“எனக்கு அதுதான் காதல்ன்னு தோணிச்சு. அதுதான் இதுகெல்லாம் காரணமா மாறிடிச்சுன்னு நெனைக்கிறேன். எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன். எல்லாரும் அவங்க மட்டும் நல்லவங்க போலேயும் நான் மட்டும் கெட்டவள் போலேயும் என்னை ரொம்ப உதாசினப் படுத்திட்டாங்க. எதோ தீராத நோய் வந்தது போலப் பார்க்கிறாங்க. நீ மட்டும்தான் குமுதா, எதுக்குடீ எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற?. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு கேட்டே. கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஒரு நாள் என் வீட்டிற்கு வற்றியா?”

அவள், அழுதுகொண்டே இவ்வாறு என் கைகளை பிடித்து சொன்ன பொழுது நடந்தது என்ன விசயம் என்று நிஜமாக எனக்கு தெரியாது. உடன் படிக்கும் ஒரு பெண் இப்படியெல்லாம் பேசுகிறாளே அனு என்று வருத்தப்பட்டு, அவளை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று அவளிடம் எதைப்பற்றியும் கேட்காமல் விட்டு விட்டேன். ஆனால் சுவருக்கும் காதுகள் உண்டு என்பதுபோல அது என் காதுகளுக்கும் வந்தது. ஒருவேளை நான் அவள் வீட்டிற்கு செல்லும் அந்த நாளுக்கு முன்னமே இந்த விசயம் எனக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக நானும் ஒரு சாதரண பெண் போல அவளிடம் நடந்து கொண்டு அவளை ஒதுக்கி வைத்திருந்திருப்பேன்.

மிகவும் சிறிய வீடு அவள் வீடு. ஒரு அறையும் ஒரு சமயலறையும் கொண்ட வீடு அது. மிகவும் வசதியானவர் படிக்கும் அவள் கல்லூரிக்கும், வீட்டிற்கும் எந்த சம்மந்தமுமில்லை போல தோன்றியது. சிறுவயதில் அப்பா இறந்துவிட்டதாகவும், மாமாதான் படிக்க வைப்பதாகவும் சொல்லியிருக்கிறாள். அவள் சொல்லாத ஒரு காட்சி ஒன்றை அவள் வீட்டில் கண்டேன் நான். கடந்து வந்த கல்லூரி நாட்களில் இப்படி ஒரு மனதை கனக்க வைக்கும் காட்சியை நான் கண்டதில்லை.

அந்த வீட்டின் படுக்கை அறைக்கு என்னை அழைத்து சென்றாள். அறைக்குள் செல்லும் பொழுதே மனித சிறுநீர் மணம் ‘குப்’ என்று நாசியில் நுழுந்தது. பொது இடமாக இருந்தால் கண்டிப்பாக மூக்கை கைக் குட்டையால் மூடி இருப்பேன். சுவருகளில் எல்லாம் சுண்ணாம்பு பூச்சுகள் கிழிந்து தாள் போல் தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டின் ஜன்னல் மூடியிருந்தது. இவையெல்லாம் காண்பதற்கும் நேரம் நொடிகளே இருந்தது. உள்ளே சென்ற நான், நொடியில் கண்ட காட்சி என் எல்லா சிந்தனையும் மாறச் செய்தது.

அந்த வீட்டின் அறையில் இருந்த ஒரு கயிறு படுக்கை மேல அவன் அண்ணன் படுத்திருந்தான். அவன் அண்ணன் ஒரு மன நோயாளி.போர்வைதான் உடையாக போத்தியிருந்தான் அவன். வயது என்ன ஆகிறது என்று கேட்க தோன்றியது.

“குமுதா… இது என் அண்ணன். என்னை விட இரண்டு வயசு பெரியவன். சரி… வா வெளியே போகலாம். உனக்கு இந்த நாற்றம் புதுசு இல்ல! வாந்தி வந்திரும். அது மட்டுமில்லை. அவன் கத்திட்டே இருப்பான்.” என்று சொல்லிவிட்டு விட்டு என்னை வெளியே அழைத்து வந்தவள் பேசிக் கொண்டே இருந்தாள்.

“சின்ன வயசிலே இருந்தே என் அண்ணனுக்கு மனநிலை சரியில்லாமா போச்சு. எப்பவும் கத்திட்டே இருப்பான். முதல்ல அம்மா அவனை நல்லா கவனிச்சிட்டு இருந்தாங்க. நானும் உதவி செய்வேன். போக போக அவன் முழுசா கவனிக்கிற பொறுப்பு எனக்கு வந்திடுச்சு. அவன் எல்லா வேலையும் நான்தான் பார்க்கணும். அறையிலதான் சிறுநீர் போவான், சில நேரம் மலம் கூட. எல்லா வேலையும் நான்தான் பார்க்கணும். அம்மா இப்பவெல்லாம் அவன் எப்படி இருக்கிறாங்கன்னு கூட யோசிக்கிறது இல்ல. பெரும்பாலும் அவங்க அந்த அறைக்கே வற்றது இல்லை. நான் மட்டும் உள்ளே இருப்பேன். படிக்கிறது, படுக்கிறது எல்லாம் அவன் படுக்கைக்கு கீழேதான். பெரும்பாலும் அவன் சிறுநீர் போவது என் படுக்கையிலதான் இருக்கும். இப்போ எல்லாம் என்னால அவன் கத்துற சத்தம் கேட்காம தூங்க முடியாது.

அப்படி ஒரு மன நிலையில இருந்த எனக்கு கல்லூரில உங்கள எல்லாம் பார்த்ததும் எனக்கும் உங்களைப் போல இருக்கணும்னு ஆசை வந்திச்சு. நானும் பசங்க கிட்ட பேச ஆரம்பிச்சேன். ஆனா எங்கிட்ட பேசுனவங்க ரொம்ப நாள் என்கிட்ட நட்பா இருக்கல. அதுல சிலர் பாலியல் சம்மந்தமா பேச ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும்தான் மறுபடியும் மறுபடியும் எங்கிட்ட பேசுவாங்க. அப்படியாவது பேசுறாங்களேன்னு எனக்கு ஆறுதலா இருந்திச்சு. இதுதான் காதலுன்னு சொல்லி கொடுத்தாங்க. பிறகு அதில் சில பேரு நேராக பாலியல் உறவு வெச்சுக்கலாமா என்று கேட்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் நான் முடிவு பண்ணினேன். நாம தெரிஞ்சவங்ககிட்ட பேசுனாதானே நம்மகிட்ட இப்படி கேட்பாங்க. அதனால நமக்கு தெரியாதவங்க கிட்ட பேசினா, இப்படி தப்பா பேசுனாலும் என்னை யாருன்னு தெரியாதுனால எளிதா சமாளிக்கலாம்னு சமூக தளங்களில் பேச ஆரம்பிச்சேன். அதுதான் முகப் புத்தகத்தில் (Facebook). என்னை கேட்க யாருமில்லை. நிறைய பேசினேன். சில நேரம் ரொம்ப கொச்சையா கூட இருக்கும். ஆனா எனக்கு அது ஆறுதலா தெரிஞ்சுது. அதுமட்டும்தான் ஒரு ஆறுதலா நெனச்சேன். இந்த நரகத்தை விட்டு வேறு உலகத்தில இருக்குறது போல தெரிஞ்சுது. ஆனா, நம்ம கல்லூரி பசங்க இப்படி செய்வாங்கன்னு நெனைக்கல.”

இப்பொழுதும் என்ன நடந்தது என்று கேட்கவில்லை என்றால் எப்படி?. ஆனால் எனக்கு தெரியும் என்றும், என்னை தோழியாக எண்ணுகிறாள் என்றும், அன்று அமைதியாக இருந்து விட்டு கல்லூரிக்கு வந்தேன்.

உண்மையில் அவள் உலகம் வேறு. நான் கண்டிராத கொடுமையான உலகம் அது. சிறுநீரும், மலத்தின் நாற்றங்களுடனும், பாசமென்று ஒன்றை திரும்ப கொடுக்காத உலகத்தில் வாழும் பெண் அவள். கொடுமை.

ஆனால், சுவருக்கும் காதுகள் உண்டு. “குமுதா… உன் காதலன் நல்ல காரியம் செய்தான் டா, ஒரு மோசமான பெண்ணை எங்களுக்கு அடையாளம் காட்டினான்…” என்று ஒரு தோழி என்னிடம் சொன்ன பொழுதுதான் புரிந்தது, இதற்கெல்லாம் காரணம் ராம்தான், என் காதலன் அவன். என்னிடம் மறைத்திருக்கிறான் நடந்தவைகளை, அவன் என்ன காரியம் செய்துவிட்டான்.

ராம், கணிணியில் மென்பொருட்களை (computer software) கையாள்வதில் அதிதிறமை கொண்டவன். அதுவும் வலையதளங்களை திருடி (Hacking) அதிலிருந்து செய்திகளை எடுப்பதில் கில்லாடி. அப்படி விளையாட்டாக செய்த செயல்தான் இந்த அனுவில் வாழ்கையில் பேரிடியை உருவாக்கியது.

தங்கள் கல்லூரியில் கணிணி ஆய்வகத்தில் இருக்கும் இணைய நெறிமுறை முகவரியை (Internet Protocol address) திருடியிருக்கிறான். பிறகு அதன் மூலமாக முகப்புத்தகத்தின் (Facebook) முகவரிக்குள் நுழைந்து, தன்னுடன் பயிலும் சக மாணவிகள் அனுப்பிய குறுஞ்ச்செய்திகள் அனைத்தையும் சேகரித்து இருக்கிறான். அப்பொழுத்துதான் ராம் கண்ணில் பட்டியிருக்கிறது. அனுவின் செய்திகள். அனைத்துமே பாலியல் சம்மந்தமான செய்திகள் என்பதால் அதை ரசித்து படித்து நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறான். ஒரு பெண் இவ்வாறெல்லாம் பேசுகிறாள் என்றால் அது காட்டு தீதானே! அது ஒவ்வொருவராக கைமாற, கல்லூரி முழுவதும் பாட்டாக மாறியிருக்கிறது.

உடன் பயிலும் பெண்கள், அனுவை வேறு மாதிரிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது உடலை விற்கும் பெண்ணாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். சிலர் விபச்சாரி என்று கிண்டல் செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அவள் தோழிகள் அனைவரும் அவளிடம் பழகுவதை நிறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே மிகவும் தனிமையில் வேறு உலகத்தில் வாழ்ந்தவளை மீண்டும் அனைவரும் தனிமை ஆக்கியதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல். “நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னியுங்கள்… என்னை மன்னியுங்கள்… என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதீர்கள்…” என்று ஒவ்வொரு தோழியாக கெஞ்சியிருக்கிறாள். அவளை யாரும் மன்னிக்கவில்லை.

ஆனால், நான் அவளை ஏன் நீ மன்னிப்பு கேட்டாய்? என்றுதான் கேட்டேன். அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் வேறு. அவள், தன்னை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். இல்லையேல் அவள் வாழ்கையை சமூக தளங்களே சீரழித்து விடும். அது உண்மைதான். ஆனால் அவள் அந்தரங்களை திருடி, படித்து ரசித்தவர்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது. அதற்கு காரணமாக இருந்த என் காதலன், நான் உருகி உருகி காதலித்த ராம்மை என்னை செய்வது.

“ராம்… உன்னை மன்னிக்க என்னால் முடியாது. பிறர் அந்தரங்கத்தை திருடி ரசித்திருக்கிறாய். உன் அம்மாவின் அந்தரங்கத்தையும் ரசிப்பாயோ? உன் மனைவியின் அந்தரங்கத்தை பகிர்வாயோ? கண்டிப்பாக அனு கெட்டவள் இல்லை. அவள் சூழ்நிலை அப்படி. ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்று பார் புரியும். உண்மையான காதல் என்ன என்று உணர்த்த ஒருவன் அனுவை கண்டிப்பாக கா
தலிப்பான். அவளும் புரிந்து கொள்வாள். ஆனால் உன்னை போல இருக்கும் அறிவாளி முட்டாள்களை திருத்த யாரும் வர முடியும். இனி நான் சாகும் வரை என் முகத்தில் விழிக்காதே…” என்ற முடிவிற்கு வந்தேன்.

பின் ஒருநாளில் அனுவின் முகப்புத்தகத்தின் (Facebook) கீழ்வரும் பகிர்வைப் பார்த்தேன்.
tamilnenjam
“காதலுக்கு இப்படி ஒரு விளக்கம் உண்டு என்று எனக்கு புரிய வைத்தவன் இவன். காதல் என்பது புணர்ச்சி அல்ல, புனிதன் என்று உணர்த்தியவன் இவன். ஆண்கள் எல்லாம் பெண்களை தவறான பார்வையில் மட்டுமே பார்ப்புவர்கள் என்ற எண்ணைத்தை மாற்றியவன் இவன். என்னை ஓரம்கட்டியவர்கள் மத்தியில் அரவணைத்தவன் இவன். சிறுவயதிலே இறந்ததால் அப்பாவைக் கடவுளாகத்தான் கண்டிருக்கிறேன் இதுவரை, அதே இடத்தில் அமர வைத்திருக்கிறேன் இவனை.. இவன் மனிதன் என்பதற்கு கடவுள், இவன் என் கணவன்.”

அந்த பகிர்விற்கு கீழே அனுவின் கணவன் புகைப்படமிருந்தது புகைப்படத்தில் ராமுடன் அனு சிரித்துக் கொண்டிருந்தாள்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..