடங்கிய இரண்டாம் அச்சிதழுக்கான தலையங்கம் வெளிவராமலே குறைப்பிரசவமாகி நின்று விட்டது. ஆனால் அரிப்பைச் சொரிந்து கொள்ள “அத்திப்பூ” என்ற இதழ் நகலச்சு இதழாக முடிந்தபோதெல்லாம் வெளியிடப்பட்டது. கைகாசு செலவிடாமல் இதழ்நடத்தும் ஒரு அரிய வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. எனக்குக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த திரு. தி.சீ. கோவிந்தராஜன் என்பவர் அஞ்சல்துறைத் தலைவர் என்ற உயர் அதிகாரியாக வந்து விட்டார். அவர் “அஞ்சல் முத்துக்கள்” என்னும் இதழை நடத்தும் வாய்ப்பைக் கொடுத்தார். பல ஆண்டுகள் வெளிவந்தது. அதன்வழி “மறுபக்கம்” கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது. பின்னர் பணி ஓய்வுக்குப்பின் பணி ஓய்வுப் பணத்தில் சிறுபகுதி கொண்டு “தகவல் முத்துக்கள்” என்ற இதழ் பத்து ஆண்டுகள் அச்சில் வெளிவந்து அச்சிதழ் வெளியிட நிதி ஆதாரம் ஏறக்குறை 35 நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்ததில் கிடைத்த தொகை கைகொடுத்தது. இப்போது கொரோனா ஊரடங்கின் காரணமாய் எதுவும் செய்ய இயலாத நிலையில் மின்னிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அத்துடன் “அத்திப்பூ கவிமாலை” இதழும் மின்னிதழாகத் தொடர்கிறது. அழுதுகொண்டிருந்தாலும் ஆனந்தம் குறையாமல் இதழ்ப்பணி தொடர்கிறது.

9. ஒரு கவிஞர் இப்படி இருக்கக் கூடாது என்றால் எதைச் சுட்டுவீர்கள்?

கவிதைகளில் காட்டுகின்ற நெறி முறைகளைத் தாம் வாழ்க்கையில் கடை பிடிக்காதவராக ஒரு கவிஞர் இருக்கக் கூடாது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட “வண்ண ஒளி எண்ண அலை சின்னவரி“ என்ற கவிதைத் தொகுப்பில் அய்யா தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் இதைத் தான் குறிப்பிட்டார். “எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இடைவெளி குறைய வேண்டும். அது சமுதாயத்தை மேம் படுத்தும்” என்று குறிப்பிட்டார். இதைத் தான் நானும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ”He is not practicing what he is preaching” என்றில்லாமல் ஊருக்குத்தான் உபதேசம் என்ற பெயரெடுக்காமல் இருக்க வேண்டும்.

10. ஐயா அப்துல் கலாம் அவர்களிடம் தாங்கள் நெருங்கிப் பேசியவர். அவரிடம் இதுபற்றிப் பேசாமல் விட்டு விட்டோமே என்று நினைத்ததுண்டா?

