ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
—– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
—– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
—– திரைமறைவு செய்தியினை அறிந்த வ.ரா
ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே
—– ஓரிரவு அவரிருந்த வீடு சென்றார்!

மூடியுள்ள கதவுதனைத் தட்டும் போது
—– முன்காப்பாய் பாபுஎன்னும் உதவி யாளன்
ஓடிவந்து கதவுதனைத் திறந்து கேட்க
—– ஒப்பற்ற கவிஞரினைக் காண்ப தற்குத்
தேடிவந்த வ.ராநான் என்று ரைத்தே
—– தேன்பொதிந்த மலர்கண்ட வண்டைப் போல
பாடிதமிழ் இன்பத்தில் திளைத்தி ருந்த
—– பாரதியைக் கண்டுமனம் சிலிர்த்து நின்றார்!

ஆங்கிலத்தில் புலமைபெற்ற கவிஞ ரோடே
—– அம்மொழியில் பேசிடலாம் என்றே எண்ணி
ஏங்கிமனம் விடுதலைக்காய்க் காத்தி ருக்கும்
—– ஏந்தலிடம் ஆங்கிலத்தில் பேச லானார்!
தாங்காத வெறுப்புடனே உதவி யாளன்
—– தனைப்பார்த்தே உனைப்பார்க்க வந்துள் ளார்பார்
ஈங்கவர்க்கே என்னவேண்டும் என்று கேட்டே
—– ஈந்தவரை அனுப்பென்று பாரதி சொன்னார்!

சத்தியமாய் உங்களைத்தான் பார்க்க வந்தேன்
—– சாமியென்று வ.ராவும் பதறிச் சொல்ல
சித்தத்தில் பிறமொழிமேல் மோகம் கொண்ட
—– சிறுமதியோ ரிடம்பேச ஒப்பேன் என்றார்
புத்தியிலே செருப்படிபோல் உணர்ந்த வ.ரா
—– புரிந்ததம்மின் தவறுணர்ந்தே குறுகிப் போனார்
எத்தனைதாம் மொழியறிந்தும் தமிழை நெஞ்சில்
—– ஏந்தியதால் வாழ்கின்றார் பாரதி என்றும்!


1 Comment

கருமலைத்தமிழாழன் · டிசம்பர் 12, 2016 at 5 h 57 min

என்னுடைய கவிதையை வெளியிட்டு சிறப்பு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »