பையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்
நாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று
பையப்பைய நடக்கும் அகழ்வாராய்ச்சியில்
பகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.

குறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்
குரலோசை மொழிபெயர்ப்பில் உலகெங்கும்.
புறமும் அகமும் காட்டிய பாடல்களில்
பளிங்கென வாழ்வியல் முறைகள் நூலெங்கும்.

அகத்தியம், தொல்காப்பியம், இளம்பூரணம் இன்னும்
அமுதத் தமிழ் வளர்த்த நூல்கள் உண்டு.
முரசு கொட்டித் தமிழ் மணத்த தெருக்களில் இன்றும்
முத்தமிழில் தெருக்கூத்துக் காட்சிகள் உண்டு.

தமிழ் வாழ வேண்டித் திருவிளையாடல்கள்
தமிழேடுகள் காக்கத் தெருவெல்லாம் ஓட்டங்கள்
முச்சங்கங்கள் வைத்துத் தமிழ்ப் படைப்புகள்
முக்கண்ணன், உ.வே.சா., புலவர்கள் பங்களிப்புகள்.

முத்தரப்பும் வளர்த்த மொழி மூச்சுவிட மறந்திடுமோ?
முத்தமிழ்ச் சுவைக்கு ஈடாக வேற்றுமொழி மலர்ந்திடுமோ?
தீந்தமிழின் பெருமைகளைச் சொல்லி வைப்போம்
தலைமுறைகள் மாண்புறவே எடுத்து உரைப்போம்.

கலைஞர், ம.பொ.சி., வலம்புரிஜான் வரிசையிலே
காட்டாற்று வெள்ளமாய்த் தமிழ்முழக்கம் அன்று
கணினி, தொடுதிரை, வளர் தொழில்நுட்பங்களாலே
சுட்டெலி தட்டித் தமிழ்ப் புறக்கணிப்பு இன்று.

காலத்தால் சாகாது காலத்தின் ஏலத்தால் மலியாது
கணித்துச் சொன்னான் அன்று புதுமைப்பித்தன்
தேய்பிறைதான் தமிழுக்கினி வளர்ச்சியில்லை என்று
தேராது சொல்பவன் சிந்தை தெளியாப் பித்தன்.

சோதிமிக்க நவகவிதை தந்த பாரதியும்
தமிழைப் பழித்தவனை விடேனென்ற அவனது தாசனும்
ஏட்டளவில் வாழுகின்றார் மதிப்பெண்ணிற்காக
ஏற்றமிகு தமிழை மீட்டெடுப்போம் மதிப்பதற்காக.

அடிமைப்படுத்தி ஆண்டவனை விரட்டி விட்டோம்
அடிமைப்பட்டு அவன் மொழியிடத்து மாட்டிக்கொண்டோம்
ஆளை வளர்த்தோம்; அறிவை மறந்தோம்
ஆங்கில மோகத்தில் விழுந்து கிடக்கின்றோம்

மழலைகள் மம்மி என்றழைத்தால் மகிழ்ச்சி
மண்ணுக்குள் பிணம் என்ற பொருள் அறியாததால்.
‘பண்ணி’த் தமிழ் பேசினால் நெகிழ்ச்சி
பைந்தமிழ்ப் பெருமைகள் தெரிந்து கொள்ளாததால்.

பகட்டான பல மொழிகள் சலசலப்பிலும்
பத்துத் திசைகளிலும் வளர்மொழி தமிழே.
மேற்கு மொழிகளின் ஊடுருவலிலும்
மேதினி முழுக்கப் பரவு வாசனை தமிழே

குழந்தைகள் பெயரில் தமிழ் இல்லை
கல்விக்கூடப் போதனையில் தமிழ் இல்லை
உள்ளுந்தோறும் உவகை தருமொழி வேறில்லை
தெள்ளு தமிழே தேன்தமிழ்தான் உணரவில்லை

தமிழ் மறந்த விளம்பரப் பலகைகள்
தமிழ்ப் பெயரில்லாத் தமிழ்த் திரைப்படங்கள்
பிறமொழி நச்சு கலந்த தொலைக்காட்சி அறிவிப்புகள்
பெயரளவில்கூட வேண்டாம்; பெருந்தீயிட்டுக் கொளுத்திடுவோம்.

தமிழ் மொழிக்குள்ள தனிப்பெருஞ்சிறப்புகள் போதும்
விருந்தமிழ்தம் எனினும் அயல்மொழி வேண்டோம்.
அயல் நாட்டிலும் ஆதிக்கம் எம்மொழியே
அடுத்தடுத்துப் பகர்கின்றேன், ஐயம் வேண்டாம்.

உருக்கிய வெள்ளிக் குழம்பாய்ப் பனிக்கட்டி
உருகிய நீரைக் கொட்டும் நயாகரா
வரவேற்றிடும் வனப்பு வரிகள் அங்கே:
“வருக வருக’’ என்னும் வண்டமிழ் வாசகம்.

விண்ணிலே கட்டுகிறது திரிசங்கு சொர்க்கம்
விண்வெளியை ஆளத் துடிக்கும் நாசா மையம்
கல்வெட்டாய்ப் பொரித்திருக்கும் வாசகம் ஆங்கே
’கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு’.

பன்னாட்டு நாட்டாமை ஒன்று உண்டு
பாதுகாப்புச் சபையிலே இடந்தராத மன்று.
கட்டி ஆள்கிறது அங்கும் எம்மொழியே
கணியனின் வார்த்தை,’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’.

திசை தோறும் விளங்கி வரும் தமிழ்ச் சொற்கள்
திகட்டித்தான் போயினவோ சில மூடருக்கு?
‘காதருந்தும் கள்ளாம்’ தமிழைச் சிதைப்பவர்களென்
கவிதைக் கனலிலே வெந்து மாளட்டும்.

கிணற்று வாளி நில்லாமல் கீழிறங்கினாலும்
பெய்யெனச் சொல்லி மழை பொய்த்தாலும்
பத்தினிதான் நல்ல தமிழ்ப்பெண் நான்
பலித்துவிடும் என்றன் வன்சொற்கள்.

ஆருயிர்த் தமிழினை அறிந்து பழிப்பவர்கள்
அறம் பாடிடுவேன், வீழ்ந்து போகட்டும்.
ஊன் விட்டுயிர் பறக்கும் வரை
உணர்வுக் கூட்டினிலே தமிழ் வாழட்டும்.

தமிழோடு நாங்கள் வாழ்கின்றோம்
தினமும் தாய்மொழி தினம்தான் எங்களுக்கு.
தமிழையே நாங்கள் சுவாசிக்கின்றோம்
தரணியில் எம்மொழியே உயர்வு எங்களுக்கு.

நோக்கும் இடத்திலெல்லாம் தமிழ்ப் பெயர்கள்
கேட்கும் ஒலியிலெல்லாம் தமிழ்ச் சொற்கள்
பாடலாய் உரையாய்ப் பரவும் அலைகள்
பொற்காலம் பிறக்கட்டும்; நற்காலம் வளரட்டும்.

தினமும் புதிய கலைச்சொற்கள் பிறப்பிடம்
தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
விக்‌ஷ்னரி திறந்தால் புதுச்சொற்கள் அறிமுகம்
விக்கிபிடியாவில் கலைச்சொற்கள் கற்கலாம்.

உயரிய தமிழ் மண்ணின் பெருமிதம் நனிகூர்ந்து
உயிர் கலந்து உன்னதப் பாமழை பொழிகின்றேன்
நாரா மலரணைந்து கவிமாலை சூட்டுகிறேன்
நற்றமிழே! நாற்றிசையும் கமழ்ந்து வாழி.

மூத்த மொழி வாழி! மூத்த குடி வாழி!
செம்மொழி வாழி! செழும் மொழி வாழி!
வாழிய வாழியவே தாய்மொழி வாழியவே!
வாழியவே! திசைகள் தோறும் தமிழ்மொழி வாழியவே!


1 Comment

B Thendral · ஜூன் 8, 2018 at 18 h 56 min

பொருத்தமான படத்துடன்
முழுக் கவிதையையும்
பதிவேற்றிய
பெருந்தன்மைக்கும் பேரன்பிற்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !

 » Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே…  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

மரபுக் கவிதை

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

 » Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.  »