” அம்மா என்பது தமிழ் வார்த்தை. அது தான் உலகத்தின் முதல் வார்த்தை ” என்று ஒரு கவிஞன் பாடினான். அந்த வார்த்தையின் பெருமைதான் என்னே! பெற்ற தாயை அழைக்கும்போது ” அம்மா ” வருகிறது. உற்ற மாதரை அழைக்கும்போது அம்மா வருகிறது. தெய்வமும் அம்மா என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு அகத்தில் மகிழ்ச்சியையும் புறத்தில் சிறப்பினையும் தரவல்லது. (அம்+மா) அம்மா அழகும் பெருமையும் உடையது அம்மா.

நல்லக்கண்ணு என்பவன் ஒழுக்க சீலன். வாய்மையில் ஒழுகுபவன். மரபு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன். அவன் மாத வருமானம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே சரியாகிவடும். இந்த நிலையில் உயர்தரமான வீடும், வாகனமும்,உணவு வகையும் பெற எங்கே போவான். சேமிப்புப் பணம் என்பது சிறிதளவும் அவனுக்கு இல்லஒருமுறை அவன் தாய் உடல் நலக்குறைவாக வருந்திக் கொண்டிருந்தாள். தன்னுடைய உயிர் பிரிந்துவிடும் என்று அவள் நினைத்திருந்தாள். அவள் மகனை நோக்கி ” கண்ணு! நான் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன். எனக்கு எந்த ஆசையும் இல்லை. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீயும் குடும்பத்துடன் வரவுக்கு ஏற்றவாறு செலவு செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாய். இதுவே என் மகிழ்ச்சிக்குக் காரணம் ” என்று மூச்சுத் தடுமாறக் கூறினாள். அன்புக்கு வடிவமாக விளங்கும் தாயின் உள்ளம் நல்லக்கண்ணுவுக்கு நன்றாய்ப் புரிந்தது.

நல்லக்கண்ணுவின் மனம் கடந்த காலத்தை எண்ணிச் சென்றது. அவன் பள்ளியில் படிக்கும்போது மண்ணில் கைவைத்துப் பிசைந்தபடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆசிரியர் அவனைக் கடிந்தார். அவன் கேட்கவில்லை. கோலோச்சி அறிவுறுத்தினார்;. அழுகை பெருகியதேயன்றி ஆசிரியர் கட்டளைக்கு அவன் பணியவில்லை. அந்த நேரத்தில் அவன் தாய் வந்தாள். அழுது கொண்டிருந்த மகனை அணைத்துக் கொண்டு ஆசிரியரை நோக்கினாள். அவர், அவன் வாயைப் பார்த்து ” உன் மகன் பாடத்தைக் கவனிக்காது மண்ணில் விளை யாடிக் கொண்டிருக்கிறான்! பார்த்தாய் அல்லவா! ” என்று கூறினார்.

அவளோ அந்த ஆசிரியரைப் பார்த்து ” என் மகன் அம்மா மீது கொள்ளை ஆசை வைத்திருக்கிறான். பூமிதேவியும் அம்மாதானே! நீங்களே சொல்லுங்கள்! ” என்று திருப்பிக் கேட்டாள். ஆசிரியர் வாயடைத்துப் போனார்.

பின்னர் அவர் தொடர்ந்து, « உன் மகன் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஆந்தை போல் விழிக்கிறான் » என்றார்;. அவள் சளைக்கவில்லை. ” அந்தக் கேள்வியை, ஆந்தை எப்படி விழிக்கும்? என்று கேட்டால் இதுவே சிறந்த விடையாக இருக்குமல்லவா? ” என்று கூறினாள்.

தன் மகன் மீது யாரும் எத்தகைய குறைபாடும் சொல்லக்கூடாது என்பது அவளுடைய ஆதங்கம். இதனையே « தியேதும் இல்லாது என்செய் பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே சென்ற தாய் கோத்தும் » என்று மாணிக்கவாசகர் பாடினாரோ?.

*** *** *** ***

அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இரவு நெடுநேரம் கண்விழித்துப் படிப்பான். அதனால் அவனுக்குக் கண்ணெறிச்சல் உண்டாயிற்று. உடலில் வெப்பமும் சற்று கண்டது. இத்தகைய நிலையைத் தணிப்பதற்குத்தான் வாரம் தோறும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கமாக இருந்தது. அந்தப் பழக்கம் எப்படியோ விட்டுபோனது. எண்ணெய் முழுக்குக் கொள்ளும்படி அவன் தாய் எவ்வளவு கேட்டும் இசையவில்லை. ஒரு நாள் காலை எழுந்து அவன் பல் துலக்கிக் கொண்டிருந்தான். இதுதான் தக்க தருணம் என்று கண்டு, ஒரு கிண்ணம் எண்ணெயை அவன் தலையில் தேய்த்து விட்டாள். எதிர்பாராத அந்த எண்ணெய் முழுக்கு அவனுக்கு பெரிதும் நலத்தைத் தந்தது. வலிந்து ஆட்கொள்ளும் இறைவனுக்கு ஈடாகச் சொல்ல வேண்டுமானால் அம்மாவைத் தவிர வேறு உண்டோ?

*** *** *** ***

ஒருநாள் நல்லக்கண்ணுவுக்குக் காரணமில்லாத சினம் உண்டாகிவிட்டது. நான்கு நாள் வீட்டிற்கே வரவில்லை. அவனும் தாயைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

அப்போது ” அம்மா சாப்பிட வில்லையே! ” என்ற குரல் அவன் காதில் ஒலித்தது. அது எங்கிருந்து வந்தது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அவனால் குரல் எழுந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது யாருடைய குரல்? ஆணா அல்லது பெண்ணா? இதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது அவன் உள்ளத்தின் உள்ளே உயிர்த்தெழுந்து கொண்டிருக்கும் அந்தராத்மாவின் குரலோ? உடனே அவனுக்குத் தாயின் நினைவும் வந்தது. ஓடிவந்தான். நான்கு நாள் ஆகாரம் இல்லாது படுக்கையில் ஒட்டிக்கிடந்த அவள், எழுந்து உட்கார்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவன் தேம்பினான். நான்கு நாள் பட்டினி கிடந்த அவள் சுறுசுறுப்புடன் எழுந்து அவனுக்கு உணவு பரிமாறினாள்.

*** *** *** ***

இவற்றையெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த அவன் கண்களிலிருந்து தாரைத் தாரையாக நீர் பெருகி மடியில் கிடக்கும் தாயின் முகத்தில் துளிர்த்தது.

அவள், அவனை அழாதே என்று கூறிக் கண்ணைத் துடைத்தாள். அப்போது மருத்துவர் வந்து சேர்ந்தார். ” அம்மா! மருத்துவர் வந்துள்ளார். உனக்குத் தக்க மருந்தை வாங்கி வருகிறேன் ” என்று கூறி அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொடுத்தான். அவள் கண்கள் ஒலிர்த்தன.

” அம்மா நீ பிழைத்துக் கொண்டாய். இனி எனக்கு எந்தத் துன்பமும் இல்லை ” என்று வீராப்பாக உரைத்தான்.

Categories: கட்டுரை

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »