நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை
பாக்குச் சுண்ணாம்புடன்
நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்!

ஒற்றை வரிகளில்
ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப்
பாக்களில் புதைத்தவனின்
உடல்தான் புதைக்கவோ
எரிக்கவோப் பட்டிருக்கலாம்; ஆனால்
அவனின் பாக்களைப் புதைக்கவோ எரிக்கவோ இயலா.

செக்கச் சிவந்த மேனி;
மிக்கச் சிறந்த ஞானி

மரபுக்குள் கட்டுண்டவன்;
புதுமைக்குள் புகுந்து விளையாடியவன்

வண்ணதமிழிலும் செய்யுள்
வனைந்தான்;
வாலிபத் தமிழிலும்
வாலிபால் விளையாடினான்!

மீனைத் தொடாத வகுப்பில் பிறந்தவனோ,
“நேற்று வைத்த மீன் குழம்பை”
போற்றும் அளவுக்குச் சுவைக்க வைத்தவன்!

இலங்கையில் சென்று
‘இடியப்பம் பொதியானம்”
பசியாற என்றெல்லாம்
வழக்குச் சொல்லை
வழங்கி வடித்தவன்

”ஊக்குவிப்பவனுக்கும்
ஊக்குவிப்பது வேண்டும்’
என்று ஊக்குவித்தவன்!

கண்மூடியதால்
மண்மூடியவர்கள்
அல்லர்; இவர்களை
மண்மூடியதால்
கண்மூடியவர்கள்” என்று
பூகம்பத்தில் மரணித்தவர்களை
ஈரடிகளால்
ஈரம் கசிய நினைத்தவன்!

ஈழத்தமிழர்களின்
ஈரத்தையும்
வீரத்தையும் பாடிய
சோழத்தமிழன்!

“தமியேன்” என்னும்
தமிழ்ச்சொல்லில்
தன்னடக்கம் இருப்பதை
தமியேனுக்குக் கற்று தந்த
தமிழன்!


1 Comment

உறையூர் வள்ளி · ஜூலை 19, 2016 at 14 h 35 min

இணையத்தில் படித்தது

திரைக்கு பாட்டு என்பதற்கு வாலியின் பின் வரும் ஒரு கவியரங்க கவிதையே மிக எளிமையாக விளக்கம் தரும்..,

இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!

மெட்டுக்கு தகுந்தவாறு வார்த்தைகளை கற்பனைகளை விதைப்பதில் வாலியின் திறமை தனித்திறமை !!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...