நெருங்கிப் பேசியபோதெல்லாம் விழாவோ, விழாவின் முன் உள்ள சிறிதுநேரமோ, பின் புறப்படப்போகும் சிறிது நேரமோ என்பதாக இருக்கும் என்பதால் அப்படி எதுவும் கேட்கும் வாய்ப்பு ஏற்படவேயில்லை. ஆனால் அவர்களின் “இந்தியா 2020” நூல் வெளியீட்டு விழா சென்னை கோபாலபுரம் காதி கிராமோத்யோக் பவன் அரங்கில் நடை பெற்ற போது தொகுப்புரை செய்தேன். அன்று அவர்கள் குடியரசுத் தலைவர் என்ற கற்பனை கூட யாருக்கும் இல்லை. அப்போது, “தனுஷ்கோடி புயலடித்து ஓய்ந்தது – அதில் \ தத்தளித்த உயிர் ஒன்று ஆய்ந்தது, அணுவை ஆய்ந்தது \ அணுவுக்குள் அடங்கியே இருப்பதோ – இந்த \ அகிலத்தில் என்று அது மிளிர்வதோ?” என்று கூறினேன். பின்னர் பேசிய விஞ்ஞானி நெல்லை. சு. முத்து அவர்கள், “தொகுப்பாளர் என்ன கூறினார் தெரியுமா? நம்முடைய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும்” என்று கூறினார் என்று குறிப்பிட்டார். இதைக்கேட்ட மேதகு கலாம் அவர்கள் ”அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்” என்று கூறினார். இதைக் குறிப்பிட்டு கேட்க எண்ணினேன். அது இயலாமல் போய் விட்டது. ஆனால் அவர் பதவி ஏற்றதும் எனக்கு வந்த பதில் கடிதத்தில் “I feel extremely happy over the sentiment you have expressed on assumption of my charge “ என்று குறிப்பிட்டிருந்தார். நான் கேட்காமல் விட்ட கேள்விக்கு விடை இதில் கிடைத்து விட்டது.

11. கடந்த கஜாப்புயல் அதுவும் குறிப் பாகத் தங்கள் ஊரில் ஏற்படுத்திய சேதம் சொல்லவொண்ணா வகையில் அந்தப் புயல் மனத்தளவில் பெருங் காயத்தை ஏற்படுத்தியதை நான் உணர்வேன். தங்களது அரிய படைப்புக் களைக்கூட அள்ளிக்கொண்டு போனதாய் கேள்விப் பட்டேன். அந்த வலிக்குப்பின் உங்கள் மனநிலை?

தங்களுடைய இந்தக் கேள்வி என் உணர்வுகளைக் கிளறிவிட்டு, கட்டுப்படுத்த முடியாமல் உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. விரிவுக்கு மன்னிப்புக் கோரு கிறேன். கஜா புயல் மட்டுமல்ல என் வாழ்க்கைத் தடத்தில் சந்தித்த பல புயல்கள் என்னுடைய இலக்கிய சேமிப்புகள் மேல் சீற்றம் கொண்டவையாகவே இருந்து வந்துள்ளன. 1951 ஆம் ஆண்டு பிறந்தேன். 1952 ஆம் ஆண்டில் அடித்த கடும்புயல் என்னையும் என் தாயாரையும் சேர்த்து உருட்டிக் கொண்டு சென்றதாக எனக்கு நினைவு படுத்தினார்கள். அந்தப் புயல் குடும்பப் பொக்கிஷங்களாக இருந்த விலைமதிப்பற்ற ஓலைச்சுவடிகள் நூற்றுக் கணக்கில் அழித்து முடித்ததாக பின்னர் கேள்விப்பட்டேன். எனக்கும் இயற்கைச் சீற்றத்திற்கும் ஓர் ஒற்றுமை இருக்கலாமோ என்பது அதைக்கேட்டபின் என் உள்ளுணர்வு உணர்த்திய குறிப்பு. காரணம் என் நூல்சேகரிப்புகள், படைத்த படைப்புகள் சேகரிப்புகள் என்று எல்லாமும் ஒவ்வொரு புயலுக்கும் அல்லது வெள்ளத்திற்கும் இரையான கொடுமைதான் நிகழ்ந்திருக்கின்றது. .

