ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ கவிதைகளை வாசித்த மக்களுக்கு ஒரு இனிய திருப்பு முனையாகத் தமிழ் ஹைக்கூ கவிதைகள் திகழ்கின்றன. தமிழ்க் கவிதை வரலாற்றில் நல்லதொரு பரிமாண வளர்ச்சியைத் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பெற்றுள்ளன எனலாம். இதையே முனைவர் இரா.மோகன் அவர்கள் “கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்து, சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மணம் வீசிய இக்கவிதை 1916 ஆம் ஆண்டு ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதியார்” என்று குறிப்பிடுகிறார்.

1916 – அக்டோபர், 16 ல் “சுதேசமித்திரன்” இதழில் “ஜப்பானிய கவிதை “எனும் இரண்டு பக்க அளவிலான சிறு கட்டுரையை முதன் முதலில் மகாகவி பாரதியார் தமிழில் வெளியிட்டதுதான் தமிழ் ஹைக்கூ பற்றிய முதல் அறிமுகம். தொடர்ந்து தமிழில் நூற்றுக்கணக்கான ஹைக்கூ நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும்,சிற்றிதழ்களும் மற்றும்  பல்வேறு நிகழ்வுகளும் இன்றுவரைத் தடம் பதித்து வருகின்றன. கணையாழி தனது 1966 ஜனவரி இதழில் சுஜாதா அவர்கள் மொழிபெயர்த்த ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டது. பின்பு சி.மணி, கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றோர் ஹைக்கூ கவிதைகளை முன்னோடித் தமிழ் இதழ்களில் எழுதி வெளியிட்டனர். 1984 ஆகஸ்ட்டில் அமுதபாரதி அவர்கள் “புள்ளிப் பூக்கள்” எனும் தனது ஹைக்கூ நூலை வெளியிட்டார். இதுவே தமிழில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூலாகும். இந்த வரிசையில் மு.முருகேஷ், நிர்மலா சுரேஷ், மித்ரா, சுஜாதா, ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, நா.முத்துக்குமார் போன்றோர் தமிழில் சிறந்த ஹைக்கூ கவிதைகளை எழுதியும் ஆய்வு செய்தும் வந்துள்ளனர். மேலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஹைக்கூ கவிதை நூல்கள் தமிழில் வந்தவண்ணம் உள்ளன.

கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியே இன்று இலக்கியம் சமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெருகிவரும் அதிநவீன அறிவியல் உலகில் இளைஞர்கள் தனது வாழ்நாளை இயந்திர உலகில் பணயம் வைக்கின்றனர். அவர்கள் தேனீர் அருந்தும் நேரம், பயண நேரங்களில் ஹைக்கூ கவிதைகள் மற்றும் துளிப்பாக்களையே விரும்பிப் படிக்கின்றனர்.

நம் அன்றாட வாழ்வில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகளை நேர்த்தியாய் ஒப்பனைகள், கற்பனைகள் ஏதுமின்றி மூன்று வரிகளில் ஒரு மின்னலைப்போல் உணர்த்திவிட்டுப் போகிறது ஹைக்கூ கவிதைகள்.

ஜப்பானிய விதிப்படி 5,7,5 கொண்டது என்றாலும் தமிழில் வார்த்தைச் சுருக்கமுடன் வியப்பையும் அதிர்வையும் வெளிப்படுத்தும் ஹைக்கூ கவிதைகளே பலராலும் எழுதப்படுகின்றன. ஜப்பானிய இலக்கண வரம்புகளை உடைத்தெறிந்து எழுதப்பட்ட பல தமிழ் ஹைக்கூ கவிதைகள் காலத்தை வெல்லும் ஹைக்கூ கவிதைகளாக விளங்குகின்றன.

இயற்கையுடன் இயைந்த வாழ்வு, உலகின் பருவ நிலைகள், சமூக சிந்தனைகள், அவலம், மனிதநேயம், அரசியல், பொருளாதாரம் என தமிழ் ஹைக்கூ கவிதைகளை எழுதும் இளைய கவிஞர்கள் பலர் இந்த ஹைக்கூ நூற்றாண்டில் தடம் பதித்து வருகின்றனர். இயற்கையைப் பற்றி பல ஹைக்கூ கவிதைகள் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டு வருகிறது… இருப்பினும் தற்கால சூழலில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் முற்போக்கு எண்ணங்களையும், சமூக அவலங்களையும் காட்சிப்படுத்துவது ஏற்புடையதாகவே உள்ளன. எனவே இந்தக் கட்டுரையில் முற்போக்கு எண்ணங்களையும் சமூக அவலங்களையும் வெளிப்படுத்திய, உலகுக்கு எடுத்துக்கூறிய சில தமிழ் ஹைக்கூ கவிதைகளைப் பற்றி ஆய்வு செய்வோம்.

மூன்று வரியில் சமூக அவலங்களை நறுக்குத் தெரித்தாற்போல் கூறுகின்ற ஹைக்கூ கவிதைகள் பன்முகப் பொருளோடு மண்சார்ந்த அவலங்களைக் கூறுவதில் வலிமைமிக்க படைப்பாக உள்ளன.

ஏழ்மைத் தாண்டவமாடும் இல்லங்களில் வருவாயை மிஞ்சும் எதிர்ப்பாரா செலவுகளின் போது தந்தையின் கண்ணில் படுவது மனைவியின் கழுத்திலும் காதிலும் உள்ள தங்க நகைகள் தான். இவற்றையும் தாண்டி சிலநேரங்களில் தாலியும் அடகு வைக்கப்படுகிறது. இந்தச் சூழலை அப்படியே படம்பிடுத்துக்காட்டுகிறார் கவிஞர் தரிசனப்பிரியன்…

அடகு வைக்க முடியுமா ?
அம்மாவின் காதில்
துடைப்பக் குச்சி !
– தரிசனப்பிரியன் (ஒற்றைச் சிறகால் வானத்தைத் தொடு – 2004)

விவசாயக் கூலிவேலை செய்யும் தாயின் அவல நிலை வயல்வெளிகளின் அழியாச் சின்னங்களாக இருந்து வருகிறது. இதையே பொன் குமார் அவர்கள் அவல நிகழ்வின் உச்சத்தைத் தொட்டு ஒரு தாய்மையின் பரிவை இப்படி கூறுகிறார்

குழந்தை அழ
மாராப்பு நனைகிறது
வரப்பில் பண்ணையார்
– பொன்குமார் (பிற…2002)

நினைத்துப் பார்க்கும் போதே மனம் வெதும்புகிறது. குழந்தைக்கு நேரத்தோடுப் பால் புகட்டமுடியாதபடி வேலையின் சூழல். வறுமையின் வாடல். ஆளுமையின் கெடுபிடி!… அப்பப்பா இந்த மூவடி ஏழ்மையின் சூழலைச் சித்தரிக்கிறது.

இப்படியே ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழைகள், கொண்டாட வேண்டிய பாரம்பரிய விழாக்களைக்கூட நிறைவேற்றமுடியாது சிக்கித்தவிக்கிறார்கள். பருவத்தே பூப்பெய்திய மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா எளிமையாகக் கூட செய்யமுடியாது தவிக்கும் ஒரு தாயின் மன நிலையை… அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறது இந்தக் கவிதை.

அடுத்தவேளை
சமையலுக்கு ஏதுமில்லை
சமைந்தாள் மகள்

– கா.ந.கல்யாணசுந்தரம் (மனிதநேயத் துளிகள் – 1999)

முதிர்கன்னிகளின் அவல வாழ்க்கையை எழுதாத ஹைக்கூ கவிஞர்களே இல்லை எனலாம். ஒரு முதிர்கன்னியின் மனநிலை குமுறும் எரிமலையாய் எப்போதும் மனவெளியில் கிடந்து புகைந்துக்கொண்டே இருக்கும். இதனையே ….

எவரும் திறக்க
முன்வராத சிலை
முதிர்கன்னி
– சஞ்சீவி மோகன் ( கிராமத்துக் காற்று -2003)

மணவறை
மெதுவாய் பெருக்குகிறாள் முதிர் கன்னி

– அறிவுமதி (கடைசி மழைத் துளி – 1996)

இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகள் நம் மனதில் தடம்பதித்துச் செல்கின்றன.
ஹைக்கூ ஒரு காலக் கண்ணாடியாக விளங்குகிறது. சமூக அவலங்களின் சித்தரிப்பை
அவ்வப்போது வரலாற்றின் பக்கங்களுக்கு ஒரு குறியீடாய் வழிகாட்டிச் செல்கின்றன…

அடிக்க அடிக்க
அதிரும் பறை
தலைமுறை கோபம்

– மித்ரா (குடையில் கேட்டப் பேச்சு – 1993)

சாகவே இல்லை
சாதிச் சண்டையில்
சாதி
– புதுவைத் தமிழ்நெஞ்சன் (பனிபடர்ந்த சூரியன் தொகுப்பு – 2003)

திரும்பும்போதுதான் உணர்கிறேன்
மயானத்தின் பாதை
என் வீட்டில் முடிவதை
– செ .செந்தில்குமார் (துணையிழந்த பாரவண்டி – 1994)

எத்தனைபேர் இருந்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்
– செ . ஆடலரசன் (சேரிக்குள் தேர் – 1996)

இந்த ஹைக்கூ கவிதைகளில் தீண்டாமை எனும் கொடிய நிகழ்வுகள் இன்னும் பல இடங்களில் நடந்துகொண்டிருக்கின்ற அவலத்தை நம்மால் உணரும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. சாதிக்கொரு மயானம் இன்னும் கிராமங்களில் இருக்கிறது. இறந்தபின்னும் இந்த மானுடம் சாதீய அடையாளங்களோடுதான் புதைக்கப்பட வேண்டுமா? சுடுகாட்டுக்குச் சென்று திரும்பும்போது ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்திடுவர் மயானத்தின் பாதை அவரவர் வீட்டின் முகப்பில் முடிகிறது என்பதை. இதைவிட மனிதனுக்கு எப்படி சொல்லமுடியும்? மூன்று வரிகளில் வாழ்வியலை மனதில் சுருக்கென தைக்கும்படி சொல்லியுள்ளார் செந்தில்குமார் அவர்கள்.

வரதச்சணை இன்றுகூட தலைவிரித்தாடுகிறது. இதையே மு.முருகேஷ் அவர்கள் சொல்லும் விதம் நம்மை ஒரு நிமிடம் அதிர வைத்து சிந்தனைக்குள் உலவவிடுகிறார். பெண்களின் வாழ்க்கை புகுந்தவீட்டில் எப்படி தொடங்குகிறது என்பதை….

கறுத்த பெண்
புகுந்தகம் வந்தாள்
கலர் டிவி யோடு

– மு.முருகேஷ் ( விரல் நுனியில் வானம் – 1993)

இந்த ஹைக்கூ சென்ரியு என நகைச்சுவையாகக் கொள்ளுதல் கூடாது. வரதட்சனைக் கொடுமையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

சமுதாய அவலத்தின் உச்சத்தில் கணவனை இழந்த கைம்பெண்களின் வாழ்வு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. மறுமணம் என்பது அங்கீகரிக்கப்படவேண்டும். வாழ்வின் வசந்தம் யாவர்க்கும் உரியது. மூடத்தனத்தில் மூழ்கிப் போனவர்கள்தான் விதவை என பெயரிட்டு பெண்மையை அவலத்துக்கு உள்ளாக்குகிறார்கள். மூன்று வரியில் இதை உணர்த்தும் அற்புதமான ஹைக்கூ எல்லோரின் மனதையும் கொள்ளை கொள்கிறது…

விதவைக்கு
சொத்தில் பாகம்
மல்லிகைத் தோட்டம்
– நாகினி துபாய் (அருவி காலாண்டிதழ் ஏப்ரல் 2015)

இந்த மூன்று வரியைப் படித்தவர்கள் மீண்டெழ வேண்டும் மூடத்தனத்துப் பிடியிலிருந்து. சமூக அவலங்களை ஏராளமான ஹைக்கூ கவிஞர்கள் அன்றாடம் சமூக வலைத்தளங்களிலும், வார, மாத காலாண்டு இதழ்களிலும் எழுதி வருகின்றனர். எண்ணற்ற ஹைக்கூ கவிதைகள் தமிழ் ஹைக்கூ கவிதை வரலாற்றில் தடம் பத்தித்து வருகின்றன என்பதை யாவராலும் மறுக்க முடியாது. மிகுந்த வரவேற்பைக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான ஹைக்கூ கவிதைகளில் மேலும் சில…

தீப்பெட்டி
திறந்தால்
பிஞ்சு விரல்கள்
– ஸ்ரீரசா (கணையாழி – 1991)

கடலில் வலைவீசும் மீனவன்
கரையில் மீன்கொத்தி
முதலாளி
– அவைநாயகன் (சூரியச் செதில்கள் -1988 )

மூடிய ஆலைக்குள்
சத்தம் கேட்டது
தொழிலாளர்களின் குமுறல்
– ஜி.மாஜினி (கடைசிநேரக் கையசைப்பு – 1999)

வீசாத வலைக்குள்
சிக்குண்டுத் தவிக்கிறது …
மீனவனின் பசி
– கா.ந.கல்யாணசுந்தரம் ( மனசெல்லாம் – 2016)

அரிதாரம் கலைத்ததும்
அழத்தொடங்கினான்
நகைச்சுவைக் கலைஞன்
– வதிலைப் பிரபா (மெல்லப்பதுங்கும் சாம்பல்நிறப்பூனை – 2016)

பூதங்கள் ஐந்து
வேதங்கள் நான்கு
பேதங்கள் எண்ணிலடங்கா
– வலசை வீரபாண்டியன் ( பொன்விழா ஹைக்கூ – 1998)

செடி வளர்த்தோம்
கொடி வளர்த்தோம்
மனிதநேயம் ?
– இரா.இரவி (விழிகளில் ஹைக்கூ -2003)

அவலம் நிறைந்த மானுடவாழ்வைச் சமுதாய வீதியில் சமத்துவமாய் வாழ்வாங்கு வாழ வழிவகை செய்தல்வேண்டும். ஏற்றத் தாழ்விலா வாழ்வுதனில் மானுடம் செழிக்க வேண்டும். நல்ல சிந்தனைகள் அரும்பி உலக அரங்கில் இந்தியநாடு மனிதநேயப் பற்றுள்ள நாடாக விளங்கவேண்டும் என்னும் கருத்தில் மேற்கண்ட ஹைக்கூ கவிதைகள் தனது பங்கைக் கவிதையுலகில் நற்கருத்துக்களை விதைத்துள்ளன.

மனிதநேயம் மகத்தானது. மக்களிடம் மனிதநேயப் பண்பாடு மலர்ந்தால் வாழும் இடமானது மகத்துவம் நிறைந்ததாய் இருக்கும். மனிதன் தனது நிலை உணரல் வேண்டும். நீதி, நேர்மை, வாய்மை தவறாது வாழ்தல் வேண்டும். ஹைக்கூ கவிதைகளில் மனிதநேயமிக்கக் கருத்துக்களை கவிஞர்கள் படைக்கத் தவறுவதில்லை. சமூக சீர்கேடுகளை மனிதநேயமுடன் தெளிவுபட எடுத்துறைத்தல் சிறப்பானது.

அன்னை இல்லம்…
பெற்றோர் இருப்பதோ
முதியோர் இல்லம்
– புதுவைத் தமிழ்நெஞ்சன் (பதுங்கு குழி – 2006)

அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்
– கழனியூரன் (நட்சத்திர விழிகள் – 1990)

ரேஷன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
எடை குறைவாய்
– ந.முத்து ( எடை குறைவாய் – 1999)

சிரிக்காமலே
குழி விழுகிறது
எங்களூர்ச் சாலைகளுக்கு
– தங்கம் மூர்த்தி (முதலில் பூத்த ரோஜா – 1994)

கண்ணாடிக் கூண்டில் நின்று
கொடிஏற்றிப் பேசினார் பிரதமர்
சுதந்திர தின விழா
– ந.க.துறைவன் (நதிக்கரைகள் – 1994)

தாத்தாவின் கரம் பற்றி
நடக்கும் குழந்தை
தள்ளாடும் நிழல்
– கன்னிக்கோயில் இராஜா (தொப்புள் கொடி- 2005)

இந்த ஹைக்கூ கவிதைகள் நகைச்சுவைத் தன்மையோடு சமூக சீர்கேடுகளை செவ்வனே எடுத்தியம்புகின்றன.

சுற்றுச் சூழல் மாசுபடுவதை ….

இயங்காத விண்கலங்கள்
விண்ணை மாசாக்கும்
வானக்குப்பை
– வீ.தங்கராஜ் (ஹைக்கூ வானம் – 2012)

பாயும் வாகனத்தால்
தூயக்காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதரால்
– ஹிஷாலி (ஹைக்கூ உலகம் முகநூல் 2016)

இனியும் மரங்களை அழித்தால்
சுமக்க நேரிடும்
பிராணவாயுக் குப்பிகளை
– கா.ந.கல்யாணசுந்தரம் (கவிச்சூரியன் மின்னிதழ் – 2015)

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சமூக அவலமாய், கிராமத்தைப் புறக்கணித்தல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நகரத்துக்கு வழங்கும் முன்னுரிமை கிராமங்களுக்குக் கொடுப்பதில்லை. அதுவும் அத்தியாவசியத் தேவைகளுக்கு…! இதையே நாவம்மா முருகன் அவர்கள் தனது ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாட்டில் கூறுகிறார்… நிதர்சன உண்மையும் இதில் இருக்கிறது…

இருண்ட கிராமத்தின் வழியே
இரக்கமின்றிப் போகின்றன…
நகரத்திற்கு மின்கம்பிகள்
– நாவம்மா முருகன் (தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில் – 2016)

பாருங்கள் எத்துணைக் கொடிய செயல். கிராமங்கள் பொறுமையின் எல்லையில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நகர வளர்ச்சிக்கும் அதன் தேவைகளுக்கும் எப்படியெல்லாம் கிராமங்கள் உதவுகின்றன என்பதை இதுபோலன்றி எப்படிச் சொல்வது? இது சமூக சீர்கேட்டின் காட்சி. ஏற்றத் தாழ்வினைக் காட்டும் உச்சம்.

தமிழ் ஹைக்கூ கவிதைகளின் நூற்றாண்டு கொண்டாடும் இத்தருணத்தில் தமிழ் ஹைக்கூ கவிதைகள், ஜப்பானிய ஹைக்கூ இலக்கண விதிகளைக் கொள்ளாவிடினும் தனது பயணத்தில் முத்திரைப் பதித்து வருகின்றன. இன்றைய அறிவியல் உலகில் இயந்திரமாய் உழலும் மானுடம் தனது வாழ்க்கைப் பயணத்தில் நீண்ட கவிதைகளைப் படித்துக் கருத்துக்களை அறிதலைவிட வாமன வடிவம் கொண்ட மூவரித் தமிழ் ஹைக்கூ கவிதைகளைப் பெரும்பாலும் படிக்கின்றனர். ஒரு மின்னல் வெட்டென அதிர்வுமிக்க எண்ணங்களை உள்வாங்கி தமிழின் பண்பாடு, கலாச்சாரம், இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு, மரபு வழி வாழ்தல், முற்போக்கு சிந்தனைகள் எனப் பல்வேறு அம்சங்களோடு தமது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது நிதர்சன உண்மை. காலமெல்லாம் தமிழ் இனிதே தொடரும் தனது பயணத்தை வெவ்வேறு கவிதைப் பரிமாணத்தில்! வாழிய மனிதநேயம்! வளர்க ஹைக்கூ புரிதல்!.

(பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்குபெற்ற கட்டுரை)


2 Comments

ஆத்தூர் சாகுல் · ஆகஸ்ட் 17, 2018 at 17 h 20 min

நான் ஹைகூவைப் பற்றிய தேடலில் இருக்கிறேன்.
இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கவிச்சுடர் கல்யாண சுந்தரம். ஐயாவுக்கும்
தமிழ் நெஞ்சத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.

அழகுபூமாரி · மார்ச் 21, 2019 at 8 h 58 min

நான் தற்போதுதான் சில கவிதைகள் எழுதி வருகிறேன். ஹைக்கூ எப்படியென்று தெரிந்துகொண்டு முயற்சிக்கலாம் என்று தேடியபோது கிடைத்த பொக்கிஷமே உங்கள் பதிவு நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 3

தொடர்- 3

இதுவரை 5 எதுகைகளைப் பார்த்தோம்

இப்போது மேலும் மூன்று எதுகைகளைக் காண்போம்

      6.மேற்கதுவாய் எதுகை

ஒரு அடியில் 1,3,4 சீர்கள் ஒரே எதுகை பெற்று வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும்

எடுத்துக் காட்டு

விண்மகள் பெற்றெடுத்த தண்ணிலவே பெண்மகளே
மண்மகள் வாழ்த்துகின்ற பண்ணிசையே வண்டமிழே
கண்விழியால் எனைமயக்கும் கண்ணகியே உண்டிடவா?

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 3  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 2

தொடர் – 2

எதுகை தொடர்ச்சி

இதுவரை இரண்டு எதுகைகள் பார்த்தோம் அடி எதுகை மற்றும் இணை எதுகை

மற்றவற்றைப் பார்க்குமுன் ஒரு குறிப்பு

இது எதுகையை எழுதும் போது நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.( நன்றி.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 2  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 1

வணக்கம் நண்பர்களே

– இராம வேல்முருகன்

நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான்.

இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 1  »