கவிதை, எப்போதாவது தோன்றுவது என்று கருத்தாக்கத்தைத் தள்ளிவைப்போம். நமது மனம் எந்த உணர்வுடனாவது லயம் சேரும் போது அந்த உணர்வுக்கேற்ப கவிதை பிறந்து விடுகிறது. நமது மனம், நினைத்த மாத்திரத்தில் லயம் சேருமானால் நம்மால் நினைத்த நொடியில் கவிதை படைக்க முடியும்.

கவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம். சுமாராக எழுதத் தொடங்கிப் பட்டை தீட்டப்பெற்று மிகச் சிறப்பான கவிதைகள் எழுதுவோர் உண்டு. இது, ஏறுவரிசை. மிகச் சிறப்பாக எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த படைப்புகளில் அந்தச் சிறப்பைத் தொட முடியாமல் சுமாராகத் தேய்வோர் உண்டு. இது, இறங்குவரிசை. ஒருவகைக் கட்டமைப்பில் ஒரே மாதிரி அலைவரிசையில் சிலர் எழுதுவர். இது, தொடர்வரிசை. பொதுவாக மோசமாகவும் திடீரென நல்ல கவிதைகளும் சிலர் எழுதுவ துண்டு. இது, லாட்டரிச் சீட்டுப்போல. எப்போதாவது தான் பரிசு விழும். இதற்குக் கவிஞரின் திறமை காரணமில்லை. வசமாக வந்து மாட்டிக்கொள்ளும் சொற்களே காரணம். இந்த வகைகளில் இளம்பிறையை முதல் வகையில் சேர்க்கலாம்.

‘மவுனக்கூடு’, ‘நிசப்தம்’, ‘முதல் மனுசி’ என மூன்று கவிதைத் தொகுப்பு களைப் படைத்தவர். திருவாரூரை அடுத்துள்ள சாட்டியக்குடியில் பிறந்தவர். இப்போது சென்னையில் ஆசிரியர் பணியாற்றுகிறார். இயற்பெயர், ச. பஞ்சவர்ணம்.

மென்மையான உணர்வுகளை மிகச் சிறப்பாகக் கையாளும் இவர், கிராமத்தில் பிறந்ததால் மண் வாசனையுடன் எழுதுகிறார். நாட்டுப்புற உள்ளடக்கம் இவரிடம், கூர்தீட்டிய கத்தியைப் போல் மின்னுகிறது. பழக்கமான களத்தில் வசதியான ஆயுதம் வாய்த்துவிட்டால் வீரத்திற்குக் குறைவேது?

சோப்புப்போட்டுக் குளிக்கவச்சா
செவந்திடுவேன் பொண்ணுயின்னு
தோப்புப் புழுதிக்குள்ள
தூங்கவிட்டுப் போனவளே…
பரிட்சக்கி கட்டவேணும்muthal-manushi_s
பணங்குடும்மாயின்னு கேட்டா
படிக்கவச்சி எப்பேர்ப்பட்ட
பாவத்த நான் செஞ்சுபுட்டேன்யென
அழுது அழுது ஒரு
அஞ்சு ரூபா தந்தவளே…

என்னப்பெத்த எந்தாயே உம்
பள்ளிக் கூடத்து மக
பாட்டுக்கட்டிப் பாடுறேம்மா – நான்
எங்க திரிஞ்சாலும் – என்
இதயத்துல வாழுகிற உனக்குத்தான் மொதப்பாட்டு – என்
உயிர்பாடும் தாலாட்டும்…!

எனத் தன் அம்மாவைப் பாடும்போது உயிரை உருக்குகிறார்.

“அப்பாவுக்கும்… அவரது நண்பர் களுக்கும் சமர்ப்பணம்’ என்று தன் “நிசப்தம்’ நூலைக் காணிக்கையாக்குகிறார். அப்பாவைப் பற்றிய இவரின் வரிகள், நம்மைக் கண்ணீர் விட வைப்பவை.

என் கருப்பு நிறத்தை
வீடே சேர்ந்து
கிண்டல் செய்யும்போதெல்லாம்
“என் தாயார் போலmuthalmanushi_wrapper_back
கருத்தான என் மக’ யென
ஆறுதல் தந்தாய்…
பத்தடி முன்னால்விட்டு
பின்னால்கூட வரும்
யாரிடமாவது
சொல்லிக்கொண்டு வருவாய்
“என் மக டீச்சருக்குப் படிக்குது
ரேடியோவுலயெல்லாம் பேசியிருக்கு….’
கொடுத்த பொருளைத்
திருப்பிக்கேட்க
உன்னளவிற்குக்
கூச்சப்பட்டவர்களை
நான் பார்த்ததே இல்லை..
சொத்து குறித்து
யாராவது விசாரித்தால்
“என் பொம்பள மக்கதான்
என் சொத்து…
நான் செத்துப்போனால்
அவர்களெல்லாம்
கூடி அழுவுதுதான்
என் சுகம்’ யென
உருக்கமான கவிதை சொல்வாய்

கள்ளங்கபடமற்ற அந்த ஏழைத் தந்தையால்தான் இந்தக் கவிதை நிமிர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட தந்தையும் இந்தக் கவிதையும் தமிழ்நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கவை.

அல்லுபகல் உழைப்பவள
அடிக்ககைய நீட்டாதய்யா
சீக்கிரமா சமச்சித் தாரேன்
“சிடு சிடு”னு பேசாதய்யா…

என்ற கவிதை, வன்முறைக்கு எதிரான தர்மாவேசமாக இல்லாமல் கெஞ்சும் தொனியில் இருப்பது, சிந்தனைப் பழைமையை வெளிப்படுத்துகிறது.

“அப்பாவின் கையெழுத்து!’ என்ற கவிதை, ஓர் அற்புதமான சிறுகதையாக விரிகிறது. மகளின் மதிப்பெண் அட்டையில் ரேகை வைப்பதிலிருந்து மாறி, கையொப்பம் இட விரும்பும் வழிவிட்டான் மயன் சன்னாசி, மிகச் சிறப்பாகப் பதிவாகியுள்ளார்.

“நீ எழுத மறுக்கும் எனதழகு சில’ என்ற தலைப்பில் இவர் பட்டியலிடுவது முக்கியமானது.

இளம்பிறையின் காதல் கவிதைகள், வலியும் ரணமும் மிக்கவை இஷ்ட தேவதைகளின் வாழ்த்துகளையும் துஷ்ட தேவதைகளின் சாபங்களையும் இணைந்தே பெற்றிருக்கிறது, காதல்.

“இறந்த பின்பும்
ஒரே குழியில் புதைபடவேண்டும்”
என்றெல்லாம்
பேசிக்கொண்டவர்கள் நாம்.
காலம்
கற்றுத் தந்திருக்கிறது பார்த்தாயா….?
பார்த்தும்… எது குறித்தும்
பேசாமல் பிரிவதற்கு.

காலந்தோறும் காதல், தனி மனிதர்களுக்கு இழப்பையும் இலக்கியத்திற்குச் செழுமையையும் அளித்துவருகிறது. இளம்பிறை அதற்கு இன்னொரு சாட்சியம்.

கிராமத்து உணர்வுகளையும் காதலையும் தவிர உலகின் பல்வேறு பக்கங்களையும் இளம்பிறை தொட்டுச் செல்கிறார்.

“சில்க் சுமிதா என்கிற விஜயலெட்சுமிக்காக…’ என்ற கவிதையில்

நான் அழுகிறேன் சுமிதா.
உன்னோடு ஆடியவரெல்லாம்
“குடும்பம்…குழந்தை’ யென
கெளரவப் பிரஜைகளாய்…
நீ மட்டும் ஏன் பெண்ணே
மண்ணோடு?
என ஆற்றாமையோடு புலம்புகிறார்.

இரவின் வாயில்…
புகைந்து கொண்டிருக்கும்
“சிகரெட்” நான் என்றும்

கண்களுக்குத் துணிவில்லை
மனம்
அண்ணாந்து பார்க்கிறது
அவமானங்களால்
விரட்டப்பட்ட இடங்களை… என்றும்

சடைப்பூரானாய் தடித்துக் கிடக்கும்
சிசேரியன் தழும்புகள் காட்டி
வயிறு பார்ப்பாள் தோழி என்றும்

உதிர்ந்துகொண்டிருக்கும்
தன் இறகுகளை
பூச்சிகள் இழுத்துச் செல்வதைப்
பார்த்துக்கொண்டிருக்கும் பறவைக்கு என்றும்

மனக்காயங்களோடு
புகார் கொடுக்கச் சென்ற பெண்களை
உடற்காயங்களோடு
வெளியே எறிந்த காவல் நிலையங்கள் என்றும்

பேய் மழையில் நடுங்கி…
ஒதுங்க வர மாட்டேன் ஒருபோதும்
உங்கள் கெளரவத்தின்
தாழ்வாரத்தில் என்றும்

நுண்ணிய கவிதை உணர்வுகளை உண்மையான எழுத்தில் வடிக்கும் இளம்பிறை, பாராட்டத்தக்கவர். யாளி, களம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருதுகளும் கவிஞர்கள் தின விருதும் பெற்றவர். திரைப்படப் பாடலும் எழுதி வருகிறார்.

இரவின் மடிமுழுதும்
உதிரும் கவிகள்
பொங்கிப் பிரவகிக்கும்
ஒத்தச் சொல்லில்

என்கிறார், இளம்பிறை.

இந்த ஒத்தச் சொல்லுக்காக, அகராதியில் சில பக்கங்களை விட்டுவையுங்கள்.


முதல் மனுஷி வெளியீடு தமிழ்நெஞ்சம் பதிப்பகம் 59, rue des Entrechats, 95800 Cergy., France

 

 

Related Posts

கட்டுரை

எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்

இரும்பைத்தான் காந்தம் கவரும். இனிமையால் கவர்ந்தவர், அன்பால் தன் மக்களின் ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தவர்.

நீதிக்குத் தலைவணங்கச் சொன்னவரிடம் நீதியே தலைவணங்கியது எனலாம்.

தாய்க்குத் தலைமகனிடம் தாய்க்குலங்களே எங்கள் வீட்டுப்பிள்ளையாக்கிக் கொண்டனர் இவரை.

 » Read more about: எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்  »

இலக்கணம்-இலக்கியம்

காலமெல்லாம் தமிழ்

தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,

 » Read more about: காலமெல்லாம் தமிழ்  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10

பாடல் – 10

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.

(பொருள்) :

கணக்காயர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10  »