பாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம்

தமிழ் வணக்கம்!

தென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித்
தேனாற்றில் நீராடும் தமிழே!
என்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி
இழைத்தூட்டுத் தித்திக்கும் அமுதே!
கண்காட்டு! கை..காட்டு! கம்பன்தன் சீரூட்டு!
கவியென்றன் நெஞ்சத்தின் உயிரே!
பண்பூட்டு! பணிவூட்டு! விண்மூட்டுப் புகழ்சூட்டு!
பணிகின்றேன் எனையீன்ற தாயே!

திருமால் வணக்கம்!

ஆழ்வாரின் திருக்கண்ணா! அழகான என்மன்னா!
அடி..போற்றித் தொழுகின்றேன் வாராய்!
வீழ்வாரின் விதிமாற்றித் தாழ்வாரின் துயரோட்டி
வெல்கின்ற அருட்பார்வை பாராய்!
ஏழ்பாரும் என்பாட்டை ஏற்கின்ற வண்ணத்தில்
எழிலான சொல்லள்ளித் தாராய்!
ஊழ்சேரும் காலத்தும் யாழ்சேரும் பாத்தீட்ட
ஒப்பில்லாத் திறம்வேண்டும் சீராய்!

திருமலைத் தேவா! செழுந்தமிழ் செய்வாய்!
அருங்கவியென் நாவில் அமர்ந்து!

அவையோர் வணக்கம்!

குளிரோங்கும் காலத்தில் குணமோங்கும் தமிழ்கேட்கக்
குவிந்துள்ள அவையோரே வணக்கம்!
களிப்போங்கும் வண்ணத்தில் கருத்தோங்கும் என்பாடல்
காதுக்குள் எந்நாளும் மணக்கும்!
தளிரோங்கும் அழகாகத் தமிழ்வந்து பொன்னெஞ்சைத்
தாலாட்டி அன்பூட்டி அணைக்கும்!
ஒளிர்ந்தோங்கும் தமிழன்னை அளித்தோங்கும் இப்பாடல்
உயர்வள்ளி நம்வாழ்வில் இணைக்கும்!

பாடிப் பறந்த குயில்

புகழ்புதுவைப் பாட்டாளி! புரட்சி பூத்த
பூந்தமிழின் போராளி! நாட்டில் என்றும்
கமழ்புதுமை வேண்டுமென முரசம் கொட்டிக்
கடன்புரிந்த சீராளி! சோலைப் பூவிற்
திகழ்மதுவைத் தீட்டுகின்ற பாட்டில் தந்த
திசைபோற்றும் பேராளி! பாவேந் தர்போல்
நிகர்துணிவை யார்பெற்றார்? மனித நேயம்
நிலமோங்கத் தமிழிசைத்த குயிலைப் போற்று!

வண்டமிழே வாழ்வென்றார்! வாழ்வைக் காக்கும்
வளமென்றார்! நலமென்றார்! இந்த மண்ணில்
தண்டமிழே முன்பிறந்த மொழியாம் என்றார்!
தடையுடைத்தார்! பகையெரித்தார்! பொன்னாய் மின்னும்
ஒண்டமிழே உயிரென்றார்! உயிரைக் காக்கும்
உடலென்றார்! உயர்வென்றார்! பாவேந் தர்போல்
பண்ணமுதை யார்கொடுத்தார்? பாரோர் ஓங்கப்
பகுத்தறிவின் பயனிசைத்த குயிலைப் போற்று!

தன்மானம் பெற்றோங்கித் தமிழன் வாழத்
தமிழ்ஞானம் தந்திட்டார்! மனத்தைக் கவ்வும்
பொன்வானம் போன்றழகாய்ப் பாக்கள் பாடிப்
பொய்யர்தம் முகங்கிழித்தார்! கூர்வாள் கொண்டு
முன்காணும் மடமைகளை வெட்டிச் சாய்த்தார்!
முன்னேற்ற வழிசமைத்தார்! பாவேந் தர்போல்
நன்மானம் யார்உரைத்தார்? இனத்தின் பற்றை
நரம்பேற்றிச் சிந்திசைத்த குயிலைப் போற்று!

தமிழ்நாடு! தமிழ்நாடு! நாளும் எண்ணித்
தணியாத பெருந்தாகம் கொண்டே வாழ்ந்தார்!
அமிழ்தாகும் தமிழென்றார்! தாய்ப்பால் போன்றே
அருந்தமிழை ஊட்டென்றார்! பகைவர் தம்மை
உமியாக ஊதென்றார்! சாதிப் பேயை
ஒழியென்றார்! பைந்தமிழைப் பாவேந் தர்போல்
இமையாக யார்காத்தார்? தமிழர் நாட்டின்
எழிலேந்திப் பாட்டிசைத்த குயிலைப் போற்று!

மண்ணடிமைச் செயல்போக்கு! மயங்க வைக்கும்
மதவெறியை உடன்நீக்கு! வறண்டு வாடும்
பெண்ணடிமைத் துயரகற்றிப் பெருமை மேவும்
பீடுடைய உலகாக்கு! மதியை மாய்க்கும்
புண்ணடிமைச் சடங்குகளை ஓட்டு! பாயும்
புலியாக மறங்காட்டு! பாவேந் தர்போல்
பண்ணடிமை யார்ஆனார்? பொங்கும் பாட்டுப்
பரம்பரைக்கு அறமிசைத்த குயிலைப் போற்று!

கயல்வில்லை வரிப்புலியைக் கொடியாய்க் கொண்டு
கமழ்ந்திட்ட வரலாற்றை உணர்ந்து வாழ்க!
வயல்நெல்லைக் காக்கின்ற உழவ னாக
மண்ணெல்லைக் காக்கின்ற மறவ னாக
அயல்சொல்லை அகற்றிடுக! மழலைக் கெல்லாம்
அருந்தமிழில் பெயரிடுக! பாவேந் தர்போல்
இயவிசையை யார்அளித்தார்? எதிலும் எங்கும்
இன்றமிழே என்றிசைத்த குயிலைப் போற்று!

ஈரோட்டுப் பெரியாரின் கொள்கை ஏந்தி
இருளகற்றி, மருளகற்றி ஒளியே ஈந்தார்!
கூரீட்டி கொண்டுள்ள மறவ ராகக்
கொதித்தெழுந்து குலங்காத்தார்! கவிதைத் தாயின்
தேரோட்டி வலம்வந்தார்! தீட்டும் பாட்டில்
தேன்கூட்டிச் சுவைதந்தார்! பாவேந் தர்போல்
பாரேட்டில் யாருள்ளார்? தமிழ்த்தாய் தன்னைப்
பணிந்தேத்திப் பாவிசைத்த குயிலைப் போற்று!

தீண்டாமை எனும்சொல்லும் சாம்ப லாகத்
தீயிட்டார்! கைம்பெண்ணின் வாழ்க்கை ஓங்க
வேண்டாமை உலகத்தை மாற்றம் செய்ய
வேரினிலே பழுத்தபலா உவமை சொன்னார்!
தூண்டாமை நெஞ்சத்துள் துணிவைப் பாய்ச்சித்
துயர்துடைத்தார்! துணையிருந்தார்! பாவேந் தர்போல்
ஈண்டாண்மை யார்பெற்றார்? தமிழை ஏந்தி
இனமோங்கக் கவியிசைத்த குயிலைப் போற்று!

கையூட்டும் அரசியலைக் கழிக்க வேண்டும்!
கனிவூட்டும் அறஞ்சூடிக் களிக்க வேண்டும்!
மையூட்டும் கண்ணழகு மங்கை யர்க்கு
மாண்பூட்டும் மகிழ்வூட்டும் சட்டம் வேண்டும்!
தையூட்டும் திருநாளைப் போற்ற வேண்டும்!
தமிழூட்டும் இன்பத்தைப் பாவேந் தர்போல்
பையூட்டி யார்கொடுத்தார்? தமிழர் ஓங்கப்
பண்பூட்டிப் பண்ணிசைத்த குயிலைப் போற்று!

படமெடுத்தே ஆடுகின்ற பாம்பைப் போன்றும்
பல்லிளித்தே ஓடுகின்ற குரங்கைப் போன்றும்
அடம்பிடித்தே வாழுகின்ற கொடியோர் போன்றும்
அறிவிழந்தே தாழுகின்ற சிறியோர் போன்றும்
இடமழித்தே மகிழுகின்ற தீயோர் போன்றும்
இனமழித்தே உருளுகின்ற நாயோர் போன்றும்
தடம்பதித்தே என்னிடத்தில் ஆட்டம் போட்டால்
தலையொடிப்பேன்! பாவேந்தர் என்னுள் உள்ளார்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »