புதுக்கவிதை 01
thaayum_thaaramum

 

 

 

தாரமாயாகாது தாய்மை
இல்லை //
தாயன்பிற்கு உலகில்
நிகரேயில்லை //

தாய்மையின்றி உயிர்
பிற‌ப்பில்லை //
தாரமில்லா வாழ்வில்
சிறப்பில்லை //

தாய்மைக்கென்று தனி
புகழில்லை //
விலங்கும் தாயாகும்
வியப்பில்லை //

பெண்ணுக்குத்தாய்மை
இயல்புநிலை //
தாயா தாரமா பிரிப்பது
பொருத்தமில்லை//

தாரமே தாயானாள் இதயம்
வேறில்லை //
தந்தைக்குத்தாரம் என் தாய்
இதுவே உண்மை நிலை //

கே. பூமதீன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு, இலங்கை.


புதுக்கவிதை 02
thaayum_thaaramum

 

 

 

அன்னைக் கிணையாய்
அன்பைச் சொரிபவர் அகிலத்தில்
யாருண்டு!

தன்னைக் கொடுத்துத் தாயாகும்
தாரம் அவளுக்கு உலகில்
நிகருண்டோ!

பத்து மாதம் கறுவறை
சுமந்தவ‌ள் தாயின் தியாகம் சொல்லிட
வார்த்தைகளுண்டோ!

ஆயுள் கைதியாய்
இல்லறச்சிறையில் தாரத்தின் தியாகம்
மறந்தார் உண்டோ!

கணவனையும் அவன்
கருவையும் தாங்கி தாயானவளும்
தாரமன்றோ!

பிரித்துப்பார்க்க முடியாத‌
தாயும் தாரமும் தரணி போற்றும்
தாய்மையின் சின்னம‌ன்றோ!

சிமாரா அலி “ஊதாப்பூ “
கொலன்னாவ, இலங்கை


புதுக்கவிதை 03
thaayum_thaaramum

 

 

 

தாயே
கருவறைத் தொட்டிலில்
கவிதையாக சேமித்து
முளையாக மூடி வைத்து
முத்து மழை பொழிந்து
பெற்றவள் நீ
கரங்களில் ஏந்தி
கனிவோடு பேணி
கண்களாய் காத்து
தாயாய் தாரமாய்

எத்தனையோ உறவாக
சுழன்று கொண்டிருக்கும்
உலகம் நீ
தாயாய் தாரமாய்

அன்பையும் அறிவையும்
அழகோடு அளிப்பவள் நீ
மடி மீது மலராக
தோளிலே தென்றலாக
தாலாட்டிச் சீராட்டும்
தாயாய் தாரமாய்

கவித்தென்றல் நளீரா
ரலிமங்கொடையூர் (அபுதாபி)


புதுக்கவிதை 04
thaayum_thaaramum

 

 

 

தாய் – கருவில் சுமப்பவள் !
தாரம் – கழுத்தில் சுமப்பவள் !!
தாய் – பெத்தெடுப்பவள் !
தாரம் – தத்தெடுப்பவள்!!
தாய் – இதயத் துடிப்பு தந்தவள் !
தாரம் – இயக்கத்தில் துடிப்பு தருபவள் !!
தாய் – அனைவருக்கும் முதல் தொட்டில் !
தாரம் – இரண்டாவது தொட்டில் !!
தாய் – உலகில் முதல் தெய்வம் !
தாரம் – தாய்க்கு நிகரான தெய்வம் !!
தாய் – பந்தய களத்திற்கு அழைத்து வருபவள் !
தாரம் – பந்தயத்தில் பங்கு பெறுபவள் !!
தாய் – உயிர் !
தாரம் – உடலும் உயிரும் !!
தாய் – நேற்று இன்று !
தாரம் – இன்று நாளை !!
தாய் – உலகின் தோற்றம் !
தாரம் – உலகின் வளர்ச்சி !
தாரம் – இல்லாமல் அமையாது
சிறந்த தாய்மை !
தாய்மை – இல்லாமல் அமையாது
சிறந்த பெண்மை !
இறைவனின் சிறப்பு – பெண்மையின் படைப்பு !!!
பெண்மையின் சிறப்பு – தாய்மையில் இருக்கு !!!

R . செல்வம்
பெரம்பலூர், தமிழ்நாடு.


புதுக்கவிதை 05
thaayum_thaaramum

 

 

 

தருவது – பெறுவது .
தருவதை நிறுத்தவும்
பெறுவதை நிறுத்தவும் -ஆகாத காரியம்.

கணவனும் – பிள்ளையும்
ஒருவனே – தாயுக்கும்
தாரத்திற்க்கும் முன்னே .
தவமிருப்பது இரண்டுயிர் .

தாயவள் பட்டினியில்
தனையனுக்காய் பழகியவள்.
தாரமோ பட்டினிகளை
தன்னவனுக்காய் பழக்கியவள்.

தாயும் – தாரமும்
தனிமையாக்கினால்
தடுமாறுவது ஒருவன்தான்
தள்ளாடவும் செய்வான்.

பாரிலே நடமாடும்
பொக்கிசங்கள் …
தாயும் தாரமுமான
புதையல்கள் !

இந்த புதையலை
பாதுகாப்பவன் எவனோ
அவனே இம்மை வாழ்வில்
மிகப்பெரிய பாக்கியசாலி.!

“சூரியக்கவி தீபம்” மு.யாகூப் அலி
முத்துபேட்டை . தமிழகம்


புதுக்கவிதை 06
thaayum_thaaramum

 

 

 

உருவில் உயிர் கொடுத்து
உதிரத்தை பாலாக கொடுத்து
அடிவயிறு தடவி ஈன்று
எடுப்பவள் தாய்.
உள்ளத்தில் இடம் கொடுத்து
உணர்வில் உயிர் கொடுத்து
உடலை பரிசாக கொடுத்து
உறவாக வாங்கி தாங்கிக் கொண்டு
இருப்பவள் தாரம்.
கண் கலங்கும் போது கண் துடைத்து
நம்மைக் கண்டவுடன் பாச வெள்ளத்தை
திறந்து விடுபவள் தாய்.
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு எடுத்து நாம் துவண்டு
விடும் வேளையிலே தோழனுக்கு
தோழியாய் தோள் கொடுத்து தலை
கோதி விடுபவள் தாரம்.
நாம் தள்ளி தள்ளி போனாலும்
அள்ளி அள்ளி கொடுக்காத
போதிலும் விட்டுக் கொடுக்காது
பிறரிடம் தன் பிள்ளை பெயர்
சொல்லி சொல்லி புகழ் பாடுபவள் தாய்.
ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக
என் ஆண்மைக்கு இழுக்கு எழாமல்
நெஞ்சில் என்னை சுமந்து என்
வம்சம் வளர தந்தை என்னும்
பெயர் பெற்றுக் கொடுப்பவள் தாரம்.
நம் இறுதி மூச்சு வரை உறுதியான
உறவு தாய் விலை கொடுத்தும்
பதவியைக் காட்டியும் மீண்டும்
ஒரு முறை பெற முடியா பந்தம் தாய்.
தாரம் மறு தாரத்துக்கு வழியுண்டு
ஆனாலும் முன் தாரத்தின் பாசத்தை
மறந்திட வழியில்லை.
வலக் கண் இடக் கண் தாயும் தாரமும்
இதில் எக் கண் வேண்டும் என்று
கேட்டால் பதில் கிடைத்து விடுமோ
நல்ல ஆண் மகனிடம்.
இரு கண்ணுக்கும் அவன் ஒருவன்
என பதில் வந்து விடும் மறு கணம்
தாரமும் மறு தாயே இதை மறுத்துப்
பதில் கூறுவார் உண்டோ.

கவிக்குயில் கலா
மலேசியா.


புதுக்கவிதை 07
thaayum_thaaramum

 

 

 

மடியை தலையணையாக்கி
என்னை
உறங்கவைத்து
உவகைக் கொன்டாள்
அன்னை
தலை கோதி
அனைத்துக் கொன்டாள்
என்னை
மடி தந்தாள்
ஆனால்
தூக்கம் கொண்று
துயர் தந்தாள் தாரம்
அவள் திருப்திக்காய்
என்னை படுத்தும் பாடோ
அகோரம்
நான் வாழ
தாய் பாடுபட்டாள்
அவள் வாழ
தாரம் தர்க்கம் பட்டாள்
தன்னலமில்லா தாயவள்
சுயநலத்தோடு தாரமிவள்

ஸாலிஹ் அஸீம்
புத்தளம் இலங்கை


புதுக்கவிதை 08
thaayum_thaaramum

 

 

 

தாயின்றி தரணியில் நாமில்லையடா !
தாய்க்கு நிகராய் தாரமுமில்லையடா !
தாரம் தவம்கொண்டு தாயாவாளடா !
தாய்போல எம்மையும் காப்பாளடா !
தாய் தாரமென்று தரம்பிரிக்க முடியாதடா !
தாயின்பெருமை தாரத்துக்கும் உண்டடா !
தன்னலமில்லாதவள் தாயடா.. வாழ்கையை
தானமாய் கொடுப்பவள் தாரமடா !
தாய்மையின் பெருமை பெண்ணுக்கடா-அது
தாய்க்கும் தாரத்துக்கும் சொந்தமடா !
தாயவள் கண்ணிலே நாம் பிள்ளையடா !
தாரமவள் பார்வையில் நாம் கணவனடா !
தாய்மையை மதிப்பவன் மனிதனடா !
தாரத்தை அவ மதிப்பவன் பாவியடா !
தாயவள் பாதத்தில் சுவர்க்கமடா !
தாரமவள் பாசத்தில் இல்லறம் இனிக்குமடா
தாய்க்கு பணிவிடை செய்வோமடா !
தாரமவள் உணர்வுகளை புரிவோமாடா !
தரணியிலே நாம்சிரித்து வாழ்வதற்கு !
தாய்மையினை உள்ளத்தில் சுமப்போமடா !

அபு நசீர்
சிராஜ் நகர் தோப்பூர், இலங்கை


புதுக்கவிதை 09
thaayum_thaaramum

 

 

 

நிலாக் காயும் நேரம் – தாய்
இடுப்பி லமர்ந்து சோறுண்டு
உலா வரும் குழந்தையாக அன்று
என் தாரமவள் நிலவையே
நெற்றியில் அணிந்திட்டால் இன்று !
கங்காரு போலே எனை சுமந்து கூலி வேலை
செய்திடுவாள் தாயவள் அன்று
தாரம் தங்கமாக தாங்கி என் வாழ்வின் ஒரு
அங்கமாக மாறிவிட்டாள் இன்று !
அஞ்சறைப் பெட்டி துழாவியே சில்லறை
காசு கொடுத்தனுப்புவாள் தாயவள் என்
பள்ளிக்கூட நொறுக்குத் தீனிக்காக அன்று
இன்று
அழகாக குடும்பம் நடத்திட ஆலோசனை பல
தந்திடுவாள்
சிறுக சேமித்து என் சிக்கல் நேரங்களை
சிறுசேமிப்பில் கரைத்திடுவாள் தாரமவள் !
“தாயும் தாரமும் ஒன்னு இதை அறியாதார்
வாழ்வு கடற்கரை மண்ணு!”.

கவி.சுசிமணாளன்
சுக்காம்பட்டி, தண்டலை, தமிழ்நாடு.


புதுக்கவிதை 10
thaayum_thaaramum

 

 

 

தாரம் ஆகித் தாயாகும்
பாக்கியத்தைப் பெறுகின்ற
சுப ராகமவள்
தாரம் ஆகாமல் தாயாகும்
அபாக்கியத்திற்கும் ஆளாகும்
சாப பாவமவள்!
தாரமாகியும் தாயாகவில்லை
தாக்கிடும் சொல்லம்பு ‘மலடி’
தாயாகித் தாரமானால்
தாளாத அவமானத் தண்டனை
தாவிவரும் பெண்மனதை நெருடி!
தாரமாகியே தாயான மகத்துவம்
தாழ்ந்ததோ மனதினிலே
தாரமாகி வரும் மருமகளைத்
தாயாக அரவணைக்காமல் மனிதம்
தாழ்ந்து பேயாட்டமேன் மாமியாராய்!
தாயன்புக்கு ஈடில்லையெனத்
தான் பிறந்த வீட்டில் முழங்கியபெண்
தாரமாகிப் போனபின்னே
தாயாம் மாமன்மாமியை மதிக்காமல்
தாழ்த்தும் ஈனத்தனமேன் மருமகளாய்!
தாயா? தாரமா? கேள்விக்கணையின்
சூழ்நிலை தரும் மனப்போராட்டத்திலே
தாரமவள் உள்ள இல்லத்திலே
தாயவள் முதியோர் இல்லத்திலே!
தாங்கிடுமோ மண்ணுலகம்!
தாரமாகித் தாயாகி மனையறம்
தாங்கிச் சுமக்கும் பெண்ணவளைத்
தாக்குவதும் பெண்ணென்றால் தாளாது
தாரத்தால் இல்லறம் பிளவுபடும்
தாய்மையின்றி மனிதம் கருவாகாமல் அழிந்துபடும்!

நாகினி கருப்பசாமி
துபாய். (மதுரை, தமிழ்நாடு)


புதுக்கவிதை 11
thaayum_thaaramum

 

 

 

பெண்மையின் நிறைவாக
இருப்பவள் தாய்
பெண்மையின் ஆரம்பமாக
இருப்பவள் தாரம்
மறு பிறப்பு எடுத்து
பிள்ளை பெறுபவள் தாய்
மறு வீடு செல்ல
மணம் முடிப்பவள் தாரம்
தியாகத்தின் மறுஉருவமாக
இருப்பவள் தாய்
துயரத்தில் உறுதுணையாக
இருப்பவள் தாரம்
புதிய சமுதாயத்தை
உருவாக்குபவள் தாய்
இனிய குடும்பத்தைக்
கட்டிக்காப்பவள் தாரம்
பிள்ளை நலம் காத்திட
தன்னை வருத்துபவள் தாய்
தன் நலம் குன்றினாலும்
கடமையாற்றுபவள் தாரம்
நல்ல பழக்கங்களைக்
கற்றுத் தருபவள் தாய்
நல்ல செயல்களுக்குத்
துணையாக வருபவள் தாரம்
மென்மையான தாயும் தாரமும்
பெண்மை என்றாலும்
தன்மையான குணத்தால்
அவர்கள் ஒன்றானவர்கள்

தி. அருணாசலம்
சிவகாசி, தமிழ்நாடு.


புதுக்கவிதை 12
thaayum_thaaramum

 

 

 

என்னை கருவில் சுமந்தவள் தாய்
என் கருவையே சுமப்பவள் தாரம் !
நிலாச்சோறு ஊட்டியவள் தாய்
நிலவே வந்து சோறூட்டுவது தாரம் !
சிறுவயதிலே
தடுமாறி விழுந்தபோது
துடித்தவள் தாய்
வாழ்க்கையில் தடுமாற
விடாமல் தாங்கி பிடிப்பவள் தாரம் !
தாயின் முத்தம்
அன்பு கலந்திருக்கும்
தாரத்தின் முத்தம்
ஆசை நிறைந்திருக்கும் !
தாயின் தாலாட்டில்
தொட்டில் சுகமானது
தாரத்தின் தாலாட்டில்
கட்டில் சுகமானது !
என்னை பெற்றெடுத்தவள் தாய்
என் தாயையே எனக்காக பெற்றெடுப்பவள் தாரம் !
ஒரு விழி தாய்
மறுவிழி தாரம்
இமைகளாக நானிருப்பேன்
இருவரையும் தான் காப்பேன் !
தாயும் தாரமும் ஒன்னு
இதை சிந்தித்தாலே போதும்
வாழ்க்கையில் நீயே வின்னு!

