சுந்தர மருந்து 1

இல்லாளைத் துன்புறுத்தி இன்னொருத்தி கைப்பிடித்துப்
பொல்லா நடைபிணமாய்ப் போகாதீர்.-பல்லோரே !
எள்ளும் தமிழ்ஞாலம் என்றுமிவர் சேர்க்காதாம்,
உள்ளுவீர் கற்பின்றேல் கேடு.

சுந்தர மருந்து 2

இறைகிணறு ஈந்திட்ட ஈடற்ற நீரும்,
மறைசொல வந்திட்ட மாண்பும்-பொறைகொண்ட
நல்லோர்தம் நல்வாக்கும் , நானிலமும் , அற்றேயாம்
இல்லாரை வஞ்சித்த பேர்க்கு.

சுந்தர மருந்து 3

சொல்வள மில்லாமல், சோதனைகள் வெல்லாமல்,
பல்லோரும் காணப் பணியாமல்,-வல்லோரின்
வாய்வார்த்தை கேளாமல், வாழ்வழிக்கும் கீழோர்கள்
போய்வீழ்வார் துன்பக் கடல்.

சுந்தர மருந்து 4

பிறன்மருகப் பல்லிளித்துப், பித்தமுகங் கொண்டே,
அறந்தொலைத்து, மூடரென் றாகிப்-புறம்பேசி,
வாழும் மடமாதர் வாழ்வினில் காண்பராம்
சூழும் துயரப் பரிசு.

சுந்தர மருந்து 5

இறையை அறியானோ ஈன்றவர் தேடான்
மறைவழி நில்லானோ மாசன்.-கறைபெற்றுக்
காய்ந்த சருகாகிக் கன்னலுறு வாழ்வொழித்துப்
பாய்வானே பண்பிலார் மாட்டு.

சுந்தர மருந்து 6

நானிலத்தில் தந்தையரின் நற்சொற்கு ஈடுமில்லை!
வானிலொளிர் வண்ணமதாய் வாழ்வளிப்பார்-தேனிலவே !
ஈன்ற பெருந்தெய்வம் ஈகைத் தாயொக்கும்
வான்தமிழாம் தந்தையரைப் போற்று.

சுந்தர மருந்து 7

வல்ல மகத்துவங்கள் வாழ்வதில் கண்டவர்கள்
தொல்லை ஒழித்தின்பந் தொட்டார்கள்-நல்லோனே !
பல்லோரும் வாழ்ந்து பலன்பெற என்னாளும்
பொல்லாங் கொழித்தல் நன்று.

சுந்தர மருந்து 8

நல்லரசு
நாடாள்வோர் நாற்றிசைவாழ் நன்மக்கள் நன்கறிந்தே ,
ஏடாகி நிற்பார், எளியோர்க்கு.!-வாடாது
காத்து வளமாகிக் காதலுறும் நன்மனதாய்
பூத்து மகிழ்வார் சிறப்பு.

சுந்தர மருந்து 9

நற்றவத்தை நாடி நலமறந்து போனோரும்,
பெற்றதிரு ஒன்றில்லாப் பேயோரும்,-பற்றில்லேன்
என்றோரும், பாவையர்க்கண் ஏறிட்டால் ஏங்கியிவர்
பொன்வாழ்வே வாவென்பார் பூத்து.

சுந்தர மருந்து 10

அள்ளக் குறையாதாம் அன்போடு வாழ்விக்கும்
தெள்ளத் தெளிவாக்கும் தேயத்தில் -உள்ளத்
தடுமாற்றம் போக்கும்நற் தண்டமி ழென்றும்
வடுவில்லா ஆவி உடைத்து.

Categories: வெண்பா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.