சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல. சாமி பொழச்சா வாக்கு இல்ல… வாக்கு நெலச்சா சாமி இல்ல…”வாயோட சேந்து வார்த்தையும் நடுங்குது செல்லத்தாவுக்கு.

ஒட்டுஒறவு ஏதும் இல்லன்னாலும் மனுசத்தன்ம செல்லாத்தா கன்னத்துல கண்ணீரா துக்கச்சேதி சொல்லி ஓடுது. பிடிச்சு வச்ச பிள்ளையாரு மேல இடி வந்து விழுந்துருச்சுப் போல. நெலகொலஞ்சு போயிட்டாரு மனுசன். வீட்டுப் பொம்பள உசுருக்கு உத்தரவாதம் இல்லன்னு தெரிஞ்சதும் காட்டுக்குள்ள அத்துவிட்ட கன்னுக்குட்டியா நடுங்குதாரு… ஆம்பிள்ளக் கண்ணீரப் பாருங்கய்யான்னு பொலபொலன்னு அழுவுதாரு…

மருதையா! “யோவ்! விடும்யா! அதெல்லாம் என் தங்கச்சிக்கு ஒன்னும் ஆவாது. ஆம்பிள்ளக் கூட முக்குவான்யா! அறுவது கிலோ நெல்லு மூட்டைய அப்படியே தூக்கி வச்சு அசராம வருவாய்யா! துணிச்சக்காரி! தப்பிச்சிருவா ” மருதையாவோட முதுகத் தட்டிக் கொடுத்துக்கிட்டே மடிச்சுக் கட்டுன வேட்டிய அவுத்து விடுதாரு சின்னப்பாண்டி.

“அய்யோ! செல்லாத்தா இங்கிட்டு வாயேன் ” கொலக்காரப் பெயலப் பாத்தாப்ல நடுக்கத்தோட ஒரு சத்தம் நடுவீட்லருந்து வருது. வாசல்ல நிக்கிரவங்களுக்கு ஈரக்கொலையே அந்துருச்சு.

“ஆத்தி! என்னாச்சு?” காதுல போட்ட தடையம் கன்னத்துல அடிக்க நத்த செல்லாத்தா எறும்பா ஓடிப் போயி பாத்தா, அஞ்சாறு பேரு சேந்து அடிவயித்துல மிதிக்கிறாப்ல கத்துதா மூக்காத்தா. ஏன்னா, தண்ணிக் கொடம் ஒடஞ்சு கால்மாட்டுல ரத்தம் வழிஞ்சோடுது. தலச் சுத்திக் கெடந்தப் பிள்ள தல காட்டாம ஒத்தக் கால நீட்டிக் காமிக்கு. இப்பதான் செல்லாத்தா, மருத்துவச்சியோட மவுச காட்டப் போறா.

“ஏத்தா! ஆம்பளைக யார்ட்டயாவது பீடித்துண்டப் பத்த வச்சு வாங்கியாங்க “செல்லாத்தா சொல்ல, பேந்த பேந்த முழிச்சிக்கிட்டே ஒருத்தி மட்டும் வெளியப் போயி வாங்கியாந்தா. இதெல்லாம் செல்லாத்தாக்கு அவுக ஆச்சி சொல்லிக் கொடுத்த சூட்சுமம். ஊருல ஒன்னு ரெண்டு பெருசுகளத் தவுத்து மத்ததுக இதத் தெரிஞ்சிருக்க நாயமில்ல.

“ஏத்தா! காலு கைய நல்லா இறுவலாப் பிடிச்சுக்கோங்க…”சுத்தி இருக்கிறவங்களுக்கு சோலி சொல்லிட்டு, “ஆத்தா! உச்சிமாளி! கூடவே இருந்து காப்பாத்து ” வாயில மந்தரம் மாரி ஏதோ ஓதிக்கிட்டே நீட்டிட்டிருந்தப் பிள்ளையோட பிஞ்சு உள்ளங்கால்ல சூடு வைக்கா செல்லாத்தா.சூடுசொரணையுள்ள மூக்காத்தா பிள்ளையாச்சே! ஒடனே கால உள்ள இழுத்துக்கிடுச்சு. சுத்தி இருந்த பொம்பளைக “அம்மாடி…”ன்னு பெருமூச்சு விட்டாளுக.

செல்லாத்தாக் கெழவியோ மூச்சு விடுதான்னு கூடத் தெரில. ஏன்னா, அவளுக்குத்தான் தெரியும். தாண்டுனது வாய்க்கா வரப்பத்தான். வழில மொட்டக் கெணறு இன்னும் பாக்கி இருக்குன்னு. உச்சிப் பூசைக்கு உக்கிரமாகி சாமியாடுறவுக சாயலுல மூக்காத்தாளும் செல்லாத்தாளும் போட்டிப் போட்டுக்கிட்டு அவுகவுக நெலமைக்கு உசுரக் கொடுக்குறாங்க. கவுத்திப் போட்ட ஆட்டொரல பெரட்டுறாப்ல மூக்காத்தா வயித்தோட மல்லுக்கட்டுதா செல்லாத்தா.

“என்னன்னு தெரியல! இந்தவாட்டி இம்புட்டு சோதிக்காள உச்சிமாளி ” செத்த நேரமா மருதையா பொலம்புனதுல இதுவும் ஒன்னு..

“யோவ்! மாப்ள! அந்தா ஓடியார்றானே…ஒம்ம கடக்குட்டிதான ” சின்னப்பாண்டி கேக்க, ஆமாங்கிற மாதிரி தலையாட்டுனாரு மருதையா!

“அப்பா! தம்பிப்பாப்பா வந்திருச்சா? நமக்கு தம்பிப்பாப்பா வரப்போதுன்னு சேக்காளி சொன்னான். அதான் குடுகுடுன்னு ஓடியாந்துட்டேன் ” மருதையா மடில ஏறிக்கிட்டே கேக்கான் கடக்குட்டி காளி(காளித்துரை).

மூக்காத்தா பெத்தது மொத்தம் அஞ்சு. அதுல மூத்தது செத்துதான் பொறந்துச்சு. அதுக்கடுத்து வரிசையா மூனு பொட்டப் பிள்ளைக. கடசியா காளி. வம்சம் காத்தவன்னு இவன் மேல தனிப்பாசம் மருதையாக்கு.

“தம்பிப்பாப்பா வந்துரும்ல ” மருதையா சொல்லும் போதே “அம்மா……”ன்னு வீட்ட முழுங்குறாப்ல ஒரு சத்தம். அதுக்கு பெறத்தாலையே ஒப்பாரி வச்சுக்கிட்டே ஒரு பிஞ்சோட சத்தம்.

“ஐ! தம்பிப்பாப்பா வந்துருச்சு ” கைத்தட்டிக்கிட்டே மருதையா மடிய விட்டு காளி எறங்க, பெருசா அலட்டிக்கல மருதையா. பிள்ளப் பொறந்த சந்தோசத்த விட வீட்டுக்காரிக்கு என்னாச்சோன்னுதான் புழுங்கிட்டு இருக்காரு. திண்ணைல கைய ஊனி எந்திரிச்சு பைய நடுவீட்ட எட்டிப் பாக்காரு…மருதையா! “அப்பா! அம்மா…..

/விடியும்/

1  2  3  4


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »

தொடர் கதை

சேலை வானம் – 1

இது நிகழக் காரணமாயிருந்த

இதயங்கள் அனைத்திற்கும்
இக்கதை சமர்ப்பணம்!

ஓர் அறிமுகம் :

“சேலை வானம்”… தலைப்பே பல வியப்புகளையும் குழப்பங்களையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்துதான் இவ்விடம் வந்திருக்கிறது.

 » Read more about: சேலை வானம் – 1  »