வாசிப்பை நேசிப்பாய்
வளமாக்கும் அது உன்னை!
வார்த்தைகளில் சொல்ல
வாராத இன்பத்தைத்
தருமுனக்கு வாசிப்பு!

அவரவரே அனுபவித்து
உணர்கின்ற மகிழ்ச்சி அது!
அனுபவித்துப் பார்!
அதுவோர் புதிய சுகம்!

வாசித்துப் பார்
வாழ்வில் ஒரு திருப்பம்
ஒரு மாற்றம்
நீ பெறுவாய்!
உள்ளம் அமைதி பெறும்
ஆறுதல் நீ அடைவாய்
மூளை சுறுசுறுப்பாய்
இயங்கத் தொடங்கி விடும்
வாசித்துப் பார்!

நீயோர் புதிய உலகத்தில்
சஞ்சரிப்பாய்!
அது –
நீ படித்த நூல்தந்த உறவு!
ஆசிரியன் வடித்துத் தந்த உலகம்!

வாசித்துப் பார்…
உன் சிந்தையில்
மகிழ்ச்சி தோன்றும்
புதிய நடத்தைகள்
புதிய பாத்திரங்கள்
புதிய எஎண்ணங்கள்
உன்னில் நிரம்பும்!

வாசிப்பை நேசிப்பாய்…
கற்பனை அதிகரிக்கும்
உன் திட்டங்கள் செழுமை பெறும்
நீ…
மீண்டும் மீண்டும் பிறப்பாய்!
நடைமுறை உலகிற்குப்
பொருத்தமுடையவன் ஆவாய்!
புதியவனாய்…
நீ மாறி மாறிப் பிறப்பாய்!

வாசித்துப்பார்!
நீ ஒரு நூலில் மூழ்கி
வெளியே வருகிற போது
அந்த நூலின் நாயகனாய்
மாறி வருவாய்
வெற்றி தோல்வியை
சகிக்கும் மனிதனாய்
தேறி வருவாய்!

வாசித்துப் பார்…
உனக்குத் தனிமை தெரியாது!
சலிப்புத் தட்டாது!
அலுப்பு வராது!
தரமான தகுதியான நூல்களை
வாசித்துப் பார்!

கதை நூல்களை
சிறு வயதில் வாசி
பின்னர் வளர வளர
தொழில் நுட்பம், சமத்துவம்,
விஞ்ஞானம், ஆத்மீகம் என்று
ஒவ்வொன்றாய் வாசி
உன் வாழ்வுக் கட்டமைப்பில்
ஓர் ஒழுங்கைக் கண்டு
நீ அதிசயிப்பாய்!

வாசித்துப் பார்
உன் உணர்வுகள் தூய்மை பெறும்!
எண்ணங்கள் எழுச்சி பெறும்!

வாசி…
வாசித்தவற்றை வாழ்வில்
வழக்கப்படுத்திப் பார்!
எந்தச் சவாலையும்
சமாளிக்கும் ஆற்றல் வரும்
நீ வெற்றி பெறுவாய்!

வாசிப்பை நேசிப்பாய்
வளமாக்கும் அது உன்னை!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...