புதுக் கவிதை 01
kathal

 

 

 

 

வேதனைக்கு
மறு பெயர்தான் காதல்
வேண்டாம் நண்பனே
காதல்
மருந்து இல்லாத
நோய்தான் காதல்
வசதி இன்றி
தவிக்கக் செய்வது தான்
காதல்
கனவுகள் மட்டுமே காதல்
கட்டுப்படுத்துவது காதல்
நினைவுகள் நெருப்பாய்ச்
சுடுவது காதல்
வேண்டாம் நண்பனே
காதல்
தூக்கத்தைத் தொலைப்பது
காதல்
தூக்கம் மட்டுமே
பளிசளிப்பது காதல்

கவித்தென்றல் நளீரா
ரலிமங்கொடையூர்(அபுதாபி)


புதுக் கவிதை 02
kathal

 

 

 

 

காதல் என்பது
கண்டதும் வராது
ஆன்மாவின் உள்ளே
ஆசித்து வருவது!

ஆன்மீகக் காதல்
ஆன்மாவை வெல்லும்
ஆன்மாவின் காதல்
ஆத்மாவைக்கொல்லும்!

காதல் ஒரு போதும்
கலகம் செய்யாது
கலகம் செய்வது
காதலாய் இராது!

காதல் உணர்வு
அன்பின் வடிவம்
அழுகிய உடலையும்
அனைத்து நிற்கும்

உயிரையும் காதல்
ஆசித்து நிற்கும்
கூட இருந்தே
உயிரையும் உதவும்!

உன்னதக் காதல்
உலகத்தில் இல்லை
இருந்தால் இல்லை
இத்தனை தொல்லை!

கே. பூமதீன்
வாழைச்சேனை. மட்டக்களப்பு, இலங்கை.


புதுக் கவிதை 03
kathal

 

 

 

 

உண்மையாய் காதலியுங்கள் நீங்கள்
உயிராய் காதலியுங்கள்
உறவை உங்கள் அவனை/ளை
உத்தமமாய் காதலியுங்கள்…

குறைகளை ஒதுக்கி
குற்றங்களை மறந்து
உள்ளத்தில் சுமந்திடுங்கள்
நேரத்தை ஒதுக்கி
நேசத்தை வளர்த்து
நேர்மையாய் காதலியுங்கள்…

சின்ன சண்டைகளில் சிரித்து
சில்மிஷங்களில் குழைந்து
சிறியதயோர் சாம்ராஜ்யமுருவாக்குங்கள்…

கைகோர்த்து நடங்கள் உங்கள்
பாதங்களுக்கு ஒரே பாதையாக்குங்கள்
இதுதான் வாழ்க்கை என‌கூறுங்கள்
இதுவே எனதுலகமென்று கூறுங்கள்
ஒரே வாழ்க்கைக்கு
ஒரே இதயமென்று சொல்லுங்கள்
ஒரே உயிருக்கு
ஒன்றே காதலென எண்ணுங்கள்..

த. ராஜ்சுகா
இலங்கை.


புதுக் கவிதை 04
kathal

 

 

 

 

காதல் தெய்வீகம்!
ஆன்மாவில் தேடத்தான்
ஆலயங்கள் தரிசனம்.
ஆண்டானில் கூடத்தான்-காதல்
ஆகமங்கள் இலக்கணம்.
காதல்தான் தெய்வீகம்!
காதலினும் சக்தியில்லை.
ஆலயங்கள் இரகசியம்-காதல்
பூரணங்கள் அதிசயம்.
காதல்தான் வேதமாகும்
காலம்தான் பாடமாகும்.
ஆகாய மார்கங்கள்-காதல்
தீர்ப்பாய தீர்கங்கள்.
காதல்தான் சொர்க்கமாகும்.
காமம்தான் இன்பமாகும்.
கோவிலின் சிற்பகங்கள்-காதல்
சூட்சுமம் கற்பகங்கள்.
காதல்தான் வாழ்க்கையாம்!
காதல்தான் அம்சங்களாம்.
அனைத்தும் இரண்டிரண்டில்-காதல்
அமைப்பும் அதுதானுலகில்.
காதல்தான் சங்கீதம்!
காத்ல்தான் இங்கீதம்.
இதயங்கள் இனித்திடும்-காதல்
உதயங்கள் இணைத்திடும்.
காதல்தான் மென்மைதான்
சோதனையில் திண்மைதான்.
போதனையில் அலர்படும்-காதல்
தூதணைவில் மலர்ந்திடும்.
காதல்தான் கண்டெடுப்பு.
கல்லுக்குள் வென்றெடுப்பு.
கலைபேசும் சிலைபோலவே-காதல்.
அலைவீசும் நிலம்வாழவே!

R. செல்வம்
பெரம்பலூர், தமிழ்நாடு


புதுக் கவிதை 05
kathal

 

 

 

 

காதல் கவிதைகள் கண்டேன் …
காதலுக்காய் கவிதைகள் கண்டேன்….
காதலில் மிதந்ததைக் கண்டேன்….
காதலில் மூழ்கியதைக் கண்டேன்….
காதலில் மகிழ்ந்ததைக் கண்டேன்….
காதலின் கண்ணீரைக் கண்டேன்….
காதலில் கதறுதல் கண்டேன்…..
காதலால் வாடுதல் கண்டேன்….
காதலில் சாடுதல் கண்டேன்….
காற்றோடு கலந்திடக் கண்டேன்….
கனவிலும் உள றிடக் கண்டேன்….
பித்தன் போல் அலையக் கண்டேன்….
பக்தன் போல் யாசிக்கக் கண்டேன்….
அற்புத வடிவங்கள் காதலில் கண்டேன்…..
மனிதன் தான் இப்படி…….
மழலை மீது தாய்க்குக் காதல் ……
மலர்கள் மீது வண்டிற்குக் காதல்….
இலைகளெல்லாம் தென்றலோடு காதல்…..
விரல்களெல்லாம் வீணையொடு காதல்….
நிறங்களுக்கு சித்திரத்தில் காதல்….
கடவுளுக்கு படைப்புகளில் காதல்……
பக்தர்கள் மீது அதீதக் காதல்…..
எனக்கு மட்டும் ….
எனக்கு மட்டும் …….
என்னவள் மீது ஆழமான காதல்….
இமை திறந்தும், இமை மூடியும் ….
மறந்திடவே முடியாத உண்மைக் காதல்….
என்னை மனிதனற்ற
மனிதனாகவே மாற்றிவிட்டது
இந்த மாயக் காதல்…….

எஸ்.எஸ்.எம். ரபீக்
புத்தளம். இலங்கை.


புதுக் கவிதை 06
kathal

 

 

 

விழி
தொட்டவரிடம் மட்டும் பேசும்
மொழி!
இதயத்தின் ஒளி
உலகில் ஓயாமல்
ஒலிக்கும் ஒற்றை மொழி

காற்றும்
ஒரு நாள் தோற்று விடும்
காதலிடம்!
உயிர்களின் சுவாசப்பையில்
காதல் நுழைவதால்!

குருதியும் கூட
இறுதியில் தோற்றுத்தான் விடுகிறது
காதல் உறுதியானால்
காமம் வந்து
காதலில் கலந்து விட்டால்
இறுதிக்கிரியைதான் நடக்கிறது

காதல்
புனிதத்தின் புனிதம்
கண்டு கொண்டால்
அவன்தான் மனிதன்
அதுவே வாழ்க்கையின்
முதல் வாழ்வாதாரம்

காதல் இல்லாமல்
வாழ்வே இல்லை
வாழ்க்கை என்பது
மூச்சுக்காற்றின்
மூலதனம்
மூச்சுக்காற்றே காதல்தான்

மிஹிந்தலை பாரிஸ்
கனதராவ கட்டுக்கெலியாவ, மிஹிந்தலை


புதுக் கவிதை 07
kathal

 

 

 

 

காதல் என்ற
மூன்றெழுத்தில் என்
மூச்சடங்கியது..

இதய துடிப்பை
இடைநிறுத்தம் செய்தது
இரவின் உறக்கத்தை
களவாடிச்சென்றது..

காதல் என்ற
புத்தகத்தில் என்
விழிகள் விழுந்தது..

வரிகளில் கண்பட்டு
வாழ்வின் விடியல்கள்
தொலைந்தது..

வார்த்தைகள்
மௌனத்தின் சிறைக்குள்
மாட்டிக்கொண்டது..

தனிமையே.. தன்னில்
இனிமையானது
தலையணையில் கண்ணீர்
தவழ்ந்து சென்றது

காலங்கள் கடக்கயில் இன்னும்
காயங்களானதுள்ளம்.
காரணம் கேட்டேன் மனதிடம்,
காணாமல் போனதே.. என்
காதலென்றது…

உண்மைக்காதல் எதுவென்று
உணரமுடியாத உலகமிது..
உள்ளமுடைந்த காதலால்
உலகமே நிறைந்து போனது

உணர்வை ஊற்றிய காதலில்..
உண்மையிருக்கும் அது
உயிரையும் கொடுக்கும்

உடலை ரசித்த காதலில்
ஊனம்தான் பிறக்கும் – மெல்ல
உயிரையும் குடிக்கும்.
ஆதலால் காதல் செய்
அவதானமாய்..

அபு நசீர் (கத்தார்)
தோப்பூர், இலங்கை


புதுக் கவிதை 08
kathal

 

 

 

 

ஒத்தகடைக்குபோற
நேர்மண்ணுபாத போல-ஏ(என்)
அத்தமக மேல என்னோட
கண்ணு பார்வ தானே

கோயிலுக்கு நேந்துகிட்டு
கட்டிவச்ச காசபோல
அவ நெனப்பதானே
நெஞ்சுக்குள்ள
கட்டிவச்சேன் பாசத்தால

வெறும் ஆசையெல்லாம்
அவமேல இல்ல
உயிர் நேசமெல்லாம் அவமேல
நான் என்னத்த சொல்ல

வேசமெல்லாம் போட்டதில்ல
பாசாங்கும் செஞ்சதில்ல
நெசமெல்லாம் பேசுறேனே
பாசமாக பாக்குறேனே
நேசமுள்ள அவகிட்டதானே

ஆத்தங்கர மேட்டுலையும்
மஞ்சகிழங்கு காட்டுலயும்
ஒதுங்கி நாம பேசவேணாம்
உரிமையுள்ள மச்சாங்கிட்ட
வீட்டிலேயே பேசிடலாம் பசுங்கிளியே

வருசம் கொஞ்சம் ஓடியாச்சு
பரிசம் போடும் நாளுமாச்சு
கரிசக்காட்டு குயிலுங்கூட
பரிகாசம் காட்டி கூவியாச்சு
மாரிமாசம் கழிஞ்சபின்னே
மணமுடிக்க போறேன் உன்ன

விஜயகுமார் வேல்முருகன்
எண்ணூர், சென்னை.600057. தமிழ்நாடு.


புதுக் கவிதை 09
kathal

 

 

 

 

காணல் நீரைப் பருகி
தாகம் தீர்க்க என்னால் முடிகிறது
நடு இராப் பொழுகளிலும்
தூக்கம் தொலைக்கத் தெரிகிறது

தலை சாய மட்டும்
என்னுடனிருந்த தலையணைக்கு
இன்று வாயும் முளைத்திருக்குறது
அது என்னுடன் தான்
இரவு முழுக்கப் பேச்சுக் கொடுக்கிறது

களவில் உண்டுவிட்டு
உண்ணா விரதமென்று சொல்லும்
போராட்டங்களில் இஷ்டமில்லை
சன்டையிட்டு நீ
பிரிந்து போன நொடியிலிருந்து
உண்ணாதிருப்பது அவ்வளவாய்
வலிக்கவுமில்லை

கவிதை கொட்டித் தீர்க்க
பேனா மை தான் போதவில்லை
மனதில் தேக்கித் தேக்கி வைத்த
கனவுகளுக்கு அளவில்லை

சும்மாவே ஆடுவேன்
காதல் வேறு தாளமிட
கண்ணாடி பார்த்து ஆடிக்கொண்டிருக்கிறேன்
நீண்ட நேரமாய் சீவிய தலை முடியை
உனக்காய் குளைக்கிறேன்
மற்றவரிடம் முட்டாளாய்
உன்னுடன் மட்டும் காதலானாய்.

நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ்
புத்தளம்


புதுக் கவிதை 10
kathal

 

 

 

 

வெட்டிப் பேச்சு காதலர்கள்
கூடி பேசி பேசியே
பொழுதைக் கழித்து
பூங்காவாக்குகின்றனர் காதலை

சினிமாக் காதலர்கள்
பொது இடங்களில் பிறர் பார்க்க
நெருக்கமாக இருந்து
திரையரங்காக்கின்றனர் காதலை

குழந்தைத் தனமான காதலர்கள்
விளையாட்டாக நினைத்து
விளையாண்டு ஓய்ந்து கிடக்கும்
விளயாட்டுத்திடலாக்குகின்றனர் காதலை

கனவுக் காதலர்கள்
மனதிலே எண்ணி எண்ணி
வெளியிடாமல் இருந்து
வறண்ட பாலைவனமாக்குகின்றனர் காதலை

காரியக் காதலர்கள்
பணத்தைக் குறியாக வைத்து
வாழ்க்கையை வசதியாக்கும்
சூதாட்டக்களமாக்குகின்றனர் காதலை

பிரயாணக் காதலர்கள்
சுகமாக சுற்றித் திரிந்து
பின் பிரிந்து செல்லும்
சுற்றுலா இடமாக்குகின்றனர் காதலை

கோழைத்தனமான காதலர்கள்
மனம் கசந்து பின்
உயிரை மாய்த்துக் கொள்ளும்
விபத்துப் பகுதியாக்குகின்றனர் காதலை

அன்புக் காதலர்கள்
நேர்மையாக நேசித்து
கண்ணியமாக இருந்து
புனிதமான கோவிலாக்குகின்றனர் காதலை

தி. அருணாசலம்
சிவகாசி, தமிழ்நாடு.


புதுக் கவிதை 11
kathal

 

 

 

 

நீ கருவாகு முன்
உருவாகிய செல்.
என் உருவுக்குள்
உறவாடிய சொல்.

காதல்:-

உணவுகள் இல்லாமலும்
உயிர் வாழும் பிறவி.
உன்னை இழந்தவர்கள்
உலகில் சிலர் துறவி,

காதல்:-

உன்னால் இன்னும்
உலகில் வாழும் உண்மையான
உயர்ந்த காதலர்கள் – எங்கள்
தாத்தாவும் பாட்டியும்.

காதல்:-

உள்ளதை சொல்லாமல்
உள்ளத்தை களவாடி
உறவுகளை பிரிந்து
உடன் ஓடும் காதலர்கள்.

காதலே …
உன்னால் கெட்டவர்கள்
உலகில் யாருமில்லை .
காதலென்று ஏமாந்தவர்களில்
காதலர்களைத் தவிர.!

“சூரியக்கவி தீபம்” மு.யாகூப் அலி, குவைத்
முத்துப்பேட்டை (தமிழகம்)


புதுக் கவிதை 12
kathal

 

 

 

 

கண் கண்டதும் தோனுவது காதல்
கண் நோக்கியதும் கை நீட்டுவது காமம்
கண்ணாலே இடை போடுவது காதல்
கண்ணை மூக்கைப் பார்த்து இடை மேல்
கைபோடுவது காமம்…..\

தாலி கட்டியவளை அணைப்பது காதல்
தாரம் அல்லாத ஒருத்தியை அழைப்பது காமம்
தரம் பார்த்து இடம் பார்த்து
நாகரீகமாக கூறுவது காதல்
தரம் இடம் பாராமல் அநாகரீகமாய்
நடப்பது காமம்…..\

ஒருவனுக்கு ஒருத்தி என்று
நினைப்பது காதல்
ஒருவன் பலருடன் உறவு
கொள்வது காமம்
ஆடவனை தன் கைபிடியிலே
வைத்துக்கொள்வது காதல்
ஆடவனை வலை வீசி
வளைப்பது காமம்…..\

துடிப்பான வயது இருந்து தளரும்
வயதிலும் இருப்பது காதல்
துள்ளும் வயதினிலே பல
உள்ளம் நாடுவது காமம்…..\

உள்ளத்தில் அமைதியும் இல்லத்தில்
இன்பமும் கொடுப்பது காதல்
உள்ளம் தடுமாற்றமும் உடலுக்கு
கேடும் கொடுப்பது காமம்….\

இணைந்த உறவை உயிர் உள்ள
வரை மதித்து ஒன்றாகவாழ்வது காதல்
இன்று ஒரு வீடு நாளை ஒரு கட்டில்
என்று வாழ்வது காமம்….\

உடல் இணைந்து உரிமை கொடுத்து
உயிரைப் பெருக்குவதுகாதல்
உடலுக்கு இன்பம் கொடுத்து உள்ளத்தை
மூடியே வைத்துவிட்டுப் பிரிவது காமம்…\

கூடலிலும் ஊடலிலும் சமபங்கு
வகிப்பது காதல்
கூடல் முடிந்ததும் உதறி விட்டுப்
போவது காமம்…../

காதல் மறைந்து வருகின்றது
காமம் வளர்ந்து வருகிறது
இவை தவறு என்று உணர்த்த
காலம் கொடுத்த தண்டனை
உயிர்க் கொல்லி நோய்…\

காலம் உணர்ந்தும்
காதலின் பெருமையை
காலம் கடந்த ஞானம்
காமத்தால் கண்ட கோலம்……\

கவிக்குயில் கலா
மலேசியா


புதுக் கவிதை 13
kathal

 

 

 

 

வாழ்க்கைக்கு
வர்ணம் பூசும்
காதல்
வலுக்கி விலவைத்து
வாய்விட்டு சிரிக்கும்

எரும்புக்கும் எரும்புக்கும்
காதல்
காற்றுக்கும் மரத்திற்கும்
காதல்
பூவூக்கும் வண்டுக்கும்
காதல்
தூக்கனாம் குருவிக்கும்
காதல்
துள்ளியோடும் மானுக்கும்
காதல்

காதல் பற்றாத
உயிர்களும் இல்லை
காவியமாகாத காதலுமில்லை
உண்மை காதல்
பல்லாக்கில் ஏறும்
பகட்டு காதல்
பாடையில்தான் ஏறும்

ஸாலிஹ் அஸீம்
புத்தளம் – இலங்கை


புதுக் கவிதை 14
kathal

 

 

 

 

கண்களால் நுழைந்து
இதயத்தை துளைக்கும்
ஆசைக்காதல்!

இதயத்துள் நுழைந்து
அன்பை விதைக்கும்
உண்மைக்காதல்!

வழிபடும் பக்தன்
கடவுளின் மீது
தெய்வீகக்காதல்!

அன்பின் தேடலில்
அழகாய்ப் பிறக்கும்
ஆத்மக்காதல்!

காமமும் அன்பும்
கலவையாய் உலகில்
மானுடர் காதல்!

ஆண்டவன் படைப்பில்
அழகாய் தோன்றும்
இயற்கையில் காதல்!

பூவைக் காற்று
தழுவிசெல்கையில்
மரந்தக் காதல்!

மழலை மொழியில்
பிஞ்சு குழந்தையில்
தய்மையின் காதல்!

காதல் உணர்வு
இதுதான் என்றில்லை,
பற்றுக்கு மறுபெயர் காதல்!

ஸிமாரா அலி “ஊதாப்பூ “
கொழும்பு , இலங்கை


புதுக் கவிதை 15
kathal

 

 

 

 

கண்பார்க்க மெய்சிலி்ர்க்க
கண்ணுக்குள் மின்னல் கீற்றோட
புதுஇரத்தம் பாய்வதைப்போல
புத்துணர்ச்சி மனதோடு தோன்றுமே !

கனவில் மிதந்து கற்பனையில் நடந்து
சொப்பணத்தில் கண்டதெல்லாம்
துளிர்விட்டு தழைத்திட
இல்லாதசக்தி விருட்சமாகிடுமே !

பூக்கள் புதிதாய் தோன்றிட
புதியவாசனை நுகர்ந்திட
புல்வெளி மெத்தை அமைத்திட
பாக்கள் படித்திட தோன்றிடுமே!

இருஇதயங்கள் இரண்டற கலந்திட
இருமனம் ஒருமனமாகிட
ஒரு உயிர் தரிப்பது போலத்தான்
உள்ளம் உணர்ந்து கொள்ளுமே !

உண்மைக்காதல் பூத்திட
உணர்வில் கலந்து வதைத்திட
காதல் போகில் சாதலா
கற்பனைக்குதிரை கடிவாளமிடா ஒடுமே!

வரலாற்றுக்காதல்கள் ரசித்திட
வாழ்ந்தவர் கதை இனித்திட
நாமும் காதல் கொள்வோம் என
கண்ணியர் காளையர் நினைப்பதே காதலாம் !

சிவரமணி கவிச்சுடர்
திருகோணமலை. இலங்கை.


புதுக் கவிதை 16
kathal

 

 

 

 

இதய பாசையை
என்னுள்
விளங்க வைத்த
காதல்

ஒவ்வொரு பொழுதிலும்
கவிதைகளை
பிரசவித்துப் போட்டது
புத்தகத்தில்
பத்திரமாய்
படுக்கவைத்த
அந்த கவிதைகள்
சத்தியமாய் இன்னும்
இதயத்தில் வாழ்கிறது

பசி மறந்து
தூக்கம் துறந்து
ருசி இழந்து
பாச உறவுகள் கூட
பாகற்காயாய்
ஆகிப்போக
கைவிட்டு காலை வாரியது
உயிராய் நினைத்த
ஊமைக் காதல்

பாத்திமா சில்மியா
புத்தளம் – இலங்கை.


புதுக் கவிதை 17
kathal

 

 

 

 

கள்ளமான எண்ணங்கள்
குள்ளமான பார்வைகள்
பள்ளமான பழக்கங்கள்
பொடியன்காள் பொட்டைகாள்!

பாறைமேல் சூரியனாய்
தாமரைமேல் பனியாய்
நீர்மேல் ஒளியாய்
நீங்காத் துயராய்!

துயிலில்லா விளியாய்
துடிப்பில்லா இதயமாய்
பசியில்லா வயிறாய்
அசைவில்லா உயிராய்!

கல்வியில்லா மக்காய்
கற்பில்லா கறையாய்
தாலியேறா விதவையாய்
தாரமிழந்த கணவனாய்!

உள்ளம் சாதல்
உறவு சாதல்
உயிர் சாதல்
உண்மைக் காதல்!

சமூன் றமழான்
புத்தளம்.


புதுக் கவிதை 18
kathal

 

 

 

 

சாலையோரம் நடந்தேனே
உனது விழியில் விழுந்தேனே

மௌன மொழிகளாலே
நம்மிருவர் விழிகள் பேசுது

வார்த்தைகள் தடுமாற
இதயங்கள் இடம்மாற
விட்டு விட்டு துடிக்குதடி

ரெக்க கட்டி மனசு வானில்
சிறகு விரித்து பறக்குதடி

மிதந்து வரும் தென்றலில்
பூந்தேகம் சிலிர்க்குதடி
பூவனம் இன்று பூமாலை
ஒன்று கோர்க்குதடி

காதலுக்கு மரியாதையாக
வான் மேகம் மழைத்தூவ
விண்மீன்கள் பூத்தூவ

வானவில் தோரணங்கள்
வர்ணங்கள் பூசுதடி

மொட்டு இதழ் மலர்ந்ததடி
உள்ளத்தில் கோடி பூக்கள்
காதலாக பூத்ததடி

நம் காதல் கவிதைகளை
என் குருதி கொண்டு
கல்வெட்டில் பொறித்தேனே

நம் காதலே வெல்லும்
நாளைய சரித்திரம்
நம் காதலையே சொல்லும் !

பொ. பிரேம் குமார்
தாளமுத்து நகர் தூத்துக்குடி


புதுக் கவிதை 19
kathal

 

 

 

 

புரியா வயதில்
தெரியா புதிரில்
கிளர்ச்சியுறச்
செய்யும் காதல்!

பதின்ம வயதில்
பருவத்தின் மாற்றத்தில்
ஈர்க்கும் கவர்ச்சியும்
தோன்றும் காதலென!

தெரிந்தும் கூட
இனக் கவர்ச்சியில்
பாலுனர்ச்சியில்
பாழாய் போவர் பலர்!

அக்றிணை இனம்தொட்டு
மனித இனத்தையும்
மனத்தால் கட்டிப்போடும்
இந்த காதல்!

காதல் என்ற
கடலை கடந்து
செல்லாதோர்,
எவரும் இல்லை!

காதலை வெறுப்போர்
எவரும் இல்லை!
உயிர்க் காதலை
மறுப்பாரும் இல்லை!

இலக்கிய வடிவங்களில்
காதலின் இயல்பதனை,
படிக்காத வாசகன் இல்லை
தீதென வெறுத்தொரும் இல்லை!

அவசர வாழ்க்கையில்
மின்தள தொடர்புகளில்,
உணர்வுகளின் வேட்கையிலே
தொடர்வது காதலில்லை!

ஒருமுறை உதிக்கும்
உண்மைக் காதல்
தெரிந்துணர்ந்து கொண்டால்
இல்லை என்றும் (சா)மோதல்!

ஈழத் தென்றல் நஸீமா முஹம்மத் (குவைத்)
இலங்கை. கொழும்பு 10.


புதுக் கவிதை 20
kathal

 

 

 

 

நான் …..?

மெளனமாய் பேசுகிறேன்
உன்னுடனா?இல்லை
என்னோடு நானா?

உடைந்துபோகின்றேன்
உன்னாலா?
உனக்குள்ளா?
இல்லை
என் வாழ்வியலாலா?

ஏகாந்தாமாய் பேசுகிறேன்
உன்னைப்பற்றித்தான்.
நினைவுகளுக்கு
மட்டும் தான்
உன்னை பரிசளிக்க
முடிகிறது.

என்னில் உண்டான
அணுக்கள் இடம் பெயரத்தொடங்கி
நான் வலுவிழந்து
போகிறேன்.

நான் தள்ளாடும் போது
நமக்குள் உண்டான
ஸ்பரிசங்களைத்தான்
என் ஊன்றுகோல்களாக
மாற்றிக்கொள்கிறேன்.

இந்த-மாயைக்குள்தான்
ஒவ்வொருநாளும்
கண்விழிக்கின்றேன்.

என் குருதி எரிந்து
நரம்புவழி சாம்பலாய்
உன் நினைவுகள்
வெளியேறும் போதுதான்.
நான் வெளுறுவதும்
என் ஆயுள் முடிவதையும்
கணிக்க முடிகிறது.

நெடுந்தீவு அரவிந்
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு-14


புதுக் கவிதை 21
kathal

 

 

 

 

நான் மஞ்சள் தேய்க்கையில் நெஞ்சில் அமர்ந்தவனே..
அன்பின் அஞ்சல் செய்யவும் அஞ்சிக் கடப்பவனே..
எழில் வஞ்சி நானுனை தினம் கெஞ்ச வைப்பவனே..
இருமனம் தஞ்சம் ஆகவும் வஞ்சம் செய்பவனே..

நிறை கொஞ்சும் காதலில் எஞ்சி நிற்பவனே..
மனம் விஞ்சும் வேதனை மிஞ்சத் தருபவனே..
காதல் சஞ்சிகை இவளின் மஞ்சம் ஆனவனே..
கவின் கஞ்ச மலர் கண்டிட லஞ்சம் கேட்பவனே..

காதல் அஞ்சனம் நாடின் நஞ்சினைத் தருவோனே..
என் சஞ்சலம் நீக்கிட அஞ்சுகம் கொள்வாயே..
இனிக் கொஞ்சமும் தாமதம் துஞ்சிடச் செய்திடுமே..
கால கஞ்சமும் செய்யாதே, காஞ்சி நகர்க் கோனே..

செந்தாமரைக் கொடி – ஹேமா முரளிதரன்
தூத்துக்குடி, தமிழ்நாடு


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...