பொ.பிரேம் குமார்
சிங்கப்பூர் (தூத்துக்குடி,தமிழ்நாடு)


புதுக்கவிதை 13
thaayum_thaaramum

 

 

 

என்னைக் கருவாக்கி உருவாக்கியவள்
என்னியிரிலும் மேலானதாயவள்
என் கருவுக்கு உருக்கொடுத்து
என்னுயிரையே என்னிடம்
தந்தவள் தாரம் எனும்
என் வாழ்வின் ஆதாரம்.
இவ்வுலகை எனக்கு
அறிமுகப் படுத்தியவள் என்தாயே
அன்னையறிமுகப்படுத்தியதில்
எனை அடையாளப்படுத்தியவள்
தாயின் மறு பிம்பமானதாரமவளே !!!
“தாயா தாரமா”தரப்படுத்தலில்
எத்தனையோ ஆதாரங்கள்
அவை நமக்கு கொடுத்திடுமே
அகிலத்தில் வாழ்ந்திட முகவரிகள்
நாணயத்தினிரு பக்ககங்கள் போல்
நம் வாழ்வினிரு பக்கங்களே !!!
தாயும் தாரமும்……
அவற்றிலெது சிறந்தது என்பதுவோ
இலக்கணத்தில் ” இரட்டைக்கிளவி ” தனை
இருவேறாய் பிரித்து
தனி அர்த்தம் காண்பது
போலாகி விடும்.

ஹம்றன் அக்மல்
ஏறாவூர், இலங்கை.


புதுக்கவிதை 14
thaayum_thaaramum

 

 

 

எல்லா
கஷ்டத்திலும்
வஞ்சியும்,கொஞ்சியும்
கொண்ட
தாய்வடிவ தாரமும்…
எல்லா
தொலைதொடர்பு
சாதனமும்,
தொல்லை தொடர்பாகிபோன
அவளுக்கு…
தனக்கான
இடத்தை
தாயாகவும்,
தாராமாகவும்
இரட்டை
வேடம்பொட்டு
இரண்டிற்குமே
முதல் பரிசு
பெற பேராசை
கொண்ட
தியாக வாழ்க்கை
தாயும்,தாரமுமாய்

ஸ்டெல்லா தமிழரசி
சென்னை, தமிழ்நாடு


புதுக்கவிதை 15
thaayum_thaaramum

 

 

 

தாயன்புக்கு ஈடு இணையில்லை ,
தாரத்தின் அன்பும் அளவற்றதே !
தாய் சுமப்பாள் காலம் முழுதும் ,
தாரம் சுமப்பாள் உன் உயிரையும்!
வறுமையில் உழன்றாலும்
செல்வத்தில் மிதந்தாலும் ,
பிள்ளையே மறந்தாலும் ,
பெற்றவள் அன்பு நிறம் மாறாதது !
தாரம், இறைவன் கொடுத்த வரம்!
தடம் மாறும் வாழ்க்கைக்கும்
அவளே தலைவி, மனம் கோனா
இனிமைக்கும் அவளே தலைவி!

ஈழத் தென்றல் நஸீமா முஹம்மத்
குவைத் (இலங்கை. கொழும்பு 10)


புதுக்கவிதை 16
thaayum_thaaramum

 

 

 

தாயும் தாரமும் வேறில்லை !
தாய்மை பேண வரையறையில்லை !
கொஞ்சம் யோசித்தால் குற்றமில்லை !
கொஞ்சும் இன்பத்தில் மாற்றமில்லை !
தாய்மை என்பது பெரும் வரம்
தாங்கிப்பிடிக்கும் தன்னலமற்ற கரம் !
எதிர்பார்ப்பில்லாத பாசம் !
ஏக்கம் கொண்டே தவிக்கும் நேசம் !
தாரம் என்பது சம்சார பாதி !
தாங்கும் உறவில் வாழ்வில் மீதி !
இன்பம் துன்பம் பகிர்வதில் பாதி !
இல்லாள் துணை இணையில்லா நீதி !
தாய் என்பது பெருமை !
தாரம் என்பது பெண்மை !
இரண்டில் உண்டு மேன்மை !
இதை உணர்ந்தால் உண்டு நன்மை !
கருவில் சுமந்து உன்னை தருவது தாய் !
தன்னில் சுமந்து மகவைத்தருவது தாரம் !
தாயின்றி வருமோ உன் பிறப்பு !
தாரமின்றி வருமோ உந்தன் உயிர்துடிப்பு !
மீண்டும் மீண்டும் எழுதவில்லை !
தாயும் தாரமும் வேறில்லை !
தரம் பிரித்தால் அழகில்லை !
இரு கண் இரு உறவு உணர்ந்தால்
தொல்லையில்லை !

கவிக்குயில் சிவரமணி
திருகோண‌மலை, இலங்கை


புதுக்கவிதை 17
thaayum_thaaramum

 

 

 

தாரம் தான்
தாயானாள்
அவள்தானே உன்
தாராமானாள்
தாயை போற்றி உன்
ஆண் மகனே
உன் நியாத்தை விளக்கு
உன்னை ஈன்றவள்
தாய்
முன் உன்
தந்தையின் தாரம்
சொல் எதிலுன்
நியாயம் . . .!!?
தாரம் தாழ்த்தலுன்
தாயை வீழ்த்தல்
சமமாகும்
இக்கோரம் செய்து உன்
அகம்பாவம் காட்டாதே
உன்ஆணவத்தை
அகற்று
பெண்ணின்
கௌரவத்தை போற்று

பாத்திமா சில்மியா
புத்தளம் – இலங்கை


புதுக்கவிதை 18
thaayum_thaaramum

 

 

 

தாய் உன்னைச் சுமந்தாள்
தாரம் உனக்காகச் சுமந்தாள்
தாய் உன்னைப் பெற்றவள்
தாரம் உனக்காகப் பெற்றவள்
தாய் உனை வளர்த்தவள்
தாரம் உனதை வளர்த்தவள்
தாய் உனக்காய் விளித்தவள்
தாரம் உன்னுடன் விளித்தவள்
தாய் உனக்கு ஊட்டியவள்
தாரம் உனதுக்கு ஊட்டியவள்
தாய் உனக்காய் வாழ்ந்தவள்
தாரம் உனதுக்காய் வாழ்பவள்
தாய் வாழ்வின் முதற்பாகம்
தாரம் வாழ்வின் இரண்டாம் பாகம்
தாய் உன்னை ஆரம்பித்தாள்
தாரம் உன்னை முடித்தாள்
தாயும் தாரமும்
வாழ்வின் இரு கண்கள்
கலங்காமல் வைத்து
நீடூழி வாழீ.

சமூன் றமழான்
புத்தளம், இலங்கை


புதுக்கவிதை 19
thaayum_thaaramum

 

 

 

எனதழுகையை தரம் பிரித்தே ஆசுவாசம் தந்த தெய்வமாய் தாய்..
என் புன்னகை தேசத்தை ஆளுகை செய்திடும் அன்னையாய் தாரம்..
நான் தெரிந்தெடுக்கா மேன்மையாய் வந்தவள் தாய்..
எனைத் தெரிந்தெடுத்து வாழ்வின் தூணாய் நிற்பவள் தாரம்..
எனை வளர்த்த முதுபாவை.. மணந்தவள் என் அப்பாவை..
எனை மயக்கிய பூம்பாவை.. பெற்றவள் என் பாப்பாவை..
எனை அணைந்த திருப்பாவை.. நான் பூத்தெழுந்த மடிப்பாவை..
என் இரு விழியின் ஒரு பார்வை.. நிறைவாய் தந்திடும் பல தீர்வை..
முதுபார்வை மங்கிடின் நோயால்.. இளம்பாவை மாறுகிறாள் தாயாய்..
அப்பாவின் தாரமும்.. என்னருமைத் தாரமும்.. எனை ஏற்றிடுமே சாரமாய்..

செந்தாமரைக் கொடி (ஹேமா முரளிதரன்)
தூத்துக்குடி, தமிழ்நாடு


புதுக்கவிதை 20
thaayum_thaaramum

 

 

 

பெண்மை எனும் பேர் சேர்க்க- உனை
ஈன்றெடுத்தாள் தாய் …
பெண் என்னும் பெருமை சேர்க்க – உனை
தேர்ந்தெடுத்தாள் தாரம் …
உதிரமதை பாலாக்கி ஊட்டிட்டாள் – தன்
பிள்ளைக்காய் தாய் …
உடல் தந்து வலி தாங்கி வாழ்ந்திட்டாள் – உன்
பிள்ளைக்காய் தாரம் …
தந்தையின் கருவினைச் சுமந்து – தினம்
அவஸ்தைப்பட்டாள் தாய் …
உந்தன் கருவினைச் சுமந்து- நலம்
இழந்திட்டாள் தாரம் …
அன்போடு அணைத்து உன்
கவலை தீர்ப்பாள் தாய் …
அரவணைத்து ஆதரித்து – உன்
கண்ணீர் துடைப்பாள் தாரம் …
தாயவள் வாழ்கின்றாள் தாயாக மட்டுமே – நல்ல
தாரமவள் தொடர்கின்றாள் தாயாக க் கூடவே …
தாயே சிறந்தவளென கூறிடவே முடியாது – நல்ல
தாரமவள் நிலைத்திடுவாள் தாயின்முன்னே …

எஸ்.எஸ்.எம்.றபீக்
புத்தளம் – இலங்கை

 


2 Comments

புதுமைத்தமிழ்த்தென்றல் கே. பூமதீன் · ஜனவரி 28, 2016 at 19 h 29 min

கவிஞர்களுக்குக்களம் அமைத்த தமிழ் நெஞ்சம் இணையத்துக்கு நன்றி!
தரணி போற்றும் புகழோடு தமிழ்ப்பணி செய்ய வாழ்த்துக்கள்..

R . செல்வம் , பெரம்பலூர் , தமிழ்நாடு · பிப்ரவரி 1, 2016 at 9 h 29 min

கவிஞர்களுக்குக்களம் அமைத்த தமிழ்நெஞ்சம் இணையத்துக்கு நன்றி!
தரணி போற்றும் புகழோடு தமிழ்ப்பணி செய்ய வாழ்த்துக்கள்..
தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12

தொடர் 12

ஹைக்கூவில் கற்பனையை தவிருங்கள் என்கிறார்கள். கவிதைக்கு அழகே கற்பனை எனும் போது ஹைக்கூவில் ஏன் இதனை தவிர்க்க சொன்னார்கள்..

நாம் இதனை அறிந்து கொள்ளுமுன்..

ஹைக்கூ துவக்கத்தில் ரென்கா எனும் கூட்டுப் பாடலின் துவக்கக் கவிதையாக ஹொக்கு என்றே அழைக்கப்பட்டது.ரென்கா அந்தாதி கவிதை போன்று ஒருவர் விட்ட இடத்திலிருந்து ஒருவர் துவங்கி பாடுவார்கள்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 12  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11

தொடர் 11

கவிதைக்கு அழகு கற்பனை. கற்பனையே கவிதையை சிறக்கச் செய்கிறது. கவிஞன் தனது கற்பனைத் திறத்தினை கவிதையில் ஏற்றிக் கூறும் போது… வாசகனும் அந்த அழகிய உத்தியில் மெய்மறந்து ரசிக்கிறான்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 11  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 10

தொடர் 10

வார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று.

கவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 10  »