நான் என் பாட்டனார் மருத்துவர் அல்லாபிச்சை அவர்கள் எழுதிய ஓலைச் சுவடிகள், என் வளர்ப்புத் தந்தை கவிஞர் அ. அகமதுசா அவர்கள் எழுதிக் காத்துவைத்திருந்த கவிதைகளின் கையேட்டுப் பிரதிகள், என் அண்ணன் உருவாக்கி அழகுபார்த்த கலைப் பொருள்கள், நான் பள்ளி மாணவப்பருவத்தில் நடத்திய “மாலை” என்ற இதழின் கையேட்டுப் பிரதிகள் என்று எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வீட்டுக்கு அருகில் நூலகம் இணைந்த பயிற்சி வகுப்பாகப் பாதுகாத்து வந்தேன். 1977 ஆம் ஆண்டு எங்கள் ஊரைச் சின்னாபின்னமாக்கிய புயல் என் நூலகப் பொக்கிஷங்களையும் பல்வேறு சான்றிதழ்களையும் சொத்து ஆவணங் களையும் பலமாதங்கள் சேரும் சகதியும் மூடி வைத்து அழித்து விட்டது. இது இழப்பின் முதல் சந்திப்பு.
நான் எங்கு சென்றாலும் வாங்கிவரும் நூல்கள், இதழ்கள் எல்லாவற்றையும் சென்னையில் வண்டலூர் வெங்கடேசபுரம் அறையில் பாதுகாத்து வந்தேன். அத்தோடு என் கவிதைகள், படைப்புகளின் கையேட்டுப் பிரதிகளும், இதழ்களில் வந்தவற்றின் தொகுப்புகளும் கோப்புகளாக வைத்திருந்தேன். நான் கலந்து கொண்ட பல்வேறு விழாக்களின் புகைப்படங்கள், ஒலி மற்றும் ஒளி நாடாக்களையும் பொன்னேபோல் போற்றிப் பாதுகாத்து வந்தேன், என்னுடைய கணினி, மடிக்கணினிகள் எண்ணற்ற பொக்கிஷங்களை ஏந்தி மகிழ்ந்திருந்தன. சொந்த கிராமத்தில் வீட்டின் மாடி அறையிலும் இதேபோல பொக்கிஷப் பாதுகாப்புப் பெட்டகங்கள் நிறைந்திருந்தன. என்னுடைய வண்டலூர் அறையில் இருந்த பொக்கிஷங்களுக்கும் கணினி உள்ளீடுகளுக்கும் ஒரு டிசம்பர் முதல்நாள் அன்று சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கில் என் அறைமுழுவதும் நீர் நிரம்பி மூழ்கடிக்கப்பட்டு விட்டது.

1918 அக்டோபரில் நிகழ்ந்த கொடூர கஜா புயல் என் வீட்டின் அறையில் இருந்த எழுத்தாக்கங்கள், கணினி தாங்கிய கருத்தாக்கங்கள், விழா புகைப்படங்கள் எல்லாவற்றையும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக் கொண்டு காற்றாற்று வெள்ளமாய் மூழ்கடித்து அழித்து விட்டது. என் கண்ணீர் எல்லாம் அந்த வெள்ளநீரில் வேதனையுடன் கலந்து போய்விட்டது. அப்புறம் அழுவதற்குக் கண்ணீரும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நூல்கள் பாதுகாப்பிலேயே விரக்தி ஏற்பட்டு கையில் ஒரு நூல் கிடைத்தாலும் திருத்துறைப்பூண்டி புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிடுவேன். இது இன்றும் தொடர்கிறது.

நான் 22 ஆண்டுகள் தங்கியிருந்த வண்டலூர் அறையில் வெள்ளம் எதிர்த்து வேள்வி நடத்திய நூல்களும், கவிதை கட்டுகளும் மேல்பரணியில் இருந்தன. அவற்றை எப்படியாவது தொகுத்துவிட வேண்டும் என்றிருந்த நிலையில் கொரானா கொடுமையால் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக என்னால் சென்னை பக்கம் தலைகாட்டவே முடியவில்லை. அறையை அங்கு செல்லாமலே காலி பண்ணிக்கொள்ளச் செய்து விட்டேன். எதனையும் எடுத்துக் கொள்ளாமல். அவர்களையே அறையைக் காலி செய்து வெளியேற்றி விடும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டு விட்டேன். எஞ்சியிருந்த நூல்கள் ஒரு நூலகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. உடைகள், பயன்படுத்திய பொருள்கள் ஒரு அனாதை இல்லத்திற்குக் கொடுக்கப்பட்டு விட்டன. படைப்புகள் நிறைந்திருந்த பழைய பிரதிகள் பழைய தாளாகப் படைப்பு உரு தாங்கி எலிகள் சிதைத்த நிலையில் போய் விட்டன. புகைப்படங்கள் உருமாறி அழிந்து விட்டன. ஒலிநாடாக்கள் போன்றவை குப்பைகளுடன் இணைந்து விட்டன. எனவே மீண்டும் பொக்கிஷங்களின் பேரழிவு நிறைவேறிவிட்டது.

ஆனால் இந்த கொரோனா தனிமை தீராத்துயரத்துடன் சிறிது துணிவையும் தந்து கவிதை எழுத வைத்தது. நண்பர்கள் திரு சுந்தர ஆவுடையப்பன், திரு. எழில், திரு. ஜவஹர்ராஜ், திரு. வெங்கட்ராவ், ஈரோடு கவிஞர் சிந்தாமணி ஹக்கீம், திரு. ஜான் சேவியர், தோப்புத்துறை ஆரிஃப், தலைஞாயிறு பதுருதீன் போன்றவர்கள் கவிதை எழுதத் தூண்டினர். பெரியவர் திரு. பி. வெங்கட்ராமன் கையைப் பிடித்து எழுத வைப்பதுபோல தினமும் தொலைப்பேசியில் வற்புறுத்திக் கொண்டே இருந்தார். புகழ்பெற்ற மூத்த இதழியலாளர் திரு. தீபம் திருமலை எழுது எழுது என்று கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதினேன். எழுதிக் கொண்டே இருக்கிறேன். இந்தக் காலத்தில்தான் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, அரிய குறுஞ்செய்திகள் ஆகியவற்றை 24 வரிகளுக்குக் குறையாத கவிதைகளாக வடித்தேன். அவை யாவும் 25 நூல்கள் வெளியிடும் அளவுக்கு இன்று நிறைந்து விட்டன. அச்சுப் பொறிக்கு இப்போது வாய்ப்பே இல்லை என்பதால் மின்னஞ்சல் வழியாக இதழாகவும், நூலாகவும் வெளியிட எண்ணி மின்னிதழ், மின்னூல் முயற்சியைத் தொடர்கிறேன். வெற்றி தோல்வி என்ற எண்ணமோ, விருது பரிசு என்ற உந்தலோ, புகழ் பாராட்டு என்ற ஆசையோ, பணம் காசு என்ற விருப்பமோ, விற்பனை கடைவிரிப்பு என்ற நோக்கமோ எதுவுமே இல்லை. தவ வாழ்வைப்போன்ற ஆத்ம திருப்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே முன்னிற்கிறது. தங்கள் அன்பு கிடைப்பது கூடுதல் திருப்தி என்பதும் பொய்யல்ல. எனவே இந்தப் புத்துணர்வில் நெருப்பின் சாம்பலிலிருந்து வந்த பறவையாய் நினைவில் ஆனந்தம் பொங்க பறந்து கொண்டிருக்கிறேன். படைப்புகள் தொடர்கின்றன. தொடரும் என்ற நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது.

உலகம்போற்றும் உன்னதப் பண்பாளர் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்கள் சாதனையாளர் விருது வழங்கியபோது. முனைவர்.க.ப.அறவாணன் அவர்களுடன் நீரை.அத்திப்பூ
வேளை முத்தமிழ்ச் சங்கமம் கவிஞர் பாலு கோவிந்தராசன் கவிஞர் நீரை அத்திப்பூ’ கவிஞர் பொன்மணிதாசன்

12. அரசு அவ்வப்போது தமிழறிஞர் களுக்கு விருதுகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அது தமிழ் வளர்ச் சிக்கு உதவும் என்று கூறமுடியுமா?

