tamilnenjamமதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப் படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம்.

வாசிப்பு

சுமார் 14 வருடங்களாக (1990 முதல்) இல்லத்தரசியாகச் சிங்கை வாசம். கணவர் பொறியாளர். இரண்டு மகன்கள். சிறுவயதில் இலக்கியச் சூழல் அமைவது பெரிய ஒரு வரம். எனக்குச் சிறுவயதில் நூல்கள் படிக்கத் தூண்டும் ஊக்கங்கள் இருக்கவில்லை. இப்போது அதில் கொஞ்சம் வருத்தமுண்டு. பாடப்புத்தத்தோடு உறவாடியதுடன் முடிந்துவிட்டிருந்தது. ஆனால், பொறியாளரான அப்பா விகடனிலிருந்து பக்கங்கள் கிழித்துத் தான் படிக்கச் சேகரித்த அகிலனின் ‘சித்திரப்பாவை’ மற்றும் சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ போன்ற மிகச் சிலவற்றை மட்டும், அதுவும் மேம்போக்காக வாசித்ததுண்டு. அதைப்பற்றி விவாதிக்கும் சூழல் இருக்கவில்லை. கல்கி அவர்களின் படைப்புக்கள் எனக்குப் பரிச்சயமானது கடந்த பத்தாண்டுகளுக்குள் தான். சரித்திரப் படைப்புக்களைவிட அவரது சமூகக் கதைகளையே அதிகம் விரும்புவேன். தேவனின் நகைச்சுவைபிடிக்கும். தி.ஜாவின் எழுத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மற்றபடி சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன், ஆதவன், அ.முத்துலிங்கம் போன்றவர்களின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். இவர்கள் தவிர இன்னும் நிறைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பிடிக்கும். வாஸந்தியின் ஆணாதிக்கத்தை அழகாகச்சொன்ன ‘அம்மணி’ பிடித்தது. சுராவின் ‘ஆண்கள் பெண்கள் குழந்தைகள்’, மற்றும் திஜாவின் மோகமுள்’/ செம்பருத்தி, அ.முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் ரயில்வண்டி’ போன்றவற்றைப் பலமுறை மீண்டும் மீண்டும் படித்ததுண்டு.

தொடக்கம்

1990 களின் ஆரம்பத்தில் சிங்கப்பூர் வந்தபுதிதில் கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். வகைவகையான எழுத்துக்கள் பரிச்சயமானது. ஆனால், சின்னக்குழந்தையின் திணறல் இருந்தது. எல்லாமே பிடித்தமாதிரியும், எல்லாவற்றையும் படித்துவிடவேண்டும் என்ற தீவிர ஆர்வமும் இருந்தது. ஏழாண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது எழுதும் முயற்சி. சிங்கையின் நூலகங்கள் வாசிப்புப்பசிக்கு நல்ல தீனி. தமிழ் முரசு, முன்பிருந்த சிங்கை எக்ஸ்பிரஸ், இப்போதுள்ள சிங்கைச் சுடர் போன்றவை எழுத்துச் சோதனைகளுக்கு நல்ல தளங்கள். திண்ணை, திசைகள் தவிர சாமாசார், இ-சங்கமம், தமிழோவியம், தட்ஸ் தமிழ், பதிவுகள் போன்ற மின்னிதழ்களிலும் கதைகள் /கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அச்சிதழ்களில் தொடங்கி, இணையத்தில் தொடர்ந்து, ஜூன் 2004 முதல் தமிழகத்தின் பிரபல அச்சிதழ்களில் எழுதவாரம்பித்துள்ளேன்.

