சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும். வீடுக எத்தனன்னு எண்ணிப் பாத்தா, சொக்கலிங்கம் வாத்தியாரு கணக்குப்படி எண்பது தேறும்.அரண்மன வீடு,நாட்டாம வீடு கழிச்சா முக்காவாசி குடிசைங்கதான். சாதின்னு பாத்தா இந்த ஊருல தேவமாருதான் அதிகம்.கோயில்கொளம்,திங்கச் சோறு, உடுத்தத் துணி இது போலத்தான் தேவமாரு தேவைக்குனு மத்தவங்க சாதிக்கு ஒரு குடும்பமா இருக்காங்க.

திருநெல்வேலின்னா குத்தாலம், பாவநாசம், பொய்க மல, வயக்காடுங்கிற பிம்பத்த சகட்டுமேனிக்கி அடிச்சு நொறுக்குனது இந்த ஊருதான்! மத்த ஊருகள்ல குளிக்கிற வானம், இந்த ஊர்ல தலையத் தொவட்டிட்டுத்தான் போவும். செல வருசம் அய்யோ! பாவமுன்னு கால்கழுவிட்டாச்சும் போவும்.செல வருசம் அய்யோ! பாவிகன்னு நெனைக்குமோ? தெரியல. மொத்தமா கைகழுவிட்டுப் போயிரும்.

நடுவக்குறிச்சிக்காரப் பெயலுகளுட்ட காத்தடிக்குதான்னு கேட்டா, “மேலெல்லாம் காந்துது”ன்னுதான் பதில் சொல்வானுங்க.வண்டலும் செம்மண்ணும் புதுசா கல்யாணமான புருசன் பொண்டாட்டியா பெணஞ்சு கெடக்குறது இங்கதான்.இந்த லட்சணத்துலயும் கருதறுத்து காரவீடு கட்டுன தலகட்டுங்க ஒன்னுரெண்டு இருக்கத்தான் செய்யுது.போதாக்கொறைக்கு ஊருக்கு வடக்கூடி பேச்சியம்மா ஆச்சிக்கு பூந்தோட்டம் ஒன்னும் இருக்கு. வெள்ளத்தாயி வாழ்க்கயும் இந்த ஊர்ப் போலத்தான்!

“யோவ்! மருதையா! எங்கையா போயித் தொலஞ்ச? நெறமாசக்காரிய வீட்டுல வச்சுட்டு பொறுப்பில்லாம!” சின்னப்பாண்டி உருத்தோடு கோபிக்க..

“ஏன் மச்சான்?என்னாச்சு!” அடிவயித்துல அணுகுண்டு வெடிச்சாப்புல பதறிப் போயிட்டாரு மருதையாத் தேவர்.

“என்னாச்சு நொன்னாச்சுன்னு ஆளப் பாரும்! மூக்காத்தாளுக்கு வவுத்துவலி வந்துருச்சு.அதான் நாசுவத்தியக் கூப்புடப் போறேன்.நீரு வீட்டுக்குப் போரும்! ” சொல்லிட்டு நடக்குறாரா ஓடுதாரான்னு புரிபடல. வேகமா நாசுவத்தி வீட்டுக்குப் போறாரு சின்னப்பாண்டி!

1980கள்ல ஊர்நாட்ல பிரசவங்கிறது பொதச்சுப் பொழைக்கிறதுக்கு சமானம்.மருதையாத் தேவருக்கு இது தெரியாதா என்ன?

அம்பத்தாறு வயசுலயும் அரசமர நெழலப் பாத்து பேய்க்குப் பயந்தவன் ஓடுத மாதிரி வீட்டுக்கு ஓடுதாரு மருதையா!

“வாங்கண்ணே! எங்கப் போயிருந்திய?” பக்கத்து வீட்டு செண்பகம் விசாரிக்க,

தூக்கிச் சொமந்த அஞ்சு கிலோ நல்லரிசிய திண்ணையில எறக்கி வச்சுட்டு செண்பகத்த கண்டுக்காம நடுவீட்ட எட்டிப் பாக்காரு மருதையா!

மேலவீட்டுக் கெழவியோட மொகம் மட்டுந்தான் தெரியுது! அதுபோவ ரெண்டுமூனு நடுத்தர பொம்பளைகளும் நிக்காளுக.அவளுக மூக்காத்தாளத்தான் சுத்தி நிக்குறாங்கன்னு புரிஞ்சிக்குறாரு மருதையா!