விருதுகள் மற்றவர்கள் ஊக்கம் பெற்று உழைக்க வழி செய்யும் என்பதை மறுக்க இயலாது. அதனால் தமிழ் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அரசு தமிழ்வளர்ச்சிக்கு நேரடியாக உதவும் செயல் நீதிமன்ற மொழி யாகவும், பயிற்று மொழியாகவும், வேலை வாய்ப்பிற்கான வழியமைக்கும் மொழியாகவும் வற்புறுத்தும் சட்டங்கள் இயற்றுவதும், வேலை வாய்ப்பில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவதும் மிகச்சிறந்த பயனை நல்கும்.

13. தாங்கள் தமிழ்நெஞ்சம் வாசிக்கும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் ஒருவர் என்ற வகையல்லாது ஒரு பத்திரிகை ஆசிரியர் எனும் உணர்வில் தமிழ்நெஞ்சத்தைப் பற்றிய கருத்து?

”பத்திரிகை கடையில் பல வண்ண அட்டையுடன் \
இத்தரையில் எழுத்தெல்லாம் இழிவேசி ஆகிறது. \
காசுக்காய் எழுதுகின்ற கண்மூடி எழுத்தாளன் \
வேசித்தொழிலதனை விரும்பியே செய்கின்றான். \
ஏ போட்டுப் படங்கள் இளிப்பதெல்லாம் நீ பார்த்து \
இளகியே போகாதே எரிமலையாய்ப் பொங்கி எழு”

என்ற என் கவிதைக்கு மாற்றாக

“என் தமிழ்தான் என் தமிழ்தான் எந்தன் உயிர்க்காற்று – அதை \
எண்ணிவிடில் என்னுள்ளே இன்பத்தேன் ஊற்று”

என்ற என் வரிகளுக்கு இலக்கணமாகச் செயல்படும் தமிழ்நெஞ்சம் சிறப்புகள் பலபெற்றிட விரும்புகிறேன். இளைஞர்கள் முதல் எண்ணற்ற தமிழ்ச்சான்றோர்களுக்கு சிம்மாசனம் வழங்கிச் சிறப்பிக்கும் பணிக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

”புதுப்புது அர்த்தம் புலப்படும் நித்தம் புத்தகம் படித்தால் கிட்டும் – நாம் \
விதைப்பது நன்றாய் விளைந்திட என்றும் விரைவோம் நூல்களின் பக்கம்”

என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. துணிக்கான நூல் படைக்க நல்ல பஞ்சு வேண்டும். தரமான நூல் கொடுக்க நல்ல நெஞ்சு வேண்டும். நெஞ்சகத் தூயராம் தமிழ்நெஞ்சம் ஆசிரியருக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நன்றி


1 Comment

Selladurai Sinnadurai · நவம்பர் 1, 2021 at 9 h 32 min

‘மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க விடாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பண்டைய இலக்கியம் படைத்தவர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை’

மயக்கம் வரும் இந்த செய்தி வேறு யாரும் கூறியிருப்பார்களா? எவ்வளவு உண்மை! அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

நன்றி!
அத்திப்பூ நேராய் லத்தீப் அவர்களை அடிக்கடி நினைவு காண விரும்புகிறேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ

மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.

 » Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ  »

நேர்காணல்

வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா?

மின்னிதழ் / நேர்காணல்.

ஏடி வரதராசன் என்பது தங்கள் பெயரா? புனைப்பெயரா?
.
எனது முழு பெயர் வரதராஜப்பெருமாள்… அதைச் சுருக்கி அழைப்பதற்கு இலகுவாக வரதராசன் என வைத்துக் கொண்டேன்.

 » Read more about: வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா?  »

நேர்காணல்

எழுத்துத் துறையே முழு நேர தொழில்

மின்னிதழ் / நேர்காணல்

ரேணுகா குணசேகரன், ‘க்ளோவர் தாட்ஸ்’ என்கிற புத்தகங்களுக்கான ஆலோசனை, எழுத்து, மொழிபெயர்ப்பு, பதிப்பு ஆகிய சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள ரோட்டரி சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

 » Read more about: எழுத்துத் துறையே முழு நேர தொழில்  »