சில மாதங்களுக்கு முன்பு மாற்றுமத நண்பருடன் கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய ஒருவர்மனிதர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியும், பிரபலமான சிலரிடம் இருந்த குணநலன்களைப் பற்றியும் பேசினார். அவர்தமது உரையில் அஹிம்சைக்கு மகாத்மா காந்தியையும், உண்மைக்கு சாக்ரடீஸையும், நேர்மைக்கு லால் பகதூர் சாஸ்திரியையும்,பொறுமைக்கு அன்னை தெரசாவையும், நடுநிலைமைக்கு மனுநீதி சோழனையும், தன்னடக்கத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சரையும், பணிவுக்கு ராமானுஜர் (நம்பியாண்டார் நம்பி)யையும், விடா முயற்சிக்கு கஜினி முஹம்மதையும், பொறாமையின்மைக்கு வேதாத்திரிமகரிஷியையும், கொடைக்கு பாரி வள்ளலையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.

அக்கருத்தரங்கு உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது, மேற்கூறப்பட்ட நற்குணங்கள் மட்டுமல்லாது உள்ளத்தூய்மை, அச்சமின்மை, ஈகை, தன்னடக்கம், சினம் தவிர்த்தல், சாந்தம், மன உறுதி, மென்மை, பிறர் குற்றம் பொறுத்தல், விடாமுயற்சி, சுத்தம், வெட்கம், துரோகமின்மை, தற்பெருமை கொள்ளாமை போன்ற அனைத்து குணநலன்களும் ஒருசேரப் பெற்ற மகத்தான மாமனிதர் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களே எனது மனதில் நிறைந்திருந்தார்கள். மனித வாழ்வில் என்னென்ன நற்குணங்களெல்லாம் உள்ளதோ அவைஅத்தனையையும் தன்னகத்தே கொண்ட குணசீலராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து வரலாறு படைத்த காரணத்தினால்தான்நபிகள் நாயகத்தை பிற மதத்தினரும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், தத்துவஞானிகளும், அரசியல்வாதிகளும், ஆளுமைகளும் மெச்சப்புகழ்ந்து அவர்களது நற்குணங்களுக்கு சான்று பகர்கின்றனர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்களைப் பற்றி எழுத முற்பட்டால் பக்கங்கள் போதாது. எழுதுகோலும் களைப்படைந்துவிடும். ஆயினும் அக்கருத்தரங்கில் மேற்கோள் காட்டி, கூறப்பட்ட நற்பண்புகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எந்த அளவிற்குமிகைத்திருந்தது என்பதை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

அஹிம்சை:

அஹிம்சைக்கு உதாரணமாக மகாத்மா காந்தியைச் சொல்வார்கள். ஆனால் மகாத்மா காந்தியே முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்பற்றி இப்படிச் சொல்கிறார்: ‘நபி பெருமகனார் அவர்களின் உறுதியான எளிய வாழ்க்கையும், தியாகமும், சொன்ன சொல்லைக் காப்பாற்றவேண்டும் என்பதில் அவர்களுக்கு இருந்து வந்த மட்டிலடங்கா ஆர்வமும் அவர்களைப் பின்பற்றியவர்களிடமும், நண்பர்களிடமும் இருந்தது. நபிகள் நாயகம் பெரிய தீர்க்கதரிசி. அவர்கள் அன்று பட்ட துன்பங்களை நான் படித்தபோது கண்ணீர் வடித்தேன்’. அஹிம்சைக்குஉதராணமாகச் சொல்பவரே கண்ணீர் வடிக்கும் அளவிற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் சோதனைகளும், துன்பங்களும்நிறைந்திருந்தன என்பதே வரலாறு நமக்குக் கூறும் செய்தி. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது ஆரம்பகால தூதுத்துவப் பணியில்சந்தித்த இன்னல்களையும், இடையூறுகளையும் அஹிம்சை வழியிலேயே எதிர்கொண்டார்கள். இறைவனின் தூதரை பைத்தியக்காரர்என்றும், பொய்யர் என்றும், சூனியக் காரர் என்றும் இட்டுக் கட்டினர்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கஃபாவில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அபூஜஹ்ல் நபி (ஸல்) அவர்களின் கழுத்தில்ஒட்டகக் குடலைப் போட்டு இம்சித்தான். யார் முஹம்மதின் தலையைக் கொண்டு வருகிறாரோ அவருக்கு நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாகவழங்கப்படும் என்று அறிவிப்பும் செய்தான். வார்த்தைகளால் வடிக்க முடியாத இன்னல்களைக் கொடுத்தாலும், அஹிம்சை முறையில்அனைத்தையும் எதிர்கொண்டே இஸ்லாத்தை மக்களிடத்தில் எடுத்தியம்பினார்கள். மக்காவாசிகள் இழைத்த கொடுமைகள் நாளுக்கு நாள்அதிகமாகிக் கொண்டிருந்த போது கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அநியாயக்காரர்களுக்கெதிராக இறைவனிடம்பிரார்த்திக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போதுகூட ‘அல்லாஹ்வின் உதவி விரைவில் வரும்,பொறுமையாய் இருங்கள்…’ என்றுபதிலளித்தார்கள். அல்லாஹ்வின் உதவியை மட்டும் எதிர்பார்த்து, அஹிம்சை வழியில் ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டியதன்பயனாகவே பிந்நாட்களில் மக்கள் சாரை, சாரையாக இஸ்லாத்தை நோக்கி வந்தனர்.

உண்மை:

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ரோம் நாட்டு மன்னர் ஹெர்குலஸிற்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி கடிதம் எழுதியிருந்தசமயம், வியாபாரத்திற்காக சிரியா சென்றிருந்த அபூசுஃப்யானை அழைத்து ரோம் மன்னர் உத்தம நபியின் உண்மைத் தன்மையைப் பற்றிவிசாரித்தார். தன்னை நபி என்று கூறும் அம்மனிதர் அதற்கு முன் ஏதாவது பொய் கூறியுள்ளாரா? மோசடி செய்துள்ளாரா? என்றெல்லாம்கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அபூசுஃப்யானிடமிருந்த ஒரே பதில் ‘இல்லை’ என்பதுதான். நபி (ஸல்) அவர்களை கடுமையாக எதிர்த்தஎதிரிகள்கூட அவரை ஒருபோதும் பழித்துக் கூற இயலாத அளவிற்கு அண்ணலாரின் உண்மைத் தன்மை சிறப்புற்றிருந்தது.

நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் பொய் உரைத்ததில்லை, வாக்களித்தால் மாறு செய்ததில்லை, எதையும் தன்னை நம்பிஒப்படைத்தால் அதில் மோசடி செய்ததில்லை. அதனால்தான் ஏகத்துவ எதிர்ப்பாளர்கள், ஓ முஹம்மதே! நாம் உம்மை பொய்யர் என்றுகூறவில்லை, உன் மார்க்கத்தைத்தான் பொய் என்கிறோம் என்று கூறினார்கள். உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானதுநிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார், இறுதியில் அவர் சித்தீக் என்னும் சிறப்புப் பெயருக்குஉரியவராகிவிடுவார். ஆனால் பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார், இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார் என்று உபதேசித்து அதன்படிவாழ்ந்து காட்டிய உத்தம நபியின் உண்மை குணத்திற்கு சான்று பகரும் ரஷ்ய கவிஞர் லியோ டால்ஸ்டாய் பின்வருமாறு குறிப்பிடுகிறாhர். ‘முஹம்மத் நபி ஒருவர் தாம் உண்மையான தீர்க்கதரிசி. எப்படியெனில் அவர் உலகத்துக்கே பொதுவான ஒரு மதத்தைப் போதித்தார். மனிதனை புனிதனாக்கும் முயற்சியில் அந்த மகான் பெற்ற மகத்தான மாபெரும் வெற்றிக்கு உலக வரலாற்றிலேயே ஈடு இணை கிடையாது’.

நேர்மை:

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதிலும், நேர்மையாய் நடந்து கொள்வதிலும் நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரிஇருக்கிறது. ஹீதைபியா உடன்படிக்கையின் போது மக்காவிலிருந்து வரும் முஸ்லிம்கள் யாரையும் மதீனாவிற்குள் அனுமதிக்கக் கூடாதுஎன்ற அம்சத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். ஒப்பந்தம் முடிந்து இரு தரப்பினரும் கலைந்து செல்வதற்கு முன்பாகவேஅபூஜந்தல் (ரலி) என்னும் நபித்தோழர் மக்காவிலிருந்து ஓடி வந்து தன்னையும் மதீனாவிற்கு அழைத்துச் செல்லும்படி நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். நபித் தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகஅபூஜந்தல் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறி மக்காவிற்கே அனுப்பி வைத்தார்கள். செய்து கொண்ட உடன்படிக்கைக்கு நேர்மையாய் நடந்துகொள்ள வேண்டியே நபி (ஸல்) அவர்கள் அப்படிச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் ஓரிறைக் கொள்கைக்கு செவிசாய்க்காத மக்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்த நேர்மை குணத்தை நன்கு உணர்ந்து அல்-அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று போற்றிப் புகழ்ந்தனர். அதன்காரணமாகவே நபி (ஸல்) அவர்களிடம் விலையுயர்ந்த பொருட்களைப் கொடுத்து வைத்துப் பாதுகாத்தனர். அவர்களின் நம்பிக்கைக்குநேர்மையாய் நடந்து கொண்ட அண்ணலார் ஹிஜ்ரத்தின் போது அலி (ரலி) அவர்களிடம், தன்னிடமுள்ள பொருட்களை உரியவர்களிடம்ஒப்படைத்த பின்னரே மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டுமேன்று அன்புக் கட்டளையிட்டனார்கள். நபிகளாரின் இப்பண்பே தன்னைபெரிதும் ஈர்த்ததாக கூறும் அன்னிபெசண்ட் அம்மையார் எனது இதயத்துக்குள்ளே பக்தியையும், விசுவாசத்தையும், நன்மதிப்பையும்பதியும்படி செய்த முஹம்மத் நபி அவர்களது மேன்மைகளில் முதன்மையானது எது? மிகவும் மூர்க்கர்களாயிருந்த அக்காலத்து அரபியர்கள்ஒருமித்த மனதினராய் அந்த தீர்க்கதரிசியை அல் அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்று போற்றியதாகும் என்று குறிப்பிடுகிறார்.

பொறுமை:

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் என்னிடம் உதவி தேடுங்கள் என்று எல்லாம் வல்ல இறைவன் தனதுதிருமறையில் கட்டளையிட்டிருப்பதைப்போல் பொறுமை காத்து தனது தூதுத்துவப் பணியை செம்மையாக செய்து முடித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்து மக்களும், சிறுவர்களும் நபி (ஸல்) அவர்களின் கணுக்காலில் இருந்து கூட இரத்தம் வரும் அளவிற்குகல்லால் அடித்தபோதும் பொறுமை காக்கத் தவறவில்லை. அடி, உதை, கல்லெறி என சொல்லொண்ணாத் துயரத்தைக் கொடுத்த போதும்பொறுமையின் உருவாக நின்று இறைவனின் மார்க்கத்தை போதித்தார்கள். சோதனைகளின் போதும், வெற்றியின் போதும், வீழ்ச்சியின்போதும் நபி (ஸல்) அவர்கள் ஒரே நிலைப்பாட்டையே எடுத்தார்கள். அவர்களின் நிலைப்பாட்டில் பொறுமையே மிகுந்திருந்தது. இப்பண்பைத்தான் வெற்றியின் போதும், வீழ்ச்சியின் போதும், ஆட்சியின் போதும், அல்லலுறும் போதும், செல்வாக்கிலிருக்கும் போதும், சிதைக்கும் வறுமையிலிருக்கும் போதும் நபிகள் நாயகம் ஒரே நிலையில்தான் இருந்தார்கள். ஒரே குணநலனைத்தான்வெளிப்படுத்தினார்கள் என்று பேராசிரியர் கே.எஸ். இராமகிருஷ்ண ராவ் கூறுகிறார்.

நடுநிலைமை:

ஒரு முறை கஃபாவை புதுப்பிக்கும் பணியின் போது, ‘ஹஜ்ருல் அஸ்வத்’ என்னும் கருப்புக்கல்லை யார் சுவரில் பதிப்பது என்பதில்பல குழுத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி மோதல் ஏற்படவிருந்தது. இப்பிரச்சனை நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதுஅவர் ஒரு துணியை தரையில் விரித்து அதன் மேல் கருப்புக் கல்லை வைத்து, குழுத் தலைவர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும்வகையில் ஒருசேர துணியைப் பிடித்துத் தூக்கச் சொல்லி, தனது கரங்களால் கருப்புக்கல்லை எடுத்து அதற்கான இடத்தில் பதித்தார்கள். பெரும் வன்முறையாக உருவெடுக்கவிருந்த இப்பிரச்சனையில் யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளாமல் நடுநிலை பேணி, சுமூகமாகதீர்த்து வைத்ததன் மூலம் பெருமானாரின் மதிப்பு மக்களிடத்தில் மேலும் உயர்ந்தது.

மக்களிடத்தில் வேறுபாடு பாராது நீதி செலுத்துவதிலும், போதனைகளிலும் யாருக்கும் சாதகமாக செயல்படாமல் நடுநிலையாகநடந்து கொண்டதினால்தான் நபி (ஸல்) அவர்கள் பல குலங்களாகப் பிரிந்து, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டவர்களை ஒரே சமூகமாகமாற்றியமைக்க முடிந்தது. நபிகளாரின் இப்பண்பைத்தான் முஹம்மத் நபி ஒருவரே தமது மேலான அறிவு விவேகத்தினால் ஒரே மூச்சில்தன் தேசத்தினுடைய அரசியல் வாழ்வையும், மதக் கொள்கைகளையும், ஒழுக்க நடத்தைகளையும் சீர்திருத்தம் செய்தார். அனேகசுயேச்சையான உட்பிரிவினர் பெருகிக் கிடந்த அத்தேசத்தில் அவர் அவர்களை ஒரே சமூகமாக நிலை நிறுத்தி வைத்தார் என்று ரெவரண்ட்ஸ்டீபன்ஸ் தனது ரிப்ளக்ஷன்ஸ் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

தன்னடக்கம்:

கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னைப் புகழாதீர்கள். நிச்சயமாகநான் அடிமையே! எனவே நீங்கள் (என்னை) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனின் தூதர் என்றும் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். ஒரு முறை நபித்தோழர் ஒருவர் பெருமானாரைப் பார்த்து எங்கள் தலைவரே! என்று பொருள்படும் ‘சைய்யதினா’ என்றசொல்லைப் பயன்படுத்தி அழைத்தார். அவ்வாறு அழைப்பதைக் தடை செய்து, இறைவனை மட்டுமே அவ்வாறு அழைக்க வேண்டும் என்றுதன்னடக்கத்தோடு கூறினார்கள். ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களிடத்திலிருந்து தன்னை தனித்துவப்படுத்திக் காட்டியதில்லை.தோழர்களோடு தோழர்களாகவே அமர்ந்திருப்பார்கள். மக்களோடு மக்களாக பழகுவார்கள். அவர்களோடு வேலை செய்வர்கள். தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள்.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது அம்மக்கள் தனக்கு முன்பு செய்த இன்னல்களை எண்ணிப் பார்த்து வெற்றிக் களிப்பில்மமதையாக நடந்து கொள்ளவில்லை. மாறாக வெற்றியின்போது கூட தன்னடக்கத்துடனேயே நடந்து கொண்டார்கள். நபிகளாரின்இப்பண்பைத்தான் பிலிப்.கே. ஹிட்டி என்னும் அறிஞர் ஹிஸ்டரி ஆஃப் அரப்ஸ் என்னும் நூலில், முஹம்மத் நபி மக்கா நகரைக்கைப்பற்றியபோது அங்கிருந்த மக்கள் பெரியதொரு சிறப்பான பெருந்தன்மையுடனேயே நடத்தப்பட்டார்கள். பண்டைய வரலாறுகளில்காணக்கிடக்கும் வேறெந்த தலைவர் வெற்றி பெற்று வீரத்துடன் புகுந்த நகரத்திலும் நடைபெற்ற காட்சி இதற்கு நிகரானதாக இல்லை என்றுவியந்து பாராட்டுகிறார்.

பணிவு:

யாhரவது ஒரு தலைவருக்கோ அல்லது பிரபலத்திற்கோ ஏதாவதொரு துயரமோ, இடப்பாடோ ஏற்படும் சமயம் எதேச்சையாக மழைபொழிந்தால், அவரின் நிலை கண்டு வானமே அழுகிறது! என்று மக்களும், அவரைச் சார்ந்தவர்களும் சொல்வது வழக்கம். சம்பந்தப்பட்டதலைவர்களும், பிரபலங்களும் அப்படிச் சொல்வதை விரும்பிப் பெருமை கொள்வர். நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அப்படியொருஇயற்கை நிகழ்வு நடந்தது. பெருமானார் அப்போது மக்கள் போற்றும் தலைவராக இருந்தார். அப்போதும் மக்கள் இம்மாதிரியேமிகைப்படுத்திப் பேசினர். நபி (ஸல்) அவர்கள் அப்பேச்சைக் கேட்டு அகம் மகிழவில்லை. பெருமை கொள்ளவில்லை. மாறாக பணிவோடுஅதை மறுத்தார்கள். அவ்விதம் பேசுவது தவறு என்று கண்டித்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்த தினத்தில்எதேச்சையாக சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபிகளாரின் மகன் இறந்த காரணத்தினால்தான் சூரிய கிரகணம் நிகழ்கிறது! என்று மக்கள்பேசினார்கள். மக்கள் அவ்வாறு பேசுவதை அறிந்த பெருமானார் சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகள். எந்தவொருமனிதனின் இறப்போடும், பிறப்போடு அவற்றுக்கு எந்தவித தொடர்புமில்லை என்று பணிவோடு கூறி மக்களின் தவறான பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

வாஷிங்டன் இர்விங் என்னும் அமெரிக்க வரலாற்றாசிரியரின், முஹம்மத் நபி அவர்கள் வறுமையுடன் இருந்த காலத்தில் எந்தவிதமான எளிய வாழ்க்கையை நடத்தி வந்தார்களோ, அதுபோன்றே தாங்கள் அதிகார உச்சத்தை அடைந்து மாமன்னராகத் திகழ்ந்தபோதும்கூட எளிய சாதாரண வாழ்க்கையையே மேற்கொண்டார்கள். மற்றவர்கள் தங்களுக்கு அரச மரியாதை செலுத்துவதை அவர்கள்வெறுத்தார்கள், கண்டித்தார்கள் என்ற கூற்று நபி (ஸல்) அவர்களின் பணிவான பண்பிற்கு சாட்சியாக இருக்கிறது.

விடாமுயற்சி:

சிலை வணக்கத்தில் மூழ்கிக் கிடந்த மக்காவாசிகளிடம் ஏகத்துவக் கொள்கையை எடுத்தியம்பி அழைப்புப் பணி செய்வது மிகவும்அச்சுறுத்தலான விஷயமாக இருந்தது. தனது முன்னோர்களின் நம்பிக்கையை பழிக்கும் வகையில் எவரேனும் பேசினாலோ,செயல்பட்டாலோ அவர்களை மக்காவாசிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்து நின்றனர். அம்மக்களிடம் இறைவனின் மார்க்கத்தை போதிப்பதுஅவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஆயினும் நபி(ஸல்) அவர்கள் தனது போதனையிலிருந்து சற்றும் பின்வாங்காமல்விடாமுயற்சியோடு இறைவனின் மார்க்கத்தை மக்களிடையே பரப்பினார்கள். நபி(ஸல்) அவர்களை குறை»கள் கொலை செய்யத் துணியும்அளவிற்கு வந்தபோதும் ஏகத்துவத்தை எத்திவைக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை. பத்ருப் போரில் எதிரிகளை எதிர்த்துப் போரிடமுஸ்லிம்களின் படையில் 313 பேராவது இருந்தார்களென்றால் அதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்களின் விடாமுயற்சியும், மனஉறுதியுமேஎன்றால் அது மிகையாகாது. இந்த உறுதியே முஹம்மது நபியின் வெற்றிக்கான முதல் காரணம் என்று பண்டித ஜவஹர்லால் நேருகுறிப்பிடுகிறார்.

பொறாமையின்மை:

பாரசீக மன்னர் கிஸ்ரா, ரோம் நாட்டு மன்னர் ஹெர்குலஸ் போன்றோர் செல்வச் செழிப்போடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்த காலம். அக்காலத்தில்தான் மக்களின் தலைவராக நபி (ஸல்) அவர்களும் வாழ்ந்தார்கள். மற்ற மன்னர்களைக் கண்டு பொறாமை கொள்ளவோ, தானும் அவ்வாறு ஆடம்பரமாக வாழவோ விரும்பாமல் மக்களோடு மக்களாக, சாதாரண மனிதராகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்வாழ்ந்தார்கள். அண்ணலார் ஒரு வார்த்தை சொன்னால் போதும், தனது செல்வங்கள் அனைத்தையும் அவர்களது காலடியில் கொண்டு வந்துசேர்க்க நபித்தோழர்கள் தயாராக இருந்தனர். ஆயினும் படுக்கையின்றி, பேரீச்சை இலைகளைக் கொண்டு நிரப்பப்பட்ட தலையணையைவைத்துக் கொண்டு, பாயின் தடம் முதுகில் பதியும் நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள்.

மற்றவர்களைக் கண்டு பொறாமை கொள்ளும் எண்ணமோ, சுகபோகத்தோடு வாழ வேண்டும் என்ற ஆசையோ நபி (ஸல்) அவர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் இவ்வுலகில் பெற்றுக் கொள்ளட்டும். நாம் மறுமையில் அனுபவிப்போம் என்ற உணர்வு மட்டுமேஅண்ணலாரிடம் மிகுந்திருந்தது. தாமஸ் கார்லைல் என்னும் அறிஞர், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு, வாழ்வு முறை அனைத்தும்சர்வ சாதாரண எளிய மக்களின் வாழ்க்கை போன்றிருந்தது. அவர்களது உணவு கோதுமை ரொட்டியும், தண்ணீரும்தான். தன் கையினாலேயேஒட்டுப் போட்டுத் தைத்த சட்டை அணிந்த மனிதருக்கு மக்கள் கீழ்படிந்தது போல் வலிமை மிகந்த எந்த மாமன்னனுக்கும் மக்கள்கீழ்ப்படிந்ததில்லை’ என்று புகழாரம் சூட்டுகின்றார்.

கொடை:

என்னிடம் உஹது மலையளவு தங்கமிருந்தால், அது மூன்று நாட்களுக்கு மேல் என்னிடம் இருப்பதை நான் விரும்ப மாட்டேன், மரத்தின் முட்கள் அளவிற்கு செல்வம் என்னிடமிருந்தாலும் அதை நான் உங்கள் மத்தியில் பங்கிட்டுக் கொடுத்து விடுவேன் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் அதன்படியே வாழ்ந்தார்கள். உயிர் வாழ அடிப்படைத் தேவையான உணவிற்காகக் கூட அவர்கள் எதையும் சேமித்துவைத்ததில்லை. தனது மரணத் தருவாயில்கூட தன்னுடைய ஆயுதங்களை மற்றவர்களுக்கு அன்பளிப்புச் செய்ததோடு தன்னிடமிருந்த சிலதங்கக் காசுகளையும் தர்மம் செய்துவிட்டார்கள். ஹீனைன் யுத்தத்தின் போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருக்குஅண்ணலார் இரண்டு மலைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்து ஆடுகளையும் கொடுத்தார்கள். அம்மனிதர் தனது கூட்டத்தினர் பக்கம் திரும்பி, கூட்டத்தினரே! முஹம்மத் வறுமையை எண்ணிப் பயப்படாமல் விசாலமாகக் கொடுக்கிறார் என்று கூறினார்.

இவ்வாறு அனைத்து குணநலன்களையும் ஒருசேரப்பெற்ற மகத்தான மனிதரைப் போன்று வேறொருவரை இவ்வுலகம்இதுவரையில் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை. நற்குணங்களைப் போதித்து, அதன்படி வாழ்ந்துகாட்டிய அண்ணலாரின்தாக்கம் உலக வரலாற்றில் ஈடு இணையற்றது. நற்குணங்களின் உறைவிடமாக வாழ்ந்த அண்ணல் நபியின் பண்புகளில் சிலவற்றைப்பட்டியலிட்ட இக்கட்டுரையை இஸ்லாம் அண்ட் இட்ஸ் ஃபவுண்டர் என்னும் நூலில் ஜே. டபிள்யூ. ஹெச். ஸ்டோபார்ட் கூறியுள்ள கருத்தைமேற்கோள் காட்டி முடிப்பது முத்தாய்ப்பாய் இருக்கும். ‘தனக்குக் கிடைத்த அற்பமான வசதிகளைப் பயன்படுத்தி அவர்கள் ஆற்றியதொண்டின் பரந்த – நிரந்தரத் தன்மையைக் கொண்டு கணிக்கும் போது முஹம்மத் நபியின் பெயரைப் போல் ஒளி வீசும் பெயர் உலகவரலாற்றில் வேறில்லை எனலாம்’.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

ஆன்மீகம்

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம்

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள்.

 » Read more about: ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )  »