பதினைந்து வயதினிலே
        பலகனவு எனக்குண்டு,
உதிரமது ஊறுகின்ற
        உன்னதத்தின் காலமது,
எதுவுமில்லை உண்பதற்கு
        எப்படியூறும் உதிரம்தான்,
விதியென்றே பள்ளியிலே
        விளையாட மனமுமில்லை.

கட்டணத்தில் படிக்கின்ற
        காலமொன்று இருந்ததாலே
எட்டாவது மாதத்திலே
        எனக்குக்கட்ட பணமுமில்லை,
சட்டப்படி பள்ளியிலே
        சேர்க்கவுமே மறுத்தார்கள்,
தொட்டெடுத்துப் புத்தகத்தைத்
        தூக்கிசென்றேன் மரத்தடிக்கு.

என்னைப்போல் இன்னொருவன்
        இணைந்திட்டான் சுற்றுதற்கு,
புன்னைமர நிழலடியில்
        போக்கினோம் நேரமதை,
கண்ணைமூடி படுத்திருந்தோம்
        கதைகள்பல பேசிவந்தோம்,
மணியடிக்கும் வேளையிலே
        மயங்கியபடி வீட்டுக்கு,

இப்படியே சிலநாட்கள்
        இன்னல்களைச் சந்தித்து
எப்படியும் பள்ளிக்குள்
        இருவருமே சென்றிட்டோம்,
தப்பாமல் பாடங்களைத்
        தவறாமல் கேட்டுவந்தோம்,
உப்பில்லா கஞ்சியுமே
        உணவாக வாய்க்காமல்.

பள்ளியிறுதித் தேர்வுவரைப்
        பயின்றுவந்தோம் ஒன்றாக,
துள்ளியெழும் மான்போல
        தொடரவில்லை விளையாட்டை,
அள்ளிவந்த விதியாலே
        அவனானான் கோடீசுவரன்,
எள்ளிநகை யாடபலர்
        எளிமையாய்க் கவிஞனானேன்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...