சிங்கப்பூரின் ஒரே தமிழ்நாளிதழான தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு. வை. திருநாவுக்கரசு அவர்கள் தொலைபேசியில் ஒரு முறை அழைத்து ஊக்கப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பல வாய்ப்புக்களை நல்கியுள்ளதைச் சொல்லியே ஆக வேண்டும். ‘முத்தமிழ் விழா’வில் பல போட்டிகளில் பங்கு பெற்றுப் பல பரிசுகளும் பெற்றிருந்தாலும், 2001ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் என் சிறுகதை ‘நொண்டி’ இரண்டாம் பரிசு (S$ 750) பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே கதை ‘நுடம்’ என்று பெயர் ஆசிரியர் பிச்சினிக்காடு இளங்கோவினால் மாற்றப்பட்டு ‘சிங்கைச்சுடர்’ மற்றும் மின் சஞ்சிகையான ‘திண்ணை’ போன்றவற்றில் பிரசுரம் கண்டது. இது மட்டுமல்லாது இக்கதையிலிருந்து சில பகுதிகள் அதே வருடம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் மாநாட்டில் திரு.மாலன் அவர்களால் படிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் நூலகங்கள், தமிழ் முரசு, உள்ளூர் இதழ்களான சிங்கை எக்ஸ்பிரஸ் மற்றும் சிங்கைச்சுடர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தேசிய கலைகள் மன்றம் போன்ற அமைப்புக்கள், களங்கள் மற்றும் போட்டிகள் அமைத்துக் கொடுத்து எனது தொடக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததை மறந்துவிடமுடியாது.

பரிசுகள்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 1998ல் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசும் ($200) , சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 2000 ல் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப்போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளேன். கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசும் ($200) 2001ல் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய ‘குறுநாவல்’ போட்டியில் ‘குயவன்’ என்ற குறுநாவல் முதல் பரிசு (30gm gold) பெற்றது குறிப்பிடத்தக்கது. முத்தமிழ் விழா 2004-‘சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்’ மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் ‘பொம்மை’ கதை இரண்டாம் பரிசு ($ 300) பெற்றது. இதைத் தவிர ‘தெளிவு’, ‘கீரை’ போன்ற கதைகள் ஆரம்பத்தில் ஆறுதல் பரிசுகள் பெற்றதுடன் சிங்கை வானொலியில் ரே. சண்முகம் அவர்களால் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப்பட்டிருக்கின்றன. ‘சேவை’ என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 யில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘மழலைச்சொல் கேளாதவர்’ என்ற கதை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஆதரவில் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுச்சிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா 2005) ஊக்கப்பரிசு S$100. தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் இணைந்து நடத்திய ‘தங்க முனை விருதுப் போட்டி’ 2005 – (முதல் ஐந்தில் ஒன்று) – கௌரவக் குறிப்பு ( Honourary Mention )

அமுதசுரபியின் ஜூன் 2004ல் வந்த ‘உலகநாடுகளில் கல்வி’ , செப்டம்பர் இதழில் ‘ஆடை மொழி’ ஆகிய கட்டுரைகளுக்கு ஆய்வு செய்ததும் கிடைத்த பின்னூட்டங்களும் மிகுந்த திருப்தியளித்தன. அமீர தமிழ்ச்சங்கம் ஆண்டு மலரில் (2004) ‘புரட்சி’க் கவிஞர் என்ற கட்டுரை பிரசுரம் கண்டுள்ளது. திசைகள் August இதழில் பிரசுரமாகி, பின் Fetna 2004 நியூஜெர்ஸி ஆண்டிதழிலும் பிரசுரமான ‘ஈரம்’ என்ற சிறுகதை ஏராளமானோரின் மனதை நெருடியது தெரியவந்தது. நிறைய மின்மடல்களும் பின்னூட்டங்களும் என் மின்னஞ்சல் பெட்டியை நிறைத்தன. இந்தக்கதையைப் படித்தவர்களும், தமிழோவியம் மின்னிதழில் ஆகஸ்டு 2004 வெளியாகத் தொடங்கிய கட்டுரைத் தொடர் படித்தும் அச்சிதழாசிரியர்கள் கதை மற்றும் கட்டுரை கேட்டு என்னை அணுகினர். அக்டோபர் 2004 ‘உயிர்மை’ இலக்கிய இதழில் வந்த ‘ஆவிகள் புசிக்குமா?’ என்ற கட்டுரை வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே தொலைபேசி மற்றும் மின்மடல்களின் வழி பல பின்னூட்டங்களைக் கொணர்ந்தது. ‘தென்றல் முல்லை’ வாஷிங்டன் (2004 -நான்காம்) காலாண்டிதழில் ‘நுடம்’ என்ற (மீண்டும் பிரசுரம் கண்டு) சிறுகதையும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. 2004 ஜூலையில் கல்கி தீபாவளி மலருக்கென்று கதை ஒன்றைக் கேட்டு கல்கி ஆசிரியர் எழுதியிருந்தார். மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் அடைந்து, உடனே ‘நாலேகால் டாலர்’ என்ற கதை எழுதியனுப்பினேன். 4-5 நாட்களில் ,’மிகச்சிறப்பாக இருக்கிறது’, என்று பதிலும் வந்தது. 2004 நவம்பர் 8 வெளியான தீபாவளி மலரில் இக்கதை பிரசுரமாகியுள்ளது.

(பாரிஸ்)பெண்கள் சந்திப்பு 2005 மலரில் ‘தையல்’ என்ற கதையும், நியூயார்க்கின் ‘த தமிழ் டைம்ஸ்’ (the tamil times) டிசம்பர் 2004 இதழில் பெரானாகன் என்ற கட்டுரையும், அமுதசுரபி பிப்ரவரி 2005இதழில் ‘பேஜர்’ என்ற கதையும் ஜனவரி 2005 அமுதசுரபி இதழில் வெற்றித் திருமகள் பகுதிக்கு நேர்காணலும், உயிர்மை மார்ச் 2005 இதழில் ‘ஹினா மட்சுரி’ என்ற கட்டுரையும், ‘தென்றல்’ வட அமெரிக்க இலக்கிய இதழில்(மார்ச் 2005) ‘அம்மா பேசினாள்’ என்ற கதையும், கல்கி 13-03-05 இதழில் ‘பின் சீட்’ என்ற கதையும் பிரசுரமானது. ஜூன் 2005 ‘உயிர்மை’ இதழில் ‘கருணைக் கடவுள் குஆன்யின்’ என்ற கட்டுரை பிரசுரமாகியுள்ளது. ‘சேவை’ என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 யில் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது (18-09-05) .

சிறுகதைகள் – 64, கட்டுரைகள் – 17, நூல் விமரிசனம்/அறிமுகம் – குறைந்தது 13, குறுநாவல்கள் – 3, குட்டிக்கதைகள் – 2, நாவல் – 1, நேர்காணல் – 1, கவிதை – 1 ஆகியவை (march 2006 வரை) எழுதியுள்ளேன்.

இதுவரை மூன்று நூல்கள் (டிசம்பர் 2005) வெளியாகியுள்ளன.

நாலேகால் டாலர்- சிறுகதைத் தொகுப்பு

முடிவிலும் ஒன்று தொடரலாம் – குறுநாவல் தொகுப்பு

ஏழாம் சுவை – கட்டுரைத் தொகுப்பு

இன்னும் ‘காரியத்திலுறுதி’ யோடு நிறைய எழுதத் தான் ஆசை. பார்ப்போம் ,…

அன்புடன்
ஜெயந்தி சங்கர்

Related Posts

அறிமுகம்

இராம வேல்முருகன்

கல்வித்தகுதிகள்

  • BSc Zoology
  • MSc Zoology
  • BEd biology
  • History
  • BLIS library science
  • MLIS.
 » Read more about: இராம வேல்முருகன்  »

அறிமுகம்

அனுராஜ்

வசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் .

வணிகவியல் பட்டதாரி.

பள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள்,

 » Read more about: அனுராஜ்  »

அறிமுகம்

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,

 » Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு  »