அவரு கண்டுக்கலனாலும் செண்பகம் விடுறதா இல்ல…

“அண்ணே! அஞ்சர மணி வண்டி போன கொஞ்ச நேரத்துல மூக்காத்தா மைனிக்கு வவுத்துவலி வந்துருச்சு! இப்பத்தான் இடுப்புக்குக் கீழ கடுக்க வெந்நி வச்சு ஊத்திட்டு வாரேன். மேலவீட்டுப் பெரியாத்தா சுக்குத்தண்ணி வச்சுக் குடுத்திட்டு இருக்கு.சின்னப்பாண்டி மச்சான் இந்த வழியோடி போனாவ. அவுகட்டத்தான் நாசுவத்தியக் கூப்புட்டு வரச் சொன்னேன்” முந்தியால நெத்தியத் தொடச்சுக்கிட்டே ஒரு மணி நேரத்து சங்கதிய ஒத்த மூச்சுல சொல்லி முடிச்சா செண்பகம்!

“நானும் மச்சான வழில பாத்தேன்”னு மருதையா சொல்லிட்டு இருக்கும்போதே நாசுவத்திய கைத்தாங்கலா கூட்டிட்டு வந்தாரு சின்னப்பாண்டி!

என்னதான் ஊருக்கே மருத்துவச்சியா இருந்தாலும் சாதிதான் நாசுவத்தியோட அடையாளமாப் போச்சு!

பாத்ததுமே சொல்லிரலாம். அறுபத்தஞ்ச தாண்டிருச்சு கெழவின்னு! மரத்த குறுக்கா வெட்டி வளையத்த வச்சு வயச கணிக்கிறாப்புல மருத்துவச்சி உடம்புல உள்ள சுருக்கத்த எண்ணி குத்துமதிப்பாச் சொல்லலாம்… அவப் பாத்த பிரசவம் எத்தனன்னும்!

“வா! செல்லாத்தா”துண்ட ஒதறிக்கிட்டே மருதையா எந்திரிக்க…

“ஆமாம்! தேவரே”ன்னு சொவத்தப் பிடிச்சுக்கிட்டே நடுவீட்டுக்குப் போறா செல்லாத்தா கெழவி!

பொண்டாட்டி பிரசவ வலியில துடிக்கையிலதான் ஆம்பள மனசு அரப் பொம்பளையா மாறும்போல… பிடிச்சு வச்சப் பிள்ளையாரா ஒக்காந்திருந்தாரு மருதையா!

இது ஒன்னும் அவருக்குப் புதுசில்ல… முன்னாடியே அஞ்சு தடவ கரஞ்ச பிள்ளையாருதான் இந்த மருதையா!

“ஒன்னுமில்ல ஆத்தா! ஒன்னுமில்ல!” சட்டிப்பான செய்றவுக மாதிரி வயித்தத் தடவிக் கொடுத்துட்டே செல்லாத்தா சொல்ல வலுவுள்ள மட்டும் பல்லக் கடிக்கா மூக்காத்தா!

உள்ள நிக்க பொம்பளைககிட்ட ஆம்பளைங்க காதுக்கு எட்டாதபடி ஒன்னுரெண்டு வைத்தியங்கள சொல்லிட்டு “பாத்துக்கங்க ஆத்தா! இந்தா வாரேன்”னு சொவத்தப் பிடிச்சுக்கிட்டே திண்ணைக்கு வந்தா செல்லாத்தா!

“தேவரே! உசுர ஒடம்போடு சேத்துப் பிடிச்சுக்கோங்க………..”

/விடியும்/

1  2  3 4


கால்கழுவுதல் – மலம் கழித்தபின் சுத்தமாகுதல் / உருத்தோடு – உரிமையோடு  / சமானம் – நிகர் / மைனி – அண்ணி


1 Comment

கே. செந்தில்குமார் · ஏப்ரல் 15, 2017 at 0 h 09 min

அருமை, முகில் சகோ வழக்கு மொழி இனிமையாய் கதையோடு அழைத்துச்செல்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 2

சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா.

 » Read more about: சேலை வானம் – 2  »

தொடர் கதை

சேலை வானம் – 1

இது நிகழக் காரணமாயிருந்த

இதயங்கள் அனைத்திற்கும்
இக்கதை சமர்ப்பணம்!

ஓர் அறிமுகம் :

“சேலை வானம்”… தலைப்பே பல வியப்புகளையும் குழப்பங்களையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்துதான் இவ்விடம் வந்திருக்கிறது.

 » Read more about: சேலை வானம் – 1  »