சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார்
சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார்
கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார்
கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார்
பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார்
பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர்
சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச்
சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் !

குணம்பார்க்கும் குணமில்லா மதிப டைத்தோர்
குலமகளின் தரந்தன்னைப் பார்த்தி டாமல்
பணம்பார்த்தார் ! பாவையரைப் பணத்தை வைத்துப்
பார்க்கின்ற இழிவான செயலைச் செய்தார்
மணக்கின்ற எழிலோடு பூத்தி ருக்கும்
மங்கையரை எண்ணுகின்ற மனமு மின்றி
மணம்பேச வந்தவர்கள் பொருளை பொன்னை
மகழுந்து எனக்கேட்டே இசைவ ளித்தார் !

கண்மணியைக் கரம்பிடிக்கக் கிலோக ணக்கில்
கச்சிதமாய்த் தங்கநகை வாங்கிக் கொள்ள
பெண்ணுடையக் கழுத்தினிலே தாலி கட்டப்
பெருந்தொகையைத் தட்சணையாய்ப் பெற்றுக் கொள்ள
மண்மீதில் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம்
மன்றலினைப் பெருவிழாவாய் நடத்தி வைக்க
வண்ணமயக் கனவுகளை நெஞ்சி லேற்று
வாழ்கையினைத் துவக்குதற்கே அவளும் சென்றாள் !

அன்பான கணவனென அணைத்தே இன்பம்
அளிப்பவனாய் இருந்தவன்தான் நாள்கள் செல்ல
இன்முகமாய் இருந்தவனோ இதய மற்றே
இனிக்கின்ற வாழ்கையினி தொடர்வ தற்கே
இன்னுமுன்றன் தந்தையிடம் தொகையைக் கேட்டே
இங்களிக்க வேண்டுமெனத் தேளாய் கொட்டிப்
புன்னகையின் முகம்வாடப் புன்மைச் சொல்லால்
புரிந்திட்டான் கொடுமைகளை நாளும் வீட்டில் !

கணவணவன் கயமையினை எண்ணி எண்ணிக்
கண்ணீரில் தோய்ந்தபோது மாமி யாரும்
குணம்மாறி மகனுக்குத் துணையாய் நின்றாள்
குத்தும்முள் பேச்சாலே மாம னாரும்
மணவாளன் தங்கையுமே ஒன்றாய்ச் சேர்ந்து
மனப்புண்ணில் நெருப்புதனை நாளும் வைத்தார்
அணங்கவளை நாற்புறமும் சூழ்ந்து கொண்டு
அடிப்பதனை எத்தனைநாள் பொறுத்துக் கொள்வாள் !

விடிகாலை சமயலறை உள்ளே சென்று
வீட்டிலுள்ள எரிவாயு கசிய விட்டே
அடிக்குரலில் வீறிட்டே அலறி வீட்டின்
அனைவரையும் அறைக்குள்ளே வரவ ழைத்தாள்
நொடிப்பொழுதில் அறைமூடி வெளிளே வந்து
நெருப்புதனைச் சன்னலிலே தூக்கிப் போட்டாள்
முடிந்ததுவே கொடுமையெனப் புதுமைப் பெண்ணாய்
முகம்மலர்ந்து வெளியேறிப் புரட்சி செய்தாள்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...