முல்லைத்திணையும், முற்றுபெறாதக் காத்திருப்பும்…

முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம், இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைகளத்தே இருப்பதும் அவனுக்காகத் தலைவி காத்திருப்பதும்..

‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு
புலம்பொடு நீலுநினைந்து
தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென
வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி
னடுங்டகி யிழைநெகிழ்ந்து.

(முல்லைப்பாட்டு..)

அன்றும் இன்றும் என்றும்..காத்திருப்பு கடினமானதே..

போரின் பொருட்டோ…பொருளின் பொருட்டோ தலைவன் பிரிந்து செல்ல அவனை நினைத்துக் காத்திருக்கும் தலைவிக்கும்.. இன்றும் குடும்ப சூழல் காரணமாக அயல்நாட்டுக்குப் பணி நிமித்தம் சென்று விடும் கணவனை.. அவன் இருந்த காலத்தை நினைத்து வரும்பொழுதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை…

கணினியோ… தொலைபேசியோ… கைபேசியோ..இணையமோ இல்லாத அந்நாளில் தன் உறவுகளோடு கூடியிருந்தபடி கார்காலம் வருமுன் வருவேன் என்றவனின் வாக்கை நம்பிக் காத்திருந்த முல்லை..

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப,
நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது,
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச், (7-11)

(முல்லைப்பாட்டு)

அரிய காவலுடைய பழைய ஊர் அருகில் போய், யாழ் இசையைப் போன்று வண்டுகள் ஆரவாரிக்க, நாழியில் நெல்லுடன் கொண்ட நறுமணமான மலர்களையுடைய முல்லைக் கொடியின் அரும்புகளில் புதிதாக மலரும் பூக்களைச் சிதறி, கடவுளைக் கையாலே தொழுது, வயதில் முதிர்ந்த பெண்கள் நற்சொல்லுக்காகக் காத்து நின்றனர்.

இன்றோ கட்புலனம் மூலமாக உரையாடி கைபேசி கொண்டு வரும்நாளை உறுதி செய்து உறக்கமின்றி காத்திருக்கும் கிள்ளைகளும் அவளும்.. ஒவ்வொரு நாளும் விடுப்பு கிடைக்குமா? பயணச்சீட்டு உறுதியாகுமா? விமானப் பயணம் தடையின்றி இருக்குமா? தவித்து நிற்கும் பெண்ணின் உணர்வுகளுக்கு சங்ககாலமோ தற்காலமோ எதுவும் இல்லை..

பரிதவித்து நிற்கும் நெஞ்சுக்கு பல்லியின் சொல்லோ…காக்கையின் கரைதலோ…பொய்யாக இருப்பினும் ஒரு நற்சொல் கடைத்தேற்றிவிடாதா என்ற நப்பாசை.. இது இன்று நேற்றல்ல..சங்க காலத்திலிருந்து தொடரும் ஒன்றோ?

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது – என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்து
வரக் கரைந்த காக்கையது பலியே.

(குறுந்தொகை 210 காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்)

வெண்ணெல் சோறு பாலும் நெய்யும் கலந்து ஏழுகலத்தில் வைத்துக் காக்கையைக் கரையச் சொல்லும் மனநிலை என்றும் தொடருகிறவொன்று பிரிந்தவர்களுக்கு..

பிரிவு எத்தகையத் துயரைத் தருகிறது..கார்காலத்தில் பூத்துக் குலுங்கும் முல்லை மலர்களும்..தன் இணையைச் சேரும் ஆநிரைகளும் ஒருபுறம்.. தலைவன் சென்ற வழி எப்படிப்பட்டதோ அவன் நலமாக சென்றானோ…எனத்தவித்து தன்னையே ஆற்றுப்படுத்திக் கொள்ளும் தலைவி..

நன்றே காதலர் சென்ற ஆறே
அணிநிற இரும்பொறை மீமிசை
மணிநிற உருவின தோகையும் உடைத்தே. 431

(ஐங்குறுநூறு…பேயனார்)

இன்றும் பனியிலும் வெயிலிலும் தன் தாய்த்திருநாட்டைக் காக்க எல்லையில் வீரத்தோடு நிற்கும் ராணுவ வீரர்களின் மனைவிமார்கள் அவர்களை விடையனுப்பும் போது மன வலிமையோடும் திண்ணிய நெஞ்சோடும் தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொண்டே அனுப்பி வைக்கிறார்கள்..

காத்திருப்பும் கவலையும் பெண்களுக்கு மட்டும் தானா? வினை முடித்து இருப்பிடம் வர விரும்பும் தலைவனின் உள்ளம் அவன் வருமுன் அவளை ஓடோடி அடைந்திடாதோ? காற்றினும் கடுகிச் செலுத்த சொல்லும் தேர்ப்பாகனிடம்..

அம் தீம் கிளவி தான் தர எம் வயின்
வந்தன்று மாதோ காரே ஆவயின்,
ஆய்த்தொடி அரும் படர் தீர,
ஆய் மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

(ஐங்குறுநூறு பேயனார் )

காத்திருக்கும் காதல் மனைவியின் கவின்முகம் நெஞ்சிலே நிறைந்திருக்க கணமும் தாமதியாது அவளைக் காண விழையும் அவனுள்ளம் ஆகாயவூர்தியை அரைநொடிக்குள் செலுத்த சொல்லும்..

காதலும் வீரமும் அறமும் உயிர்நாடியாய்க் கொண்ட சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் மனித உணர்வுகளின் உன்னதக் குவியல்.. யுகங்களானாலும் மரித்துப் போகாத மானுடத்தின் நேசத்தை அடிநாதமாய் ஊடாடும் உண்மை அன்பினை உரக்கச் சொல்லி உணரவைக்கும் கலைப்பெட்டகம்..

தமிழ் இலக்கியத்தில் சங்ககாலம் பொற்காலம் என்ற கருத்தில் எள்ளளவும் கூடுதல் இல்லை ..

சங்க இலக்கியம் சாதாரண மானுடர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டிய கண்ணாடி..


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52

தொடர் – 52

உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51

தொடர் – 51

உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..

பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50

தொடர் – 50

ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50  »