சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. நான் விரைந்தோடி அதில் ஏறினேன்.

ஏறிய நான், அதன் ஜன்னல் ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நொடியில் ஜிகு புகு ஜிகு புகு என்ற கூக்குரலுடன் புகையை எழுப்பி, வண்டி நகர்ந்தது. என்னுடன் பலரும் பயணம் செய்தனர்.

ஜன்னல் கம்பிகளின் மேல் கையை வைத்துக் கொண்டு, என் முகத்தை வெளிப் பக்கமாய் திருப்பினேன். வண்டியும் இலக்கை நோக்கி வேகமாய் சென்றது.

பெரிய பெரிய மரங்களும் எனக்குப் பின் வேகமாய் ஓடுவதாய் உணர்ந்தேன். காற்றும் என் செவிகளுக்கு பல கவிதைகளை சொன்னது.

சோகத்தையும், இன்பத்தையும் சதா நினைத்துக் கொண்டிருந்த மனம், அந்நேரத்தில் மௌனமாய் காட்சி தந்தது.

என்னுடன் பயணம் செய்த பலரும், அவரவரது போக்கில் இருந்தனர்.

சிறிது நேரம் ஆன பின், கண்கள் சொக்கியது. அப்படியே, இருக்கையின் மேல் முகட்டில் தலையை சாய்த்தவாறே உறங்கி விட்டேன். என்னால் அப்போது எதையும் உணர முடியவில்லை.

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஓர் சப்தம் என் செவிகளை துளையிட்டது. கண்களை விழித்துப் பார்த்தேன். எனக்கு அருக்காமையில் உள்ள இருக்கையில், உடலிலெல்லாம் சுருக்கம் விழுந்து, முடியெல்லாம் நரைத்து, பற்களையெல்லாம் பறி கொடுத்து வாய் நிறைய வெத்திலையை இடுக்கிக் கொண்டு, ஊதா நிறப் புடவையில் ஓர் மூதாட்டி, “டொக்… டொக்…” என்று கொட்டைப் பாக்கை, ஒரு இரும்பு குடுவையில் வைத்து, தட்டிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும், என் தூக்கம் கலைந்தது. அந்த சத்தம் ஏதோ, இசையில் இணைந்ததைப் போன்று எனக்குள் எண்ணம் ஏற்பட்டது.

சற்று நேரம் அப்படியே உற்று நோக்கி கொண்டிருந்தேன்.

அச்சமயத்தில், இன்னொரு சப்தம்.

கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு, கையில் ஓர் குச்சியை துணைக்கு வைத்துக் கொண்டு, பார்வையற்ற ஒருவர், “தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்” என்று பாடிக் கொண்டு, அங்குள்ள அனைவரிடமும் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்படியே, டி.எம்.சௌந்திரராஜன் அவர்களே, பாடியதைப் போன்று உணர்ந்தேன்.

என்னிடமும் யாசகம் கேட்டார்.

நான் கைப் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். தானமாக அல்ல. அவரது குரல் திறனை பாராட்டும் விதமாக…

அங்கு பயணம் செய்த அனைவருமே, பாட்டை காது கொடுத்துக் கேட்டனர். இவரது பாட்டுக்கு இசையாக, மூதாட்டி தட்டிக் கொண்டிருந்த ஓசை, கை கோர்த்தது. இப்படி சங்கீதத்தில் மூழ்கிக் கொண்டிருந்தோம்.

அந்த சமயத்தில், ஓர் குழந்தையின் அழுகை குரல். சங்கீதம் நிசப்தமாய் போனது.

ஓர் தாய், தன் இரண்டு வயது மகளை இருக்கைக்கு கீழ் துணியை விரித்துப் படுக்க வைத்திருந்தார். மகள் கதறிக் கதறி அழுவதைக் கண்ட தாய், அவளை கையில் தூக்கினாள்.

அக்குழந்தையின் வலது காலில், ஏதோ பூச்சி ஒன்று கடித்திருக்கும் போல. அங்கங்கே, சிவந்த நிறத்தில் தடித்து காணப்பட்டது.

அதைக் கண்ட தாய், பதறினாள். அவள் மட்டுமல்ல… எங்கள் அனைவருக்குமே பதற்றம். என்ன செய்வதென்று தெறியாமல் பதறினோம். அப்போது, எனக்கு அருகில் அமர்ந்திருந்த மூதாட்டி எழுந்து, தன் கையில் வைத்திருந்த ஓர் டப்பாவை எடுத்து, அதனுள்ளே விரல விட்டு, அதிலிருக்கும் சுண்ணாம்பை எடுத்தார்.

அதை, அப்படியே குழந்தையின் காலில் தடித்திருக்கும் இடமெல்லாம் தடவினார்.

சிறிது நேரத்தில், குழந்தையின் அழுகை சத்தம் நின்றது. தடித்துக் காணப்பட்டவையும் மறைந்தது. தாயின் முகத்தில் புன்னகை ஜொலித்தது. பதற்றம் பதுங்கியது.

அம்மூதட்டியோ, குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, தன் இருக்கையில் அமர்ந்தார்.

அதன் பிறகு, அமர்ந்த அவர், இரும்புக் குடுவையில் கையை வைத்து, “டொக்… டொக்…” என்று தட்ட ஆரம்பித்தார்.

இசையும், பாட்டும் இணைந்தது. எல்லாரும் காது கொடுத்து ரசிக்க ஆரம்பித்தனர்.

நானோ, அம்மூதாட்டியை ‘வைத்தியர்’ என்று நினப்பதா ? இல்லை… ‘இசை மேதை’ என்று நினைப்பதா ? என நினைத்தபடி, இறங்க வேண்டிய இடம் வந்ததால் இறங்கிக் கொண்டேன்.

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..