பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப்
…… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும்
ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற
…… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும்
தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச்
…… சேர்ந்தபோது காலனையே அங்குக் கண்டேன்
உருவில்லாக் காட்சியாகக் கண்டேன் இன்றோ
…… ஓரைந்து மணித்துளியில் நேரில் கண்டேன்!

இன்றுகாலை பத்தினொன்று மணியி ருக்கும்
…… இதயத்தைக் கைப்பிடியில் கசக்கித் தூக்கித்
தொண்டைவழி மூளைக்கு வலிகொ டுத்துத்
…… தொடர்ந்தேதும் செயவியலாச் சூழ லுக்குள்
கண்ணிருட்டி வியர்த்துப்போய்ச் செயலி ழந்தேன்
…… காலனவன் கைகொட்டிச் சிரிக்கக் கண்டேன்
முன்புவரை காட்சியாகக் கண்டேன் இன்று
…… முன்னிற்கப் பட்டபாட்டால் கண்டு கொண்டேன்.

அய்யோவென் நிலையுணர்த்த முயன்றேன் ஆனால்
…… அசையவொட்டா நிலையாலே சிலைபோ லானேன்.
வெய்யவலி ஒருபக்கம் மனையாள் மக்கள்
…… வேதனையை உணர்ந்திட்ட நிலையோர் பக்கம்
செய்யதமிழ் நண்பர்கள் இலக்கி யங்கள்
…… சேர்த்திட்ட தமிழ்ப்பெருமை கண்முன் னாடக்
கொய்திட்டால் என்செய்ய? தமிழர்க் கேதும்
…… கூறாமல் போவோமோ? எனப்ப தைத்தேன்

இவ்வளவும் ஐந்துநொடிப் போதே என்னுள்
…… ஏற்பட்ட நிலைசொல்லச் சொற்க ளில்லை
எவ்வளவு சேர்த்தென்ன? ஈசன் எண்ணம்
…… என்னவென்று தெரியாமல் தருக்கு கின்றோம்
அவ்வளவும் அவனாணை அழைக்கும் நேரம்
…… அரற்றிடவும் இயலாமல் அவனைச் சேர்வோம்
இவ்வளவே நானின்று கற்றேன் என்றன்
…… எழிலுடலைப் பேணுவதே கடமை யன்றோ?


(இன்று காலை பதினொரு மணிக்கு எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
ஐந்து நிமிடங்களில் நான் பட்ட பாட்டைச் சொல்லில் வடிக்க இயலாது.
இது “முதல் தாக்குதல் “என்றனர்.
அதை இப்போது எண்ணி அந்நினைவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »