நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது.

”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்…” என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா.

‘பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்’ என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா.

”நான் சொன்ன மாதிரி எவ்வளவு கட்டடம் இருக்குன்னு பார்த்தியா… இதெல்லாம் மனுசங்க வாழ்றது…”என்றது நகரத்து காக்கா.

”ஆமாமா… பார்த்தேன். ஆனா, நாம வாழறதுக்கு இங்கே மரங்களையே காணோமே…”என்றது கிராமத்து காக்கா.

நகரத்து காக்கா உடனே பேச்சை மாற்றியது. ”கீழே பாரு… எவ்வளவு வாகனம் போகுது…”

”வாகனத்தை விடு. ஆளுங்களைப் பாரு… கரும் புகை அடிச்சு அடிச்சு சீக்கிரமே நம்ம கலருக்கு மாறி காக்காவா ஆயிடப் போறாங்க!” என்று ‘கமெண்ட்’ அடித்தது கிராமத்து காக்கா.

நகரத்து காக்கா என்ன சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே, ”உடம்பெல்லாம் புழுதி படிஞ்சு ஒரே ‘கச… கச…’ன்னு இருக்கு. குளிக்கணும்… ஆத்துக்கு கூட்டிட்டு போ…” என்றது கிராமத்து காக்கா.

ஆற்றை நெருங்க நெருங்க நாற்றம் அதிகரித்தது.

”ஆத்துலே குளிக்கணும்னு சொன்னா… இங்கே கூட்டிட்டு வந்து சாக்கடையை காட்டுறே…?” என்றது கிராமத்து காக்கா.

”இந்த ஊருல இதுதான் ஆறு!”

”ஆறா…? இதுல எங்க ஊரு பன்னிக்குட்டி கூட குளிக்காது. ஆமா நீ எப்படி குளிக்கிறே?”

நகரத்து காக்கா தயங்கியவாறே சொன்னது…

”மழை பெய்யும்போதுதான் குளிப்பேன்…”

”அதுதான் உன் மேல் இவ்வளவு நாத்தமா?” என்று முகம் சுளித்தது கிராமத்து காக்கா.

”சரி, வா கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது சாப்பிடுவோம்” என்றது நகரத்து காக்கா.

”சாப்பிடுறதுக்காக எதுக்கு கடைத்தெருவுக்குப் போகணும்” என்று ஆச்சர்யமாக கேட்டது கிராமத்து காக்கா.

”திருடி திங்கத்தான்”என்றது நகரத்து காக்கா.

”என்னது… திருடி திங்கவா…? கிராமத்துல ‘கா…கா…’ன்னு கூப்பிட்டு சாப்பாடு போடுறாங்க. இங்கே திருட்டு பிழைப்பா இருக்கே! ச்சீ… ச்சீ… எனக்கு வேண்டாம்.

நான் கிராமத்துக்கே திரும்பப் போறேன். அங்கே கௌரவமாகவும், நிம்மதியாகவும் வாழலாம்” என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது கிராமத்து காக்கா. அதை அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்தது நகரத்து காக்கா!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கதை

டைரிக்குறிப்பு…

குளிரும்.. மழையும் கைகோர்த்து..

அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..

மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..

பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..

 » Read more about: டைரிக்குறிப்பு…  »

குட்டிக் கதை

இந்திப் படித்த வெள்ளித் தட்டு

ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..

அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி..

 » Read more about: இந்திப் படித்த வெள்ளித் தட்டு  »

கதை

நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள்.

 » Read more about: நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்  »