விசித்திர அகவல்

ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.


குறள் வெண்பா

தமிழமின்

குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!

அன்னைத் தமிழின் அமுதைப் பருகு
மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு
முன்னே மொழியைத் முனைந்து காத்
தன்னே ரில்லாத் தமிழன் நா
மோதும் மறவன்! முத்தமிழ் வல்
தாதும் மணக்கும் தகையன்! தீரா
ஆசை கவிமேல்! ஆக்கம் வாழ்!
மீசைக் கவிமேல் மேவும் உணர்வைக்
காட்டும் நெஞ்சன்! கண்ணியன் என்கோ!
சூட்டும் மின்னிதழ்த் தூயன்! கா
மூட்டும் சீரை உடையன்! அருவி
போலத் தண்மைப் பொழிலன் தந்
கோல இதழ்கள் கூட்டும் நற்புகழ்!
பாடும் புலவர் நாடும் நட்பி
லாடும் மனத்தன்! அருங்கணி வரையன்!
படங்கள் யாவும் பட்டாய் மின்னு
முடைமை கற்றவன்! ஊக்கம் பின்னும்
தன்மை பெற்றவன்! மாட்சி தழைத்
வன்மை உற்றவன்! வாழும் பூமி
சுற்றும் செயலாய்த் தொண்டே சூ
நற்றமிழ் காப்பவன்! நன்றே தமிழமி
னுற்ற பெருமையை ஓதி மகிழ்ந்தேன்!
உலகை உவக்கும் ஒப்பில் தேவா!
நலமே நண்பன் நாளும் இங்காழ்
வண்ணம் செய்க! வளமே பொழி!
எண்ணம் என்றும் இன்பங் குழைத்
தாகம் தணித்த தகையுடை இன்மழை
யாக வேண்டும்! அருளைக் கொடுத்துத்
தமிழமிழ் வாழ்வைத் தாங்கியே உயர்த்து!
உமதுயிர்த் தமிழை ஓங்கியே சாற்று!
எல்லாம் அறிந்த அல்லா அழகைச்
சொல்லி, அகவல் அடிகளில் தோன்றும்
ஈற்றாம் எழுத்தைப் போற்றிப் படித்தால்
சாற்றிய நற்குறள் ஊற்றெனத் துள்ளும்!
விசித்திர அகவல் வேண்டி விளைத்தேன்!
பசியுறு புலமைப் பான்மை தெரிக்கவே!

இக்குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் மேற்க்கண்ட விசித்திர அகவலின் ஓவ்வோர் அடியின் ஈறறில் அமைந்துள்ளதைக் காணலாம்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
26.06.2019


3 Comments

Pavai Kichenamourty · ஜூன் 30, 2019 at 10 h 28 min

அருமை அருமை ஐயா
விசித்திர அகவல் விளைத்தது கன்னல்
புசித்திடப் பொழிந்தீர் பொழில்தரு கனிகள்
பொற்குவை அடிகள் பொலிந்தது மின்னியே!

Sivaprakasam Sivaprakasam · ஜூன் 30, 2019 at 10 h 29 min

புலவர்கள் பார்த்துப் பொறாமைப் படும் புலவர் ஐயா நீர் …
வெகு அருமை ஐயா .. வணங்குகிறேன் …

கோவிந்தராசன் மலையரசன் · ஜூலை 17, 2019 at 16 h 54 min

சொல்லாற்றல் மிக்கவராம் சோர்வில்லா தமிழமினார்
வெல்லுகின்ற வார்த்தைகளை வீரத்துடன் முழங்கிடுவார்
செல்லுகின்ற ஊரெல்லாம் செந்தமிழால் பாடிடுவார்
வில்லாற்றல் பாக்களாலே வென்றிடுவார் நம்மையுமே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »