காதறுந்த மஞ்சப்பைதான் SCHOOL BAG.. அரசு நடுநிலைப்பள்ளி ஐந்தாம்வகுப்பு வரை.

பாலினப் பேதமின்றி, “இவன் அடிச்சான் டீச்சர்” “இவள்என் சிலேட் ஒடச்சுட்டா”.. இதான் அதிகபட்ச! பசங்க பொண்ணுங்க குற்றச்சாட்டா இருக்கும்..

மதியம் பெரும்பாலும் பழையசாதம். ஊறுகாய்மட்டைக்கு ரெண்டு பைசா. இதுதான் லஞ்ச்.. எப்போதோ இட்லி. சக தோழர்களும் நடுத்தரவசதிதான் என்னைபோல. தோழர்கள் பிட்சா பர்கர் போல அதிசயமாய் பிய்த்துக்கொள்வார்கள். அவர்கள் கொண்டுவரும் பழையது எப்போதும் போல் எனக்கு..

எட்டாம்வகுப்புவரை அப்பள்ளியில் வகுப்புகள் இருந்தாலும்! பொட்டப்புள்ள படிச்சது போதும். நிப்பாட்டு! வீட்டின் பெருசுகள்! போர்க்கொடித்தூக்க,
முதல் உண்ணாவிரதம் அப்போதான் ஆரம்பிச்சேன்.. பத்தாவது வரையாவது படிக்கவைங்கன்னு.

அப்புறம் எங்க “ஒத்தபொட்டப்புள்ள இப்படிபண்றாளே” ன்னு.கூடி மாநாடுப்போட்டு ஒருதீர்மானம் எட்டாவதுவரை படி! அதுவும் பொம்பளபுள்ளைங்க ஸ்கூலில்தான்னு ஒரு சட்டம் பாஸாச்சு..

நமக்கு சோறுதான் முக்கியம். எதுக்கு கணக்குப்பார்க்கணும்.. விட்டாபோதும் ன்னு போய் சேர்ந்தாச்சு. அங்கனபோனா உக்கார தனிபெஞ்சு தனி டெஸ்க் அதுக்குள்ள பொஸ்தகம் வச்சுக்க. டிபன் வச்சுக்க வசதி கூடவே, பூட்டுப்பொட்டு வச்சுக்கங்க ஒரு டெஸ்க்.. உங்க சௌரியம் அது ன்னு சொல்லிட்டாக.. புது சூழல் இறைவணக்கம்.விளையாட்டு, மைதானம்.சைக்கிள்.த்ரோபால்.வாலிபால் எல்லா சாமானும் அங்க இருக்கு. பெரிய்ய playground.. ரெண்டு நாள் friends கிட்ட சொல்லிச் சொல்லி மாஞ்சுப்போனேன்.

அப்புறம் என்ன.. அதுல நாலு பேர் வீட்டில் சண்டபோட்டு என்கூட சேந்துடுச்சுங்க.. இன்னும் கூடுதல்மகிழ்ச்சி நட்புகளுடன் தொடர்ந்தது படிப்பு..
படிக்கிற நேரத்தைவிட கேம்ஸ்பீரியட் தான் மிகவும் எதிர்பார்ப்பேன்.. அங்கதான் சைக்கிள் போட்டியில்,வாலிபால், ரன்னிங், டெய்லரிங். பெரும்பாலும் பரிசு தட்டிட்டு வந்துடுவேன்.

வீட்டில் குட்டிக்குட்டியாய் பித்தளைகப் எட்டு.. அப்பா வீட்டுமாடத்தில் வச்சுருந்தார். என்கல்யாணம் வரை இருந்தது.. அப்புறம் சாமானோட சாமானா பழையபாத்திரங்களோட போட்டாங்க. அதுக்கு ஒருநாள் சண்டை போட்டது… யாருக்கும் பெருசா தெரியல. ஒண்ணுமில்லாததக்கு ஏன் இப்படி குதிக்கிறா ன்னு என் மேலேயே திரும்பிகிச்சு பூமராங் கணக்கா.

படிப்பிலேயும் விட்டுக்கொடுக்கல. முதல் மூன்று இடத்தை தாண்டியதில்லை.. வீட்டில் ஹோம்ஒர்க் பண்ணக்கூடாது. ஸ்கூல் படிப்பு ஸ்கூல் லதான்..
படிக்கிறது எழுதுறது எல்லாம் ஸ்கூல்ல முடிச்சுடுவேன்..

வீட்டில் பத்துநெசவுக்கும் நூல்சுற்றும் வீட்டுவேலை கிணற்றில் தண்ணீர் சேந்தனும், பக்கவாதம் வந்த அப்பத்தாவுக்கும் எல்லாம் நான்தான்.
வீட்டில் இருக்கும்நேரம் முழுதும் பாட்டி என் பேர கூப்பிட்டு கூப்பிட்டே என்பெயர் பாதிபெயர் தேஞ்சு போயிருக்கும்..

ஆனாலும் அவங்களுக்கு குளிப்பாட்றது, சோறு ஊட்றது, அவங்க இடத்தை சுத்தம் பண்றது. எப்போதும் தனி சந்தோசம்.. ஒவ்வொருமுறையும் “நல்லாயிரு சாமி” ன்னு அடிக்கடி தலையைதடவும் பாட்டி. அதுக்காகவே போய் உக்காந்து அவங்ககூட பேசதோணும்.. நிறைய கதைகள் சொல்வாங்க.. அவங்க கூட கதாகாலட்சேபம். பொன்னர் சங்கர் கதை,நல்லதங்காள், கிருபானந்தவாரியார் கதை எல்லாம் தெரிஞ்சுகிட்டது அவங்களால்தான்..

சரி இப்போ என் கதைக்குவாங்க

அப்படி போயிட்டு இருந்த படிப்புக்கு நோட் பேனா எதுவும் வீட்டில் கிடைக்காது. நூல் சுற்றகாசு குடுப்பாங்க அப்பா, அதச் சேத்து வச்சு நோட்டுபுக் வாங்கிக்கனும். நமக்கு படிக்கணும் அம்புட்டுதேன். வீட்டில் தினம் ஐந்துபைசா குடுப்பாங்க. அது பத்தாது.எல்லாம் வாங்க.

என்ன பண்ணலாம்?? என்ன பண்ணலாம்??

ஒருநாள் எங்கfriend சொன்னா! எலந்தப்பழம், கொடுக்காப்பளி, கலாக்கா.எல்லாம் வாங்கி டீச்சர் க்கு தெரியாம கிளாஸ் ல விக்கலாம். உனக்கும் காசு கிடைக்கும் னு சொன்னா.

இது நல்ல ரோசனையா இருக்கே ன்னு ஓகே யாச்சு. அப்போ என்கிட்ட அஞ்சு ரூபா என்கிட்ட இருந்துச்சு.

இவ்ளோ பணத்த வச்சு எப்பிடி தீனி வாங்க?

பக்கத்து மார்கெட் கம்மியா குடுப்பாங்கன்னு .. தூரமா இருக்கிற பெரிய மார்கெட் போய் (மூணு கிலோமீட்டர் நடந்து (இல்ல) ஓடிப்போய் முதலில் ரெண்டு ரூபாய்க்கு எல்லாம் வாங்கிட்டு போய் கிளாஸ் ல ஆரம்பிச்சேன் முதல் வியாபாரம்..

அப்போ ஸ்கூல் ல பிஸ்கட் சாக்லேட் கடலைமிட்டாய் இதான் இருக்கும். விலையும் அதிகம். soooooo நம்ம வியாபாரம் பிச்சுட்டு போச்சு. ஒரே ஒரு கண்டிசன் மட்டும்தான். வாங்குற யாரும் டீச்சர் கிட்ட சொல்லக்கூடாது அப்டியே வந்தாச்சு எட்டாம்வகுப்பு வரை.

அதுக்குள்ள 150 ரூபாய் இருப்பு நம்ம கையில.. கோடீஸ்வரன் கூட அத்தினி சந்தோசமா இருந்திருக்க மாட்டாக..அம்மிணி க்கு தனி கெத்து..இதுல அப்பப்போ தோழிகளுக்கு ரெண்டு இலந்தபழம்.நெல்லிக்கா..கலாக்கா ன்னு தனி இமேஜ் தோழிகள் வட்டத்தில்…

என் படிப்பு செலவு போக மீதியுள்ள பணத்தில் அம்மாவுக்கு ஏதாவது வாங்கிக்குடுக்க ஆசை. அப்பா கிட்ட சொன்னேன். ரெண்டு பேருக்கும் அப்படி ஒருசந்தோசம்.. எல்லோர்கிட்டேயும் சொல்றாங்க. எனக்கே வெக்கமாப்போச்சு.

அப்புறம் அம்மா அந்தகாசுக்கு ஒருமூக்குத்தி வாங்கிகிட்டாங்க.. அவங்க சாகிற வரை அதை கழட்டவே இல்ல தெரியுமா..

பரிசு கொடுக்கிறவங்க சந்தோசத்தைவிட அத வாங்கிக்கிறவங்க முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிய பாக்கிறது பெரிய புண்ணியம்..

வீட்டு சூழ்நிலை அப்பா ஆசைப்பட்டாலும் பெரியவங்க படிக்கவைக்க விடல. எவ்வளவு போராடியும் ஒன்னும் நடக்கல.. ஒன்பதாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் வீட்டுக்கு வந்தவள் மீண்டும் அப்பள்ளிக்குள் நுழைய முடியவில்லை.

படிக்க வைக்கலையே ங்கற கோவத்தை விட அந்த படிப்பால அம்மாவுக்கு ஒரு அழகான பரிசு குடுத்த நிறைவு இப்போதும் உண்டு..

வாழ்க்கையை வாழ்தலை புரிய வைத்த எம்பள்ளிக்கு இக்கணத்தில் நன்றிகள் கோடி….


2 Comments

உறையூர் வள்ளி · செப்டம்பர் 16, 2016 at 12 h 07 min

மிகவும் மகிழ்ச்சி நன்றி தமிழ் நெஞ்சங்களுக்கு. ..

பெயரிலி · ஜனவரி 28, 2017 at 13 h 32 min

ஊக்கமும் ஆக்கமும் தமிழ் நெஞ்சங்களுக்கு….மகிழ்வும் நன்றிகளும் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

வேப்பமரத்து விருந்தாளிகள்

வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.

இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க!

 » Read more about: வேப்பமரத்து விருந்தாளிகள்  »

கதை

டைரிக்குறிப்பு…

குளிரும்.. மழையும் கைகோர்த்து..

அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..

மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..

பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்..

 » Read more about: டைரிக்குறிப்பு…  »

குட்டிக் கதை

இந்திப் படித்த வெள்ளித் தட்டு

ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..

அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி..

 » Read more about: இந்திப் படித்த வெள்ளித் தட்டு  »