காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு
பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
என்றாலும், மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு!

முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா!

பிறந்தநாள் வருவதனை பெரும்பாலும் விரும்பவில்லை
குறைந்தநாள் ஆகிடுமோ எனுமேக்கம் வந்துநிற்கும்
பட்சணங்கள் செய்தாலும் பசிகூட வருவதில்லை 
விருப்பமுடன் அதைச்சுவைக்க இனிப்புநோய் விடுவதில்லை!

பிள்ளைகளோ அவர்பாட்டில் பேரர்களோ விளையாட்டில்
மருமக்கள் எமைக்கண்டால் மெளனமாய் சிரித்திடுவார்
எமையொத்த வயதுடையார் இயலாமை காரணத்தால்
ஏங்கித் தவிப்பதனை வலைதளத்தில் பார்த்துநிற்போம்!

காலையில் எழுவதற்குக் காரணமும் தெரிவதில்லை
மாலைவந்து விட்டதென மணிக்கூடு காட்டிநிற்கும் 
பாயிலே எமக்குமுன்னே நோய்வந்து படுத்துவிடும்
பதறிநாம் துடித்தாலும் பார்த்தபடி சிரித்துநிற்கும்!

கலைநிகழ்ச்சி கல்யாணம் காண்பதற்குச் சென்றாலும்
பலபேரும் எம்பக்கம் பார்த்திடவே மாட்டார்கள் 
சிலவேளை பார்த்தாலும் திரும்பாமல் சென்றிடுவார் 
அதுவே எம்மனநிலையை அடியோடு மாற்றிவிடும்!

முதுமைபற்றி நினைத்துவிட்டால் முகங்கூட மாறிவிடும்
எதுவுமே எங்களுக்கு எதிரியாய்தான் தெரியும் 
உடல்தளர்ந்து போனாலும் உளம்தளர்ந்து போகாமல் 
உளம்நிறைய மகிழ்ச்சிதனை ஊற்றெடுக்கச் செய்திடுவோம்!

எமையொதுக்கி நிற்பவரும் இந்நிலைக்கு வந்திடுவார்
இலையுதிர்வு நிலையதனை இயற்கையே கொடுத்திருக்கு 
தலைநரைக்கும் பல்லுவிழும் தளர்வுவந்து தாக்கிவிடும் 
அதைத்தவிர்த்து வாழ்ந்துவிடல் யாருக்கும் வாய்ப்பதில்லை!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...