3 நிமிட சிறுகதை

“ஹாய்டா ராஜேஷ்..”

“ஹாய் உமா.. என்ன சர்ப்ரைஸ் காலிங்..”

“என்னமோ தெரியலடா.. இன்னிக்கி காலையிலேயிருந்தே ஒன்னோட நெனப்புதான்.. அஞ்சி வருஷத்துக்கு முன்னால இந்த தேதியிலதான் நாம மொதமொதலா சந்திச்ச நாளுங்குறதாலகூட இருக்கலாம்..”

“ஓ.. அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையில எவ்ளவோ நிகழ்ச்சிகள் நடந்துட்டதால நா மறந்துட்டேன் உமா.. காதல்ல பெண்களுக்கு மட்டும் ஞாபகசக்தி அதிகம்தான்..”

“ஆமா ராஜேஷ்.. சிட்டியிலேயிருந்து ஒங்க கிராமத்துக்கு என்.எஸ்.எஸ். கேம்ப்க்காக வந்த என்ன பாம்பு கடிச்சதில, நீதான் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி காப்பாத்துனே.. அப்போ மலர்ந்திச்சி நம்ம காதல்.. பணம் சம்பாதிச்சிட்டுதான் ஒன்ன கட்டுவேன்னு நீ துபாய்க்கு போனது , காதல் ஏக்கத்துல ‘உமா ஐ லவ் யூ’ன்னு ரூம் கதவில கிறுக்குனது , மூணு வருஷம் கழிச்சி பணத்தோட நீ வந்து பொண்ணு கேட்டப்போ ஜாதிய காரணம் காட்டி எங்கப்பா மறுத்தது , இந்த சமூகத்த எதுத்து ஒண்ணு சேர முடியாதுங்குற உண்மை புரிஞ்சப்போ கண்ணீரோட நாம பிரிஞ்சது , ஃபோன்ல ஒன்னோட திருமணம் முடிஞ்சிட்டதா சொன்ன அந்த கருப்பு சனிக்கிழமை நாள் எல்லாமே எனக்கு ஞாபகம் இருக்கு ராஜேஷ்..”

“ஒரு வேடிக்கைய பாத்தியா உமா.. வாழ்க்கையில நடந்த நல்ல விஷயங்கள விட , கெட்ட விஷயங்கள்தான் அதிகமா நம்ம ஞாபகத்துக்கு வருது.. நீயும் திருமணம் முடிச்சிக்கிட்டதா ஃபோன்ல சொன்ன அந்த நாள்ல நா எவ்ளோ சந்தோஷமா உணர்ந்தேன் தெரியுமா.. எத்தன குழந்தைகள் ஒனக்கு உமா..?”

“ரெண்டு பசங்க.. மூத்த பையனுக்கு ஒம்பேரத்தான் வச்சிருக்கேன் தெரியுமா..?”

“ஹேய்ய்.. இதெல்லாம் சுத்த பேத்தல் உமா.. பழைய சினிமா படங்கள பாத்து , காதல் கதைகள படிச்சி ஓவரா ஃபீல் பண்ணிருக்கே.. இந்த நாகரீக காலத்..”

“ஸ்டாப்இட் ராஜேஷ்.. நாகரீக காலம்னாலும் காதல்ங்குறது உணர்வுப் பூர்வமானது.. மரபுக் கவிதைகள் மாதிரி அது மாறாத உணர்வு.. சரீய்ய்.. ஒண்ணு கேக்குறேன்.. சத்தியமா சொல்லு நீ சந்தோஷமாத்தான் ஒம்மனைவி கூட வாழுறேன்னு..”

“உமா.. சில விஷயங்கள்ல உண்மை பேச நெனைச்சாலும் வெளிப்படுற வார்த்தைகள் நம்மள காட்டிக் குடுத்துடும்..”

“ஆமாவா , இல்லியான்னு மட்டுந்தான் என்னோட கேள்விக்கி பதில் வேணும் ராஜேஷ்..”

“உமா.. நாம உயிருக்குயிரா காதலிச்சோம்.. ஆனா ஒண்ணு சேர முடியாதுங்குற நெலம வந்தப்போ வருத்தத்தோட பிரிஞ்சிட்டோம்.. ராத்திரி கனவுல கண்டத நெனைச்சி பகல் பூராவும் அழுவுறது முட்டாள்தனம்.. இப்போ ஒனக்குன்னு ஒரு கணவன் , என்ன நம்பி ஒரு மனைவின்னு நம்ம வாழ்க்க செட்டிலாகிடிச்சி.. இனியும் நாம ஒருத்தரவொருத்தர் நெனச்சிக்கிட்டிருந்தா , அது நாம அவங்களுக்கு செய்ற துரோகம்.. புரிஞ்சிருப்பேன்னு நெனைக்கிறேன்.. இனி ஃபோன் பண்ணாத.. என்னோட நம்பர டெலீட் பண்ணிடு.. ப்ளீஸ்ஸ்.. பை..”
ஃபோனை வைத்தான் ராஜேஷ்..

***   ***  ***  ***

ஃபோனை வைத்தான் ராஜேஷ்..

“அம்மா.. அந்த தரகர் மாமா வந்தாரா..? இதென்ன பொண்ணுகள் ஃபோட்டோவா கெடக்கு..?”

“டேய்.. அம்மா சொல்றத கேளுடா.. அந்தப் பொண்ணு கல்யாணம் முடிச்சி சந்தோஷமா வாழுறா.. நீ ஏன்டா அவளையே நெனச்சி ஒன்னோட வாழ்க்கைய வீணாக்குறே..? இந்த ஃபோட்டோக்களப் பாரு.. நல்ல முடிவா சொல்லுடா..”

“அம்மா.. வாழ்க்கையில காதல்ங்குறது ஒரு தடவைதான்னு தத்துவம்லாம் சொன்னா ஒனக்கு புரியாது.. என்னையே நெனைச்சிக்கிட்டு அவ வாழ்க்கைய வீணாக்கிக்கக் கூடாதுன்னு சினிமா பாணியில அவகிட்ட ஃபோன்ல பொய் சொன்னேன்.. இப்போ அவ சந்தோஷமா வாழுறா.. எனக்கு அது போதும்..’

“அப்போ ஒன்னோட வாழ்க்க..? நம்ம வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு பொண்ணு வேண்டாமாடா..?”

“என்னோட வாழ்க்கைய காலம் தீர்மானிக்கும்.. சும்மா வளவளன்னு பேசாதம்மா.. வெளக்கேத்த வத்திப் பெட்டி இருந்தாப் போதும்..”

படபடத்து விட்டு வெளியேறினான் ராஜேஷ்..

***   *** ஸ்க்ரால் செய்தால் தொடரும் ***  ***

படபடக்கும் புறாக் கூட்டம்.. கணீரென ஒலிக்கும் மணியோசை என ஆரம்பித்தால் எளிதாய் புரிந்து கொள்வீர்கள் அது மாதா கோயில் என..

“மேடம்.. ப்ரேயர்க்கு டைம் ஆச்சிது.. எல்லாரும் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க..”
அறைக் கதைவைத் திறந்து கூறிய அந்த வெள்ளுடை தரித்த சக கன்னியாஸ்திரியை ஏறிட்டுப் பார்த்த உமா, “இதோ வந்துட்டேன் சிஸ்டர்..” என்று விட்டு ‘என் இனிய ராஜேஷ்..’ என்றெழுதி இருந்த டைரியின் பக்கங்களை அவசரமாய் மூடி வைத்து , வெள்ளை நிற முழுநீள அங்கியை சரிசெய்தவாறு ப்ரேயர் ஹாலை நோக்கி நடக்கத் துவங்கினாள்..
வெளியில் ஒலிக்க ஆரம்பித்திருந்தது மணியோசை..!

***   *** முற்றும் ***  ***


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..