சேலை வானம் – 2

துட்ட முழுங்குன பச்சப்புள்ள கதறுறமாரி மூக்கோடி கண்ணீர் வர்ற அளவுக்கு அருவமில்லாம விசும்பி விசும்பி அழுகுறா வெள்ளத்தாயி…

என்னதான் அழுதாலும் காரியத்துல கண்கொத்திப் பாம்பாதான் இருக்கா. பிச்சு எடுத்த மாத்திரைய எல்லாம் திர்ன்னாரா நுனிக்கிட்டா. நேரமே போட்ட டீத்தண்ணிய எடுக்க அடுப்படிக்குப் போகையில சட்டுன்னு குறுக்கத் தாவியோடுது… ஒரு குட்டிப்பூனை!

ஓரளவு சாத்திர சம்பிரதாயம்லாம் பாக்குற பாதகத்திதான்! கெட்ட சகுனமுன்னு நிறுத்திப்பான்னு பாத்தா லட்சியத்த நோக்கிப் போறவளா முன்னேறிட்டே இருக்கா. வாழுற வரைக்குத்தான் மனுசனுக்கு சாதி, சடங்கு, சம்பிரதாயம்லாம்…சா வோட வாசல மிதிக்கையில அதெல்லாம் பிஞ்ச செருப்புப்போல ஆயிருது!

டீத்தண்ணிய கிளாசுல ஊத்தும்போது அவளோட கை, வயசுக்கு மீறி நடுங்குறத அவளால தடுக்க முடியல… இருந்தாலும் சாவத் தேடுறது அவளுக்குப் புதுசு மாதிரியும் தெரியல. முன்னமே பலவாட்டி ஒத்திக பாத்திருப்பாப் போல… “மூச்சு விடுற சத்தமே கொல நடுங்க வைக்கு! இதுல இந்த நாயி வேற…”வாய்க்குள்ள மொனங்கிக்கிட்டே முந்தியால மூக்கத் தொடச்சிட்டு பயிருக்கு பூச்சி மருந்தக் கலக்குறமாதிரி, நுனுக்கி வச்சிருந்த மாத்திரப்பொடிய டீத்தண்ணில கலக்குறா வெள்ளத்தாயி! பத்து பதினஞ்சு நிமிசம் இருக்கும்… கரண்டியும் கலக்குன கையுமாவே இருக்கா.

பாதி டீத்தண்ணி அலம்பித் தரையில கொட்டிக் கெடக்கு. வெள்ளத்தாயோ! எமைக்காம என்னத்தையோ பாத்துட்டு இருக்கா. மறுவடியும் தெருவுல ஒரு நாயி கொலைக்க… கண்ணுக்கு ஓர்ம வருது!

இன்னும் சில நிமிசந்தான்னு ஒணரையில சுத்திமுத்திப் பாக்குறா வெள்ளத்தாயி! இடுப்புக்குக் கீழ சாரம் சரிஞ்சு நொரகூட்டிய எச்சி வாயில ஒழுக பிராந்தி நாத்தம் அடிக்கத் திண்ணையில படுத்துக் கெடக்கும் புருசன் செல்லப்பாண்டி. பொண்டாட்டி வயித்துல கையப் போட்டபடி தூங்கும் மவன் கார்த்தி. மருமவ ரொம்ப அமைதியானப் புள்ள. நெறமாச கர்ப்பிணி.பே ரு மாலதி… பேரப்புள்ளைய நெனச்சு இப்போ கூட ரெண்டு சொட்டு கண்ணீரு வெள்ளத்தாயி கன்னத்துல வடியுது!

என்னாச்சுன்னு தெரியல… சாமி வந்து பூந்துச்சோ? பேயி வந்து பிடிச்சுச்சோ? அப்பன் வந்தா அழுகைய முழுங்குற பிள்ளையா கண்ண மூக்கத் தொடச்சுக்கிட்டு பொறுத்து பூமியாண்டதுலாம் போதுமுன்னு மனசுல நெனச்சுக்கிட்டு கிளாச கையில எடுக்குறா… வாய்ப் பெளந்து போக வாயத் தொறக்கா வெள்ளத்தாயி!

தற்கொல முயற்சியோ? தவறியோ? காரணம் சொல்லாம உத்திரத்துல இருந்து ஒரு பல்லி வெள்ளத்தாயி மேல விழ, டீத்தண்ணியோட கிளாசு தரையில விழுந்துருச்சு. பல்லி மேல விழுந்து நல்ல பலனத்தான் குடுத்திருக்கு வெள்ளத்தாயி குடும்பத்துக்கு!

செல்லப்பாண்டி அலுங்காம குலுங்காம அப்படியே செத்தப் பொணமாத்தான் கெடக்கான். கார்த்தி நொட்டாங்கைப் பக்கமா திரும்பி படுத்துக்கிட்டான். பாழாப்போன பொம்பள சென்மங்களுக்கு மட்டுந்தான் ராத்திரி நீண்டுக் கெடக்கும் போல… மாலதி மட்டும் சத்தங்கேட்டு முழிச்சுக்கிட்டா..!

கொல செய்யயில மாட்டியிருந்தாக் கூட இம்புட்டு அஞ்சியிருக்க மாட்டா, வெள்ளத்தாயி! டீத்தண்ணியக் குடிக்காமலே ஒரு நிமிசம் உசுரு போய் உசுரு வந்துச்சு அவளுக்கு!

“என்னம்மா! இந்த நேரத்துல…டீ..லாம் கொட்டிக் கெடக்கு! “ஒரு கையால கொட்டாவிக்கு வேலி போட்டு மறு கையால கண்ணத் தொடச்சுக்கிட்டே மாலதி கேக்க…

“ஒன்னுமில்ல”ன்னு சொல்ல தெம்பில்ல வெள்ளத்தாயிக்கு! கன்னி கழியுற நேரத்துல வாயப் பொத்தி அழுவுற மாதிரி வாய்க்குள்ளேயே அழுவுறா! வாயால ஒத்த வார்த்த சொல்லலனாலும் வெள்ளத்தாயி கண்ணீரு ஏதோ சொல்லிருக்கும் போல… மாலதியும் கண்ணக் கசக்குறா…!

“நெறமாசக்காரி, கண்ணக் கசக்காத! நீ போயி படும்மா…விடிஞ்சதும் பேசிக்கலாம்! போ! போயி படு! ” வெள்ளத்தாயி சம்மராசி பண்ண அரமனசோட போயி படுக்குறா மாலதி!

வாழத்தான் வழியில்ல! சாகவுமா விதியில்லன்னு சொவத்துல சாஞ்சபடி கண்ணமூடி திரும்பிப் பாக்குறா… தான் வாழாத வாழ்க்கைய… வெள்ளத்தாயி!

 /விடியும்/

1  2  3 4


அருவமில்லாம – சத்தமில்லாமல் / கிளாசு – குவளை / ஓர்ம – உணர்வு / சாரம் – கைலி / நொட்டாங்கை – இடது கை / சம்மராசி – சமாதானம்


2 Comments

Muthukumar · ஏப்ரல் 2, 2017 at 15 h 20 min

ஆவல் அடுக்கு அடுக்காக அதிகரிக்கிறது… இதயத் துடிப்பைப் போல…

Donald Bala · ஏப்ரல் 3, 2017 at 10 h 01 min

சிறு உதாரணம் பாருங்கள்
……………
ஏய் …மொக்கமாயி ,குளிக்க போனவா,குடத்தோட போயிட்டாளா,இல்ல இந்த அவஸ்த பைய ,சிரிக்கி மகனோட போயிட்டாள….
அடேய், சீறுகெட்ட சின்னபைய மவுனே,நாக்கு அழுகி போகும்டா
யாருவளத்த பிள்ள, இந்த கருப்பாயி வளர்த்த பிள்ள
தப்பாபோகுமா, நா வளர்த்த ஆடுகூட, ……பக்கத்து வயலுல மேய யாசிக்ககும்
ஏ பேத்தி அப்படியா….
இன்னொரு முறை ஓ வாயை இந்த பக்கம் பாட்டு பாடுச்சு
ஓடுற ஓணான் ஓ வாயில் ஓடும் பாத்துக்கோ….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

சேலை வானம் – 4

சேலை வானம் – 4

அஞ்சோட ஆறாப் போயிருமுன்னு பாத்தா, ஆத்தாவையேத் தூக்கிட்டுப் போயிரும் போல.. பிண்டம் தலச் சுத்திக் கெடக்கு தேவரே! ஒன்னு கெடச்சா ஒன்னு இல்ல.

 » Read more about: சேலை வானம் – 4  »

தொடர் கதை

சேலை வானம் – 3

சேலை வானம் – 3

அவ நெனப்புக்கு எட்டுன தூரத்துல எட்டிப் பாத்தாக்க…

நடுவக்குறிச்சி (எ) நடுவை… திருநெல்வேலிச் சீமையில காலங்காலமா திருதிருன்னு முழிச்சிட்டு இருக்குற ஊருல இதுவும் ஒன்னு.சங்கரன்கோயில் கோபுர நெழலு தெக்கூடிப் பாக்க சரிஞ்சு விழுந்துச்சுன்னா ஊரே எளப்பாறும்.

 » Read more about: சேலை வானம் – 3  »

தொடர் கதை

சேலை வானம் – 1

இது நிகழக் காரணமாயிருந்த

இதயங்கள் அனைத்திற்கும்
இக்கதை சமர்ப்பணம்!

ஓர் அறிமுகம் :

“சேலை வானம்”… தலைப்பே பல வியப்புகளையும் குழப்பங்களையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்துதான் இவ்விடம் வந்திருக்கிறது.

 » Read more about: சேலை வானம் – 1  »